11 Jul 2024

இளைஞர்கள் எப்படிச் சேமிக்கலாம்?

இளைஞர்கள் எப்படிச் சேமிக்கலாம்?

‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று அப்போதே சொல்லி விட்டார்கள். அது இப்போதும் எப்போதும் பொருந்துவதாக இருக்கிறது. அரசாங்கங்களின் பட்ஜெட்டே அப்படி இருக்கும் போது அரசாங்கத்தின் பிரஜைகளான மக்களின் நிலைமை பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

குடும்பஸ்தர்களை விட இளைஞர்களுக்கான செலவினங்கள் குறைவு போலத் தோன்றினாலும் அவர்களின் நவநாகரிக வாழ்க்கையில் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போய் விடுகின்றன. இளைஞர்களின் செலவினங்களைத் தடுக்கக் கூடிய தடைகள் எனும் பிரேக்குகளும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அவர்களின் எவ்வளவு செலவு வேகத்தில் போகிறோம் என்பது அவர்களுக்கே புரிவதில்லை.

அலங்காரப் பொருட்கள், சொகுசான ஊர்திகள், கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கை என்று அவர்களுக்கான செலவினங்கள் நாளுக்கு நாள் புற்றீசல் போலப் பலவிதங்களில் கூடிப் போய் விடுகின்றன.

மணமாகிக் குடும்ப வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் போதுதான் அவர்கள் செலவினங்களைப் பற்றி அறியத் தொடங்குகிறார்கள். சம்பாத்தியத்தின் தொடக்கத்திலிருந்து சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதை உணரத் தலைப்படுகிறார்கள். தலை வழுக்கையான பின்பு சீப்பு கிடைத்தாற்போலத்தான் இத்தலைப்படுதல் அமைகிறது.

இளைஞர்களாக இருக்கும் பருவத்திலேயே அவர்கள் எப்படிச் செலவினங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கலாம் என்பதை இப்பத்தியில் பார்க்கலாம். இப்பத்தியை இளைஞர்கள் அறிவுறுத்தலாகக் கருதிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படிக் கருதிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இந்த ஒரு விசயத்திலாவது கடவுள் என் பிரார்த்தனையை நிறைவேற்றலாம். பார்ப்போம் பத்தியின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை.

இளைஞர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பிற்காக இருக்கும் இடத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நடப்பட்ட நாற்றுகளைப் போலத்தான், பதியன் போடப்பட்ட செடிகளைப் போலத்தான்.

இடம் பெயர்ந்து பணியாற்றும் நிலைமைகளில் இருக்குமிடத்திற்கும் பணியிடத்திற்கும் இடையே அதிக தொலைவில்லாமல் பார்த்துக் கொள்ளலாம். பணியிடங்களுக்கு அருகே இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளலாம். விடுதி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் போக்குவரத்துச் செலவினங்களைக் கணிசமாக மிச்சம் செய்யலாம். வாகனங்கள் வாங்குவதற்கான செலவினத்தையும் அதைப் பராமரிப்பதற்கான செலவினத்தையும் எரிபொருளுக்கான செலவினத்தையும் இல்லாமல் செய்யலாம். இந்த யோசனைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா என்றால் இயலாது என்று கூட சொல்லலாம். அப்படியே கடைபிடித்து விட்டால் இதனுடைய அனுகூலங்களைக் குறைவு என்று மட்டும் சொல்லி விட முடியாது.

உணவுகளை உணவு விடுதிகளில் உண்ணுவதைத் தவிர்த்து சமைத்து உண்ணலாம். இதனால் ஆரோக்கியமும் மேம்படும். செலவினமும் கணிசமாகக் குறையும். இதனால் நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என நினைக்காமல் பையிலிருக்கும் பைசாவுக்குப் பாதிப்பு குறைகிறது என்பதை மட்டும் இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

போக்குவரத்துத் தவிர்க்க முடியாது எனும் நிலையில் போக்குவரத்திற்கு இயன்றவரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் கேவலமாக நினைக்க வேண்டுமா என்ன? பொதுப்போக்குவரத்திற்கான வாகனங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர், நிர்வகிப்பாளர், தூய்மைப் பணியாளர், பராமரிப்பாளர் என்று பலர் இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்திற்காக உங்களுக்குப் பல பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப்பட வேண்டிய நிலையில் இருப்பதை நீங்கள் சாமர்த்தியமாக மறந்துவிடக் கூடாது. நீங்கள் ஒரு வாகனத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியுமா என்று சொல்லுங்கள்.

