13 Jul 2024

தவறான கலாச்சாரத்தைச் சரியென்று வளர்க்கலாமா?!

தமிழகத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் என்று சொல்வதா? கெட்ட நேரம் என்று சொல்வதா?

தமிழகம் ஒரு தவறான கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு அதைப் பின்தொடர்ந்து கொண்டும் போய்க் கொண்டிருக்கிறது.

அதென்ன தவறான கலாச்சாரம்? அது எப்படி வளர்ந்தது?

இந்த இரு கேள்விகளுக்குமான விடை சொல்லித் தெரியவா வேண்டும்?

ஒரு தவறான கலாச்சாரம் உருவாகுவதற்குச் சமூக கட்டமைப்புகளும், அரசாங்க கொள்கை முடிவுகளும் காரணமாகி விட்டன என்பதுதான் இதன் பின்னுள்ள பெருத்த சோகம்.

கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கிறது என்பதற்காக மதுபான விற்பனையை அரசாங்கம் கையில் எடுப்பது ஒரு தவறான கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் துணை போகச் செய்து விட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காகக் குடியை ஆதரிக்கும் சமூகக் கட்டமைப்பும் ஒரு தவறான கலாச்சாரம் உருவாகத் துணை செய்து விட்டது.

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்று

சான்றோர் முகத்துக்கு அளி.”        (குறள், 923)

எனும்படியான தாய்மார்களும் சான்றோர்களும் இன்று தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன?

அரசே மதுபானங்களை விற்பனை செய்த போதிலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியாகியிருக்கும் அறுபதுக்கும் மேற்பட்டோரின் மரணம் அச்சுறுத்தும் ஒரு குடி கலாச்சாரத்தை நோக்கித் தமிழ்ச் சமூகம் போய்க் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மதுப் பழக்கத்தைப் பொருத்த வரை அரசாங்கத்தின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழகத்தைப் பொருத்த மட்டில் மது விற்பனை முழுவதையும் அரசாங்கம் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கிறது. நட்சத்திர விடுதிகள் தொடங்கி மனமகிழ் மன்றம் வரையிலான மது விற்பனை தொடர்பான 12 வகை உரிமங்களை வழங்குவதும் அரசாங்கம்தான்.

இன்று கல்யாணம், காது குத்தல், சாவு, கருமாதி, சடங்கு, சம்பிரதாயம், திருவிழா என்று எதை எடுத்துக் கொண்டாலும் மதுபானக் குடியலோடுதான் நிறைவு பெறுகின்றன. அறிந்தோ, அறியாமலோ நமது சமூகக் கட்டமைப்பும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டது.

ஒரு காலத்தில் கள் அருந்துபவர்களையும், மது அருந்துபவர்களையும் கண்டால் பொது இடங்களிலும், விழாக்களிலும் முகம் சுளித்து விலகிப் போன மக்கள் இன்று மாறி விட்டார்கள். மது அருந்தி விட்டு வருபவர்களை முகம் மலர்ந்து வரவேற்கும் அளவிற்குச் சமூகக் கட்டமைப்பு முற்றிலும் தடம் புரண்டு நிலை மாறியிருக்கிறது. மது அருந்துவது தவிர்க்க முடியாதது என்ற மனக்கட்டமைப்பை நோக்கி சமூகம் வந்து விட்டது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு மது அருந்துவது ஆண்கள் என்றிருந்த நிலை மாறி இன்று பெண்களும் மது அருந்துகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடக்கம் என்பது இந்த உண்மைக்கான சான்று. அத்துடன் ஆண்கள் – பெண்கள் என்ற நிலை மாறி குழந்தைகள் வரை மது அருந்தும் நிலைக்குத் தமிழகம் வந்து விட்டது.

இந்தியாவில் தமிழ்நாடு சில பல விசயங்களில் முன்னணியில் இருக்கிறது. அதே போல கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

மது அருந்துவது வேண்டாம் என்று அறிவுறுத்தும் நிலைமை மாறி, அளவோடு அதை அருந்த வேண்டும் என்று நிலைக்கு அறிவுறுத்தும் வகையில் நிகழ்காலக் காட்சிகள் மாறி விட்டன. மதுவிலக்கை அமல்படுத்தினால் அதற்காகப் போராட மது அருந்துவோர் சங்கம் உருவாகிட்ட நிலையில் மது அருந்துதலை முறைபடுத்துதல் மட்டும்தான் வழியோ என்று யோசிக்கும் நிலையில் தமிழ்ச் சமூகம் தற்போது தள்ளாடிய நிலையில் இருக்கிறது.

மது அருந்துவது ஒருவரின் விருப்பம் மற்றும் சுதந்திரம் சார்ந்ததாக இருந்தாலும், எல்லை மீறிச் செல்லும் விருப்பமும் சுதந்திரமும் சமூக அச்சுறுத்தல் சமூக வீழ்ச்சியில் சென்று முடிவுறும்.

வாகனத்தில் சென்று மது அருந்தும் ஒருவர், மது அருந்திய நிலையில் மீண்டும் வீடு திரும்ப அதே வாகனத்தை ஓட்டிக் கொண்டுதான் வருவார். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் ஒருவர் நிச்சயம் போக்குவரத்துப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தான். ஆனால் நீங்கள் ஒரு நாளின் எந்தப் பொழுதில் எந்தச் சாலையில் கணக்கெடுத்தாலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிச் செல்லும் பத்து சதவீத நபர்களையாவது பிடித்து விட முடியும். மது அருந்துவதை ஒருவரின் சுதந்திரம் சார்ந்ததாகவும் அனுமதித்து விட்டு முடியாது என்பதை இதை வைத்துதான் வாதம் செய்ய வேண்டியதாகிறது.

மது அருந்துவோரால் சீரழியும் குடும்பத்தையும் சமூகத்தையும் பார்க்கையில் மது அருந்துவதை ஒருவரின் விருப்பம் சார்ந்ததாக மட்டும் பார்க்க முடியாது. மதுவால் சீரழிந்த குடும்பங்களைப் பார்த்தால் அது எத்தகைய சமூகக் கொடுமையைப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது கண்ணார விளங்கும்.

மது விற்பனையை அரசு நிறுத்திக் கொள்ள முற்படாத போதும், பொது சமூகமும் மது அருந்துவதை அளவோடு கட்டுபடுத்திக் கொள்ள முற்படாத போதும் மது அருந்துவது குறித்த கட்டாய நெறிமுறைகளை வகுத்து அதை தீவிரமாகச் செயல்படுத்த முற்படுவது பொது சமூகத்திற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.

