குறளதிகாரம் - 4.5 - விகடபாரதி
எனக்கு மட்டும்
ஏன் இப்படி நடக்கிறது? என்றால்...
இன்று அதிகம்
பேசப்படும் பேசுபொருள் 'மாசு'
நீர்,
நிலம்,
காற்று என்று
எங்கு நோக்கினும் மாசு.
வான் வெளியிலும்
மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்கள் செயல்படாத நிலையை அடைந்த பிறகு மாசுக்களாய்ச் சுற்றிக்
கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
மனிதனால்
எங்கும் மாசு.
மனிதன் மனத்திலும்
மாசு.
மனிதனால்
உருவாகும் மாசுக்கள் என்னவென்று தெரிகின்றன. மனிதன் மனத்துக்குள் உள்ள மாசுக்கள்தான்
என்னவென்று தெரிவதில்லை. நடந்த முடிந்த பிறகுதான் அந்த மனத்தில் இருந்த மாசு என்னவென்று
வெளியே தெரிய வருகிறது.
அப்படி மனத்தில்
இருந்த மாசு பின்வரும் வகையறாக்களின் வகைக்குள் ஒன்றாகவோ அல்லது கூட்டாகவோத்தான்
இருக்கும். அவையாவன,
பொறாமை,
ஆசை,
கோபம்,
ஆபாசச் சொல்
அநேகமாக இவைகளில்
ஒன்றாகத்தான் அல்லது இவற்றின் சேர்க்கை கொண்ட வடிவமாகத்தான் அந்த மாசு மனதுக்குள்
இருந்திருக்கும்.
அதன் வெளிப்பாட்டு
வடிவங்கள் வெவ்வாறாக இருக்கலாம். துரோகங்கள், ஏமாற்றுகள், வன்முறைகள், வன்கொடுமைகள்,
கொலைகள் என்று அதன் வடிவங்கள் எப்படி இருப்பினும் அவற்றின் மூல வித்தை விதைத்துப்
பயிர் செய்வது மேலே குறிப்பிட்ட அம்மன மாசுக்கள்தான்.
மாசுள்ள இடத்தில்
கிருமிகள் பிறப்பது போல, மாசுள்ள மனதில் குற்றங்கள் பிறக்கின்றன, அறமற்ற சிந்தனைகள்
எழுகின்றன.
பொறாமை பிடித்து
அழிந்த எத்தனையோ பங்காளிக் குடும்பங்களின் கதைகள் நைச்சியமாக வேண்டாம் எனச் சுட்டுவது
பொறாமை எனும் மன மாசைத்தான்.
ஆசையே துன்பத்திற்குக்
காரணம் என்று புத்தர் பிரான் குறிப்பிடுவது ஆசை எனும் மன மாசைத்தான்.
'ஆத்திரக்காரனுக்குப்
புத்தி மட்டு' என்று பெரியோர்கள் தலையில் குட்டி எச்சரிப்பது கோபம் எனும் மன மாசு
குறித்துதான்.
'ஒரு சொல்
வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வார்களே. மனதைக் கொன்று மனிதனைக் கொல்லும்
அந்த ஒற்றைச் சொல் - அதுதான் இன்னாச்சொல் எனும் மனமாசு.
மனிதனின்
அறமற்ற செயல்கள் அனைத்தும் பூமியில் பிறப்பதற்கு முன், மனதில் பிறந்து விடுகின்றன.
மனம் மாசற்று இருந்ததால் அறமற்ற செயல்கள் மனதிலும் பிறக்காது, பூமியிலும் நடக்காது.
இந்தப் பூமியைக்
குற்றங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அறமற்ற செயல்களிலிருந்து ஒதுக்கி வைக்க
வேண்டும் என்று நினைத்தால், ஒவ்வொருவரும் தங்கள் மனதிலிருந்து அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச்சொல் இவைகளை விலக்கி வைக்க வேண்டும்.
