30 Jan 2018

தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!

குறளதிகாரம் - 4.4 - விகடபாரதி
தூய்மை உலகினர்க்கு தேவையான முதல் தூய்மை!
            நெஞ்சிலே வஞ்சம் வைத்து,
            வஞ்சத்திலே நெஞ்சை வைத்து
            செய்வதெல்லாம் அறம் ஆகுமா?
            காட்டை அழிப்பவன் மரம் வளர்ப்போம் என்று பதாகை வைப்பதும்,
            ஆழ்க்குழாய் கிணறுகளை உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பவன் மழைநீரைச் சேகரிப்போம் என பிரச்சாரம் செய்வதும்,
            மதுபானத் தொழிற்சாலை நடத்துபவன் மது ஒழிப்புக்கான விளம்பரம் செய்வதும் அறம் ஆகுமா?
            உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும் அறம் என்ற வகைமைக்குள் வாராதவைகள்.
            உடல் தூய்மையாக இல்லாவிட்டால் உடல் அழுக்கில் புழுக்கள்தானே புழுக்கும்.
            மனம் தூய்மையாக இல்லாவிட்டால் மன அழுக்கில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், செய்வதும்தான் நிகழும்.
            அறம் செய்வதற்கான முதல் தகுதி, மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதுதான்.
            தூய்மையான மனதால் செய்யப்படுவதே அறம். மற்றவையெல்லாம் விளம்பரம். வெற்று ஆரவாரம்.
            ஆதாயத்தோடு ஆற்றைக் கட்டி இறைப்பதற்கு அறம் என்ற பெயர் பொருத்தப்படாது. ஏனென்றால் அறம் என்பது கறைபடாதது.
            ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டுக் கொண்டு ஒரு நாள் அன்னதானம் வழங்கும் தர்மப் பிரபுக்கள் இங்கு அநேகம்.
            எரிகிற வீட்டில் பிடுங்குன வரை ஆதாயம் என்று பிடுங்கிக் கொண்டு சிறு துரும்பை தூக்கிப் போட்டுச் செய்யப்படும் உதவிகளும் இங்கு அநேகம்.
            சிறிய மீனைப் போட்டு பெரிய மீனை விழுங்கும் தூண்டில்களும் இங்கு அநேகம்.
            புண்ணிய பூமி என்று சொல்லப்படும் பாரதம் இப்படித்தான் புண்ணியமற்ற பூமியாக விளங்குகிறது.
            நம் நாட்டில் தர்மம் செய்வதாக நாம் கருதும் தர்மவான்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
            இவைகளையெல்லாம் எதற்காக இங்கு விவாதிக்கிறோம் என்கிறீர்களா?
            அறம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இப்படிப்பட்டவைகளைச் செய்து அவைகளை அறம் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு, அறம் என்ற வார்த்தையை கொச்சைப்படுத்தாமலாவது இருக்க வேண்டும் என்பதற்காக.
            அறம் என்பது 'செய்யப்படுவது' என்பது எவ்வளவு உண்மையோ, அதை விட உண்மையினும் உண்மை அறம் என்பது தூய்மையான மனதால் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என்பது.
            கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. விரதம் இருக்கும் நாளில் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தெய்வம் அடித்துக் கொன்று விடும் என்று.
            அதே நம்பிக்கை அறத்திற்கு நூற்றுக்கு நூறு முற்றிலும் பொருந்தும். மனத் தூய்மையோடு செய்யப்படாத அறங்களை அறமே கொன்று விடும்.
            அறம் என்ற சொல், மிகச் சரியகாக அறுத்து எடுக்கப்படும் 'அறு' என்ற பொருள்படும் வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல். மனத்தூய்மை இல்லாத படையல்களை அறம் ஏற்பதில்லை, பரிகாரத் தெய்வங்களைக் குறித்த நம்பிக்கையைப் போல.
            மனத் தூய்மையோடு செய்யப்படும் அறமே அறம். அஃதில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் ஆரவாரம்.
            தெருவைச் சுத்தப்படுத்துவதற்கு முன் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது போல, அறம் செய்வதற்கு முன் மனதைத் தூய்மை செய்ய வேண்டும்.
            தூய்மையான மனதில் பிறப்பதெல்லாம் அறம்.
            தூய்மையற்ற மனதில் பிறப்பதெல்லாம் வெற்று விளம்பரம்.
            தூய்மையான மனம் அறத்தில் நிற்கிறது. தூய்மையற்ற மனம் அறத்திலிருந்து விலகுகிறது.
            அறமற்றவைகள் விலக்கப்பட்டு விட்டால் பின் நிகழ்வதெல்லாம் அறம்தானே. அறமற்றவைகளை விலக்க மனத்தூய்மை முக்கியம்.
            தூய்மை செய்த இடத்தில் ஏன் துர்நாற்றமெடுக்கப் போகிறது?
            தூய்மையான மனதில் ஏன் அறமற்றவைகள் பிறக்கப் போகிறது?
            அறமற்றவைகளை விலக்கி, அறத்தை நிலைக்கச் செய்ய
            மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற என்கிறார் வள்ளுவர்.
            தூய்மையாக்கி துர்நாற்றமில்லாமல் செய்வதே நல்லதா? துர்நாற்றம் எடுக்க விட்டு பின் தூய்மையைப் பற்றிச் சிந்திப்பது நல்லதா?
            அதே போல்தான் மனத்தைத் தூய்மையாக்கி அறத்தோடு நிற்றல் நல்லதா? அறமற்றவைகளை நிகழ்த்தி விட்டு அறத்தைப் பற்றி ஏன் வலியுறுத்துவது நல்லதா?
            அறத்தின் அடிப்படையும், அடித்தளமும் மனத்தூய்மையில் இருக்கிறது என்பதால்தான் மனத்தூய்மையை மிக அதிகமாக வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
            மனத்துக்கண் மாசுக்கள் இல்லாமல் இருப்பதே அறம்.
            மனத்தூய்மை தலையாய அறம்.
            அறத்தின் தோற்றுவாய், ஊற்றுக்கண், பிறப்பிடம், இருப்பிடம் எல்லாம் மனத்தூய்மைதான்.
            மனமது செம்மையானால் மந்திரம்தான் செபிக்க வேண்டுமோ என்ன?
            தூய்மை இந்தியாவுக்கு மட்டுமல்லாது, தூய்மை உலகுக்கும் தேவையான முதல் தூய்மை மனத்தூய்மைதான். தூய்மை என்பதை முதலிருந்து அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். மனத்தில் களைகளை மண்ட விட்டு விட்டு அறம் எனும் பயிர் செழிக்கவில்லை என்று சொல்வதில் அறம் இருக்க முடியுமா?
            அது சரி! அப்படியானால்,
            அவைகள் என்ன மனத்துக்கண் மாசுக்கள்? அதாவது மனத்தூய்மையைக் கெடுக்கும் அந்த மாசுக்கள் என்னனென்ன என்கிறீர்களா? அடுத்தக் குறளில் (குறளதிகாரம் 4.5) அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...