ஒருவருக்கு எந்த அளவுக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் நெறிபடுத்த வேண்டும். மது விற்பனை முழுவதும் தற்போது தமிழக அரசின் கட்டுபாட்டில் இருப்பதால் இதைச் செய்வது தமிழக அரசுக்கு ஒன்றும் சிரமமான காரியமாக இருக்க முடியாது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கு எவ்வளவு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்க வேண்டும் என்பதை ஆதார் பதிவு மூலமாகத் தீர்மானிக்கும் அரசு அதே முறையைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு ஒருவருக்கு எவ்வளவு மது விற்பனை செய்யலாம் என்பதையும் தீர்மானித்து அதைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

மது விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைக்கும் லாபம் அபரிமிதமானது. தொழில்துறை வளர்ச்சி மூலமாக அடைய வேண்டிய ஒரு வளர்ச்சியைத் தமிழகம் இந்த வகையில் அதாவது மது விற்பனை மூலமாக அடைவது வேதனைத் தரத்தக்கது என்றாலும், அந்த லாபத்திலிருந்து ஒரு பகுதியைச் சமூக கண்ணோட்டத்தில் மது அருந்துவோர் நல்வாழ்வு தொடர்பான விசயங்களுக்காக அரசு செலவிட வேண்டும். நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திலிருந்து சமூக பொறுப்பு மற்றும் சமூக நலம் சார்ந்த நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சமூக அக்கறையோடு செலவிட வேண்டும் என்று அரசாங்கம் கொள்கை வகுக்கும் போது, அரசாங்கமே மது விற்பனை மூலமாகக் கிடைக்கும் லாபத்திலிருந்து அப்படி ஒரு தொகையை ஒதுக்கிச் செலவிட வேண்டியது மிக மிக தார்மீகமான ஒன்று. மதுவால் சீரழிந்த கிராமங்களை அரசாங்கம் தனிக்கவனம் எடுத்து தத்தெடுத்துச் சீர்படுத்த முன்வர வேண்டும்.

முக்கியமாக மது விற்பனை மூலம் கிடைத்த அந்தப் பாவத் தொகையிலிருந்து ஒவ்வொரு மது விற்பனை நிலையத்திலும் ஒரு மருத்துவரை நியமித்து மது அருந்துவோரின் உடல்நலத்தை அவ்வபோது பரிசோதித்து அவர் எவ்வளவு மது அருந்தலாம் என்பதற்கான கட்டுபாடுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி அவரை நெறிபடுத்துவதற்கான வழிகாட்டுதல் மையங்களை அரசுதான் உருவாக்க வேண்டும். இப்படி சில வழிகாட்டுதல் மையங்களை நிறுவுவதன் மூலமாகத்தான் டாஸ்மாக்கின் கதவுகளை சில நிமிடங்கள் மூடுவதைப் பற்றியாவது சிந்திக்க முடியும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சிப் பிரிதிநிதிகள், உள்ளாட்சித் தலைவர்கள், சில கிராமங்களுக்குச் சேர்த்து ஒரு காவல் நிலையம், அதைத் தாண்டி வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என எல்லாரும் இருந்து கள்ளச்சாராய மரணம் நடக்கிறது என்றால் அதை விட கொடுமை வேறென்ன இருக்க முடியும்?

அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து தவறான ஒரு மது கலாச்சாரத்தை உருவாக்கி விட்டன என்பது உண்மை என்றாலும் அதே தவறான கலாச்சாரத்திலேயே பயணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை நேர்செய்து கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கம் மற்றும் சமூகத்திற்கு இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் அது காலம் கடந்த முயற்சி என்றாலும், இப்போதும் அதைத் தொடங்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகள் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு மிக மோசமாகவே இருக்கும். ஏனென்றால் போதைக்கு அடிமையானவர்கள் எந்த நிலைக்குச் செல்வர் என்பதைத் திருவள்ளுவர் இப்படிச் சொல்கிறார்,

“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.”          (குறள், 921)

*****

11 Jul 2024

இளைஞர்கள் எப்படிச் சேமிக்கலாம்?

இளைஞர்கள் எப்படிச் சேமிக்கலாம்?

‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று அப்போதே சொல்லி விட்டார்கள். அது இப்போதும் எப்போதும் பொருந்துவதாக இருக்கிறது. அரசாங்கங்களின் பட்ஜெட்டே அப்படி இருக்கும் போது அரசாங்கத்தின் பிரஜைகளான மக்களின் நிலைமை பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

குடும்பஸ்தர்களை விட இளைஞர்களுக்கான செலவினங்கள் குறைவு போலத் தோன்றினாலும் அவர்களின் நவநாகரிக வாழ்க்கையில் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போய் விடுகின்றன. இளைஞர்களின் செலவினங்களைத் தடுக்கக் கூடிய தடைகள் எனும் பிரேக்குகளும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அவர்களின் எவ்வளவு செலவு வேகத்தில் போகிறோம் என்பது அவர்களுக்கே புரிவதில்லை.

அலங்காரப் பொருட்கள், சொகுசான ஊர்திகள், கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கை என்று அவர்களுக்கான செலவினங்கள் நாளுக்கு நாள் புற்றீசல் போலப் பலவிதங்களில் கூடிப் போய் விடுகின்றன.

மணமாகிக் குடும்ப வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் போதுதான் அவர்கள் செலவினங்களைப் பற்றி அறியத் தொடங்குகிறார்கள். சம்பாத்தியத்தின் தொடக்கத்திலிருந்து சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதை உணரத் தலைப்படுகிறார்கள். தலை வழுக்கையான பின்பு சீப்பு கிடைத்தாற்போலத்தான் இத்தலைப்படுதல் அமைகிறது.

இளைஞர்களாக இருக்கும் பருவத்திலேயே அவர்கள் எப்படிச் செலவினங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கலாம் என்பதை இப்பத்தியில் பார்க்கலாம். இப்பத்தியை இளைஞர்கள் அறிவுறுத்தலாகக் கருதிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிக் கருதிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இந்த ஒரு விசயத்திலாவது கடவுள் என் பிரார்த்தனையை நிறைவேற்றலாம். பார்ப்போம் பத்தியின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை.

இளைஞர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பிற்காக இருக்கும் இடத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நடப்பட்ட நாற்றுகளைப் போலத்தான், பதியன் போடப்பட்ட செடிகளைப் போலத்தான்.

