அமைதித் தேடலில் ஒரு ஜப்பானியச் சாவி குறி
மனிதனின்
பரிணாம வளர்ச்சியில் அவனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் சிந்திக்கும் திறன். ஆனால்,
அதே திறன் அதிகமாகி, இன்று அவனுக்குச் சாபமாக மாறி, அவனது நிம்மதியைக் குலைத்துக்கொண்டிருக்கிறது.
காலையில்
அலுவலக மேசையில் உட்கார்ந்து ஒரு சாதாரண மின்னஞ்சலைத் தட்டச்சு செய்யத் தொடங்கும்போதே,
இந்த வார்த்தை கோபமாக இருக்குமா? அடுத்தவர் இதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களா? என்ற
ஐயங்கள் முளைக்கின்றன.
மாலையில்
போக்குவரத்து நெரிசலில் வாகனத்தை நிறுத்திக் கொண்டு, இன்னும் நடக்கவே நடக்காத பல நூறு
கற்பனைச் சிக்கல்களுக்குள் மனிதன் தன் மனதைச் சிறைப்படுத்துகிறான்.
சுருக்கமாகச்
சொன்னால், நமது ஆற்றல் பெரும்பகுதி உடல் உழைப்பால் தீருவதில்லை; மாறாக, தேவையற்ற மன
உராய்வுகளாலும் அதீத சிந்தைகள் எனும் ஓவர் திங்கிங் நச்சுச் சுழலினாலுமே வீணடிக்கப்படுகிறது.
இந்த
மனப்பளுவைச் சுமப்பதில் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால், எதைச் செய்தாலும்
அதை எடுத்த எடுப்பிலேயே நூறு சதவீத துல்லியத்தோடு செய்ய வேண்டும் என்ற எண்ணம், அதில்
சிறு தவறும் நேர்ந்து விடக் கூடாதே என்ற அச்சம், அப்படிச் செய்வதில் மற்றவர்களை விட
அதிகம் அடைய வேண்டும் பேராசை ஆகியன சேர்ந்து ஒருவரைச் சிந்தனைக் கைதியாக்குகிறது.
இந்தச்
சிக்கலிலிருந்து மீள்வது எப்படி?
இதற்கு
நம் முன்னோர்கள் எப்போதோ வழிகளைக் காட்டி விட்டுச் சென்றுள்ளனர். போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து என்பதுதான் அந்த வழிகாட்டலின் சாராம்சம். அதே நேரத்தில் ஜப்பானிய
பாரம்பரிய வாழ்வியலில் இதற்கான அழகிய தீர்வு ஒன்றுண்டு. அதுதான் முஷின்.
முஷின்
என்ற ஜப்பானியச் சொல்லுக்கு மனமற்ற மனநிலை என்று பொருள். இதன் அர்த்தம் மூளையைச் செயல்படாமல்
முடக்கி வைப்பதோ அல்லது உலகப் பற்றின்றி இருப்பதோ அல்ல. மாறாக, எந்த ஒரு குறிப்பிட்ட
எண்ணத்திலும் ஒட்டிக்கொள்ளாமல், ஆற்றின் நடுவே நிற்கும் பாறையைச் சுற்றியோடும் நீரைப்
போல, எண்ணங்களை வந்தவழியே கடந்துபோக அனுமதிக்கும் மனநிலையே முஷின் ஆகும்.
போர்
வீரர்கள் சண்டைக் களத்தில் நின்றுகொண்டு, எதிரி எந்த திசையிலிருந்து அடிப்பான் என்று
ஒவ்வொரு கோணத்தையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் நொடியில் வீழ்த்தப்பட்டுவிடுவார்கள்.
தயக்கமும்
குழப்பமும் தோல்விக்கான முதல் விதிகள். இதைப் பற்றி ஜென் துறவி டாக்வான் சோகோ மிக அழகாகக்
கூறுவார், மரத்தில் உள்ள ஒரே ஒரு சிகப்பு இலையை மட்டும் உற்றுப் பார்த்தால், முழு மரத்தையும்
நம்மால் பார்க்க முடியாது. அதுபோலவே, வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரே ஒரு சிறு அவமானத்தையோ,
எதிர்மறையான விமர்சனத்தையோ பற்றிக் கொண்டு நின்றால், வாழ்வின் பரந்த ஓட்டம் நம்மைத்
தாண்டி எங்கோ சென்றுவிடும்.
