28 Apr 2018

காக்க காக்க!


குறளதிகாரம் - 13.2 - விகடபாரதி
காக்க காக்க!
            பொன்னும், மணியும், பணமும், நகைகளும் உலகின் சிறந்த பொருள்களாகக் கருதிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
            விலையுயர்ந்த பொருட்களுக்கு செய்யப்படும் காத்தலே தனி.
            முக்கியப் பிரமுகர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்காக செய்யப்படும் காத்தல் பணியும் தனி.
            இருப்பவர்களைச் செல்வம் காக்கிறது. அவர்கள் செல்வத்தைக் காக்கிறார்கள். ஒரு கட்டத்தில் யாருக்கு யார் காவல் என்று தெரியாமல் செல்வத்தின் காவலர்களாக ஆகி விடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
            இல்லாதவர்களை அவர்களின் இல்லாமையே காக்கிறது. அவர்கள் பறவைகளைப் போல சிறகடிக்கிறார்கள். மடியில் கனமில்லாத போது வழியில் பயம் கொள்வது ஏது?
            வங்கிகளின் 'லாக்கர்கள்' நகைகள், பணத்தோடு ஒவ்வொருவரின் ரகசியத்தையும் காத்தல் செய்து கொண்டிருக்கின்றன.
            ஒவ்வொரு ஏ.டி.எம்.முக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு மாளிகைக்கும் வாயிற்காவலர் என்ற பெயரில் ஒருவர் காத்தல் செய்து கொண்டிருக்கிறார்.
            காத்தல் இல்லாத இடம் இது?
            இராணுவ வீரர்கள் எல்லைகளைக் காத்தல் செய்கிறார்கள் என்றால், காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காத்தல் செய்கிறார்கள்.
            எல்லாவற்றிலும் ஒரு காத்தல் வேண்டப்படுகிறது.
            எதிலும் காத்தல் தேவைப்படுகிறது.
            ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமானதைக் காத்தல் செய்கிறார்கள். தாம் ஆசைப்பட்டதைக் காத்தல் செய்கிறார்கள். வருவாய்க்காக காத்தல் செய்கிறார்கள்.
            பிடித்தம் இல்லாததை யாரும் காத்தல் செய்ய மாட்டார்கள். ஆசை இல்லாத ஒன்றை எவரும் காத்தல் புரிய மாட்டார்கள். வருவாய் இல்லாதவைகளில் காத்தல் நிகழ்வது கிடையாது.
            ஒவ்வொருவரின் காத்தலும் அவரவரின் பிடித்தம், விருப்பம், ஆசை சார்ந்து, வருவாய் சார்ந்து வேறுபடுகிறது.
            பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று இவ்வுலகில் இருக்கின்றது.
            விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று கணக்கில் இருக்கின்றது.
            இருப்பவரோ, இல்லாதவரோ அனைவரும் காத்தல் செய்ய வேண்டியது ஒன்று வழக்கில் இருக்கிறது.
            இந்நாடோ, வெளிநாடோ, எந்நாட்டவரும் காத்தல் செய்ய வேண்டிய ஒன்று பொதுவில் இருக்கிறது.
            அதுதான் அடக்கம்.
            ஒரு பொருளை எப்படிப் பாதுகாக்கிறோமோ, அப்படியே அடக்கத்தையும் ஒரு பொருளாக கருதிப் பாதுகாக்க வேண்டும்.
            அடக்கத்தைப் ஒரு பொருட்டாகக் கருதாமல், அதை ஒரு பொருளாகப் பாதுகாக்காதவர்களுக்கு ஆக்கம் கிடையாது.
            உலகின் விலையுயர்ந்த பொருள் அடக்கமே. அதைக் காத்தல் செய்யாமல் உலகின் எந்த விலையுயர்ந்த பொருளையும் காத்தல் செய்ய முடியாது.
            ஏழையாகப் பிறந்து விட்டோம் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. அடக்கத்தை ஒரு பொருளாகக் கருதிக் காத்தல் செய்தால் பொருட்செல்வம் தேடி வரும்.
            எவர் துணையும் இல்லாமல் தவிக்கிறோமோ என கலங்கத் தேவையில்லை. அடக்கத்தைத் துணையாகக் கொண்டால் எல்லாருடையத் துணையும் தேடி வரும்.
            அடக்கமுள்ளவர்களை அனைவரும் விரும்புவர்.
            அடக்கமுள்ளவர்கள் அனைவராலும் மிக மிக மிக உயர்வாகப் போற்றப்படுவர். மிக மிக மிக உயர்வாக என்றால்... எப்படி என்றால்... இந்தப் பூமியில் இருப்பவைகளில் மிக உயரமானது மலைகளே. அம்மலையை விடவும் உயர்வாகப் பெரிதாக மதிக்கப்படுவர்.
            நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று வள்ளுவர் சொல்லுவாரே, அப்படி போற்றப்படுவர்.
            பள்ளமான இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது போல, செல்வமும் அடக்கம் உள்ளவர்களிடமே கை கட்டி நிற்கிறது. அடக்கமில்லாதவர்களிடம் சேரும் செல்வம் ஒரு கட்டத்தில் தலை தெறிக்க ஓடத் துவங்கி விடுகிறது.
            நலம், வளம், பலம் எல்லாம் அடக்கமுள்ளவர்களிடமே அடங்கி நிலைக்கின்றன. அடக்கமில்லாதவர்களை விட்டு ஒதுங்கி மறைகின்றன.
            அடக்கத்தைக் காத்தல் செய்வதில் கவனம் செலுத்தினால் வேறு எதையும் காத்தல் செய்ய வேண்டியதில்லை. அனைத்தும் அடக்கத்தினைக் காத்தல் செய்யும் அச்சிறப்புக்குள் வந்து விடும்.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு பொக்கிஷம் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு ஆக்கம் தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு அதிர்ஷ்டம் தருவதும் எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வளமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு வல்லமை தருவது எதுவும் இல்லை.
            அடக்கத்தைப் போல உலக உயிர்களுக்கு சக்தி தருவதும், ஆற்றல் தருவதும், திறன் தருவதுமான ஒன்று வேறு எதுவும் இந்த உலகில் இல்லவே இல்லை.
            அடக்கமே ஆக்கம். அடக்கமே யாவும். அடக்கமே மேலான தவம். அடக்கமே அகலாத செல்வம்.
            வேறு எதையும் காக்க முடியாவிட்டாலும் மனிதர்கள் மட்டுமல்லாத உலக உயிர்கள் எதுவாயினும் அவைகள் அடக்கத்தை மட்டும் காத்தல் செய்தால் போதும். அடக்கம் அனைத்தையும் காத்தல் செய்யும்.
            காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
            அடக்கத்தைக் காத்தால், அடக்கம் காத்தல் செய்தவரைக் காத்தல் செய்யும்.
            தர்மம் தலை காக்கும். அடக்கம் தலை உட்பட உடல் முழுவதையும் காக்கும்.
            ஆம்!
            தர்மம் தலை காக்கும்.
            அடக்கம் முழுதாய் உனை காக்கும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...