24 Apr 2018

அழகான ஆபரணம் வேண்டாமோ?


குறளதிகாரம் - 12.8 - விகடபாரதி
அழகான ஆபரணம் வேண்டாமோ?
            தராசுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
            நீதி தேவதையின் கையில் தராசு இருக்கிறது.
            தராசு பாரபட்சம் காட்டுவதில்லை. தன் மீது வைக்கப்பட்ட பொருளுக்கு சரியான எடையைக் காட்டுகிறது.
            தராசின் முடிவு மனிதர்க்கு மனிதர் மாறுபடுவதில்லை.
            தராசின் துல்லியம் நபரைப் பொருத்து வேறுபடுவதில்லை.
            சரியாக நிறுப்பதற்குப் பெயரே தராசு என்பதால், தராசே சமநிலை எனும் நடுவுநிலைமைக்குச் சரியானச் சான்றாகும்.
            சான்றாகுபவரே சான்றோர் என்பதால் சான்றோரும் தராசுக்குச் சமமானவரே.
            தன் மீது வைக்கப்படும் பொருள் எதுவென்று தராசு காண்பதில்லை.
            எப்பொருள் வைப்பினும் அப்பொருளுக்குச் சரியான எடையைக் காட்டுகிறது.
            தங்கத்துக்கு ஒரு வகை எடையையும், பித்தளைக்கு ஒரு வகை எடையையும் தராசு காட்டுவதில்லை.
            தன்னை நாடி வருவோர்க்குச் சான்றோர் அப்படி ஒரு தராசாக நின்று சமநிலை கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்.
            ஒரு பக்கம் சாய்வது தராசே அல்ல என்பது போல, ஒரு பக்கச் சார்பாக பேசுபவர், நடப்பவர் சான்றோரே அல்லர்.
            எடையிடும் ஏழைக்கு ஒரு வகை எடையையும், பணக்காரருக்கு ஒரு வகை எடையையும் தராசு காட்டாது.
            யார் எடையிட்டாலும் என்ன எடையோ அதையே காட்டும்.
            ஏழைக்கு ஒரு வகைமையாகவும், பணக்காரருக்கு ஒரு வகைமையாகவும் காட்டாத உயிருள்ள தராசே சான்றோர்.
            தராசு உயிரற்றது. ஆனாலும் கோணலற்றது.
            சான்றோர் உயிருள்ளவர். அவர் நடந்து கொள்ள வேண்டிய முறைமைக்கு உயிரற்றது ஆயினும் கோணலற்ற தராசே உதாரணம்.
            தானும் சமமாக நின்று, நிறுக்கும் போது சமமாக நிற்பதே தராசு.
            தானும் நடுவுநிலைமையோடு நின்று, ஒரு வழக்கு என்று வரும் போது நடுவுநிலைமையோடு நின்று சீர் தூக்குபவரே சான்றோர்.
            தராசுக்கு இரண்டு தட்டுகள் போல,
            வழக்கு என்று வந்து விட்டால் இரண்டு பக்கங்கள் இருக்கும்.
            அவ்விரண்டு பக்கங்களாகிய இரண்டு தரப்புக்கும் ஒரு தராசைப் போன்று சீர் தூக்கித் தீர்வு காண்பதே சான்றோர்க்கு அழகு.
            ஒரு பக்கம் அடிப்பது தராசுக்கு அழகன்று.
            ஒரு பக்கம் சாய்வதே சான்றோர்க்கு அழகன்று.
            இரு பக்க நியாயங்களையும் கேட்கும் போது, எந்தப் பக்கமும் சாய்ந்து விடாமல், சரியான நிலையில் அதாவது நடுவுநிலையில் நின்று நியாயம் சொல்வதே சான்றோர்க்கு அழகு.
            சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.
            கோடாமை சான்றோர்க்கு அணி. அதுவே அவர்தம் முதன்மையானப் பணி.
            அச்சான்றோர் நீதிபதி எனப்படலாம். நீதிமான் எனப்படலாம். நீதியரசர் எனப்படலாம். மக்கள் தலைவர் எனப்படலாம். மக்களுக்கான அதிகாரி எனப்படலாம். ஊர்ப் பெரியவர் எனப்படலாம். இன்னும் பற்பலப் பெயரில் வழங்கப்படலாம்.
            அவருக்கு அழகு கோடாமை. அதாவது நடுவுநிலைமை தவறுவதற்கு இடம் கொடாமை.
            மழித்தலும் நீட்டலும் வேண்டா என்பது போல சான்றோர்க்கு ஆபரணங்கள் எதுவும் வேண்டா. அவர்தம் நடுவுநிலைமையே அவருக்கான அழகான ஆபரணம், அவர்தம் அழகிய குணம்.
*****