இடம் பெயர்ந்து பணியாற்றும் நிலைமைகளில் இருக்குமிடத்திற்கும் பணியிடத்திற்கும் இடையே அதிக தொலைவில்லாமல் பார்த்துக் கொள்ளலாம். பணியிடங்களுக்கு அருகே இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளலாம். விடுதி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் போக்குவரத்துச் செலவினங்களைக் கணிசமாக மிச்சம் செய்யலாம். வாகனங்கள் வாங்குவதற்கான செலவினத்தையும் அதைப் பராமரிப்பதற்கான செலவினத்தையும் எரிபொருளுக்கான செலவினத்தையும் இல்லாமல் செய்யலாம். இந்த யோசனைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா என்றால் இயலாது என்று கூட சொல்லலாம். அப்படியே கடைபிடித்து விட்டால் இதனுடைய அனுகூலங்களைக் குறைவு என்று மட்டும் சொல்லி விட முடியாது.

உணவுகளை உணவு விடுதிகளில் உண்ணுவதைத் தவிர்த்து சமைத்து உண்ணலாம். இதனால் ஆரோக்கியமும் மேம்படும். செலவினமும் கணிசமாகக் குறையும். இதனால் நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என நினைக்காமல் பையிலிருக்கும் பைசாவுக்குப் பாதிப்பு குறைகிறது என்பதை மட்டும் இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

போக்குவரத்துத் தவிர்க்க முடியாது எனும் நிலையில் போக்குவரத்திற்கு இயன்றவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் கேவலமாக நினைக்க வேண்டுமா என்ன? பொதுப்போக்குவரத்திற்கான வாகனங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர், நிர்வகிப்பாளர், தூய்மைப் பணியாளர், பராமரிப்பாளர் என்று பலர் இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்திற்காக உங்களுக்குப் பல பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப்பட வேண்டிய நிலையில் இருப்பதை நீங்கள் சாமர்த்தியமாக மறந்துவிடக் கூடாது. நீங்கள் ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியுமா என்று சொல்லுங்கள்.

மிதிவண்டி போன்ற செலவினங்கள் குறைந்த உடலுக்கும் செலவினத்திற்கும் ஆரோக்கியமான வாகனங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் உழைப்பில் செல்லும் ஒரே வாகனம் அதுதான். உங்கள் சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றை எரிபொருளாக எடுத்துக் கொண்டு அதற்காகும் மருத்துவச் செலவை இல்லாமல் செய்து இயங்கும் வாகனம் அது.

தொலைதூரப் பயணங்களுக்குத் தொடர்வண்டிப் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலமாகப் பயணச் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கலாம். தொடர்வண்டிப் பயணங்கள் உங்களுக்கு எவ்வித உடல் களைப்பையும் அசதியையும் உருவாக்காது. உங்கள் பணிகளைச் செய்து கொண்டே நீங்கள் தொடர்வண்டிப் பயணங்களைச் செய்யலாம். பணியும் பயணமும் இணையும் அற்புதமான தருணங்கள் அவை.

பொழுதுபோக்குச் செலவினங்களையும் கொண்டாட்டத்திற்கான செலவினங்களையும் செய்வதற்கு முன் எப்போதும் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இவ்விரண்டிலும் ஆகும் செலவினங்கள் பல நேரங்களில் கண்ணை மறைப்பதாக அமைந்து விடக் கூடியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டு விட்டால் கொண்டாட்டங்களால்தான் மகிழ்ச்சி உண்டாகிறது என்பதன் அபத்தத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பட்ஜெட் போட்டு செலவினம் செய்வது நல்லது என்றாலும் இளைஞர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம். அந்த விருப்பமின்மைப் பழக்கத்தை மாற்றி சிறிது காலம் பட்ஜெட் போட்டுச் செலவு பண்ணப் பழகி விட்டால் இந்தப் பழக்கம் எப்போதும் பொருளாதாரப் பயனும் பொருளாதாரப் பலமும் தரும். எல்லாம் பழக்கம்தான். ஒரு நாள் பல் துலக்காமல் சாப்பிட முடியாமைக்கு என்ன காரணம்? பழக்கம்தானே. அப்படித்தான், பட்ஜெட் போட்டு செலவு பண்ணிப் பழகி விட்டால் அதன் பின் பட்ஜெட் போடாமல் உங்களால் செலவு பண்ண முடியாது.

ஒவ்வொரு மாதாந்திரச் சம்பளத்திலும் எவ்வளவு சேமிக்க வேண்டும், எவ்வளவு செலவினம் செய்ய வேண்டும் என்பதில் ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் பழக்கத்தில் வர வேண்டிய ஒன்று. பழகி விட்டால் உங்கள் வரவு – செலவின நிர்வாகத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள். எவ்வளவு பெரிய சர்க்கஸ் சாகசங்களையே பழக்கி பழக்கிச் செய்ய வைக்கிறார்கள். அப்படி நீங்கள் வரையறைகளோடு பழக்கி பழக்கி சேமிப்பையும் செலவையும் செய்ய பழகி விட்டீர்கள் என்றால் பொருளாதார சர்க்கஸில் நீங்கள் செய்யும் சாகசங்கள் உங்களுக்கே வியப்பை அளிக்கக் கூடியவை.

உங்கள் பொருளாதரத்துக்கு உரிய வரையறையின்படி செலவினங்களையும் சேமிப்புகளையும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் சம்பாத்தியமும் செலவினமும் எப்போதும் ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆம் வரவுக்கேற்ற செலவு அத்துடன் சேமிப்பும் இருந்தால் வரவைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. வரவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செலவினம் அதற்குள் கட்டுப்பட்டு இருக்குமானால் செலவினத்தைப் பற்றிய கவலையே வேண்டியதில்லை என்பதை வள்ளுவரும்

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை”              (குறள், 478)

என்று சொல்கிறார்.

இந்தக் குறள்தான் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதற்கான வழிகாட்டும் குறளாகும். இந்த ஒரு குறள் போதும் உங்களின் பொருளாதார வலிமையை உயர்த்திக் கொள்ளவும் அநாவசிய செலவினங்களைத் தடுத்துக் கொள்ளவும். இளைஞர்கள் அனைவரும் இந்தக் குறளைப் பொருளாதார வரவு – செலவினத்திற்கான சூத்திரமாகவும் மந்திரமாகவும் கொள்ளலாம்.

*****

8 Jul 2024

இரவில் ஒரு நட்சத்திரம் ஜாங்கிரி தின்கிறது!

நீயே உனக்கு ஓர் ஒளிவிளக்கு!

தினம் நாற்பது இடங்களுக்கு உணவைச் சென்று கொடுக்கும் (Food Delivery) வேலையைச் செய்த பிறகு திவாகருக்கு உரைத்தது நாமே ஏன் ஓர் உணவகம் ஆரம்பிக்கக் கூடாது.

