உண்டியல், ஒரு மர்மக் கதை மற்றும் பூங்காத் தோழி!
பூங்கா
என்பது வெறும் நடைப்பயிற்சிக்கான இடம் மட்டுமல்ல, அது வினோதமான மனிதர்களைச் சந்தைப்படுத்தும்
ஒரு தளம். அங்குதான் சுபத்ராவுக்கு அறிமுகமானாள் உபத்ரா.
நான்கு
நாட்கள் ஒரே திசையில் நடந்தாலே போதும், இந்தியப் பண்பாட்டின்படி பரஸ்பரம் பற்களைக்
காட்டிச் சிரித்துக்கொள்ள வேண்டும்.
ஐந்தாம்
நாள், எத்தனை ரவுண்டு? என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியோடு உபத்ரா சுபத்ரா அருகில்
வந்தாள்.
அவளது
பேச்சில் இருந்த வேகம், அவளை ஓர் அவசரத் தோழி ஆக்கியது சுபத்ராவுக்கு. சில நிமிடங்களிலேயே
சுபத்ராவின் குடும்ப ஜாதகம், கணவரின் குறட்டைச் சத்தம், மகளின் பிடிவாதம் என அனைத்தும்
அவளுக்குத் தெரிந்துவிட்டது.
இன்னைக்கு
உங்க வீட்டுப் பக்கமாதான் ஒரு கடைக்குப் போறேன். அப்படியே உங்க வீட்டுக்கு வந்துட்டுப்
போகட்டுமா? என்றாள் உபத்ரா, மிகவும் எதார்த்தமாக.
சுபத்ராவும்
ஒரு மிடில்கிளாஸ் பெருந்தன்மையுடன், தாராளமா வாங்க. ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்,
என்றாள். எப்போதாவது ஒருமுறை யாரையாவது உபசரித்தால்தான் நாம் வாழ்கிறோம் என்கிற பிரமை
நீடிக்கும்.
வீட்டுக்கு
வந்தாள். ஹாலில் சோபாவில் அமர்ந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தாள் உபத்ரா. சுபத்ராவின்
மகளின் பீங்கான் உண்டியல் டிவியின் அருகில் லட்சுமிகரமாக அமர்ந்திருந்தது. மகள் சேமித்து
வைத்திருந்த சில்லறைகளும், தாள்களும் அதற்குள் கனமாகத் தவம் இருந்தன.
வீடு
ரொம்ப அழகா இருக்கு. நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும், என்று காபியை உறிஞ்சிக்
குடித்துவிட்டு, ஒரு பித்தலாட்டப் புன்னகையுடன் விடைபெற்றாள் உபத்ரா.
மறுநாள்
காலை, சுபத்ராவின் வீட்டில் பிரபஞ்சமே ஸ்தம்பித்தது போல ஒரு காட்சி.
டிவியின்
அருகில் இருந்த அந்த உண்டியலைக் காணவில்லை. அது ஒன்றும் கால்கள் முளைத்து நடைப்பயிற்சிக்குச்
செல்லும் பூச்சியல்ல. வீட்டில் இருந்த கணவரிடமும், மகளிடமும் விசாரித்தாள் சுபத்ரா.
கணவர், யாராவது தியானம் பண்ண எடுத்துட்டுப் போயிருப்பாங்களோ? என்பது போல ஒரு லுக் விட்டார்.
அப்போதுதான்
உறைத்தது சுபத்ராவுக்கு நேற்று வந்து போன அந்த பூங்காத் தோழி உபத்ராவின் உபத்ரவம்.
அவள்
வந்து போன பிறகு வீட்டுக்கு ஈக்காக்கை கூட வரவில்லை. மகளின் எதிர்காலச் சேமிப்பு சுமார்
சில ஐயாயிரம் ரூபாய், அந்தப் பெண்ணின் ஹேண்ட்பேக்குள் கௌரவமாக அடைக்கலம் புகுந்துவிட்டது
என்பதை சுபத்ராவின் உள்ளுணர்வு அலறியது.
நிச்சயதார்த்தம்
முடிந்த கையோடு ஓடிப்போகும் காதலனைப் போல, மறுநாளிலிருந்து உபத்ரா பூங்கா பக்கமே வரவில்லை.
பூங்காவின் ஒவ்வொரு புதரிலும், பெஞ்சிலும் அவளைத் தேடினாள் சுபத்ரா. அவள் இல்லை. அவளது
நட்பு ஒரு இன்ஸ்டன்ட் காபியைப் போலச் சட்டெனக் கரைந்து, கசப்பை மட்டும் மிச்சம் வைத்துவிட்டுப்
போய்விட்டது.
தெரியாத
நபர்களை வீட்டுக்குள் அழைப்பது என்பது, திருடனிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டு பத்திரமாகப்
பார்த்துக்கொள் என்று சொல்வதற்குச் சமம்.
இப்போதெல்லாம்
சுபத்ரா யாரையும் வீட்டுக்குள் அழைப்பதில்லை. அழைத்தாலும் காப்பி கொடுப்பதில்லை. கிளம்புறீங்களா,
கொஞ்சம் வேலை கெடக்கு என்று படக்கென்று சொல்லி விடுகிறாள்.
*****

No comments:
Post a Comment