29 Aug 2026

விழி பேசும் மொழிகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 20

விழி பேசும் மொழிகள்

திருவாரூர் பேருந்து நிலையம்.

மழை பெய்துகொண்டிருந்தது. வழக்கம்போலத்தான். மழையிடம் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், மனிதர்கள்தான் மழையைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள். அது மனிதர்களின் வழக்கம்தான்.

மணி மாலை ஆறு பதினாறு.

அவன் பேருந்து நிலைய தூணில் சாய்ந்திருந்தான். வடபாதிமங்கலம் பேருந்து வரக்கூடும் என்ற லேசான நம்பிக்கையில். அல்லது, வடபாதிமங்கலம் பேருந்து வராது என்ற ஆழ்ந்த சந்தேகத்தில். ஆனால், அவன் நிஜத்தில் வடபாதிமங்கலம் பேருந்தை எதிர்பார்க்கவில்லை. அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மன்னார்குடி பேருந்துக்காகக் காத்திருந்தாள். குடையைப் பிடித்துக்கொண்டு.

இருவரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். ஆறு மாதங்களாக. ஆசிரியர் பணிக்கே உரிய அதே மெல்லிய சோகத்துடன்.

அவர்களிடையே இதுவரை நடந்த உரையாடல்கள் மிகவும் மகத்தானவை. 'திறன் தேர்வு நடத்தி விட்டீர்களா?', 'மதிய உணவு சாப்பிட்டீங்களா?', 'மெல்ல கற்கும் மாணவர்களுக்கான அறிக்கை கொடுத்து விட்டீர்களா?'

மனிதர்கள் காதலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றிப் பேசித் தீர்த்துக்கொள்கிறார்கள்.

திடீரென மழை தீவிரமடைந்தது. பேருந்து நிலையக் கூரையின் ஓட்டைகள் வழியாக நீர் கொட்டியது. ஜனங்கள் பின்வாங்கியதில், அவனும் அவளும் தவிர்க்க முடியாதபடி நெருங்கி நிற்க நேரிட்டது.

"மழை விடாது போல." என்றான் அவன். உலகிலேயே மிகவும் அறிவார்ந்த ஒரு உண்மையைக் கண்டுபிடித்தவனைப் போல.

"ஆமா." என்றாள் அவள் அந்த உலக மகா உண்மையை நோபல் கமிட்டியே அங்கீகரிப்பது போல.

அவ்வளவுதான் உரையாடல் முடிந்தது. வழக்கம்போல.

அப்போது மன்னார்குடி பேருந்து இரைச்சலோடு வந்து நின்றது. மக்கள் அதை ஏதோ கடைசிப் பேருந்தைப் போல நினைத்துக் கொண்டு முண்டியடித்துக்கொண்டு ஓடினார்கள். கூட்டத்தின் தள்ளுமுள்ளுவில் அவளது கையில் இருந்த குடை நழுவி, கீழே விழப் பார்த்தது.

அவன் சட்டென்று குனிந்து அதை நிலத்தில் விழுமுன் பிடித்தான். அதே வினாடியில் அவளது கையும் அதை எடுக்கக் கீழே வந்தது.

இருவரின் கரங்களும் குடையின் பிடியில் ஒன்றோடொன்று உரசின.

அவன் நிமிர்ந்தான். அவளும் நிமிர்ந்தாள்.

இரண்டு வினாடிகள்.

அந்த மழை இரைச்சலும், மனித இரைச்சலும், பேருந்து ஒலிப்பான்களின் இரைச்சலும் மிகுந்த திருவாரூர் பேருந்து நிலையத்தின் நடுவே, அவர்களின் கண்கள் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சுற்றியிருந்த மக்களின் கூச்சலும், மழை மற்றும் பேருந்துகளின் சத்தமும் ஒரு கணத்தில் அணைந்துபோய், உலகம் ஸ்தம்பித்தது போலிருந்தது.

அவனின் கண்களில் இருந்த தயக்கம் மறைந்து, "எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். இந்த ஆறு மாதமாக இதை உன்கிட்ட சொல்லணும்னு துடித்துக் கொண்டு இருக்கேன்." என்ற விழிகளின் மௌனமான அலறல் அவளுக்குத் தெளிவுபடக் கேட்டது.

அவளது விரிந்த கருவிழிகளில், "எனக்கும் தெரியும். நீ கேட்குற ஒவ்வொரு முறையும் உன் கண்ணைப் பார்த்து நான் பதிலைச் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். நீதான் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளைத் தேடுற." என்ற பதில் விழிகளில் மின்னல் போல மின்னி மறைந்தது.

அதாவது அவர்கள் பேசியதன் சாராம்சம் என்னவென்றால்,

"எனக்கு உன்னைப் பிடிக்கும்டா லூசு."

"எனக்கும்தான்டி லூசு. அதுக்கு ஏன் ஆறு மாசம்?"

அவ்வளவுதான். அந்தக் கண் பார்வையில் எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை; போலித்தனமான வார்த்தை ஜாலங்கள் இல்லை. இப்படியாக ஒரு பெரிய காதல் காவியம் அங்கே முடிந்தது, கவிதைகள், உபதேசங்கள், சினிமா வசனங்கள் எதுவுமே இல்லாமல்.

அவள் மெதுவாகத் தன் கையை விலக்கிக்கொண்டாள். அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய புன்னகை அரும்பியது. அவன் சேறு படாத குடையை அவளிடம் நீட்டினான்.

"நான் பேருந்து ஏறறேன்," என்றாள்.

"பார்த்து போங்க." என்றான் அவன்.

மன்னார்குடி பேருந்திற்குள் அவள் ஏறி ஜன்னலோரச் சீட்டில் அமர்ந்தாள். பேருந்து கிளம்பி மழை இருளுக்குள் மறைந்தது.

அவர்கள் பேசியது இரண்டே வாக்கியங்கள்தான். ஆனால், இருவருமே தங்கள் வாழ்வின் மிக முக்கிய உரையாடல் முடிந்துவிட்டதை உணர்ந்தார்கள். சொல்ல வேண்டிய அனைத்துக் காதலும் சொல்லப்பட்டுவிட்டது.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல."                     (குறள், 1100)

-          சூத்திரங்கள் தொடரும்!

****

No comments:

Post a Comment