குஜூலிபா நுட்பங்கள்


குஜூலிபா நுட்பங்கள்
            குஜூலிபா நுட்பங்கள் என்பன புதிய நூற்றாண்டு மனிதருக்கான நுட்பங்கள். இவைகள் உங்களுக்குத் தேவையாக இருக்காலாம். தேவையில்லாமலும் இருக்கலாம். அதை நீங்கள்தான் முடிவு செய்ய முடியும்.
            இனி நுட்பங்களைப் பாருங்கள்!
            மனஇறுக்கம் என்றால் எதையாவது கோமாளித்தனமாகச் செய்யுங்கள். மனம் எடையற்றதாகி விடும். இதற்காகவெல்லாம் சாமியார்களிடம் போய் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்காதீர்கள்.
            புதிய புதிய முட்டாள்தனங்களைப் படைப்பது மனஇறுக்கத்துக்கு மருந்து. உங்கள் புதிய புதிய புத்திசாலித்தனங்கள்தான் உங்களின் மனஉளைச்சலை உருவாக்கிய கிருமி.
            பேசுவது மனஉளைச்சலை வடிய வைப்பது போலத் தோன்றும். பேசாமல் இருந்தால் மனஉளைச்சல் தானாக வடிந்து விடும். வந்த மன‍உளைச்சல் எல்லாம் பேசியதால் வந்துதான் என்பதை வெகு சீக்கிரத்திலே உணர்வீர்கள்.
            புதிது புதிதாக வித்தியாசமாக வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். வாழுங்கள். அது புதிது புதிதாகவும் வித்தியாசமாகவும் அமையும். மனதில் தோன்றுபவைகளைக் குழந்தைகள் போல் பாவியுங்கள். அது போதும்.
            சிலதை நாம் தீர்மானிக்க முடியாது. நம்மாலும் கொஞ்சம் தீர்மானிக்க முடியும். நாம் மட்டுமே முழுமையாக தீர்மானிக்க முடியாது. நாம்தான் தீர்மானிக்கிறோம் என்றால் அதைப் போல் பாரமில்லை. பாரம் சுமப்பவர்களே போய் வாருங்கள்.
            தொடங்கினால் எல்லாம் பிறக்கும். பிறக்கட்டும் தொடங்கலாம் என்றால் அப்படியே உட்கார்ந்திருக்கலாம். அடைந்தவர்கள் எல்லாம் அதை அப்போதே தாமதம் இல்லாமல் தொடங்கியவர்கள்தான்.
            மனதில் இருக்கும் ஆணவமும், அகங்காரமும் இருக்கிறதே, அது அளவிட முடியாது. அதைப் பொறுத்துக் கொள்ளும் ஜீவன்கள் அவர்களோடு இருக்கிறார்களே, அதுதான் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியமாக இருக்கும்.
            நெருப்பு எரித்து விட்டுதான் அடங்கும். அகங்காரமும் சற்றேக்குறைய அப்படித்தான்.
            எல்லாம் பழக்கம்தான். பழக்கதின் அடிமை மனம். அதிலிருந்து சிறந்தவைகள் உருவாகலாம், கேடு கெட்டதும் உருவாகலாம். மற்றபடி சிறந்தவைகள் உருவாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்து விட வேண்டாம்.
*****