*****

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

எப்போதும் என்னிடம் இந்தக் கேள்வி வைக்கப்படுகிறது.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

இதற்குப் பொதுமையான ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பொருந்தும்படியான ஒரு பதிலை ஒரு சில வார்த்தைகளில் கூறி விட முடியுமா? அதுவும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்படியான பதிலாக அந்தப் பதில் அமைய முடியுமா?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்கங்கள் கூறக் கூடும். ஒருவரின் விளக்கம் இன்னொருவரின் விளக்கத்தோடு முரண்படக் கூடும். ஓர் ஆன்மிகவாதியின் விளக்கம் பகுத்தறிவுவாதியின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஓர் வலதுசாரியின் விளக்கம் இடதுசாரியின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஒரு சம்சாரியின் விளக்கம் லட்சியவாதியின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஒரு முதியவரின் விளக்கம் இளைஞரின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஒரு முதலாளியின் விளக்கம் தொழிலாளியின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஒரு பணக்காரரின் விளக்கம் ஏழையின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது. ஒரு மதத்தவரின் விளக்கம் இன்னொரு மதத்தவரின் விளக்கத்தோடு ஒன்றிப் போகாது.

நான் பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றால் எளிமையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். இந்த விளக்கம் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விளக்கமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதிலும் நீங்கள் ஒரு கேள்வி எழுப்பலாம். ஓர் ஆடம்பரவாதி எப்படி எளிமை என்பதை ஏற்பார் என்று? எளிமை என்பதை அவர் ஏற்காவிட்டாலும் எளிமைக்கு அடுத்தாற்போல வருகின்ற சரியாக இருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். சரியாக இருக்க வேண்டும் என்ற அந்த விளக்கம் அவரைக் காலப்போக்கில் எளிமைக்குக் கொண்டு வந்து விடும்.

தவறு செய்வதில் விருப்பம் உள்ள ஒருவர் எப்படி சரியாக இருப்பதை ஏற்க முடியும் என்று கேட்கலாம். சரியாக இருப்பதை அவர் ஏற்காவிட்டாலும் அவர் பெருந்தவறுகளைச் செய்து கொண்டே இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவர் பெருந்தவறுகளைக் குறைத்துக் கொண்டு வருவதற்கான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். சட்டென்று அவரால் தவறுகளை ஒரே அடியாகக் குறைத்து விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக எளிமையாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதால் அவர் எளிமை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு கட்டத்தில் தவறுகளைக் குறைத்து எளிமையாக்கிக் கொண்டே வரும் போது அவரும் சரியாக இருக்க வேண்டியதன் தன்மைக்குள் வந்துதான் ஆக வேண்டும்.

ஆகவே வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எளிமையாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என்ற இந்த விளக்கம் மிகச் சரியாகவே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

*****

இரவில் ஒரு நட்சத்திரம் ஜாங்கிரி தின்கிறது!

நள்ளிரவு இட்டிலிக் கடை ஒன்று இருக்கிறது. கொஞ்சம் தள்ளிப் போனால் நள்ளிரவு பிரியாணிக் கடை இருக்கிறது. அப்படியே பக்கத்தில் போய்க் கொண்டே இருந்தால் அனுமதி பெறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மதுபானக் கடை ஒவ்வொரு கடைக்குள்ளும் இருக்கிறது. உறங்க வேண்டிய நேரத்தில் உணவுண்டு வாழ்வதும், உணவுண்ண வேண்டிய நேரத்தில் மது அருந்தி வாழ்வதும் தமிழ் வாழ்வின் திணை மயக்கங்களாகி விட்டன. இதை வேறெப்படிச் சொல்வது, இரவில் ஒரு நட்சத்திரம் ஜாங்கிரி தின்கிறது என்றா?

*****

கடன் பேசாதீர்கள்!

ஒரு டீக்கடையில் கடன் வாங்குவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். மறுநாளே கடன் கொடுக்க தயாராக இருப்பதாக நிதி நிறுவனங்களிடமிருந்து நான்கைந்து பிரதிநிதிகள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். பேசுவதை எல்லாம் ஒட்டுக் கேட்பதற்கு டீக்கடைகளில் நிதி நிறுவனங்கள் ஒற்றர்களை வைத்திருக்குமோ?

நிதி நிறுவன பிரதிநிதிகள் இப்படி திமுதிமுவென்று வந்து குதித்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். எனக்கு ஏதோ அபாய சங்கு ஒலிப்பது போலாகி விட்டது.

நான் ஏன் இந்தக் கடனை வாங்க வேண்டும் என்று யோசித்தேன். அவர்கள் விடவில்லை. கடன் வாங்குவது என் ஜீவாதார உரிமை என்பது போலப் பேசினார்கள். கடன் வாங்காவிட்டால் அமெரிக்கா போல இந்தியா எப்போது வளர்வது என்றார்கள்.

நம் நாடே கடன் வாங்கும் போது, நம் மாநிலமே கடன் வாங்கும் போது இந்த நாட்டில், இந்த மாநிலத்தில் கடன் வாங்காமல் இருப்பது இழுக்கல்லவா என்கிற ரீதியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்போது எனக்குப் பயம் வர ஆரம்பித்து விட்டது.

நான் என்னதான் பயந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நாளுக்கு ஒன்றிரண்டு என்கிற எண்ணிக்கையில் நிதி நிறுவன பிரதிநிதிகள் வந்து கடன் வாங்குவது குறித்து தைரியமூட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி ஆளாளுக்கு பத்து பதினைந்து பிரதிநிதிகள் வரை வந்து தைரியம் ஊட்டினால், எனக்கு யாரிடம் கடன் வாங்குவது என்று குழப்பமாகப் போனதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்தை எதிர்கொள்ள முடியாமல் கடன் வாங்குவதையே விட்டு விட்டேன்.

இதில் நான் செய்த தவறு என்னவென்று சொல்லுங்கள், டீக்கடையில் நின்று ஒரு விசயத்தை அலசிப் பார்க்க நினைத்ததுதான்.

இப்போதெல்லாம் டீக்கடையில் கடன் பற்றிப் பேசுவதில்லை. வேறு எதைப் பற்றியும் பேசுவதில்லை. போனோமா, டீயைக் குடித்தோமா என்று வந்து விடுகிறேன். அங்கு எதையாவது பேசி யாராவது ஒற்றுக் கேற்று அது தொடர்பானவர்கள் வீட்டுக்கு வந்து அதை வாங்கிக் கொள், இதை வாங்கிக் கொள் என்றால், அதைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது.

டீக்கடையில் அரசியல் மட்டுமல்ல, கடன் பற்றியும் பேசக் கூடாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்ட தருமணது. கடைக்காரரிடம் இங்கு கடன் சொல்லாதீர்கள் என்பதைப் போலக் கடனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று அறிவிப்பு வைக்க சொல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

*****

4 Jul 2024

ஏன் சாதியைத் தமிழர்களால் ஒழிக்க முடியாது?

