30 Sept 2017

பழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்

பழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்
நீ யோசிப்பதுதான்
நீ முடிவு எடுப்பதுதான்
எங்கள் கருத்துகள்
உன் சந்தர்ப்பவாதத்துக்குதான் என்பது
எங்களுக்கு நன்றாகத் தெரியும்
நாங்கள் உன் கூடத்தான் இருப்போம்
எங்களுக்குப் பழகி விட்டது
உனக்குப் பழக்கமாகி விட்டது

*****

29 Sept 2017

பிரச்சனைகளின் முடிவுகள்

பிரச்சனைகளின் முடிவுகள்
அச்சம் என்பதை
களைந்து விடு
எல்லா பிரச்சனைகளும்
ஒரு முடிவுக்கு வந்து விடும்
பயம் உன் பழக்கமாகி விட்டதால்
தொடர்கின்றன
உனக்கும் எனக்குமான
பிரச்சனைகள்
உன் பயம் ஒரு நாள் உதிரும் போது
உதிர்ந்து விட்ட
உன் வாழ்நாள்களை
பொறுக்க முடியாது என்பதைப்
புரிந்து கொள்வாய்
உனக்கும் எனக்குமான
பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல்
வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விடும்
நம் பிரச்சனை பற்றி பேச
யாரும் இருக்க மாட்டார்கள்
அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு

*****

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!

பையில் இருப்பதையல்ல... பையையே அடிக்கிறார்கள்!
            நகர்ப்புறங்களிலோ, புறநகர்ப் புறங்களிலோ வாங்கிய பொருள்களை ஒரு பையில் இட்டு நிறுத்தியிருக்கும் இரு சக்கர வாகனத்தில் தொங்க விட்டு செல்ல முடியாது. சென்று வருவதற்குள் பையில் இருப்பதை ஆடுகளோ, மாடுகளோ தின்று தீர்த்திருக்கும்.
            ஆடு, மாடுகளிடம் அந்தப் பை தப்பித்தால் அங்கே திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்த மனிதர்கள் கையில் பயணித்துக் கொண்டிருக்கும்.
            செல்லும் இடங்களில் எல்லாம் பையோடு அலைவது உசிதம். பையை ஒருவேளை இழந்து விட்டால் அதை வெளியில் சொல்லாமல் இருப்பது இன்னும் உசிதம் மற்றும் விவேகம்.  
            விசயத்தைக் கேள்விபடுபவர்கள் பையை இழந்தவரைத் திட்டோ திட்டென்று திட்டுகிறார்கள். பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டாமா என்று பாய்ந்து பாய்ந்து மிரட்டுகிறார்கள். இந்தக் காலத்தில் இப்படியா அசட்டையாக இருப்பது மட்டையாகும் வரை அறிவுரைகளால் கும்மோ என்று கும்மி விடுகுறார்கள். மனநலம் பாதித்தவரிடம் பையைத் தொலைத்தவரை மனநலம் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள்.
            இவைகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதில் ஆச்சரியமான சங்கதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
            பையில் எது இருந்தாலும் அதை ஆடுகளும், மாடுகளும் தின்கின்றன.
            எங்கு பை தொங்கிக் கொண்டிருந்தாலும், அதை மனநலம் பாதித்த மனிதர்கள் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

*****

இப்படித்தான் வெளுத்தது பணம்!

இப்படித்தான் வெளுத்தது பணம்!
            பண மாற்ற மதிப்பின் மூலம் மிகப் பெரும் மாற்றம் வந்து விடும் என்றார்கள். தற்போது வெளிவரும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது ஏமாற்றம் வந்ததுதான் மிச்சம்.
            கூடுதல் பணம் வைத்திருப்பவர்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் பண மாற்ற மதிப்பில் சிக்குவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தது. அவர்கள் அரசாங்கத்தைச் சிக்க வைத்து விட்டார்கள்.
            அப்போது டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்கள், வசூல் மையங்களில் பணியாற்றுபவர்கள், பேருந்தில் வசூலாகும் பணத்தை நிர்வகிப்பவர்கள் என மக்கள் பணத்தைக் கையாளும் மற்றும் வசூல் செய்யும் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் வசூலானப் பணத்தோடு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டில்தான் நின்றார்கள்.
            அவர்கள் தாங்கள் வசூல் செய்த மற்றும் கல்லா கட்டிய பணத்தை பிரமுகர்களிடம் கொடுத்தார்கள். பிரமுகர்களிடம் இருந்த பழைய ஐநூறையும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டு வசூலானப் பணம் என்ற பெயரில் வங்கியில் கட்டினார்கள். அதற்காக அவர்கள் மிகப் பெரிய அளவில் கமிஷன் வருமானம் பெற்றார்கள்.
            கருப்புப் பணத்தை வெளுப்புப் பணமாக வெகு அழகாக அந்த இக்கட்டான காலத்திலும் சலவை செய்தார்கள்.
            வங்கிகள் குறிப்பாக தனியார்கள் வங்கிகள் புதுப் புது சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி மூன்று லட்சங்களாக நிரப்பத் தொடங்கின.
            ஒரு சில ஓட்டைகளோடு ஏதோ ஓடிக் கொண்டிருந்த படகு கடைசியில் சல்லடையாய் ஆனதுதான் மிச்சம்.
            சல்லடை ஆனாலும் படகு படகுதான் என்ற ஒரு வாதமும் இருக்கிறது. ஆனால் அந்த வாதத்திற்கு எதிர்வாதம் இல்லை. ஏன் இல்லை என்றால் விதாண்டாவாதத்தின் முக்கிய பண்பே அதுதான்.