நெடுஞ்சாலை மியூசியத்தின் காட்சி


நெடுஞ்சாலை மியூசியத்தின் காட்சி
பின்தொடரும் ஒரு வண்ணத்துப் பூச்சி
வண்ணங்களை வீசிறியடிக்கிறது
தோற்றுப் போனதாகச் சொல்லி
மழையென அழுது புலம்புகிறது வானவில்
வண்ணங்களைப் பிடிக்க முயலும்
மழலையின் கைகளுக்கு
நீர் பட்டு கரையும் வண்ணம் போல்
நழுவி நழுவி பறக்கிறது வானவில்
வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முடியாத
வானவில்லை தொட முடியாத குழந்தை
கடைசியில் களைத்துப் போய் அமர
தலையில் வந்து அமர்கிறது வண்ணத்துப் பூச்சி
தலையில் மகுடமாகிறது வானவில்
இரண்டின் தலையிலும் செல்லமாய்
ஒரு குட்டு குட்டி விட்டு
வண்ணத்துப் பூச்சியாய்ச் சிறகடித்து
வானவில்லாய் விரிவு கொள்கிறது
நெடுஞ்சாலை மியூசியத்தின் அன்றைய நாள் காட்சி
*****

23 Apr 2018

வறுமையெல்லாம் வறுமை அன்று!