ஏன் சாதியைத் தமிழர்களால் ஒழிக்க முடியாது?

சாதி வேண்டுமா? வேண்டாமா? என்று அரசியல்வாதிகளிடம் கேட்டுப் பாருங்கள். சாதி வேண்டும் என்று சொல்லவில்லை, சாதி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கமல் பாஷையில் பதில் சொல்லுவார்கள். இப்படிக் குழப்பும்படி பதில் சொன்னால் எப்படி என்று நோண்டினால் அரசியல்வாதிகள்தான் எப்படி?

 ஊரும் நாடும் அமைதியாக இருக்கும் போது சாதியைப் பற்றி ஆகா, ஓகோ என்று பிளந்து கட்டுவார்கள். நாட்டுக்குள் ஒரு சாதிச் சண்டை வந்து விட்டால் சாதியே வேண்டாம் என்பார்கள். இதென்னடா இப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பிழைப்பு ஓட வேண்டுமே. சாதி வேண்டும் என்பதிலும் அரசியல் இருக்கிறது. சாதி வேண்டாம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. இதுதான் அதில் உள்ள பிரச்சனை. அரசியல் இருக்கும் வரை சாதியும் இருக்கும். அதற்காக அரசியலை எல்லாம் ஒழித்து கட்ட முடியாது.

அரசியலில் சூழ்நிலை சரியாக இல்லாத போது பிரித்தாளுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். சாதி பிரித்தாளுவதற்கான வாய்ப்புகளை வழங்கக் கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அரசியல் சாதியை விடாது. வேறெதை வைத்தும் அரசியல் செய்வதை விட இந்தியாவில் சாதியை வைத்து அரசியல் செய்வது எளிது. அதனால் சாதியும் அரசியலை விடாது. இரண்டும் ஒன்றின் முதுகில் இன்னொன்று மாற்றி மாற்றிப் பயணித்துக் கொண்டே இருக்கும்.

சாதியை ஒழிக்க முடியுமா என்றால் அது முடியாது. ஏன் அப்படி என்கிறீர்களா? சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் அதை உள்ளூர விரும்பவே செய்வார்கள். சாதியொழிப்பு என்ற முகமூடியை அணிந்து கொண்டுதான் அவர்கள் சாதியை ஒழிக்கவே கிளம்புவார்கள். ஆகவே அதை தணித்து வைத்துக் கொள்ளத்தான் முடியும். முற்றிலும் ஒழித்து விட முடியாது.

நிஜமாகவே நீங்கள் சாதியை ஒழித்து சாதியில்லாதவராக வாழ நினைக்கிறீர்கள் என்றால் நீங்களெல்லாம் சேர்ந்து சாதியற்றவர்கள் என்ற ஒரு சாதியை உருவாக்கியிருப்பீர்கள். சாதி என்பது பிரிவிற்கான ஒரு சொல். மனிதர்கள் எவ்வளவுதான் ஒற்றுமையாக வாழ நினைத்தாலும் தங்களுக்குள் ஒரு பிரிவை உருவாக்கி அந்தப் பிரிவிற்குள் தங்களை ஓர் அங்கமாக நினைத்துக் கொள்வதை மிகுந்த பாதுகாப்பாகவும் பெருமிதமாகவும் உணர்வார்கள். இந்தப் பாதுகாப்புணர்வும் பெருமித உணர்வும் அவர்களைச் சாதியை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். அது மனிதர்களோடு சுபாவத்தோடு இரண்டறக் கலந்து இருப்பதால் சாதியை ஒழிப்பதெல்லாம் கஷ்டம்.

உங்கள் சாதியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் சமத்துவத்தோடு இருக்கப் பழகுங்கள் என்பதைத்தான் நாம் வலியுறுத்த முடியும். அதைத்தான் முன்னெடுக்கவும் முடியும்.

*****

மெல்ல தூய தமிழ் கலப்புத் தமிழாகுமோ?

தமிழ் வழிக் கல்வி என்று சேர்த்த பின்பும் குழந்தைகள் பேருந்தை பஸ் என்றுதான் சொல்கின்றார்கள். சோற்றை ரைஸ் என்றும் அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும்தான் சொல்கின்றார்கள். தொலைக்காட்சியை டிவி என்றும் அலைபேசியை மொபைல் என்றும்தான் சொல்கின்றார்கள்.

இதென்ன இப்படி என்றால் அவையெல்லாம் தமிழ் வார்த்தைகளாகி நாட்களாகி விட்டன ப்ரோ என்கிறான் நேற்று வரை பங்காளி என்று சொல்லிக் கொண்டிருந்த நண்பன் என்கிற பிரெண்ட்.

தமிழ் வழிக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய் விடுமோ? பெரும்பாலான பள்ளிகள் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிப் பல பத்தாண்டுகள் ஆகி விட்டன. இருக்கின்ற தமிழ் வழிக் கல்வியும் ஆங்கிலச் சொற்களோடுதான் அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

நடைமுறையில் நிறைய ஆங்கிலச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் தமிழ்ச் சொற்கள் போல இரண்டறக் கலந்து நாட்களாகி விட்டன. இவற்றையும் தாண்டி நீங்கள் தமிழ்ச் சொற்களை மட்டும் உபயோகிப்பதாக முடிவு செய்து கொண்டால் உங்கள் தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்வதற்கேற்ப சமூகத்தின் உரையாடல் சூழ்நிலைகள் இல்லை.

நிறைய ஆங்கிலச் சொற்கள் ஆழ்மனதில் தமிழ்ச் சொற்களைப் போலப் படிந்து விட்டன. இதனால் ஒரு தமிழாசிரியரை இரண்டு நிமிடங்கள் பேசச் சொன்னாலும் அதில் நீங்கள் குறைந்தபட்சம் இரண்டொரு ஆங்கிலச் சொற்களைப் பொறுக்கி எடுக்க முடியும்.

தமிழ்ச் சொற்களோடு கொஞ்சம் ஆங்கிலச் சொற்களும் கலந்தால்தான் தமிழர்களாலும் சொல்ல வருகின்ற விசயங்களைச் சொல்லவும் முடிகிறது, புரிந்து கொள்ளவும் முடிகிறது. தூய தமிழில் சொல்லிப் பாருங்கள். ஏதோ அந்நிய மொழியைக் கேட்பது போல உணர்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? முடிவில் சொல்வது புரிந்தால் போதும் என்று நினைப்பீர்களா? அல்லது தூய தமிழில் சொல்லிப் புரிய வைத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என்று நிற்பீர்களா? நீங்கள் இந்த இரண்டில் ஒரு நிலைபாட்டைத்தான் எடுக்க முடியும். இரண்டாவது நிலைபாட்டில் நீங்கள் நீண்ட காலம் நிற்பதற்கு உங்களுக்கு அசாதாரணமான மனஉறுதி தேவைப்படும். மேலும் வாழ்க்கையின் எதார்த்தம் உங்களை சில நாட்களுக்காகவே உங்கள் மனஉறுதியைக் குலைத்து விடாமலும் இருக்க வேண்டும்.

