1 Feb 2018

பஸ்பமாகாமல் தப்பிக்கும் எஸ்.கே.!

பஸ்பமாகாமல் தப்பிக்கும் எஸ்.கே.!
            எஸ்.கே.யின் சூழ்நிலையைப் பொருத்த வரையில் அவனைச் சுற்றியிருப்பவர்கள் எதிலும் உற்சாகப்படுத்துவது இல்லை. அவனாக உற்சாகப்படுத்திக் கொண்டு அவனாக முன்னேறினால்  உண்டு. அவன் யாரிடமிருந்து ஆதரவையும், ஊக்குவித்தலையும் எதிர்பார்க்கிறானோ அவர்களிடமிருந்து எஸ்.கே.வுக்கு செருப்படிதான் கிடைக்கிறது.
            இவைகளையெல்லாம் சொல்லி எஸ்.கே. ஆறுதல் தேடி விடலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால், அதன் பின்தான் எஸ்.கே.யின் நிம்மதி பறி போகிறது. அதற்குச் சும்மாக இருந்திருந்தாலே அந்தச் சோகம் தானாக ஆறிப் போயிருக்கும். மீசையை முறுக்கி ஆறுதல் தேடப் போய் புண்ணானதுதான் எஸ்.கே. கண்ட லாப மிச்சம்.
            மற்றவர்களுக்கு விளக்கம் சொல்லி தன்னை நல்லவன் என காட்ட நினைக்கிறானா எஸ்.கே.? அப்படியானால் அவன் கெட்டவனா, அவனை நல்லவன் எனக் காட்ட?
            அடே எஸ்.கே.! நிறைய விளக்கங்களை விடவும் வலுவான பிரம்மாஸ்திரம் மெளனம்தான்.
            எஸ்.கே. சொல்லக் கூடிய விளக்கங்கள் அனைத்தும் அவனுக்கான விளக்கங்கள். அதை அவனுக்கு அவனே சொல்லிக் கொள்கிறான். அதை ஏன் அவன் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு, அவர்கள் தப்பான அர்த்தத்தில் விளங்கிக் கொண்டு, அதற்கு மேலும் கூடுதல் விளக்கங்களைத் தந்து கொண்டு...?
            இதனால்தான் எஸ்.கே. யாரிடமும் எதையும் செய்யச் சொல்வதில்லை. அப்படிச் செய்யச் சொன்னால், அவர்களுக்கு வரும் கோபம் இருக்கிறதே... எஸ்.கே. பஸ்பமாகி விடுவான் போங்கள்!

*****

பிரிய டைரிகளின் குறிப்புகள்

பிரிய டைரிகளின் குறிப்புகள்
தாள்கள் மிச்சம் இருக்கின்றன
நினைவுகள் நிறைய இருக்கின்றன
மை தீர்ந்து விட வில்லை
எழுதுவதற்கான வலு இல்லை என்பதால்
டைரிகள் பட்டினி கிடக்கின்றன
பால் கணக்கோ
மளிகை கணக்கோ எழுதி
அதை ஆசுவாசப்படுத்த வேண்டும்
மேலும் கடன் கணக்கை எழுதி
வாய் பிளக்க வைத்து விடக் கூடாது
கால ஓட்டத்தில்
காலாவதியாகிப் போன டைரியில்
வீட்டுப்பாடல் எழுதிச் செல்லும்
பிள்ளைகளை ரசிக்கும் ஆசிரியர்கள்
பாக்கியவான்கள்
சித்திரக் குப்தனின் ஏடென
குழந்தைகளின் சித்திரங்களாய் நிறைந்த
டைரி கிடைத்தால் மட்டும்
என்னைக் கண்டுபிடித்து
என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்
*****

நன்றி - ஆனந்த விகடன் 31.01.2018 இதழ் - பக்கம்  77

31 Jan 2018

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றால்...