குறளதிகாரம் - 12.7 - விகடபாரதி
வறுமையெல்லாம் வறுமை அன்று!
            உண்மையைக் கைக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகள் பிரச்சனைகளே அல்ல.
            நன்மையைச் செய்யும் போது ஏற்படும் இடையூறுகள் இடையூறுகளே அல்ல.
            நேர்மையைக் கைகொள்ளும் போது ஏற்படும் வேதனைகள் வேதனைகளே அல்ல.
            களத்தில் அடையும் மரணம் மரணமே அன்று.
            களத்தில் அடையும் புண்கள் புண்களே அல்ல.
            அதே போல்தான் நடுவுநிலைமையைக் கைக்கொள்வதால் ஏற்படும் வறுமை வறுமையே அன்று.
            நடுவுநிலைமையோடு இருக்க நேர்வதால் செல்வத்தை இழக்க நேரிடலாம். அப்படி ஏற்படும் இழப்பு ஓர் இழப்பு ஆகாது. ஒன்று அது இழக்க வேண்டிய இழப்பாகவே இருக்கும், அல்லது மீண்டும் அது திரும்பி விடும் இழப்பாகவே இருக்கும்.
            நடுவுநிலைமையோடு இருக்க நேர்வதால் உறவுகளை, நட்புகளை, அவர்களால் கிடைக்க வேண்டிய பலன்களை இழக்க நேரிடலாம். அப்படி இழக்க நேரிடும் நட்புகளும், உறவுகளும், அவைகள் தரும் பலன்களும் உண்மையில் இழக்க வேண்டிய இழப்புகளாகவே இருக்கும்.
            நடுவுநிலையோடு இருக்க நேர்வதால் வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். உண்மையில் அவைகள் இழக்க வேண்டிய வாய்ப்புகளே.
            நடுவுநிலைமைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். நடுவுநிலைமையை இழந்து விடக் கூடாது.
            நடுவுநிலைமைக்காக எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தாங்கலாம். நடுவுநிலைமையை கைவிட்டு விடக் கூடாது.
            உலகின் பிரச்சனைகள், சிக்கல்கள், முடிச்சுகள் எல்லாம் நடுவுநிலைமையிலிருந்து தவறுவதிலிருந்தே தொடங்குகின்றன.
            நம்பிக்கை துரோகங்கள், பாவங்கள், போர்கள் அனைத்தும் நடுவுநிலைமை தவற நினைக்கும் மனத்திலிருந்தே உருபெறுகின்றன.
            சமனிலை தவறும் பருவத்தால் மழை பொய்ப்பதும், வறட்சி வாய்ப்பதும் போலத்தான், நடுவுநிலைமை தவறும் குணத்தால் நன்மைகள் பொய்ப்பதும், தீமைகள் மொய்ப்பதும் நிகழ்கின்றன.
            அரசியல் சூழ்ச்சிகள், வஞ்சக வீழ்ச்சிகள், பழிவாங்கல்கள், ஏமாற்றங்கள் என்று அனைத்தின் ஆணிவேராக நடுவுநிலைமைத் தவறும் பண்பே இருக்கிறது.
            நடுவுநிலைமை எனும் குணம் காக்கப்பட்டால் உலகின் நலன்கள் காக்கப்படும்.
            நடுவுநிலைமை எனும் குணம் வளர்க்கப்பட்டால் உலகின் உயர்வு உறுதிப்படும்.
            நடுவுநிலைமை எனும் குணம் பேணப்பட்டால் உலகம் உய்ய வழி கிடைக்கும்.
            ஆகவேத்தான் நடுவுநிலைமை எனும் குணம்,
                                    நடுவுநிலைமை எனும் பண்பு,
                                    நடுவுநிலைமை எனும் வழக்கு
            எதற்காகவும் இழக்கப்படக் கூடாது, கைவிடப்பட்டு விடக் கூடாது.
            நடுநிலைமைக்காக பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ளலாம். நடுவுநிலைமை தவறுவதால் கிடைக்கும் பொருளாதாரமான ஈனப் பொருளாதாரம், கருப்புப் பொருளாதாரத்தை விட அது மேலானது.
            நடுவுநிலைமைக்காக தரித்திரமாகவும் இருக்கலாம். நடுவுநிலைமை தவறுவதால் வளமாக இருப்பதை விட அது மேலானது.
            நடுவுநிலைமைக்காக வறுமையை ஏற்கலாம். நடுவுநிலைமை தவறுவதால் வசதிகளோடு வாழ்வதை விட அது மேலானது.
            நடுவுநிலைமைக்காக பிழைக்கத் தெரியாதவர் என்ற பழிச் சொல்லையும் ஏற்கலாம். நடுவுநிலைமை தவறுவதால் கிடைக்கும் பிழைக்கத் தெரிந்தவர் என்ற பட்டத்தை விட அது மேலானது.
            நடுவுநிலைமையோடு இருப்பதால் உண்டாகும் கேடு, கேடு ஆகாது.
            நடுவுநிலைமையோடு இருப்பதால் ஏற்படும் தாழ்வு, தாழ்வு ஆகாது.
            நடுவுநிலைமையோடு இருப்பதால் நேரிடும் வறுமை, வறுமை ஆகாது. அதுவே வளமை. வளமார்ந்த பண்பாட்டின் பெருமை.
            கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
            வறுமை ஒரு குற்றமில்லை. அதற்காக நடுவுநிலைமை தவறுவது குற்றம்.
            கெடுதல் ஒரு பிழையில்லை. அதற்காக நடுவுநிலைமை தவறுவது பிழை.
            வறுமை எல்லாம் வறுமை அன்று. நடுவுநிலைமை தவறுவது வறுமையினும் வறுமை, மோசமான வறுமை.
            வறுமை ஒரு நாள் வளமை ஆகும். வறுமையை மாற்றுவதற்காக நடுவுநிலைமை தவறியது ஒரு வடுவாக நிலைத்திருக்கும்.
            கெடுதல் ஒரு நாள் நன்மையாக ஆகும். கெடுதலைப் போக்குவதற்காக நடுவுநிலைமை தவறியது ஒரு பழியாக, பாவமாக நிலைத்திருக்கும்.
            உலகில் எதுவும் நடுவுநிலைமையிலிருந்து தவற முடியாது. நடுவுநிலைமையை நோக்கியே வந்தே தீரும்.
            ஒருவேளை நடுவுநிலைமை தவறுவது போலத் தோன்றினால் அது தற்காலிகமே. நிரந்தரம் நடுவுநிலைமையே. அதை நோக்கி உலகம் வந்தே தீரும்.
            நடுவுநிலைமை நிரந்தர அமைதி. அதை நோக்கி வராமல் வேறு மார்க்கமில்லை.
*****

அப்படியே விட்டு விடு!