*****

ஒரு மாநகரத் தமிழ்க்குடிமகனின் ஒரு நாள் உணவு

காலையில் எலுமிச்சை தேநீர், மூன்று முட்டையின் வெள்ளை கரு, ஆப்பிள் ஒன்று, கேரட் இரண்டு.

மதியம் சாதம் கொஞ்சம், சப்பாத்தி ஒன்று, காய்கறி கூட்டுக் கொஞ்சம்.

மாலையில் ஓட்ஸ் கஞ்சி, பீட்ரூட் சாறு.

இரவில் வறுத்த மீன் ஒன்று, பாதாம் வால்நெட் கையளவு, மாதுளை பழச்சாறு.

இது ஒரு அருமையான உணவுத் திட்டம்தான்.

அதற்கு பின்பு பீரோ, பிராந்தியோ, விஸ்கியோ – அது காலோ, பாதியோ, முக்காலோ, அல்லது அவற்றில் இரண்டோ மூன்றோ கலந்து விட்ட கலவையோ? அந்தந்தநேரத்து மனநிலையைப் பொருத்தது.

*****

1 Jul 2024

பெருவெளிக்குள் உறைதல் ஒரு கணப்பொழுது

பெருவெளிக்குள் உறைதல் ஒரு கணப்பொழுது

பேசுவதற்கு எதுவுமில்லை

மௌனம் அழகாக இருக்கிறது

உண்மையில் வார்த்தைகள் உறைந்து விட்டனவா

அப்படியும் சொல்ல முடியாது

நீ என் மனதோடு பேசும் போது

நான் உன் மனதோடு பேசும் போது

வார்த்தைகள் ஊடுருவுகின்றன

அர்த்தம் பெறுவதில்லை

ஆனந்தத்தில் அமிழ்ந்து போகின்றன

எந்த வார்த்தையை நான் சொன்னேன் என்று

எனக்கும் நினைவு இருப்பதில்லை

எந்த வார்த்தையைச் சொன்னாய் என்று

உனக்கும் நினைவிருப்பதில்லை

வார்த்தைகளை நினைவில் கொள்வதில்

வாழ்க்கையில் என்ன இருக்கிறது

மௌனத்தில் ஆழ்ந்து போகும் போது

வார்த்தைகள் உருபெற்று நடனமாடுகின்றன

பரவசத்தின் வெளியில்

வார்த்தையின் பொருண்மை விளங்கி

அந்தக் கணத்தில் அப்படியே உறைந்து போகிறது

முந்தைய கணத்தில் உறைந்து கிடக்கும் வார்த்தைகளை

அடுத்து வரும் கணம் கணக்கில் கொள்வதில்லை

கணங்கள் பயணித்துக் கொண்டே இருக்கின்றன

வெடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் மௌன வெளிக்குள்

*****

30 Jun 2024

இனிய வாழ்வுக்கு இரு வேளை உணவு போதும்!

உலகம் எவ்வளவு மாறி விட்டது.

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் ஏதேதோ புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

புதிய புதிய கருவிகள், தொழில்நுட்பங்கள் மட்டுமா? நோய்களும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நோய்களுக்கெல்லாம் எவை காரணங்கள்?

ஒவ்வொரு நோய்க்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது அனைத்து நோய்களுக்குமான காரணங்களை ஒற்றைப் புள்ளியில் கொண்டு வருவது என்பது எவ்வளவு சிரமமானது.

ஆனால், பொதுவாக ஒரு சில காரணங்களுக்குள் அடக்கி எல்லா நோய்களுக்கும் தீர்வு சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் ஒரே ஒரு காரணத்திற்குள் அடக்கி அதுதான் அனைத்து நோய்களுக்கான சர்வரோக நிவாரணி என்று சொன்னால் எவ்வளவு இனிதாக இருக்கும்?

அப்படி ஒற்றைத் தீர்வு இருக்கிறதா என்ன?

நோய்கள் வந்தால்தானே மருந்து? நோய்களே வராவிட்டால் மருந்துகள் எதற்கு?

திருவள்ளுவர் அப்படித்தான் சிந்திக்கிறார்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.”             (குறள், 942)

என்கிறார் வள்ளுவர். மருந்து என்ற தலைப்பிலான அதிகாரத்தில் இடம் பெற்ற மருந்தே வேண்டாம் என்று சொல்லும் குறள் இது. அட! இது என்ன ஒரு முரண்?

மருந்தே வேண்டாம் என்றால் மருந்து என்ற அதிகாரம் எதற்கு? அதானே! மருந்தே வேண்டாம் என்றால் அங்கு மருந்துக்கு என்ன அதிகாரம் (Order or Power)? அதுதான் வள்ளுவர் இதன் மூலம் சொல்ல வருகின்ற கருத்து.

வள்ளுவர் அருந்தியது என்கிறார். உண்டது என்று சொல்லவில்லை. எதை அருந்த முடியும்? இதுதான் நுட்பமான இடம். திரவ உணவுகளைத்தான் அருந்த முடியும். திட உணவை உண்ணத்தானே முடியும்? இது ஒரு நுட்பமான கருத்து. திரவ உணவுகள் எப்போதும் சிறந்தது. நோயுற்றவருக்குத் திட உணவையா கொடுக்கிறோம்? கஞ்சி, பழச்சாறு போன்ற திரவ உணவுகளைத்தானே கொடுக்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போருக்கு உணவானது திரவ வடிவில்தானே வழங்கப்படுகிறது.

உணவானது அருந்தும் பதத்தில் திரவ நிலையில் இருப்பது செரிமானத்திற்கு உகந்தது. சோற்றோடு குழம்பு, சாறு (ரசம்), மோர் என்று திரவ நிலை உணவுகளைச்  சேர்ப்பது இதற்காகத்தான். அதிலும் பாருங்கள், நிறைய சாற்றோடு (ரசத்தோடு) சோற்றைப் பிசைந்து சாப்பிடுவது எப்போதும் செரிமானத்திற்கு எவ்வளவு உகந்ததாக இருக்கிறது. நம் முன்னோர்களும் சாறோ (ரசமோ), மோரோ இல்லாமல் உணவை நிறைவு செய்ய மாட்டார்கள்.

கிராமத்து வாழ்க்கையில் காலை உணவே நீராகாரம்தானே?

