19 May 2018

நின்று விடும் கலை


நின்று விடும் கலை
            எண்ணம் என்பது இல்லாவிட்டால் எதனுடைய வளர்ச்சியும் இருக்காது. காமம், கோபம், வன்மம், பழிவாங்கல்,... இப்படி எதுவும் வளராது.
            ஒரு நிலையில் தாமாகக் கொடுத்த எண்ணத் தொடர்ச்சி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தனக்குத் தானே இயங்கத் தொடங்கும். அதை தாம்தான் கொடுப்பதாகவோ அல்லது தம்மை அறியாமல் அது நிகழ்வதாகவோ ஒரு வகையிலான எண்ணத் தொடர்ச்சி உண்டாகலாம்.
            இப்போது என்ன செய்வது?
            எப்படி எண்ணாமல் இருப்பது?
            எண்ணுவதற்குப் பழக்கமாகி விட்ட பின் எண்ணாமல் இருப்பது எவ்வளவு அசாத்தியம்.
            எண்ணமாமல் இருக்கலாம் என்றால் எப்படி எண்ணாமல் இருப்பது என்று எண்ணத் தொடங்கி அதன் எண்ணத் தொடர்ச்சிக்குள் சிக்கி விட நேரிடும்.
            வெறுமனே எண்ணங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அசாத்தியமானது, நுட்பமானது.
            ஒரு மாற்றத்தை அங்கிருந்துதான் கொண்டு வர முடியும். எதுவும் செய்யாமல் இருப்பது அதாவது எண்ணத் தொடர்ச்சிக்குள் குறுக்கிடாமல் இருப்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
            எதற்கும் முயற்சி செய்தே பழக்கப்பட்ட பின், அதற்கு முயற்சி செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள காலம் தேவைப்படும். நிகழ்வது ஒரு நொடி நேரத்தில் நிகழ்ந்து விடும்.
            அது அப்படியே நின்று விடுவது,
            அந்த நிலையிலேயே விட்டு விடுவது,
            அங்கேயே முடிந்து விடுவது
            அதன் பின் தொடர்ச்சி எதுவும் இருப்பதில்லை. அதனால் எல்லாம் யாரும் அசாதாரண மனிதராகி விட மாட்டீர்கள். ஆனால் விட்டு விட முடிகிறது அவ்வளவுதான். தம்மைத் தாமே சுற்றிக் கொண்டிருந்து கட்டுகளிலிருந்து அவிழ்த்துக் கொண்டு விடுபட்டு விடுதல் நிகழ்ந்து விட்டது. அவ்வளவுதான்.
            அதனால் எல்லாம் அசாதாரணமாக வேண்டும் என்று நினைத்தால் மீண்டும் பழைய தொடர்ச்சித் துவங்கி விடும். அசாதாரணம் என்பதில் அபத்தமான எண்ணத் தொடர்ச்சி இருக்கிறது.
*****

18 May 2018

ஒரு சிறு மலர்ச்சிக்கான வியப்பு


ஒரு சிறு மலர்ச்சிக்கான வியப்பு
            புத்திசாலித்தனமாகப் பேசுவதும், அதன் வாயிலாக மற்றவர்களின் மனதைக் காயப்படுத்துவதும் அறிவின் வன்முறையாகத்தான் படுகிறது.
            எது இயல்பு எனத் தெரிந்தும், மனதின் ஆசைக்காக அதை மாற்றத் துவங்குவது ஒரு வக்கிரத்திலோ, வன்முறையிலோதான் சென்று முடிகிறது.
            நிறைய அலைந்து, உளைந்து, உழைத்து, களைத்து, சிந்தித்து, புலம்பி, பாராட்டப்பட்டு, புகழப்பட்டு, பொறாமைகளால் குத்தப்பட்டு, போட்டிகளால் அம்மப்பட்டு, ஆர்வங்கள், முயற்சிகளால் மூக்கறுப்பட்டு கடைசியில் அமைதியாக இருப்பதுதான் கடினமாகத் தெரிகிறது.
            முடிவான உண்மைகள் என்று எதுவும் இல்லை என்று தெரிந்த போதும் எளிமையான உண்மைகளை அற்பமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
            அளவற்ற எந்த ஒன்றும் சுயத்தை அழிக்கிறது. தெரிந்தே அழிக்கச் சொல்லும் அதாவது தன்னைத் தானே அழிக்கச் சொல்லும் அந்தச் சுயத்தை வேடிக்கைத்தான் பார்க்க முடிகிறது.
            எதற்காக எதைச் செய்கிறோம் என்பது மறந்து பின்னும் எதையாவது செய்யத்தான் முடிகிறதே தவிர நிறுத்த முடியாமல் இயங்குவதோடு இயங்காமல் இருக்க எங்கே முடிகிறது?
            இயந்திரம் பெற்றெடுத்த இன்னொரு பிறவியாய் அமையாத கனவுகளுக்காக அந்த மேம்பாடு, இந்த மேம்பாடு என்று அதற்கான ஒத்துழைப்பு இல்லாத மேலாண்மைகளோடு காலைப் பிடித்துக் கொண்டு காலம் முழுவதும் கெஞ்சத்தான் முடிகிறது அன்றி கழுத்தறுப்புக்குப் பயந்து சிறிதாக என்ன எதிர் கேள்வி கேட்டு விட முடிகிறது?
            தன்னிலை இல்லாத வாழ்க்கை,
            மனம் ஒன்றாத உழைப்பு என்ன பயனைத் தந்து விடும் சொல்?
            அதில்தான் இந்தச் சமூகம் மலர்ந்து கொண்டிருக்கிறது, இந்தத் தேசம் மலர்ந்து கொண்டு இருக்கிறது, எவ்வளவோ பெரிதாக மலர வேண்டியது அவ்வளவு சிறியதாக!
            அந்த மலர்ச்சிக்கே மூக்கின் மேல் விரலை வைத்துப் பார்க்கும் இந்த உலகைத்தான் என்ன சொல்ல?!
*****

