பஸ்பமாகாமல் தப்பிக்கும் எஸ்.கே.!
எஸ்.கே.யின் சூழ்நிலையைப் பொருத்த வரையில்
அவனைச் சுற்றியிருப்பவர்கள் எதிலும் உற்சாகப்படுத்துவது இல்லை. அவனாக உற்சாகப்படுத்திக்
கொண்டு அவனாக முன்னேறினால் உண்டு. அவன் யாரிடமிருந்து
ஆதரவையும், ஊக்குவித்தலையும் எதிர்பார்க்கிறானோ அவர்களிடமிருந்து எஸ்.கே.வுக்கு செருப்படிதான்
கிடைக்கிறது.
இவைகளையெல்லாம் சொல்லி எஸ்.கே. ஆறுதல்
தேடி விடலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால், அதன் பின்தான் எஸ்.கே.யின் நிம்மதி பறி போகிறது.
அதற்குச் சும்மாக இருந்திருந்தாலே அந்தச் சோகம் தானாக ஆறிப் போயிருக்கும். மீசையை
முறுக்கி ஆறுதல் தேடப் போய் புண்ணானதுதான் எஸ்.கே. கண்ட லாப மிச்சம்.
மற்றவர்களுக்கு விளக்கம் சொல்லி தன்னை
நல்லவன் என காட்ட நினைக்கிறானா எஸ்.கே.? அப்படியானால் அவன் கெட்டவனா, அவனை நல்லவன்
எனக் காட்ட?
அடே எஸ்.கே.! நிறைய விளக்கங்களை விடவும்
வலுவான பிரம்மாஸ்திரம் மெளனம்தான்.
எஸ்.கே. சொல்லக் கூடிய விளக்கங்கள் அனைத்தும்
அவனுக்கான விளக்கங்கள். அதை அவனுக்கு அவனே சொல்லிக் கொள்கிறான். அதை ஏன் அவன் மற்றவர்களிடம்
சொல்லிக் கொண்டு, அவர்கள் தப்பான அர்த்தத்தில் விளங்கிக் கொண்டு, அதற்கு மேலும்
கூடுதல் விளக்கங்களைத் தந்து கொண்டு...?
இதனால்தான் எஸ்.கே. யாரிடமும் எதையும்
செய்யச் சொல்வதில்லை. அப்படிச் செய்யச் சொன்னால், அவர்களுக்கு வரும் கோபம் இருக்கிறதே...
எஸ்.கே. பஸ்பமாகி விடுவான் போங்கள்!
*****
எஸ்.கே யுடன் பேச வேண்டுமே!
ReplyDeleteஐயாவைப் போல
Deleteஎஸ்.கே.யுடன் பேச எனக்கும் ஆசை
ஆள்தான் சிக்குவதில்லை
ஒரே நதியில் இரண்டு முறை கால் நனைக்க முடிவதில்லை
நேற்றைய எஸ்.கே. நேற்றோடு இறந்து விட்டான்
இன்றைய எஸ்.கே. இன்றோடு இறந்து விடுகிறான்
நாளைய எஸ்.கே. நாளையோடு இறந்து விடுவான்
ஒருவேளை,
ஒரே நதியில் இரண்டாம் முறை கால் நனைக்க முடிவது சாத்தியமானால்
இறந்தவர் உயிர் கொண்டு எழுந்து வருவது சாத்தியமானால்
எஸ்.கே.யுடன் பேசுவது சாத்தியப்படலாம்
ஐயா உங்களைப் போலவே
நானும் பேச ஆசைப்படும் எஸ்.கே.வை
எப்படியோ, என்றோ, எங்கேயோ ஒரு நாள்
எஸ்.கே.யுடன் பேசும் சந்தர்ப்பம் அமைந்து விடில்
எஸ்.கே.யோடு நான் பேசக் காத்திருக்கும்
என் பிரிய அவாவைச் சொல்லி விடுங்கள்!
*****