*****

ஆகிக் கொள்வது அவரவர் விருப்பம்

ஆகிக் கொள்வது அவரவர் விருப்பம்
எனக்கு இப்படித் தோன்றுகிறது
அதை பேசுகிறேன்
அதை எழுதுகிறேன்
உனக்கு அது எப்படித் தோன்றும் என்று
எனக்குத் தெரியாது
நீயும் பேசு
நீயும் எழுது
தயவுசெய்து கல்லை மட்டும்
கையில் தூக்காதே
மொழி தெரியா
ஆதிமனிதன் நீயென்றால்
தயவுசெய்து மன்னித்துக் கொள்
உன்னிடம் பேசியதற்காகவும்
எழுதியதற்காகவும்
நானும் உன் போல்
கற்கால கருவிகள் உபயோகிக்கம்
ஆதிமனிதன் ஆகிக் கொள்கிறேன்.

*****

வடிகட்டல் தேர்வுகள்

வடிகட்டல் தேர்வுகள்
            தேர்வுகளுக்குத் தயாராகி வேலைக்கு தகுதியற்றவர்களாய் ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வகை நிலை என்றால், இன்னொரு வகை நிலை  தேர்வுக்காகத் தயாரித்த தயாரிப்பில் நூறில் ஒரு பங்கிற்குக் கூட வேலைக்கான அறிவு தேவைப்படாத நமது தேர்வு தயாரிப்பு முறை.
            வடிகட்டி நல்லதை கீழே விட்டு விடும். அல்லதை தக்க வைத்துக் கொள்ளும். இந்தத் தேர்வுகளும் வடிகட்டித் தேர்வுகளாக இருக்கின்றன. தகுதியானவர்களைக் கீழே விட்டு விட்டு, தகுதியற்றவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
            ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற ஒருவர் ல-ழ-ள என்ற மூன்று எழுத்துகளுக்கும் வேறுபாடு தெரியாமல் ஒரு கடிதம் எழுதுகிறார்.
            தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வில் தேர்வு பெற்று அதிகாரிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் செய்வினை - செயப்பாட்டு வினை வேறுபாடு இல்லாமல் மேற்பார்வை நோட்டில் எழுதி வைத்து விட்டுப் போகிறார்.
            இந்தத் தேர்வுகளை ஏன் வடிகட்டல் தேர்வுகள் என்று சொல்லக் கூடாது? அதுவுமில்லாமல் இந்தத் தேர்வுகளில் கேட்கப்படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எனும் வகையிலான நூறோ அல்லது நூற்றைம்பது ஒரு மதிப்பெண் வினாக்கள் எப்படி ஒருவரின் தகுதியை அளவிட்டு விடும்?
            பதினைந்து, பதினேழு வருடங்கள் படிப்பது வெறும் 150 ஒரு மதிப்பெண் வினாக்களுக்குத்தான் என்றால் அதைப் படிப்பவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அந்த படிப்பின் மூலம் அவர்கள் எப்படி உருவாகுவார்கள்? என்ற கேள்விகளுக்கு அந்தத் தேர்வுகளிடம் என்ன பதில் இருக்கிறது.
            ஓ! மன்னிக்கவும்! தேர்வுகள்தான் நம்மிடம் கேள்விக் கேட்கும். நாம் தேர்வுகளிடம் கேள்வி கேட்க முடியுமா என்ன?

*****

28 Sept 2017

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!

அமைதியும் பொறுமையும் அனுதினமும் வேண்டும்!
            பயங்கர மன இறுக்கமாக இருக்கும். சூழல் புரியாமல் அவரவர் பிரச்சனைகளை முன்னிருத்துவார்கள். அதில் நியாய தர்மங்களை வேறு சேர்த்துக் கொள்வார்கள்.
            சுத்தமாகவே அந்தச் சூழல் பிடிக்காது. மனம் பிடித்து வெளியே தள்ளும். சிறு சிந்தனை கூட அந்த நேரத்தில் நிறைய சக்தியை உறிஞ்சும். மனச்சோர்வு கொள்ளச் செய்யும்.
            எதுவும் செய்ய முடியாதது போலத் தோன்றும். ஆனால், அந்த இடத்தில் சுருண்டு விடக் கூடாது. ஆம்! செய்ய ஆரம்பித்து விட்டால் எந்தச் செயலும் தானாக வந்து விடும். அதற்காகவெல்லாம் ரொம்ப சிக்கலாக யோசித்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம்.
            நமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் எல்லாம் இன்பமாக இருக்கும். நாம் வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் இருந்தால், பிடித்தமில்லாத வேலையை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
            பிடித்தமில்லாத வேலையைச் செய்யும் போது தூக்கம் வருகிறது. கொட்டாவி வருகிறது. சற்று அந்த வேலையை விலக்கி விட்டு வந்தால் வந்த கொட்டாவியும், தூக்கமும் போயே போய் விடும். விசயம் அவ்வளவுதான்.
            நமது அதிகப்படியான மனஅழுத்தம் காரியங்களை மேலும் கடினமாக்கும். காரியங்களைச் சுலபமாக்குவதில் நமது இலகுவான மனநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
            பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து விட்டால், அதே நிலையில் ஒரு செயலையும் செய்ய ஆரம்பித்து விட்டால் நிகழ்பவைகளும் அது போலவே அமைகின்றன. அதற்கு மாறாக இருந்தாலோ, செய்தாலோ நிகழ்வுகளும் அவ்வாறே அமைகின்றன.

*****