17 May 2018

கடை முன் வைத்த பதாகை


எஸ்.கே.யிடம் கேள்விகள்
            அன்று எஸ்.கே.யிடம் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் அவர் ஒரே வார்த்தையில் பதில் தந்தார்,
            உங்கள் எல்லா கேள்விகளுக்கும் என் ஒரே பதில் 'அச்சம்' என்று.
            அதைத் தொடர்ந்து எஸ்.கே. சொன்னார்,
            உங்கள் அச்சம் அகன்ற பின் அங்கே எந்த கேள்வியும் மிச்சம் இருக்காது என்று.
*****
எஸ்.கே. தம் கடை முன் வைத்த பதாகை
            எஸ்.கே. தம் கடையைத் திறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தம் கடைக்கு ஒரு விளம்பரப் பலகைக் கூட இல்லாமல்தான் அவர் தம் கடையை அமைத்திருந்தார். அன்று அவர் தம் கடை முன் இப்படி ஒரு பதாகையைப் பெரிய அளவில் வைத்திருந்தார். அப்பதாகையில் இருந்து என்னவோ அதுதான் கீழே இருப்பது...
            இனி எஸ்.கே.வாகிய என்னால் எவருடைய எதிர்பார்ப்பிற்குமானப் பண்டங்களைத் தயாரிக்க முடியாது. எஸ்.கே.வாகிய எனக்குத் தயாரிக்கத் தோன்றுகின்ற பண்டம் எதுவோ அதுவே என் தயாரிப்பு. அதற்கு மேல் எஸ்.கே.வாகிய என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்டன.
*****

16 May 2018

குழந்தைகள் சந்தைச் சரக்குகள்!


குழந்தைகள் சந்தைச் சரக்குகள்!
            குழந்தைகளைச் சாதனையாளர்களாக ஆக்க நினைப்பவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் இயல்பிலேயே சாதனையாளர்கள்தான். அவர்களுக்கே உரிய தனித்தன்மையில் அவர்கள் சாதனையாளராக இருப்பார்கள். அவர்களுக்கே உரிய தனித்தன்மையில் அவர்கள் சாதனையாளராக இருப்பதை சாதனை என்று அங்கீகரிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
            அவர்களை அவர்களின் தனித்தன்மையில் விட்டால் சர்வ சாதாரணமாக சாதனையாளராகி விடுவார்கள். சர்வ சாதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்வு அது. சாதாரணமாக இருப்பதை அசாதாரணமாக மாற்ற நினைப்பது மனித இயல்பு. அப்படித்தான் குழந்தைகளின் சாதனைத்தன்மை அசாதாரணப்படுத்தப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையை மாற்ற நினைத்தால் அவர்களின் சாதனைத்தன்மை தாமதப்படும்.
            தனித்தன்மை மாற்றப்பட்ட குழந்தைகளில் தாங்கள் (ஏ)மாற்றப்பட்டதைப் புரிந்து கொண்டு சாதித்தவர்களும் இருக்கிறார்கள், அதைப் புரிந்து கொள்ள முடியாமல் சிதிலமானவர்களும் இருக்கிறார்கள்.
            இயற்கையில் எல்லாம் மலரவே பிறக்கின்றன. சில நேரங்களிலோ, பல நேரங்களிலோ அவைகள் மலர்வதும், மலர முடியாமல் போவதும் தோட்டக்காரர்களின் கையில் போய் விடுவதும், மலர்கள் வியாபாரமாகி பணமாவதும் தவிர்க்க முடியாதவைகளாகி விடுகின்றன.
            நடப்பதைப் பார்க்கும் போது,
            இங்கு நடப்பது சாதனை வியாபாரமேயன்றி வேறென்ன?
            துட்டுகள், பாராட்டுகள், புகழ்ச்சிகள் இவைகளுக்கானச் சந்தைச் சரக்குகளேயன்றி குழந்தைகள் வேறென்ன?
*****

