24 May 2026

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

நிழல்களின் நர்த்தனம் – மாய உலகக் கோட்பாடு!

மனிதன் களிமண்ணால் உருவங்களைச் செய்து அதற்கு உயிர் கொடுக்க ஆசைப்பட்டான். அது புராண காலம். இன்று மனிதன் எலக்ட்ரான்களால் போலி ஆன்மாக்களை உருவாக்கி, அதற்கு லைக்குகளையும் வியூஸ்களையும் பிச்சையிட்டு உலவ விட்டிருக்கிறான். இது டிஜிட்டல் காலம்.

இன்று ரூட் மாபியா என்பது வெறும் தொழில்நுட்ப மோசடி மட்டுமல்ல, அது நவீன மனிதனின் ஏமாறக் காத்திருக்கும் மனநிலையை மூலதனமாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த வியாபாரம்.

இந்த ரூட் மாபியாக்கள் நினைத்தால் யாரை முதலமைச்சராக்க வேண்டும், யாரை முதலமைச்சராக்கக் கூடாது, யாரை பிரதமராக்க வேண்டும், யாரைப் பிரதமராக்கக் கூடாது என்பதைக் கூட தீர்மானிக்க முடியுமாம். சுருக்கமாகச் சொன்னால் இது நவீன நரக உலகின் டிஜிட்டல் சாத்தான்கள்தான்.

ஆதி பிரம்மன் உலகைப் படைக்க கோடி வருடங்கள் தவம் இருந்தானாம். ஆனால், இந்த ரூட் மாபியாக்கள் ஒரு சாதாரண லேப்டாப் மற்றும் சில பிராக்ஸி மென்பொருட்களை வைத்துக் கொண்டு, ஒரே நொடியில் பத்து லட்சம் மனிதர்களைப் படைக்கிறார்கள்.

அவர்களுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, வெறும் ஐபி அட்ரஸ் மட்டுமே முகவரி. அவர்களுக்கு பசியும் இல்லை, தூக்கமும் இல்லை. ஆனால், நீங்கள் போடும் பதிவுகளுக்கு ஹார்ட் சிம்பல் போடவும், வசைபாடவும் அவர்களுக்குத் தெரியும்.

நிஜ உலகில் ஒரு மனிதனுக்கு ஓர் ஓட்டுதான். ஆனால், இந்த மாய உலகில், ஒருவனுக்குப் பின்னால் ஒரு லட்சம் நிழல்கள் கைதட்டக் காத்திருக்கின்றன. அப்படியென்றால், இங்கே வாழ்பவன் மனிதனா, அல்லது அந்த நிழல்களா?

யார் அரியணையில் அமர வேண்டும் என்பதை ஒரு காலத்தில் வாள்களும், பீரங்கிகளும் தீர்மானித்தன. பிறகு வாக்குச்சீட்டுகள் தீர்மானித்தன. இன்றோ, கலர்புல்லான எடிட்டிங் செய்யப்பட்ட 30 வினாடி ரீல்ஸ்களும், அதன் கீழே விழும் போலி லைக்குகளும் தீர்மானிக்கின்றன.

உண்மை என்னவென்றால், ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்கிறான். ஆனால், ரூட் மாபியாவின் உண்மை என்னவென்றால், ஓர் அல்காரிதம் மனிதனை யோசிக்க விடாமல் முடிவெடுக்க வைக்கிறது.

ஒரு வெற்றுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு தங்க முலாம் பூசி, சுற்றிலும் ஒரு லட்சம் ரோபோக்களை விட்டு ஆஹா, ஓஹோ என்று கோரஸ் பாட வைத்தால், பாமர மனிதன் அதைத் தெய்வீகப் பாத்திரம் என்று நம்பி விடுகிறான்.

புரிதல் இல்லாத மக்கள், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடும் குழந்தைகளைப் போல, இந்த போலிப் பிம்பங்களின் பின்னால் ஓடி, தங்களின் எதிர்காலத்தைத் தொலைக்கிறார்கள்.

ஏமாற்றுபவர்கள் இருக்கிற வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்பது பழைய தத்துவம். புதிய தத்துவம் என்னவென்றால், நீங்கள் ஏமாறத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அல்காரிதம் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறது.

மக்களுக்கு உண்மை சுடுகிறதோ இல்லையோ, அது மிகவும் போரடிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குத் தேவை கவர்ச்சியான, அதிரடியான, கண்களைக் கூசச் செய்யும் பொய்கள். ரூட் மாபியாக்கள் தருவது அதைத்தான். அவர்கள் பொய்களை வோட்கா போல வண்ணமயமான கிளாசில் ஊற்றித் தருகிறார்கள். மக்கள் அதை போதையோடு பருகிவிட்டு, நிஜ உலகை மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த ரூட் மாபியாக்கள் உருவாக்குவது தலைவர்களை அல்ல, மாயாவிகளை. ஒரு கணினித் திரையின் பின்னால் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையையும் திசைதிருப்பும் இந்த டிஜிட்டல் சாத்தான்கள் வெல்வது அவர்களின் திறமையால் அல்ல, நமது சோம்பேறித்தனத்தால்.

திரையில் தோன்றும் லைக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து ஒருவனின் யோக்கியதையைத் தீர்மானிக்கும் வரை, நாம் அனைவரும் இந்த ரூட் மாபியாவின் கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலை கைதிகள்தான்.

ஆகத் தத்துவம் என்னவென்றால், திரையைத் துடைத்துப் பாருங்கள். அங்கே தெரிவது தலைவன் அல்ல, உங்கள் ஏமாளித்தனத்தின் பிரதிபலிப்பு மட்டுமே!

*****

No comments:

Post a Comment