குறளதிகாரம் - 4.5 - விகடபாரதி
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றால்...
            இன்று அதிகம் பேசப்படும் பேசுபொருள் 'மாசு'
            நீர்,
            நிலம்,
            காற்று என்று எங்கு நோக்கினும் மாசு.
            வான் வெளியிலும் மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்கள் செயல்படாத நிலையை அடைந்த பிறகு மாசுக்களாய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
            மனிதனால் எங்கும் மாசு.
            மனிதன் மனத்திலும் மாசு.
            மனிதனால் உருவாகும் மாசுக்கள் என்னவென்று தெரிகின்றன. மனிதன் மனத்துக்குள் உள்ள மாசுக்கள்தான் என்னவென்று தெரிவதில்லை. நடந்த முடிந்த பிறகுதான் அந்த மனத்தில் இருந்த மாசு என்னவென்று வெளியே தெரிய வருகிறது.
            அப்படி மனத்தில் இருந்த மாசு பின்வரும் வகையறாக்களின் வகைக்குள் ஒன்றாகவோ அல்லது கூட்டாகவோத்தான் இருக்கும். அவையாவன,
            பொறாமை,
            ஆசை,
            கோபம்,
            ஆபாசச் சொல் 
            அநேகமாக இவைகளில் ஒன்றாகத்தான் அல்லது இவற்றின் சேர்க்கை கொண்ட வடிவமாகத்தான் அந்த மாசு மனதுக்குள் இருந்திருக்கும்.
            அதன் வெளிப்பாட்டு வடிவங்கள் வெவ்வாறாக இருக்கலாம். துரோகங்கள், ஏமாற்றுகள், வன்முறைகள், வன்கொடுமைகள், கொலைகள் என்று அதன் வடிவங்கள் எப்படி இருப்பினும் அவற்றின் மூல வித்தை விதைத்துப் பயிர் செய்வது மேலே குறிப்பிட்ட அம்மன மாசுக்கள்தான்.
            மாசுள்ள இடத்தில் கிருமிகள் பிறப்பது போல, மாசுள்ள மனதில் குற்றங்கள் பிறக்கின்றன, அறமற்ற சிந்தனைகள் எழுகின்றன.
            பொறாமை பிடித்து அழிந்த எத்தனையோ பங்காளிக் குடும்பங்களின் கதைகள் நைச்சியமாக வேண்டாம் எனச் சுட்டுவது பொறாமை எனும் மன மாசைத்தான்.
            ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் பிரான் குறிப்பிடுவது ஆசை எனும் மன மாசைத்தான்.
            'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்று பெரியோர்கள் தலையில் குட்டி எச்சரிப்பது கோபம் எனும் மன மாசு குறித்துதான்.
            'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வார்களே. மனதைக் கொன்று மனிதனைக் கொல்லும் அந்த ஒற்றைச் சொல் - அதுதான் இன்னாச்சொல் எனும் மனமாசு.
            மனிதனின் அறமற்ற செயல்கள் அனைத்தும் பூமியில் பிறப்பதற்கு முன், மனதில் பிறந்து விடுகின்றன. மனம் மாசற்று இருந்ததால் அறமற்ற செயல்கள் மனதிலும் பிறக்காது, பூமியிலும் நடக்காது.
            இந்தப் பூமியைக் குற்றங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அறமற்ற செயல்களிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தால், ஒவ்வொருவரும் தங்கள் மனதிலிருந்து அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவைகளை விலக்கி வைக்க வேண்டும்.
            கட்டுக்கடங்காத ஆசையினின்றுதான் அனைத்துக் குற்றங்களும் பிறக்கின்றன, ஒருவர்க்கு நிறைவேறும் ஆசை தனக்கு நிறைவேறவில்லையே என ஒருவர் நினைத்து ஏங்கும் போது பொறாமை பிறக்கின்றது. பொறாமைப்பட்டு முயன்று அப்போதும் நிறைவேறாத போது கோபம் பிறக்கிறது. கோபம் கொண்டும் முயன்று நிறைவேறாத போது மனதுக்குள் ஆபாசச் சொற்கள் பிறக்கின்றன. இப்படி அடுக்கப்பட்ட சீட்டுக் கட்டைத் தட்டி விடுவது போல வரிசையாக தாக்கத்தை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கும் இயல்பை உடையனவே அறமற்ற செயல்கள். அத்தகைய அறமற்றச் செயல்களைச் சீட்டுக் கட்டைத் தட்டி விடுவதைப் போல தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் மன மாசுக்கள்.
            அறம் என்பது செய்யப்படுவதில் உள்ளது போலவே, விலக்கி நிற்பதிலும் இருக்கிறது. அஃது யாதெனில் மனத்தில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கையும் விலக்கி நிற்பது ஆகும்.
            அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்கிறார் வள்ளுவர்.
            ஆம்! இந்நான்கையும் விலக்கி நிற்பவர் மனதில்தான் அறம் நிற்கிறது, நிலைக்கிறது.
            ஆசைப்படுபவரும், கோபப்படுபவரும், பொறாமைபடுபவரும், இன்னாச்சொல் வழங்குபவரும் ஒரு போதும் அறத்தின் அருகே நிற்க முடியாது. அறத்தின் அருகே கூட நிற்க முடியாதவர்கள் அறம் செய்யவும் முடியாது.
            அறத்தின் அருகே வர நினைப்பவர்கள் யாராக இருப்பினும் வள்ளுவர் மேற்சொன்ன நான்கையும் விலக்கி விட்டு வாருங்கள். அப்படி விலக்கி விட்டு வாராதவர்களை அறம் விலக்கி விட்டு வேடிக்கை காட்டும்.
            அநேகமாக நல்லவர் போல் காட்டிக் கொண்டு, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று யோக்கியர் போல புலம்புபவர்கள் யாராகினும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் வள்ளுவர் மேற்சொன்ன நான்கில் ஒன்றையோ அல்லது அந்நான்கில் இரண்டையோ அல்லது அந்நான்கில் மூன்றையோ அல்லது அந்நான்கில் அந்நான்கையுமோ விலக்க வேண்டியவர்களாகத்தான் இருப்பர்.
            கட்டுக்கடுங்காத ஆசையை விலக்கி வையுங்கள். ஆசை நிறைவேறாமையினால் எழும் பொறாமையை விலக்கி வையுங்கள். பொறாமை கொண்ட  இயலாமையினால் எழும் கோபத்தை விலக்கி வையுங்கள். கோபம் கொண்டு நிறைவேறாத ஆற்றாமையினால் எழும் இன்னாச்சொற்களை விலக்கி வையுங்கள். அப்படி விலக்கி வைத்தால் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று யாரும் புலம்ப வேண்டியிருக்காது. அறமற்ற செயல்களும் யாரிடமிருந்தும் உருவாக வேண்டிய அவசியம் இருக்காது.