15 May 2018

நோய்மையின் சிறகுகள்


நோய்மையின் சிறகுகள்
            உடலுக்கு நாம் தர முடியாத ஓய்வை நோயே தருகிறது, மனதுக்கும் என்று சேர்த்தும் சொல்லலாம்.
            அறிவுமொழியை விட உடல்மொழி நுட்பமானது. அதே நேரத்தில் வெகு எளிமையானதும் கூட.
            இதயம் துடிப்பதும், நுரையீரல் சுவாசிப்பதும் மூளையின் கட்டுபாட்டில் இருப்பதாகச் சொன்னாலும் அவைகளுக்கான உடல்மொழி முற்றிலும் வேறு. கோமா எனும் நிலைக்குச் சென்றாலும் அறிவுமொழியை எதிர்பார்க்காமல் உடல்மொழி இயங்கிக் கொண்டு இருக்கிறது.
            உடல் உழைக்கத் தயாராக இருக்கிறது. முறையான ஓய்வுக்கு ஏங்குகிறது. அதீத ஆர்வம், பணத்திற்கான வேட்கை, இன்னும் கொஞ்சம் முயன்றால் முடித்து விடலாம்,... என்பன போன்ற நம்பிக்கைகளில் ஓய்வைச் சற்றே தள்ளிப் போடுதல், அல்லது தவிர்க்க முடியாத பணிச்சுமைகள் இவைகளின் காரணமாக நாம் ஓய்வைத் தள்ளிப் போடும் போது தாய் தந்தையரின் அணுக்கமானப் பேச்சுக்காக ஏங்கும் தனியார் பள்ளியொன்றில் பயிலும் குழந்தை போலாகி விடுகிறது உடல்.
            நம் உடல் தன் ஏக்கத்தை நம்மிடம்தான் சொல்ல முடியும். அதைக் கேட்பதற்கானச் செவிகள் தூர்ந்த போகும் போது, அதைக் கேட்பதற்கானச் செவிகளை முளைக்க வைக்க உடலுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? உடல்மொழியைக் கேட்பதற்கானச் செவிகளை முளைக்க வைப்பதற்காக நோய்மையைத் தூவுகிறது உடல்.
            நோய்மையால் உடலை முடக்கிறது உடல். செவிகள் முளைத்து சிறகுகள் விரியும் வரை அது நீடிக்கிறது.
            உடல்மொழியை நுட்பமாகக் கேட்பதற்கு நோய்மையைப் போல நுட்பமானப் பாதை ஏது? உடலை அதுவே நுட்பமாகக் கவனிக்க வைக்கிறது. கேட்க வைக்கிறது.
            நோய்மை உடலைக் கொண்டாடுகிறது. உடலை எளிமையாக்குகிறது. எடையற்றதாக்குகிறது. சிறகுகள் பூட்டிப் பறக்க வைக்கிறது.
            எந்த நோயும் மருத்துவத்தை விட அமைதியையும், ஓய்வையும்தான் அதிகம் விரும்புகின்றன.
            அமைதியற்ற மனத்தால், ஓய்வற்ற உடலால் நம்மை நாமே தாக்கிக் கொள்கிறோம். கண்ணுக்குத் தெரியாத, காதுக்குக் கேட்காத, நுகர்வுக்கு வாய்க்காத நுட்பமானத் தாக்குதல் அது.
            எவரேனும் கல்லெறிந்தால் கண்கள் காணா விட்டாலும், காதுகள் கேட்கா விட்டாலும் எறியப்பட்டக் கல்லின் தாக்குதலால் உண்டான வலி தாக்குதலைச் சொல்லி விடும்.
            கல்லை எறிபவரும், தாக்கப்படுபவரும் ஒருவரே என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு தாக்குதல்.
            தாக்குதல் நிகழ நிகழ ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கும். மனம் உளைச்சல் அடையலாம். அதீதமாக உணர்ச்சிவசப்படலாம். உடல் அசதியை உணரலாம். அசாதாரணமாகக் களைத்துப் போகலாம்.
            அறிவுமொழி உடல்மொழியை விஞ்சும் சாதுர்யம் வாய்ந்தது. அது ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரைக்கலாம். ஒரு சிற்றின்பத்தை (போதை, சிகரெட், மது என்பன போன்ற) பரிசீலிக்கத் தூண்டலாம். ஒரு பாடலைக் கேட்பதில், ஒரு நடனத்தைப் பார்ப்பதில், ஒரு கேளிக்கையை ரசிப்பதில் அமைதியாவது போலத் தோன்றலாம்.
            உடல் எதிர்பார்ப்பது வெறுமனே ஓய்வைத்தான். வெறுமனே உடலைக் கிடத்துவதுதான். அந்த எளிமையான உடல்மொழிக்கு செவி கொடுக்கும் வகையில் மனம் இரைச்சலற்று இருக்க வேண்டும்.
*****

