அவுட்சோர்ஸிங் – முதுகெலும்பும் அதன் வழியே கசியும் கண்ணீரும்!
நவீன
உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று ஒப்பந்த சேவை அமர்த்தம் எனும் அவுட்சோர்ஸிங்
முறையைச் சொல்கிறார்கள். ஆனால், அந்த முதுகெலும்பில் ஏற்படும் ஒரு சிறு தும்மல், இங்கே
ஏதோ ஒரு கிராமத்து இளைஞனின் மடிக்கணினியை நிரந்தரமாக மூடச் செய்கிறது.
வேலையை
விட்டுத் தூக்குதலில் உள்ள ஆகச்சிறந்த பெருநிறுவன நயவஞ்சகம் எனும் கார்ப்பரேட் நயவஞ்சகம்
என்னவென்றால், வேலையை விட்டுத் தூக்கும்போது, நான் என் சுயவிருப்பத்தின் பேரில், சொந்தக்
காரணங்களுக்காக இந்த வேலையை விட்டுப் போகிறேன், என்று எழுதி வாங்கிக் கொண்டு தூக்குவதுதான்.
இது
எப்படி இருக்கிறது என்றால், தூக்கு மாட்டித் தொங்க விடும் ஒருவரிடம், நான் தற்கொலை
செய்து கொள்கிறேன், என் மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று மரண சாசனம் எழுதி வாங்குவது
போலத்தான் இருக்கிறது!
ஓர்
ஏழைத்தாய் அரும்பாடுபட்டுத் தன் மகனை அல்லது மகளைப் பட்ட மேற்படிப்பு படிக்க வைக்கிறார்.
பெரிய படிப்பு படித்துவிட்டால், உத்தியோகம் கிடைத்துவிடும், வாழ்க்கை பாதுகாப்பானதாகி
விடும் என்று அந்தப் பேதைத்தாய் நம்புகிறார்.
இப்படிப்பட்ட
நிலையில் அந்த மகனோ அல்லது மகளோ ஒரு தற்காலிக அரசு ஊழியராகச் சேரும் போது அந்தத் தாய்
அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஆனால்,
அது தற்காலிகம்தான் என்பதை அந்தத் தாயின் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுக்கவே செய்யும். “அரசாங்க
வேலை தம்பீ! இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு நிரந்தரம் ஆக்கிருவாங்க!” என்ற ஆசையில் அந்தத்
தாயின் உள்ளம் உழலும்.
ஆனால்
நடப்பது என்ன?
லட்சக்கணக்கில்
சம்பளம் வாங்கும் ஐடி நிறுவனத் தலைவர்களுக்கே திடீரென பணிநீக்கம் எனும் லே ஆப் வரும்போது
வாகனக் கடன், வீட்டுக்கடன் கட்ட முடியாமல் இரத்த அழுத்தம் எகிறுகிறது.
அப்படியிருக்க,
அடுத்த மாதக் கஞ்சிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வறுமையில் உழலும் இந்தத் தற்காலிக
ஊழியர்களின் நிலைமைக்கு எந்தப் பெறுநிறுவனத் தத்துவம் எனும் கார்ப்பரேட் தத்துவம் ஆறுதல்
சொல்ல முடியும்?
அரைக்காசு
ஆனாலும் அரண்மனை உத்தியோகம், என்று பழமொழி சொல்வார்கள். இப்போதும் கடைநிலை ஊழியர் வேலை
என்றாலும் அரசு வேலை போதும் என்கிறார்கள், காரணம் பணிப் பாதுகாப்பு. ஆனால், அந்த வேலைக்கு
இன்று முனைவர் பட்டம் எனும் பிஎச்டி படித்தவர்கள் எல்லாம் போட்டிப் போடுகிறார்கள்.
போட்டித் தேர்வுகளில் தேர்வானால்தான் வேலை.
பட்டம்
வாங்குவதற்கே கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்கள், தங்கள்
பிள்ளை போட்டித் தேர்வில் தேர்வாகும் வரை எப்படிப்பட்ட நம்பிக்கையில் காத்திருக்க முடியும்?
இதனால்,
40 வயதைக் கடந்தும் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
“முன்னாடி ஒரு தடவை இப்படி இருந்தவங்களையெல்லாம் பணி நிரந்தரம் பண்ணுனாங்க, அதே மாதிரி
நம்மையும் பண்ணுவாங்க!” என்று 'இலவு காத்த கிளி' போலக் காத்துக் கிடப்பவர்கள் பல லட்சம்.
அவர்கள்
முப்பது வருடங்கள் வேலை பார்த்துவிட்டு வெளியே போனால், அவர்களுக்குக் கைக் குலுக்கக்
கூட ஆள் இருக்காது. அவர்களுக்காகக் குரல் கொடுக்க எந்தத் தொழிற்சங்கமும் வராது.
இன்று
தகவல் தொழில்நுட்பத் துறை, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என எங்கு பார்த்தாலும்
இந்த ஒப்பந்த முறை அசுர வேகத்தில் பரவி வருகிறது.
விலைவாசி
ஏறுவதற்கு ஏற்ப இவர்களுக்கு ஊதிய உயர்வு இருக்காது. எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப்
பிடித்து வெளியே தள்ளலாம் என்ற பயத்துடனேயே வாழ்கிறார்கள்.
சுருக்கமாகச்
சொன்னால், இவர்கள் தங்கள் வருங்கால வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக எப்படித் திட்டமிட
முடியும்?; ஏனென்றால், அடுத்த மாத ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது அவர்களின்
மேலாளருக்கே தெரியாது! யாருடைய மடிக்கணினி எப்போது மூடப்படும் என்று தெரியாத இந்த ஒப்பந்த
அமர்பு யுகத்தில், நிரந்தரம் என்பது வெறும் அகாரதியில் மட்டுமே இருக்கும் ஒரு வார்த்தை,
அவ்வளவுதான் இல்லையா!
*****

No comments:
Post a Comment