*****

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!

இப்படித்தான் நல்ல பேர் எடுக்கிறான் எஸ்.கே.!
            ஒவ்வொருவருக்கும் ஒரு மொழிநடை. அவர்களுக்கென ஒரு மொழிநடை தேவைப்படுகிறது. எஸ்.கே.வுக்கென ஒரு மொழிநடை இருக்கிறது. பல நேரங்களில் இரண்டும் ஒத்துப் போவதில்லை.
            அதற்காக எஸ்.கே. என்ன செய்வான்? ஏதோ இந்த மொழி நடையாவது வாய்த்திருக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி கொள்வதே நல்லது.
            எஸ்.கே.யின் வாழ்வைப் பொருத்த வரையில் அவனது வாழ்க்கையே ஒரு விளையாட்டு. அதை அவன் விளையாட்டாகச் செய்யலாமே தவிர, சீரியஸாக எதைச் செய்வது?
            எஸ்.கே.யைச் சுற்றி இருப்பவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் அவர்களுக்கு ஏற்றது. அதில் அநாவசியமாகப் புகுந்து தன் கருத்துகளைத் தெரிவித்து எஸ்.கே. அசிங்கப்படத் தேவையில்லை.
            ஒவ்வொருவரும் தாங்கள் நினைப்பதே சரி என நினைத்துக் கொள்ளும் போது அவர்களிடம் போய் எஸ்.கே. தன் கருத்தைச் சரியென்று எப்படி நிறுவ முடியும்?
            யாருடைய மனநிலையும் நிலையாக இருப்பதில்லை. மனநிலைகள் எப்போது எப்படி மாறும் என்று புரியாத அபாயத்திற்குட்பட்டவை.
            முன்னர் நினைத்ததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும் போது தவறு என்று சொல்வதற்கு வெளியில் இருந்து ஒருவர் தேவையா என்ன? அவரவர்களின் மனநிலையே அதற்குப் போதுமானது.
            அவரவர்களைப் புகழ்ந்து பேசுவதுதான் எஸ்.கே. தப்பிப்பதற்கான வழி. யாரும் அவனிடம் ஆலோசனைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களைக் குறித்த புகழ்ச்சி மொழிகளைத்தான்.
            பொதுவாகத் தான் பேசுவது சரியென்று எஸ்.கே. நினைத்துக் கொண்டு இருக்கலாம். எஸ்.கே. பேசுவது சரியா? தவறா? என்பது எதிரில் இருப்பவரின் மனநிலையைப் பொருத்தது. எஸ்.கே. வாழும் சூழல் அப்படித்தான் இருக்கிறது. சரியான சூழ்நிலைகளில் சொல்லும் சரியான வார்த்தைகளும் தப்பாவது இப்படித்தான்.
            இவர்களிடம் பேசி மாள முடியாது என்பதால்தான் இப்போதெல்லாம் பேசாமல் இருந்தே நல்ல பெயரை எடுத்துக் கொள்கிறான் எஸ்.கே.!