28 Apr 2018

காக்க காக்க!


குறளதிகாரம் - 13.2 - விகடபாரதி
காக்க காக்க!
            பொன்னும், மணியும், பணமும், நகைகளும் உலகின் சிறந்த பொருள்களாகக் கருதிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
            விலையுயர்ந்த பொருட்களுக்கு செய்யப்படும் காத்தலே தனி.
            முக்கியப் பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்காக செய்யப்படும் காத்தல் பணியும் தனி.
            இருப்பவர்களைச் செல்வம் காக்கிறது. அவர்கள் செல்வத்தைக் காக்கிறார்கள். ஒரு கட்டத்தில் யாருக்கு யார் காவல் என்று தெரியாமல் செல்வத்தின் காவலர்களாக ஆகி விடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
            இல்லாதவர்களை அவர்களின் இல்லாமையே காக்கிறது. அவர்கள் பறவைகளைப் போல சிறகடிக்கிறார்கள். மடியில் கனமில்லாத போது வழியில் பயம் கொள்வது ஏது?
            வங்கிகளின் 'லாக்கர்கள்' நகைகள், பணத்தோடு ஒவ்வொருவரின் ரகசியத்தையும் காத்தல் செய்து கொண்டிருக்கின்றன.
            ஒவ்வொரு ஏ.டி.எம்.முக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு மாளிகைக்கும் வாயிற்காவலர் என்ற பெயரில் ஒருவர் காத்தல் செய்து கொண்டிருக்கிறார்.
            காத்தல் இல்லாத இடம் இது?
            இராணுவ வீரர்கள் எல்லைகளைக் காத்தல் செய்கிறார்கள் என்றால், காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காத்தல் செய்கிறார்கள்.
            எல்லாவற்றிலும் ஒரு காத்தல் வேண்டப்படுகிறது.
            எதிலும் காத்தல் தேவைப்படுகிறது.
            ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமானதைக் காத்தல் செய்கிறார்கள். தாம் ஆசைப்பட்டதைக் காத்தல் செய்கிறார்கள். வருவாய்க்காக காத்தல் செய்கிறார்கள்.
            பிடித்தம் இல்லாததை யாரும் காத்தல் செய்ய மாட்டார்கள். ஆசை இல்லாத ஒன்றை எவரும் காத்தல் புரிய மாட்டார்கள். வருவாய் இல்லாதவைகளில் காத்தல் நிகழ்வது கிடையாது.
            ஒவ்வொருவரின் காத்தலும் அவரவரின் பிடித்தம், விருப்பம், ஆசை சார்ந்து, வருவாய் சார்ந்து வேறுபடுகிறது.
            பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று இவ்வுலகில் இருக்கின்றது.
            விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று கணக்கில் இருக்கின்றது.
            இருப்பவரோ, இல்லாதவரோ அனைவரும் காத்தல் செய்ய வேண்டியது ஒன்று வழக்கில் இருக்கிறது.
            இந்நாடோ, வெளிநாடோ, எந்நாட்டவரும் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று பொதுவில் இருக்கிறது.
            அதுதான் அடக்கம்.
            ஒரு பொருளை எப்படிப் பாதுகாக்கிறோமோ, அப்படியே அடக்கத்தையும் ஒரு பொருளாக கருதிப் பாதுகாக்க வேண்டும்.
            அடக்கத்தைப் ஒரு பொருட்டாகக் கருதாமல், அதை ஒரு பொருளாகப் பாதுகாக்காதவர்களுக்கு ஆக்கம் கிடையாது.
            உலகின் விலையுயர்ந்த பொருள் அடக்கமே. அதைக் காத்தல் செய்யாமல் உலகின் எந்த விலையுயர்ந்த பொருளையும் காத்தல் செய்ய முடியாது.
            ஏழையாகப் பிறந்து விட்டோம் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. அடக்கத்தை ஒரு பொருளாகக் கருதிக் காத்தல் செய்தால் பொருட்செல்வம் தேடி வரும்.