மிதிவண்டி போன்ற செலவினங்கள் குறைந்த உடலுக்கும் செலவினத்திற்கும் ஆரோக்கியமான வாகனங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் உழைப்பில் செல்லும் ஒரே வாகனம் அதுதான். உங்கள் சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றை எரிபொருளாக எடுத்துக் கொண்டு அதற்காகும் மருத்துவச் செலவை இல்லாமல் செய்து இயங்கும் வாகனம் அது.

தொலைதூரப் பயணங்களுக்குத் தொடர்வண்டிப் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலமாகப் பயணச் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கலாம். தொடர்வண்டிப் பயணங்கள் உங்களுக்கு எவ்வித உடல் களைப்பையும் அசதியையும் உருவாக்காது. உங்கள் பணிகளைச் செய்து கொண்டே நீங்கள் தொடர்வண்டிப் பயணங்களைச் செய்யலாம். பணியும் பயணமும் இணையும் அற்புதமான தருணங்கள் அவை.

பொழுதுபோக்குச் செலவினங்களையும் கொண்டாட்டத்திற்கான செலவினங்களையும் செய்வதற்கு முன் எப்போதும் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இவ்விரண்டிலும் ஆகும் செலவினங்கள் பல நேரங்களில் கண்ணை மறைப்பதாக அமைந்து விடக் கூடியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டு விட்டால் கொண்டாட்டங்களால்தான் மகிழ்ச்சி உண்டாகிறது என்பதன் அபத்தத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பட்ஜெட் போட்டு செலவினம் செய்வது நல்லது என்றாலும் இளைஞர்கள் அதை விரும்பாமல் இருக்கலாம். அந்த விருப்பமின்மைப் பழக்கத்தை மாற்றி சிறிது காலம் பட்ஜெட் போட்டுச் செலவு பண்ணப் பழகி விட்டால் இந்தப் பழக்கம் எப்போதும் பொருளாதாரப் பயனும் பொருளாதாரப் பலமும் தரும். எல்லாம் பழக்கம்தான். ஒரு நாள் பல் துலக்காமல் சாப்பிட முடியாமைக்கு என்ன காரணம்? பழக்கம்தானே. அப்படித்தான், பட்ஜெட் போட்டு செலவு பண்ணிப் பழகி விட்டால் அதன் பின் பட்ஜெட் போடாமல் உங்களால் செலவு பண்ண முடியாது.

ஒவ்வொரு மாதாந்திரச் சம்பளத்திலும் எவ்வளவு சேமிக்க வேண்டும், எவ்வளவு செலவினம் செய்ய வேண்டும் என்பதில் ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் பழக்கத்தில் வர வேண்டிய ஒன்று. பழகி விட்டால் உங்கள் வரவு – செலவின நிர்வாகத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள். எவ்வளவு பெரிய சர்க்கஸ் சாகசங்களையே பழக்கி பழக்கிச் செய்ய வைக்கிறார்கள். அப்படி நீங்கள் வரையறைகளோடு பழக்கி பழக்கி சேமிப்பையும் செலவையும் செய்ய பழகி விட்டீர்கள் என்றால் பொருளாதார சர்க்கஸில் நீங்கள் செய்யும் சாகசங்கள் உங்களுக்கே வியப்பை அளிக்கக் கூடியவை.

உங்கள் பொருளாதரத்துக்கு உரிய வரையறையின்படி செலவினங்களையும் சேமிப்புகளையும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் சம்பாத்தியமும் செலவினமும் எப்போதும் ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆம் வரவுக்கேற்ற செலவு அத்துடன் சேமிப்பும் இருந்தால் வரவைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. வரவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செலவினம் அதற்குள் கட்டுப்பட்டு இருக்குமானால் செலவினத்தைப் பற்றிய கவலையே வேண்டியதில்லை என்பதை வள்ளுவரும்

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை”              (குறள், 478)

என்று சொல்கிறார்.

இந்தக் குறள்தான் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதற்கான வழிகாட்டும் குறளாகும். இந்த ஒரு குறள் போதும் உங்களின் பொருளாதார வலிமையை உயர்த்திக் கொள்ளவும் அநாவசிய செலவினங்களைத் தடுத்துக் கொள்ளவும். இளைஞர்கள் அனைவரும் இந்தக் குறளைப் பொருளாதார வரவு – செலவினத்திற்கான சூத்திரமாகவும் மந்திரமாகவும் கொள்ளலாம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...