5 Nov 2026

உலகை இயக்கும் மறைமுகச் சக்திகள்

பணத்தின் நிழல்கள்

உலகை இயக்கும் மறைமுகச் சக்திகள்

மனித நாகரிகத்தின் தொடக்கப்புள்ளியிலிருந்து இன்றுவரை உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மிக முக்கியக் காரணி எதுவென்று கேட்டால், அஞ்சாமல் சொல்லலாம், அது பணமும், அதிகாரமும்தான்.

வெளிப்படையாகத் தெரியும் அரியணைகளில் அமர்ந்திருப்பவர்களை உலகம் மன்னர்கள் என்றும், ஆட்சியாளர்கள் என்றும் அழைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வரலாற்றின் நுட்பமான பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அந்த அரியணைகளின் கால்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் உண்மையான சக்திகள் வேறு சில என்பதும், அவை நிழல்களைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல் உலகை இயக்கி வருகின்றன என்பதும் புலப்படும்.

இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் அலைபேசியின் தரவுகள், காலையில் அருந்தும் தேநீருடன் உண்ணும் ஒரு மாச்சில், முகத்தில் தடவிக்கொள்ளும் பூச்சு, வாகனத்திற்கு ஊற்றும் எரிபொருள் என அனைத்தின் பின்னாலும் மிகச்சில குடும்பங்களின் மறைமுகக் கரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. அந்தக் கரங்கள்தான் செல்வப் பெருக்கத்தால் உண்டான அதிகார வலை.

அப்படிச் செல்வப் பெருக்கத்தால் கிடைத்த அதிகார வலையால் இந்த உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உலகப் பணக்காரக் குடும்பங்கள் பற்றி இங்கு காண்போம்.

வரலாற்றில் தகவல்கள்தான் மிகப்பெரிய மூலதனம் என்பதை உணர்ந்தவர்கள் ராத்ஹீல்ட் குடும்பத்தினர். போர்கள் நடக்கும்போது, அரசாங்கங்களுக்கு முன்னரே தகவல்களைப் பெற்று, சந்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பது அரசாங்கங்கள் மட்டுமல்ல, அவற்றுக்குக் கடன் கொடுக்கும் கரங்களும்தான் என்பதற்கு இவர்கள் வரலாறு சான்று.

சவுதி அரேபியாவின் அல் சவுத் குடும்பம் பூமிக்கு அடியிலிருக்கும் கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருக்காமல், எதிர்காலத் தேவையை உணர்ந்து நியோம் என்ற கனவு நகரத்தை நோக்கியப் பயணத்தை இப்போதே தொடங்கியுள்ளது. தொலைநோக்குப் பார்வை இல்லாத செல்வம் கால வெள்ளத்தில் கரைந்துவிடும் என்ற உயரிய தத்துவத்தை இது உணர்த்துகிறது.

போர்களுக்கான ஆயுதங்களைத் தயாரித்து அதன் மூலம் அச்சத்தை மூலதனமாக்குவது உலகளாவிய வணிகத்தின் ஒரு பகுதி. கிரௌன் குடும்பத்தினர் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தயாரிப்பதன் மூலம், உலகின் மிக முக்கியமான ஒப்பந்தங்களைத் தீர்மானிக்கும் புள்ளியில் வீற்றிருக்கிறார்கள்.

மனிதனின் பலவீனங்களை விட, அவனது உணர்ச்சிகளையும் அகந்தையையும் தொடுவது மிகப்பெரிய வணிக உத்தி. பிராணிகள் மீதான மனிதனின் அன்பையும் உணர்ச்சிப் பிணைப்பையும் புரிந்துகொண்டு செல்லப்பிராணிகளுக்கான உணவு சந்தையைக் கைப்பற்றியது மார்ஸ் குடும்பம்.

லூயி விட்டான் போன்ற ஆடம்பர வணிகக் குறியீடுகள் மூலம் மனிதனின் அந்தஸ்து என்ற கர்வத்தை விற்பனைப் பொருளாக்கியது அர்னால்ட் குடும்பம்.

லாரியல் நிறுவனத்தின் மூலம், மனிதனுக்குள் இருக்கும் இளமையாகவும் அழகாகவும் தோன்ற வேண்டும் என்ற விருப்பத்தை மூலதனமாக்கியது பெட்டன்கோர்ட் குடும்பம்.

இந்தியாவில் அம்பானி குடும்பம் ஜியோ மூலம் இணையத்தைச் சாமானியனின் கைக்குக் குறைந்த விலையில் கொண்டுவந்து சேர்க்கும்போது, அது வெறும் சேவையாக இல்லாமல், ஒரு மிகப்பெரிய சமூகத்தின் பழக்கவழக்கத்தையே மாற்றியமைக்கும் சக்தியாக மாறுகிறது.

அதேபோல், அமெரிக்காவின் வால்டன் குடும்பம் சலுகை விலை, தள்ளுபடி என்ற எளிய வார்த்தைகளைக் கொண்டு வால்மார்ட் மூலம் உலக மக்களின் அன்றாட நுகர்வைத் தன்வசப்படுத்தியது.

ஒரு நாட்டின் உண்மையான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றங்களில் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை; மாறாக, சாமானியன் அறியாத சில பெருநிறுவன அறைகளின் மூடிய கதவுகளுக்குப் பின்னாலும் எழுதப்படுகிறது.

அரசியல்வாதிகள் மேடைகளில் உரையாற்றுகிறார்கள், தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாங்கும் பொருட்கள், அவர்கள் பயன்படுத்தும் சேவைகள், ஏன் அவர்களின் சிந்தனைகள் கூட இத்தகைய சக்திவாய்ந்த வணிகக் குடும்பங்களின் பொருளாதாரச் சுழற்சிக்குள் சிக்கியுள்ளன.

செல்வம் என்பது வெறும் காகிதத் தாள்களோ, எண்களோ அல்ல; அது உலகத்தை ஆளும் ஆற்றல். ஆனால், வாழ்க்கையின் உச்சகட்ட உண்மை என்னவென்றால், இந்த உலகத்தையே விலைக்கு வாங்கும் வல்லமை படைத்த இந்தக் குடும்பங்களும், அவற்றில் வாழும் மனிதர்களும் கூடக் காலத்தின் கைகளில் வெறும் தற்காலிகப் பயணிகள்தான்.

இயற்கையின் முன் எல்லாக் கோடீஸ்வரர்களின் கிரீடங்களும் ஒருநாள் கழற்றி வைக்கப்பட வேண்டியவையே. இதை உணர்வதே மெய்யான ஞானம்!

*****

No comments:

Post a Comment