கட்டுக்கடங்காத
ஆசையினின்றுதான் அனைத்துக் குற்றங்களும் பிறக்கின்றன, ஒருவர்க்கு நிறைவேறும் ஆசை தனக்கு
நிறைவேறவில்லையே என ஒருவர் நினைத்து ஏங்கும் போது பொறாமை பிறக்கின்றது. பொறாமைப்பட்டு
முயன்று அப்போதும் நிறைவேறாத போது கோபம் பிறக்கிறது. கோபம் கொண்டும் முயன்று நிறைவேறாத
போது மனதுக்குள் ஆபாசச் சொற்கள் பிறக்கின்றன. இப்படி அடுக்கப்பட்ட சீட்டுக் கட்டைத்
தட்டி விடுவது போல வரிசையாக தாக்கத்தை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கும்
இயல்பை உடையனவே அறமற்ற செயல்கள். அத்தகைய அறமற்றச் செயல்களைச் சீட்டுக் கட்டைத் தட்டி
விடுவதைப் போல தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
எனும் மன மாசுக்கள்.
அறம் என்பது
செய்யப்படுவதில் உள்ளது போலவே, விலக்கி நிற்பதிலும் இருக்கிறது. அஃது யாதெனில் மனத்தில்
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கையும் விலக்கி நிற்பது ஆகும்.
அழுக்காறு
அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்கிறார் வள்ளுவர்.
ஆம்! இந்நான்கையும்
விலக்கி நிற்பவர் மனதில்தான் அறம் நிற்கிறது, நிலைக்கிறது.
ஆசைப்படுபவரும்,
கோபப்படுபவரும், பொறாமைபடுபவரும், இன்னாச்சொல் வழங்குபவரும் ஒரு போதும் அறத்தின்
அருகே நிற்க முடியாது. அறத்தின் அருகே கூட நிற்க முடியாதவர்கள் அறம் செய்யவும் முடியாது.
அறத்தின்
அருகே வர நினைப்பவர்கள் யாராக இருப்பினும் வள்ளுவர் மேற்சொன்ன நான்கையும் விலக்கி
விட்டு வாருங்கள். அப்படி விலக்கி விட்டு வாராதவர்களை அறம் விலக்கி விட்டு வேடிக்கை
காட்டும்.
அநேகமாக நல்லவர்
போல் காட்டிக் கொண்டு, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று யோக்கியர்
போல புலம்புபவர்கள் யாராகினும் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் வள்ளுவர்
மேற்சொன்ன நான்கில் ஒன்றையோ அல்லது அந்நான்கில் இரண்டையோ அல்லது அந்நான்கில் மூன்றையோ
அல்லது அந்நான்கில் அந்நான்கையுமோ விலக்க வேண்டியவர்களாகத்தான் இருப்பர்.
கட்டுக்கடுங்காத
ஆசையை விலக்கி வையுங்கள். ஆசை நிறைவேறாமையினால் எழும் பொறாமையை விலக்கி வையுங்கள்.
பொறாமை கொண்ட இயலாமையினால் எழும் கோபத்தை
விலக்கி வையுங்கள். கோபம் கொண்டு நிறைவேறாத ஆற்றாமையினால் எழும் இன்னாச்சொற்களை
விலக்கி வையுங்கள். அப்படி விலக்கி வைத்தால் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது
என்று யாரும் புலம்ப வேண்டியிருக்காது. அறமற்ற செயல்களும் யாரிடமிருந்தும் உருவாக வேண்டிய
அவசியம் இருக்காது.
*****
மனிதனின் அறமற்ற செயல்கள் அனைத்தும் பூமியில் பிறப்பதற்கு முன், மனதில் பிறந்து விடுகின்றன. மனம் மாசற்று இருந்ததால் அறமற்ற செயல்கள் மனதிலும் பிறக்காது, பூமியிலும் நடக்காது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனிதனின் அறமற்ற செயல்கள் அனைத்தும் பூமியில் பிறப்பதற்கு முன், மனதில் பிறந்து விடுகின்றன. மனம் மாசற்று இருந்ததால் அறமற்ற செயல்கள் மனதிலும் பிறக்காது, பூமியிலும் நடக்காது.
ReplyDeleteஅருமையான வரிகள் ஐயா!
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஐயா!
Delete