29 Jun 2024

ஏன் ஒழுக்கம் முக்கியம் தெரியுமா?

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”               (குறள், 131)

என்கிறார் திருவள்ளுவர்.

இந்த உலகில் உயிரை விட பெரிதாக எது இருக்க முடியும்?

உயிர்தான் பெரிது.

போனால் பெற முடியாதது அது.

அந்த உயிரைக் காக்கத்தானே இந்த உலகில் எல்லாமே போராடிக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு மருத்துவ வளர்ச்சியும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் எதற்காக? உயிரைக் காக்கத்தானே.

இவ்வளவு சட்டங்கள், வழிமுறைகள் எல்லாம் எதற்காக? உயிர்களைப் பாதுகாக்கத்தானே.

அப்படிப்பட்ட உயிரை விட மேலானதாக எப்படி ஒழுக்கம் இருக்க முடியும்?

உயிரை விட ஒரு படி மேலானதாக ஒழுக்கத்தைக் கருதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

உயிருக்குச் சிறந்ததை இந்த உலகில் எது தர முடியும்? ஒழுக்கம்தான் தர முடியும்.

இந்த உலகில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. நிலைபெறும் உயிர்களுக்கான பெயரையும் புகழையும் மதிப்பையும் தருவது ஒழுக்கம்தானே.

காந்தியடிகள் உயிர் பிரிந்தாலும் அவர் புகழ் பிரியாமல் இருப்பதற்குக் காரணம் அவரது ஒழுக்கம்தானே.

விவேகானந்தரின் உயிர் மறைந்தாலும் அவர் பெருமை மறையாமல் இருப்பதற்குக் காரணம் ஒழுக்கம்தானே.

உயிர்களின் பெருமைக்கும் மதிப்புக்கும் மட்டுமல்லாது உயிர்கள் நிலைபெறுவதற்கும் ஒழுக்கமே காரணமாக அமைகிறது.

இந்த மனித குலம் என்று ஒழுக்கம் கெடுகிறதோ அன்று அழிந்து போய் விடும்.

இந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றவராயினும் கல்லாதவரே.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.”                (குறள், 140)

என்கிறார் வள்ளுவர்.

இதனை உலகத்திற்குத் தகுந்தாற் போல நெளிவு சுளிவுகளோடு வாழாதவர் யார்யாரோ அவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் என்று சொல்வாருமுண்டு. அதாவது பிழைக்கத் தெரியாதவர்கள் இந்த உலகில் வாழ முடியாது என்று அர்த்தம் கொள்வதுமுண்டு. ஆனால் அப்படியா என்றால், அப்படி விளக்கம் கொள்ள முடியாது.

உலகமும் உலகில் உள்ள மக்களும் நிலைபெறுவதற்கான ஒழுக்கம் எதுவோ அந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர் கற்றறிந்தவராயினும் கல்லாதவர்தானே? அந்தப் பொருளில்தானே வள்ளுவரும் சொல்லியிருக்க முடியும்.

பிழைக்கத் தெரிகின்ற பிழைப்புவாதம் மட்டுமே உலகோடு வாழ்வதற்குரிய ஒழுக்கம் என்றால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும். அதையும் திருவள்ளுவர்தான் சொல்கிறார்,

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.”              (குறள், 996)

என்று.

ஏன் இந்த ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

எத்தனை நல்ல காரியங்களை நினைத்த உடன் செய்திருக்கிறீர்கள்?

பலவற்றைப் பலவாறாக யோசித்திருப்பீர்கள். தள்ளிப் போட்டிருப்பீர்கள். இதைச் செய்ய வேண்டுமா என்று தயங்கியிருப்பீர்கள்.

அவசியம் இதைச் செய்ய வேண்டுமா என்று யோசித்து யோசித்தே கைவிட்டிருப்பீர்கள்.

இது போன்ற காரியங்களைச் செய்வதற்கான மனநிலை வர வேண்டும் என்று காத்திருந்திருப்பீர்கள்.

சூழ்நிலைகள் சரியாக ஒத்து வந்தால்தான் இது போன்ற காரியங்களைச் செய்ய முடியும் என்று ஒத்திப் போட்டிருப்பீர்கள்.

இதெல்லாம் நடந்திருக்கும்தானே?

எனக்கு மட்டுமா? எல்லாருக்கும் இப்படித்தானே என்கிறீர்களா?

அதுதான் இல்லை.

ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை. அவர்கள் நினைத்ததை நினைத்த வண்ணம் முடிப்பார்கள். அவர்கள் ஒழுக்கத்தைப் பழகியிருக்கிறார்கள். அந்த ஒழுக்கம் அவர்களைத் தூண்டும். அரிப்பெடுத்தவர் சொரிந்து கொள்ளாமல் இருக்க முடியாததைப் போல, வேலை செய்து பழகியவர்கள் அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றாமல் இருக்க முடியாது. இதுதான் இதன் பின்னுள்ள சூட்சமம்.

ஆகவேதான் ஒழுக்கத்தை உயிராகக் கொள்வதும், உயிரை விட அதை மேலாகக் கொள்வதும் திருவள்ளுவருக்கு முக்கியமாகக் படுகிறது.

சான்றுக்குக் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு உண்ணுவதை ஒழுக்கமாகக் கொண்ட ஒருவர் பல் துலக்காமல் உண்ணுவதை ஒரு போதும் செய்து விட முடியாது. அவருடைய மனநிலை அந்த அளவுக்கு அந்த ஒழுக்கத்தின் பின்னணியில் இயங்கும். இது ஒருவர் வளர்த்துக் கொள்ளும் ஒழுக்கத்தில்தான் இருக்கிறது.

நல்ல காரியங்களை அவசியம் செய்தாக வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்து அதை ஓர் ஒழுக்கமாக உருவாக்கி விட்டால் அதற்குப் பின்பு உங்களால் அதைத் தள்ளிப் போடவும் முடியாது, செய்யாமல் இருக்கவும் முடியாது.

தினந்தோறும் காலையில் எழுந்து படித்துப் பழகி அது உங்களுக்கு ஒழுக்கமாகி விட்டால் அந்தக் காரியத்தை ஒரு நாள் செய்யாமல் இருந்தாலும் உங்களுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போலத்தானே இருக்கும்? அதுதான் ஒழுக்கம் ஒரு காரியத்தை உங்களுக்குள் உள் நின்று இயக்கும் சூக்கும நிலை. அதனால்தான் ஒழுக்கம் இந்த உலகில் உயிரை விடவும் முக்கியமானதாக ஆகிறது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...