*****

பிரியமான பிரார்த்தனை

பிரியமான பிரார்த்தனை
கண்ணீர்த் துளிகள் இரண்டு
மண்ணில் புதைவதற்குள்
மரித்து வந்து விடு
இயேசுவைப் போல
உன்னை வணங்கியே
வாழ முடியாது என்பதால்
இந்தப் பிரார்த்தனை
வாழ்ந்துதான் வாழ முடியும் என்னால்
வெறி பிடித்த மடையர்கள்
யாரையாவது கொன்று விட்டுப் போகட்டும்
எப்படியாவது தப்பி வந்து விடு
என் பிரிய தெய்வமே

*****

30 Jan 2018

தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!

குறளதிகாரம் - 4.4 - விகடபாரதி
தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!
            நெஞ்சிலே வஞ்சம் வைத்து,
            வஞ்சத்திலே நெஞ்சை வைத்து
            செய்வதெல்லாம் அறம் ஆகுமா?
            காட்டை அழிப்பவன் மரம் வளர்ப்போம் என்று பதாகை வைப்பதும்,
            ஆழ்க்குழாய் கிணறுகளை உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பவன் மழைநீரைச் சேகரிப்போம் என பிரச்சாரம் செய்வதும்,
            மதுபானத் தொழிற்சாலை நடத்துபவன் மது ஒழிப்புக்கான விளம்பரம் செய்வதும் அறம் ஆகுமா?
            உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும் அறம் என்ற வகைமைக்குள் வாராதவைகள்.
            உடல் தூய்மையாக இல்லாவிட்டால் உடல் அழுக்கில் புழுக்கள்தானே புழுக்கும்.
            மனம் தூய்மையாக இல்லாவிட்டால் மன அழுக்கில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும்தான் நிகழும்.
            அறம் செய்வதற்கான முதல் தகுதி, மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
            தூய்மையான மனதால் செய்யப்படுவதே அறம். மற்றவையெல்லாம் விளம்பரம். வெற்று ஆரவாரம்.
            ஆதாயத்தோடு ஆற்றைக் கட்டி இறைப்பதற்கு அறம் என்ற பெயர் பொருத்தப்படாது. ஏனென்றால் அறம் என்பது கறைபடாதது.
            ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டுக் கொண்டு ஒரு நாள் அன்னதானம் வழங்கும் தர்மப் பிரபுக்கள் இங்கு அநேகம்.
            எரிகிற வீட்டில் பிடுங்குன வரை ஆதாயம் என்று பிடுங்கிக் கொண்டு சிறு துரும்பை தூக்கிப் போட்டுச் செய்யப்படும் உதவிகளும் இங்கு அநேகம்.
            சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை விழுங்கும் தூண்டில்களும் இங்கு அநேகம்.
            புண்ணிய பூமி என்று சொல்லப்படும் பாரதம் இப்படித்தான் புண்ணியமற்ற பூமியாக விளங்குகிறது.
            நம் நாட்டில் தர்மம் செய்வதாக நாம் கருதும் தர்மவான்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
            இவைகளையெல்லாம் எதற்காக இங்கு விவாதிக்கிறோம் என்கிறீர்களா?
            அறம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்டவைகளைச் செய்து அவைகளை அறம் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு, அறம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தாமலாவது இருக்க வேண்டும் என்பதற்காக.
            அறம் என்பது 'செய்யப்படுவது' என்பது எவ்வளவு உண்மையோ, அதை விட உண்மையினும் உண்மை அறம் என்பது தூய்மையான மனதால் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என்பது.
            கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. விரதம் இருக்கும் நாளில் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தெய்வம் அடித்துக் கொன்று விடும் என்று.