அப்படி அருந்தும் உணவும் செரித்திருந்தால் மறுவேளை உணவை உண்ணலாம் என்பது வள்ளுவர் சொல்லும் கருத்து. அப்படி உண்டால் அதாவது அருந்தினால் அவருக்கு மருந்துதான் தேவைப்படுமோ என்கிறார்.

நாம் தற்போது உண்ணும் உணவுகளும், நமக்கான உணவு முறைகளும்தான் எவ்வளவு மாறி விட்டன. பலவித வண்ணங்களில், பலவித சுவைகளில் எத்தனை எத்தனை உணவுகள்? இவற்றை உண்ணாமல், ரசிக்காமல், ருசிக்காமல், அனுபவிக்காமல் அதென்ன வாழ்வு? இதுவும் நியாயமான கேள்விதானே?

நம்மிடம் எவ்வளவு உணவு இருந்தால் என்ன? ஒவ்வொருவரும் அவரவருடைய ஒரு வயிற்றுக்குத்தானே உண்ண முடியும்? வயிறு எவ்வளவுதான் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது என்றாலும் எவ்வளவு உண்ண முடியும் சொல்லுங்கள்?

வழக்கமான கணக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது.

அந்தக் கணக்கைக் கொஞ்சம் குறைத்தால், விருப்பப்பட்ட உணவை உண்டு கொண்டு இன்பமாக இருக்கலாம்.

எவ்வளவு குறைப்பது? மூவேளை உணவை இரு வேளையாக ஆக்கிக் கொள்ளலாம். அதாவது ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொள்ளலாம்.

அப்படியென்றால், இரு வேளை உணவு உங்கள் வாழ்க்கையை இனிய வாழ்வாக ஆக்கி விடும். உண்மையில் இப்போதைய கால கட்டத்தில் இரு வேளை என்பது போதுமானது. உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்ட கால கட்டத்தில் மூவேளை உணவு என்பது அளவுக்கு மிஞ்சுகின்ற நஞ்சாகும் அமுதுதான். அப்படியென்றால் இடையே உண்ணுகின்ற சிற்றுண்டிகள், அவை அறவே வேண்டாம்.

இருவேளை உணவே அதிகம் என்றால் இடையில் உண்ணுகின்ற சிற்றுண்டிகளைச் சேர்த்தால் இன்றைய மனிதர்களின் உணவு என்பது ஐந்து வேளை அல்லது ஆறு வேளை உணவாகக் கூட இருக்கும்.

இவ்வளவு உணவும் உள்ளே சென்றால் என்னவாகும்? அவ்வளவும் சேர்ந்து நோய்களுக்கு நன்றாகத் தீனி போடும். தீனி போட போட, நோய்கள் பெருகிக் கொண்டே இருக்கும். நோய்களைத் தீனி போட்டு பெருக்கிக் கொண்டு, அதைக் குறைக்க வேண்டும் என்று மருந்துகளை நாடுவது என்பது ஒழுகும் பானையில் ஓட்டையை அடைக்காமல் மேலும் மேலும் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பதைப் போன்றது.

இப்போது என்ன செய்யலாம்? எந்த வேளை உணவைக் குறைக்கலாம்?

சிற்றுண்டிகளை அறவே தவிர்த்து விட்டு இரவு உணவை இல்லாமல் செய்து கொள்ளலாம்.

அப்படிச் செய்தால்…

செய்து பாருங்கள்.

எந்த சிகிச்சையும் தேவைப்படாமல் உடல் இளைப்பீர்கள்.

சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு என்ற அனைத்தும் கட்டுக்குள் வருவதைக் காண்பீர்கள்.

உடல் கரவு செரவாக மாறுவதைக் காண்பீர்கள்.

உடற்பயிற்சி செய்யாமல், யோகா செய்யாமல் உடல் இப்படி வடிவாக மாறுமா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

பல நாட்கள் உண்ட மருந்துகளுக்கு வேலை இல்லாமல் போவதைக் கண் முன்னே காண்பீர்கள்.

இதெல்லாம் இரு வேளை உணவை எடுத்த உடனே நிகழ்ந்து விடுமா?

நிச்சயம் நீங்கள் இதற்காக 15 நாட்களிலிருந்து மூன்று மாதங்கள் வரை உங்கள் உடல் நிலையைப் பொருத்துக் காத்திருக்க வேண்டும். அதற்குள் நீங்கள் இந்த மாற்றங்களைக் காண்பீர்கள்.

இரவு உணவை விட்ட பிறகு,

நீங்கள் அதிகாலையில் எழுவீர்கள்.

வேலைகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதை அவதானிப்பீர்கள்.

உங்களிடம் இருந்த மருந்துகள் காணாமல் போவதைக் காண்பீர்கள்.

நூறு கிலோ எடையில் இருந்த நீங்கள் ஐம்பதிலோ அறுபதிலோ வந்து நிற்பதை அதிசயமாக உணர்வீர்கள்.

ஏதோ உங்களுக்கு மாயா ஜாலம் நடந்தது போல இருக்கும்.

ஒரு கட்டத்தில் நீங்கள் காற்றில் பறப்பது போல உடல் இலகுவாகி இருப்பதையும் உணர்வீர்கள்.

உங்கள் மூவேளை உணவை இருவேளை உணவாக மாற்றி விட்டு பாருங்கள். அதற்குப் பின்பு நிகழும் மாற்றங்களை நீங்களே அனுபவித்து இங்கே பதிவிடுவீர்கள்.

ஆக எல்லா நோய்களுக்குமான ஒற்றைத் தீர்வு என்றால் அது இரு வேளை உணவுதான். இருவேளை உணவே உடலுக்கு போதும் எனும் போது மூவேளை உணவு என்பது நிச்சயம் நோய்களுக்கான சாளரம்தான். நோய்க்கான சாளரத்தைத் திறப்பதும், திறக்காமல் இருப்பதும் இப்போது உங்கள் கையில்தான் இருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார்,

“இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்” (குறள், 946)

என்று.

இன்பம் என்றும் உங்களிடம் நிற்க இருவேளை உணவு போதும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலத்தை மட்டுமா? கூடுதலாக மூன்றாவது வேளை உணவு தயாரிக்க ஆகும் எரிபொருள், நேரம், பாத்திரத் தூய்மை செய்வதற்கான பணி என்ற எவ்வளவோ கூறுகளை மிச்சம் செய்ய முடியும். உங்கள் உடல் நலத்தையும் பத்திரமாகப் பாதுகாப்பு செய்ய முடியும்.

இருவேளை உணவை இன்றே முயன்று பார்க்கலாமா?