            எவர் துணையும் இல்லாமல் தவிக்கிறோமோ என கலங்கத் தேவையில்லை. அடக்கத்தைத் துணையாகக் கொண்டால் எல்லாருடையத் துணையும் தேடி வரும்.
            அடக்கமுள்ளவர்களை அனைவரும் விரும்புவர்.
            அடக்கமுள்ளவர்கள் அனைவராலும் மிக மிக மிக உயர்வாகப் போற்றப்படுவர். மிக மிக மிக உயர்வாக என்றால்... எப்படி என்றால்... இந்தப் பூமியில் இருப்பவைகளில் மிக உயரமானது மலைகளே. அம்மலையை விடவும் உயர்வாகப் பெரிதாக மதிக்கப்படுவர்.
            நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று வள்ளுவர் சொல்லுவாரே, அப்படி போற்றப்படுவர்.
            பள்ளமான இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது போல, செல்வமும் அடக்கம் உள்ளவர்களிடமே கை கட்டி நிற்கிறது. அடக்கமில்லாதவர்களிடம் சேரும் செல்வம் ஒரு கட்டத்தில் தலை தெறிக்க ஓடத் துவங்கி விடுகிறது.
            நலம், வளம், பலம் எல்லாம் அடக்கமுள்ளவர்களிடமே அடங்கி நிலைக்கின்றன. அடக்கமில்லாதவர்களை விட்டு ஒதுங்கி மறைகின்றன.
            அடக்கத்தைக் காத்தல் செய்வதில் கவனம் செலுத்தினால் வேறு எதையும் காத்தல் செய்ய வேண்டியதில்லை. அனைத்தும் அடக்கத்தினைக் காத்தல் செய்யும் அச்சிறப்புக்குள் வந்து விடும்.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு பொக்கிஷம் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு ஆக்கம் தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு அதிர்ஷ்டம் தருவதும் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வளமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வல்லமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு சக்தி தருவதும், ஆற்றல் தருவதும், திறன் தருவதுமான ஒன்று வேறு எதுவும் இந்த உலகில் இல்லவே இல்லை.
            அடக்கமே ஆக்கம். அடக்கமே யாவும். அடக்கமே மேலான தவம். அடக்கமே அகலாத செல்வம்.
            வேறு எதையும் காக்க முடியாவிட்டாலும் மனிதர்கள் மட்டுமல்லாத உலக உயிர்கள் எதுவாயினும் அவைகள் அடக்கத்தை மட்டும் காத்தல் செய்தால் போதும். அடக்கம் அனைத்தையும் காத்தல் செய்யும்.
            காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
            அடக்கத்தைக் காத்தால், அடக்கம் காத்தல் செய்தவரைக் காத்தல் செய்யும்.
            தர்மம் தலை காக்கும். அடக்கம் தலை உட்பட உடல் முழுவதையும் காக்கும்.
            ஆம்!
            தர்மம் தலை காக்கும்.
            அடக்கம் முழுதாய் உனை காக்கும்.
*****

பின் தொடரும் நிழலின் துரோகங்கள்

பின் தொடரும் நிழலின் துரோகங்கள்
காலையில் ஒரு பக்கமாகவும்
மாலையில் ஒரு பக்கமாகவும்
விழும் இந்த நிழல்களை
நம்ப முடியவில்லை
போலிப் போராளிகள் போல்
இரவில் இரவோடு இரவாக
ஒன்றி விடும் அவைகளை
வெளிச்சத்தைக் கொணர்ந்து
தேட வேண்டியதாக இருக்கிறது
வாழ்வோடு ஒன்றக் கலந்து விட்ட
துரோகத்தையும்
நிழலையும்
விலக்க முடியவில்லை
பின் தொடரும் நிழலின் துரோகங்கள்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன
துரோகங்களின் நிழல்கள்
*****