13 Jul 2024

தவறான கலாச்சாரத்தைச் சரியென்று வளர்க்கலாமா?!

தமிழகத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் என்று சொல்வதா? கெட்ட நேரம் என்று சொல்வதா?

தமிழகம் ஒரு தவறான கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு அதைப் பின்தொடர்ந்து கொண்டும் போய்க் கொண்டிருக்கிறது.

அதென்ன தவறான கலாச்சாரம்? அது எப்படி வளர்ந்தது?

இந்த இரு கேள்விகளுக்குமான விடை சொல்லித் தெரியவா வேண்டும்?

ஒரு தவறான கலாச்சாரம் உருவாகுவதற்குச் சமூக கட்டமைப்புகளும், அரசாங்க கொள்கை முடிவுகளும் காரணமாகி விட்டன என்பதுதான் இதன் பின்னுள்ள பெருத்த சோகம்.

கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கிறது என்பதற்காக மதுபான விற்பனையை அரசாங்கம் கையில் எடுப்பது ஒரு தவறான கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் துணை போகச் செய்து விட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காகக் குடியை ஆதரிக்கும் சமூகக் கட்டமைப்பும் ஒரு தவறான கலாச்சாரம் உருவாகத் துணை செய்து விட்டது.

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்று

சான்றோர் முகத்துக்கு அளி.”        (குறள், 923)

எனும்படியான தாய்மார்களும் சான்றோர்களும் இன்று தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன?

அரசே மதுபானங்களை விற்பனை செய்த போதிலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியாகியிருக்கும் அறுபதுக்கும் மேற்பட்டோரின் மரணம் அச்சுறுத்தும் ஒரு குடி கலாச்சாரத்தை நோக்கித் தமிழ்ச் சமூகம் போய்க் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மதுப் பழக்கத்தைப் பொருத்த வரை அரசாங்கத்தின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழகத்தைப் பொருத்த மட்டில் மது விற்பனை முழுவதையும் அரசாங்கம் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கிறது. நட்சத்திர விடுதிகள் தொடங்கி மனமகிழ் மன்றம் வரையிலான மது விற்பனை தொடர்பான 12 வகை உரிமங்களை வழங்குவதும் அரசாங்கம்தான்.

இன்று கல்யாணம், காது குத்தல், சாவு, கருமாதி, சடங்கு, சம்பிரதாயம், திருவிழா என்று எதை எடுத்துக் கொண்டாலும் மதுபானக் குடியலோடுதான் நிறைவு பெறுகின்றன. அறிந்தோ, அறியாமலோ நமது சமூகக் கட்டமைப்பும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டது.

ஒரு காலத்தில் கள் அருந்துபவர்களையும், மது அருந்துபவர்களையும் கண்டால் பொது இடங்களிலும், விழாக்களிலும் முகம் சுளித்து விலகிப் போன மக்கள் இன்று மாறி விட்டார்கள். மது அருந்தி விட்டு வருபவர்களை முகம் மலர்ந்து வரவேற்கும் அளவிற்குச் சமூகக் கட்டமைப்பு முற்றிலும் தடம் புரண்டு நிலை மாறியிருக்கிறது. மது அருந்துவது தவிர்க்க முடியாதது என்ற மனக்கட்டமைப்பை நோக்கி சமூகம் வந்து விட்டது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு மது அருந்துவது ஆண்கள் என்றிருந்த நிலை மாறி இன்று பெண்களும் மது அருந்துகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் உள்ளடக்கம் என்பது இந்த உண்மைக்கான சான்று. அத்துடன் ஆண்கள் – பெண்கள் என்ற நிலை மாறி குழந்தைகள் வரை மது அருந்தும் நிலைக்குத் தமிழகம் வந்து விட்டது.

இந்தியாவில் தமிழ்நாடு சில பல விசயங்களில் முன்னணியில் இருக்கிறது. அதே போல கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

மது அருந்துவது வேண்டாம் என்று அறிவுறுத்தும் நிலைமை மாறி, அளவோடு அதை அருந்த வேண்டும் என்று நிலைக்கு அறிவுறுத்தும் வகையில் நிகழ்காலக் காட்சிகள் மாறி விட்டன. மதுவிலக்கை அமல்படுத்தினால் அதற்காகப் போராட மது அருந்துவோர் சங்கம் உருவாகிட்ட நிலையில் மது அருந்துதலை முறைபடுத்துதல் மட்டும்தான் வழியோ என்று யோசிக்கும் நிலையில் தமிழ்ச் சமூகம் தற்போது தள்ளாடிய நிலையில் இருக்கிறது.

மது அருந்துவது ஒருவரின் விருப்பம் மற்றும் சுதந்திரம் சார்ந்ததாக இருந்தாலும், எல்லை மீறிச் செல்லும் விருப்பமும் சுதந்திரமும் சமூக அச்சுறுத்தல் சமூக வீழ்ச்சியில் சென்று முடிவுறும்.

வாகனத்தில் சென்று மது அருந்தும் ஒருவர், மது அருந்திய நிலையில் மீண்டும் வீடு திரும்ப அதே வாகனத்தை ஓட்டிக் கொண்டுதான் வருவார். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் ஒருவர் நிச்சயம் போக்குவரத்துப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தான். ஆனால் நீங்கள் ஒரு நாளின் எந்தப் பொழுதில் எந்தச் சாலையில் கணக்கெடுத்தாலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிச் செல்லும் பத்து சதவீத நபர்களையாவது பிடித்து விட முடியும். மது அருந்துவதை ஒருவரின் சுதந்திரம் சார்ந்ததாகவும் அனுமதித்து விட்டு முடியாது என்பதை இதை வைத்துதான் வாதம் செய்ய வேண்டியதாகிறது.