            அதே நம்பிக்கை அறத்திற்கு நூற்றுக்கு நூறு முற்றிலும் பொருந்தும். மனத் தூய்மையோடு செய்யப்படாத அறங்களை அறமே கொன்று விடும்.
            அறம் என்ற சொல், மிகச் சரியகாக அறுத்து எடுக்கப்படும் 'அறு' என்ற பொருள்படும் வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல். மனத்தூய்மை இல்லாத படையல்களை அறம் ஏற்பதில்லை, பரிகாரத் தெய்வங்களைக் குறித்த நம்பிக்கையைப் போல.
            மனத் தூய்மையோடு செய்யப்படும் அறமே அறம். அஃதில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் ஆரவாரம்.
            தெருவைச் சுத்தப்படுத்துவதற்கு முன் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது போல, அறம் செய்வதற்கு முன் மனதைத் தூய்மை செய்ய வேண்டும்.
            தூய்மையான மனதில் பிறப்பதெல்லாம் அறம்.
            தூய்மையற்ற மனதில் பிறப்பதெல்லாம் வெற்று விளம்பரம்.
            தூய்மையான மனம் அறத்தில் நிற்கிறது. தூய்மையற்ற மனம் அறத்திலிருந்து விலகுகிறது.
            அறமற்றவைகள் விலக்கப்பட்டு விட்டால் பின் நிகழ்வதெல்லாம் அறம்தானே. அறமற்றவைகளை விலக்க மனத்தூய்மை முக்கியம்.
            தூய்மை செய்த இடத்தில் ஏன் துர்நாற்றமெடுக்கப் போகிறது?
            தூய்மையான மனதில் ஏன் அறமற்றவைகள் பிறக்கப் போகிறது?
            அறமற்றவைகளை விலக்கி, அறத்தை நிலைக்கச் செய்ய
            மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற என்கிறார் வள்ளுவர்.
            தூய்மையாக்கி துர்நாற்றமில்லாமல் செய்வதே நல்லதா? துர்நாற்றம் எடுக்க விட்டு பின் தூய்மையைப் பற்றிச் சிந்திப்பது நல்லதா?
            அதே போல்தான் மனத்தைத் தூய்மையாக்கி அறத்தோடு நிற்றல் நல்லதா? அறமற்றவைகளை நிகழ்த்தி விட்டு அறத்தைப் பற்றி ஏன் வலியுறுத்துவது நல்லதா?
            அறத்தின் அடிப்படையும், அடித்தளமும் மனத்தூய்மையில் இருக்கிறது என்பதால்தான் மனத்தூய்மையை மிக அதிகமாக வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
            மனத்துக்கண் மாசுக்கள் இல்லாமல் இருப்பதே அறம்.
            மனத்தூய்மை தலையாய அறம்.
            அறத்தின் தோற்றுவாய், ஊற்றுக்கண், பிறப்பிடம், இருப்பிடம் எல்லாம் மனத்தூய்மைதான்.
            மனமது செம்மையானால் மந்திரம்தான் செபிக்க வேண்டுமோ என்ன?
            தூய்மை இந்தியாவுக்கு மட்டுமல்லாது, தூய்மை உலகுக்கும் தேவையான முதல் தூய்மை மனத்தூய்மைதான். தூய்மை என்பதை முதலிருந்து அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். மனத்தில் களைகளை மண்ட விட்டு விட்டு அறம் எனும் பயிர் செழிக்கவில்லை என்று சொல்வதில் அறம் இருக்க முடியுமா?
            அது சரி! அப்படியானால்,
            அவைகள் என்ன மனத்துக்கண் மாசுக்கள்? அதாவது மனத்தூய்மையைக் கெடுக்கும் அந்த மாசுக்கள் என்னனென்ன என்கிறீர்களா? அடுத்தக் குறளில் (குறளதிகாரம் 4.5) அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

*****

தானே கற்றல்

தானே கற்றல்
பசிக்குச் சில தூண்டில்கள் கொடுக்கப்பட்டது
ஆறு வறண்டு கிடந்தது
தூண்டிலில் மாட்ட வைத்திருந்த
புழுக்களைத் தின்னத் தொடங்கியவன்
தன்னைத் தேடி வரும்
பூச்சிகளைப் பிடிக்கக் கற்றுக் கொண்டான்

*****