குழப்பமான
மனதை வலுக்கட்டாயமாக அடக்க முயல்வது என்பது, கொந்தளிக்கும் நீரை வெறும் கையால் சமன்படுத்த
முயல்வதற்குச் சமம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு
அவ்வளவு கொந்தளிப்பு அதிகமாகும்.
ஒரு
கிண்ணத்தில் கலங்கிய நீர் இருந்தால், அதைத் தெளிவாக்க நாம் என்ன செய்வோம்? மீண்டும்
மீண்டும் அதைக் கலக்க மாட்டோம்; பேசாமல் அந்தக் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு நகர்ந்துவிடுவோம்.
சிறிது நேரத்தில் அழுக்கு அடியில்தங்கி, நீர் இயல்பாகவே தெளிந்துவிடும். நம் மனமும்
அப்படித்தான்.
எண்ணங்கள்
குழப்பமாகும் போது, அவற்றுடன் சண்டைபோடுவதை விடுத்து, அவற்றை அப்படியே அமைதியாகக் கடந்து
போக அனுமதிக்க வேண்டும். பின்னணியில் ஓடும் ஒரு வானொலிப் பாடலைப் போல எண்ணங்களை அலட்சியப்படுத்தப்
பழக வேண்டும். நாமாக அதில் தலையிட்டுச் சண்டையிடா விட்டால், அந்த மனச் சுமையின் எரிபொருள்
தானாகவே அணைந்துவிடும்.
எண்ணங்களின்
வேகம் எல்லை மீறும் போது, வெறும் தியானத்தால் மட்டுமே எப்போதும் மனதை அமைதிப்படுத்திவிட
முடியாது. அப்போது உடலுக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும். ஜென் மடங்களில் துறவிகள்
வெறும் தியானத்தோடு நில்லாமல், தரையைப் பெருக்குவது, விறகு வெட்டுவது, பாத்திரங்களைக்
கழுவுவது போன்ற எளிய வேலைகளில் ஈடுபடுவார்கள்.
மனம்
எதிர்காலத்தைப் பற்றியும் கற்பனைகளைப் பற்றியும் கவலைப்படும் போது, அதற்கு உடனடி மருந்து
நிகழ்காலம் மட்டுமே. அடுத்த முறை கவலைகள் உங்களை முடக்கும் போது, எதையாவது செய்யுங்கள்,
ஒரு காபி கோப்பையைக் கழுவுங்கள், உங்கள் துணிகளை மடித்து வையுங்கள் அல்லது அறையைச்
சுத்தம் செய்யுங்கள்.
வேலை
என்ன என்பது முக்கியமல்ல; செய்யும் பணியில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதே முக்கியம்.
அந்தத் தொட்டுணரக்கூடிய செயல், கற்பனை உலகத்திலிருந்து உங்களை உடனடியாக மீட்டு, நிகழ்காலத்திற்கு
அழைத்து வரும்.
வாழ்வில்
எல்லாவற்றையும் 100 சதவீத முழுமையோடும் துல்லியத்தோடும் செய்துவிட வேண்டும் என்ற மாயையே
நம்மைச் செயலற்றவர்களாக்குகிறது.
எதிர்காலத்தை
முன்கூட்டியே கணிக்க முயல்வது வீண் முயற்சி. ஒரு பெரும் பயணத்தின் அனைத்து வழிகளையும்
தொடக்கத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை; முதலடியை நம்பிக்கையோடு
எடுத்து வைக்கும் தெளிவு இருந்தால் மட்டுமே போதும்.
முஷின்
என்பது ஒரே நாளில் கைகூடிவிடும் மந்திரக் கோல் அல்ல. அது நாள்தோறும் சிறு சிறு தேர்வுகளால்
வளர்க்கப்படும் ஒரு மனப்பழக்கம்.
மனக்
குழப்பங்கள் சுழல் போல வரும்போதெல்லாம், அதனுடன் மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, விலகி
நிற்கப் பழகுங்கள். அழுக்கு இயல்பாக அடியில் தங்கும்; நீரும் தெளிவாகும். குறைந்த சத்தமும்
அதிகக் கவனமும் இருந்தால், உங்கள் வாழ்க்கை நதி எந்தத் தடையுமின்றித் தன் இலக்கை நோக்கித்
தங்குதடையின்றிப் பாய்ந்தோடும்!
*****

No comments:
Post a Comment