மது அருந்துவோரால் சீரழியும் குடும்பத்தையும் சமூகத்தையும் பார்க்கையில் மது அருந்துவதை ஒருவரின் விருப்பம் சார்ந்ததாக மட்டும் பார்க்க முடியாது. மதுவால் சீரழிந்த குடும்பங்களைப் பார்த்தால் அது எத்தகைய சமூகக் கொடுமையைப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது கண்ணார விளங்கும்.

மது விற்பனையை அரசு நிறுத்திக் கொள்ள முற்படாத போதும், பொது சமூகமும் மது அருந்துவதை அளவோடு கட்டுபடுத்திக் கொள்ள முற்படாத போதும் மது அருந்துவது குறித்த கட்டாய நெறிமுறைகளை வகுத்து அதை தீவிரமாகச் செயல்படுத்த முற்படுவது பொது சமூகத்திற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.

ஒருவருக்கு எந்த அளவுக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் நெறிபடுத்த வேண்டும். மது விற்பனை முழுவதும் தற்போது தமிழக அரசின் கட்டுபாட்டில் இருப்பதால் இதைச் செய்வது தமிழக அரசுக்கு ஒன்றும் சிரமமான காரியமாக இருக்க முடியாது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கு எவ்வளவு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்க வேண்டும் என்பதை ஆதார் பதிவு மூலமாகத் தீர்மானிக்கும் அரசு அதே முறையைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு ஒருவருக்கு எவ்வளவு மது விற்பனை செய்யலாம் என்பதையும் தீர்மானித்து அதைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

மது விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைக்கும் லாபம் அபரிமிதமானது. தொழில்துறை வளர்ச்சி மூலமாக அடைய வேண்டிய ஒரு வளர்ச்சியைத் தமிழகம் இந்த வகையில் அதாவது மது விற்பனை மூலமாக அடைவது வேதனைத் தரத்தக்கது என்றாலும், அந்த லாபத்திலிருந்து ஒரு பகுதியைச் சமூக கண்ணோட்டத்தில் மது அருந்துவோர் நல்வாழ்வு தொடர்பான விசயங்களுக்காக அரசு செலவிட வேண்டும். நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திலிருந்து சமூக பொறுப்பு மற்றும் சமூக நலம் சார்ந்த நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சமூக அக்கறையோடு செலவிட வேண்டும் என்று அரசாங்கம் கொள்கை வகுக்கும் போது, அரசாங்கமே மது விற்பனை மூலமாகக் கிடைக்கும் லாபத்திலிருந்து அப்படி ஒரு தொகையை ஒதுக்கிச் செலவிட வேண்டியது மிக மிக தார்மீகமான ஒன்று. மதுவால் சீரழிந்த கிராமங்களை அரசாங்கம் தனிக்கவனம் எடுத்து தத்தெடுத்துச் சீர்படுத்த முன்வர வேண்டும்.

முக்கியமாக மது விற்பனை மூலம் கிடைத்த அந்தப் பாவத் தொகையிலிருந்து ஒவ்வொரு மது விற்பனை நிலையத்திலும் ஒரு மருத்துவரை நியமித்து மது அருந்துவோரின் உடல்நலத்தை அவ்வபோது பரிசோதித்து அவர் எவ்வளவு மது அருந்தலாம் என்பதற்கான கட்டுபாடுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி அவரை நெறிபடுத்துவதற்கான வழிகாட்டுதல் மையங்களை அரசுதான் உருவாக்க வேண்டும். இப்படி சில வழிகாட்டுதல் மையங்களை நிறுவுவதன் மூலமாகத்தான் டாஸ்மாக்கின் கதவுகளை சில நிமிடங்கள் மூடுவதைப் பற்றியாவது சிந்திக்க முடியும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர், உள்ளாட்சிப் பிரிதிநிதிகள், உள்ளாட்சித் தலைவர்கள், சில கிராமங்களுக்குச் சேர்த்து ஒரு காவல் நிலையம், அதைத் தாண்டி வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என எல்லாரும் இருந்து கள்ளச்சாராய மரணம் நடக்கிறது என்றால் அதை விட கொடுமை வேறென்ன இருக்க முடியும்?

அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து தவறான ஒரு மது கலாச்சாரத்தை உருவாக்கி விட்டன என்பது உண்மை என்றாலும் அதே தவறான கலாச்சாரத்திலேயே பயணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை நேர்செய்து கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கம் மற்றும் சமூகத்திற்கு இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் அது காலம் கடந்த முயற்சி என்றாலும், இப்போதும் அதைத் தொடங்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகள் இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு மிக மோசமாகவே இருக்கும். ஏனென்றால் போதைக்கு அடிமையானவர்கள் எந்த நிலைக்குச் செல்வர் என்பதைத் திருவள்ளுவர் இப்படிச் சொல்கிறார்,

“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.”          (குறள், 921)

*****

1 comment:

  1. லேதனைக்குரிய உண்மை

    ReplyDelete

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? இந்த உலகில் எதுவும் பழையது இல்லை. எல்லாம் புதுமையானதுதான். புதுமையாக இருக்கும் ஒன்...