இது கொஞ்சம் கொடுமையாக, ஏன் கடுமையாகக் கூடத் தெரியலாம். அதற்குப் பின்பு நிகழப் போகும் இனிமையைக் காண இந்தக் கடுமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?

ஓர் இன்பத்தை எதிர்கொள்ள சில நேரங்களில் சில துன்பங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது யார் சொன்னது என்கிறீர்களா? இதுவும் வள்ளுவர் சொன்னதுதான்,

“துன்பம் உளவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.”            (குறள், 669)

*****

29 Jun 2024

ஏன் ஒழுக்கம் முக்கியம் தெரியுமா?

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”               (குறள், 131)

என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உயிரை விட பெரிதாக எது இருக்க முடியும்?

உயிர்தான் பெரிது.

போனால் பெற முடியாதது அது.

அந்த உயிரைக் காக்கத்தானே இந்த உலகில் எல்லாமே போராடிக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு மருத்துவ வளர்ச்சியும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு சட்டங்கள், வழிமுறைகள் எல்லாம் எதற்காக? உயிர்களைப் பாதுகாக்கத்தானே.

அப்படிப்பட்ட உயிரை விட மேலானதாக எப்படி ஒழுக்கம் இருக்க முடியும்?

உயிரை விட ஒரு படி மேலானதாக ஒழுக்கத்தைக் கருதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

உயிருக்குச் சிறந்ததை இந்த உலகில் எது தர முடியும்? ஒழுக்கம்தான் தர முடியும்.

இந்த உலகில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. நிலைபெறும் உயிர்களுக்கான பெயரையும் புகழையும் மதிப்பையும் தருவது ஒழுக்கம்தானே.

காந்தியடிகள் உயிர் பிரிந்தாலும் அவர் புகழ் பிரியாமல் இருப்பதற்குக் காரணம் அவரது ஒழுக்கம்தானே.

விவேகானந்தரின் உயிர் மறைந்தாலும் அவர் பெருமை மறையாமல் இருப்பதற்குக் காரணம் ஒழுக்கம்தானே.

உயிர்களின் பெருமைக்கும் மதிப்புக்கும் மட்டுமல்லாது உயிர்கள் நிலைபெறுவதற்கும் ஒழுக்கமே காரணமாக அமைகிறது.

இந்த மனித குலம் என்று ஒழுக்கம் கெடுகிறதோ அன்று அழிந்து போய் விடும்.

இந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றவராயினும் கல்லாதவரே.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.”                (குறள், 140)

என்கிறார் வள்ளுவர்.

இதனை உலகத்திற்குத் தகுந்தாற் போல நெளிவு சுளிவுகளோடு வாழாதவர் யார்யாரோ அவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் என்று சொல்வாருமுண்டு. அதாவது பிழைக்கத் தெரியாதவர்கள் இந்த உலகில் வாழ முடியாது என்று அர்த்தம் கொள்வதுமுண்டு. ஆனால் அப்படியா என்றால், அப்படி விளக்கம் கொள்ள முடியாது.

உலகமும் உலகில் உள்ள மக்களும் நிலைபெறுவதற்கான ஒழுக்கம் எதுவோ அந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றறிந்தவராயினும் கல்லாதவர்தானே? அந்தப் பொருளில்தானே வள்ளுவரும் சொல்லியிருக்க முடியும்.

பிழைக்கத் தெரிகின்ற பிழைப்புவாதம் மட்டுமே உலகோடு வாழ்வதற்குரிய ஒழுக்கம் என்றால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும். அதையும் திருவள்ளுவர்தான் சொல்கிறார்,

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.”              (குறள், 996)

என்று.

ஏன் இந்த ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

எத்தனை நல்ல காரியங்களை நினைத்த உடன் செய்திருக்கிறீர்கள்?

பலவற்றைப் பலவாறாக யோசித்திருப்பீர்கள். தள்ளிப் போட்டிருப்பீர்கள். இதைச் செய்ய வேண்டுமா என்று தயங்கியிருப்பீர்கள்.

அவசியம் இதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்து யோசித்தே கைவிட்டிருப்பீர்கள்.

இது போன்ற காரியங்களைச் செய்வதற்கான மனநிலை வர வேண்டும் என்று காத்திருந்திருப்பீர்கள்.

சூழ்நிலைகள் சரியாக ஒத்து வந்தால்தான் இது போன்ற காரியங்களைச் செய்ய முடியும் என்று ஒத்திப் போட்டிருப்பீர்கள்.

இதெல்லாம் நடந்திருக்கும்தானே?

எனக்கு மட்டுமா? எல்லாருக்கும் இப்படித்தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை.

ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை. அவர்கள் நினைத்ததை நினைத்த வண்ணம் முடிப்பார்கள். அவர்கள் ஒழுக்கத்தைப் பழகியிருக்கிறார்கள். அந்த ஒழுக்கம் அவர்களைத் தூண்டும். அரிப்பெடுத்தவர் சொரிந்து கொள்ளாமல் இருக்க முடியாததைப் போல, வேலை செய்து பழகியவர்கள் அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் இருக்க முடியாது. இதுதான் இதன் பின்னுள்ள சூட்சமம்.

ஆகவேதான் ஒழுக்கத்தை உயிராகக் கொள்வதும், உயிரை விட அதை மேலாகக் கொள்வதும் திருவள்ளுவருக்கு முக்கியமாகக் படுகிறது.

சான்றுக்குக் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு உண்ணுவதை ஒழுக்கமாகக் கொண்ட ஒருவர் பல் துலக்காமல் உண்ணுவதை ஒரு போதும் செய்து விட முடியாது. அவருடைய மனநிலை அந்த அளவுக்கு அந்த ஒழுக்கத்தின் பின்னணியில் இயங்கும். இது ஒருவர் வளர்த்துக் கொள்ளும் ஒழுக்கத்தில்தான் இருக்கிறது.

நல்ல காரியங்களை அவசியம் செய்தாக வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்து அதை ஓர் ஒழுக்கமாக உருவாக்கி விட்டால் அதற்குப் பின்பு உங்களால் அதைத் தள்ளிப் போடவும் முடியாது, செய்யாமல் இருக்கவும் முடியாது.

தினந்தோறும் காலையில் எழுந்து படித்துப் பழகி அது உங்களுக்கு ஒழுக்கமாகி விட்டால் அந்தக் காரியத்தை ஒரு நாள் செய்யாமல் இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போலத்தானே இருக்கும்? அதுதான் ஒழுக்கம் ஒரு காரியத்தை உங்களுக்குள் உள் நின்று இயக்கும் சூக்கும நிலை. அதனால்தான் ஒழுக்கம் இந்த உலகில் உயிரை விடவும் முக்கியமானதாக ஆகிறது.

*****