25 May 2026

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

மாறாத ஐம்பதும், மாறும் பிரபஞ்சமும்!

பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது ஹெராக்ளிட்டஸின் தத்துவம். இன்று இருக்கும் விலை நாளை இல்லை. பெட்ரோல் விலை இன்று 105, நாளை 110, அடுத்த வாரம் 150. இந்த நிலையற்ற உலகத்தில், மனிதன் எதையாவது ஒன்றை பிடித்துக் கொண்டு இப்படித் தன் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கேதான் ஐம்பது ரூபாய் என்ற மாறிலி பிறக்கிறது. ஆங்கிலத்தில் இதை கான்ஸ்டன்ட் என்பார்கள்.

விலைவாசி என்பது ஒரு மாயை. அது ஏறும், இறங்கும். ஆனால், இந்த ஐம்பது ரூபாய் நோட்டு நிலையானது. அது ஒரு தியான நிலை. எப்படி என்கிறீர்களா?

பெட்ரோல், டீசலைப் பொருத்த வரையில் பொருளாதார நிபுணர்கள் டாலரில் கணக்கிடுகிறார்கள். தத்துவவாதியோ தன் பையில் இருக்கும் ஐம்பது ரூபாயைக் கணக்கிடுகிறான். லிட்டர் என்பது அளவை சார்ந்தது. ஐம்பது ரூபாய் என்பது மனநிறைவை சார்ந்தது.

ஆக, விசயம் இதுதான். நீ எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோல் விலையை ஏற்றிக் கொள். நான் ஐம்பது ரூபாய்க்குத்தான் போடுவேன், என்று இந்திய குடிமகன் ஒரு மாறாத முடிவை எடுத்து விட்டான்.

ஒரு காலத்தில் ஐம்பது ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. பிறகு அது அரை லிட்டர் ஆனது. இப்போது அது நானூறு மில்லி, முந்நூறு மில்லி எனச் சுருங்கியிருக்கலாம். ஆனால், தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், வண்டி ஓடுவதற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவையில்லை, வண்டி அசையத் தொடங்கினால் போதும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் வேண்டுமானால் நூற்று ஐந்து ரூபாய் தா என்பது பெட்ரோல் பங்கின் நியதியாக இருக்கலாம்.

ஆனால், இந்திய குடிமகனுக்கு பெட்ரோலால் வண்டி ஓட வேண்டும் என்பது இரண்டாம் பட்சம்தான். வண்டியில் பெட்ரோல் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறதே, அதுதான் முதல் பட்சம். அந்த நம்பிக்கையின் விலை ஐம்பது ரூபாய்.

மொத்தத்தில் வண்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, பங்க்கில் இருக்கும் நபர் வண்டியின் டேங்கிற்குள் அந்த இரும்புக் குழாயை நுழைத்து க்ளிக் என்று ஒரு சத்தம் எழுப்புவார்,  அந்த சடங்குதான் முக்கியம். அது ஒரு வகையான ஆன்மீக ஆசுவாசம்.

இந்த உலகம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. போர் நடக்கிறது, கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது, கார்ப்பரேட்டுகள் விலையை தீர்மானிக்கிறார்கள். எளிய மனிதனால் எதையும் மாற்ற முடியாது.

இந்தச் சூழலில், நம் உலக மகா இந்தியக் குடிமகன் ஓர் எல்லையை வகுத்துக்கொள்கிறான். நீ உலகத்தையே மாற்றிக்கொள், என் ஐம்பது ரூபாயை உன்னால் மாற்ற முடியாது. இது ஒரு மௌனப் புரட்சி.

விலை ஏறிவிட்டதே, என்று பதற்றமடைந்து, கணக்கு போட்டு, புலம்பி வாழும் உலக மனிதர்களுக்கு மத்தியில், விலை ஏறினால் எனக்கு என்ன? நான் வாங்குவது எப்போதும் ஐம்பது ரூபாய்க்குத்தான், என்று கடந்து போகும் இந்தியக் குடிமகன், நுகர்வோர் கலாச்சாரத்தின் முகத்தில் அறையும் ஆகச்சிறந்த ஞானி.

இறுதியாக, அந்த ஐம்பது ரூபாய்க்கு ஒரு சொட்டு பெட்ரோல் மட்டுமே வரும் ஒரு நாள் வரக்கூடும். அன்றும் நம் இந்தியக் குடிமகன் பங்க்கிற்குப் போய் ஐம்பது ரூபாயைக் கொடுப்பான். பங்க் ஊழியர் ஒரு துளி பெட்ரோலை ஒரு பஞ்சில் நனைத்து வண்டியின் இன்ஜினில் தடவி அனுப்புவார்.

அப்போதும் நம் இந்தியக் குடிமகன் புன்னகையோடு வண்டியைத் தள்ளிக்கொண்டே போவான். ஏனெனில், அவன் வாங்குவது பெட்ரோலை அல்ல, நான் இன்னும் தோற்றுவிடவில்லை என்ற மனித திமிரை!

வாழ்க பாரதம்! வளர்க பெட்ரோல் விலை!!

*****

No comments:

Post a Comment