அப்படியே விட்டு விடு!
            மனதில் உள்ள எந்த விசயத்துக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.
            அப்படியே இருந்தால் அதுவே சரியாகி விடும். எதையும் சரி செய்ய நினைத்தால் அது சரியாகாது. அது இன்னொரு பிறழ்வை ஏற்படுத்தி விடும்.
            வருவதைச் செய்யலாம். வராததை விட்டு விடலாம்.
            அதற்காகக் கோபப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.
            நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அதற்கு எதிரானச் சூழ்நிலைகள் உருவாகலாம். அப்படித்தான் உருவாகும்.
            அதில் ஏற்படும் இறுக்கம்தான் கோபமாக வெளியாகும்.
            நீங்களாக ஒன்றை நினைத்துக் கொண்டு அதை நிறைவேற்றுவதுதான் இமாலயக் கடமை என்பது போல நினைத்துக் கொள்வதுதான் அதற்கெல்லாம் காரணம்.
            அது அவசியமா என்றால் இல்லை. அப்படி ஒரு அடிமைத்தனம் எதற்கு? கோபத்துக்கு அடிமையான யாரும் அதை ஒத்துக் கொள்வதில்லை. கோபத்தின் அடிமைகள் என்பதையே அவர்கள் ஏற்பதில்லை. அது தேவையா என்றால் தேவையே இல்லாதது.
            இயன்ற அளவு செயல்படுங்கள். சக்திக்கு அப்பாற்பட்டதில் நீங்கள் எதுவும் செய்வதற்கில்லை. மேல் எல்லையில் உங்களையும் அறியாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். அது கண்டுகொள்ளாமல் விட வேண்டிய பகுதி என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதைப் புரிந்து கொள்கிற வரை அவசரம் காட்டாதீர்கள். புரிந்து கொள்ளுங்கள். அது ஒன்றே போதும்.
*****

பொம்கைளால் பொம்மைகளுக்காக...


பொம்கைளால் பொம்மைகளுக்காக...
நிறைய பொம்மைகள்
வாங்கிக் கொடுத்து விட்டதாக
அலுத்துக் கொள்கிறாய்
நான் அடம் பிடிப்பதாக
குற்றம் சாட்டுகிறாய்
உன் பொம்மைகள்
என்னை அச்சுறுத்துவதை சொன்னால்
அப்படித்தான் இருக்கும்
பொறுத்துக் கொள் என்கிறாய்
பொம்மைகளை எதிர்த்து
மனிதப் பொம்மைகள் போராடுவது
தடை செய்யப்பட்டிருப்பதாக
உன் அறிவிப்பு வந்த பின்
எம் குரல்கள் கேவல்களாக
நீ வாங்கித் தந்த பொம்மைகள்
எம்மை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றன
*****

22 Apr 2018

கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?


குறளதிகாரம் - 12.6 - விகடபாரதி
கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?
            சுனாமி,
            பூகம்பம்,
            விபத்துகள்,
            அழிவுகள்
            எனப் பேரிடர்களில் பல நடந்து முடிந்த பிறகுதான் தெரிகிறது. நடப்பதற்கு முன்னே தெரிந்தால் தடுத்துக் கொண்டு விடலாம். தடுக்க முடியாமல் போனாலும் முன்னெச்சரிக்கையாகவாவது இருந்து கொள்ளலாம்.
            வெள்ளம் வருவதற்கு முன்னே தெரிந்தால் அணை போட்டு விடலாம்.
            நோய் வருவதற்கு முன்னே தெரிந்தால் தடுப்பு மருந்தோடு தயாராக இருக்கலாம்.
            வருங்காலத்தை நிகழ்காலத்தில் கணிப்பது சாத்தியம் இல்லாததாக இருக்கிறது. சாத்தியம் இருந்தாலும் குறிப்பிட்ட விழுக்காடு அளவுக்கே நடக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கூற வேண்டியதாக இருக்கிறது.
            எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஒவ்வொரு மனிதரின் மனதுக்குள்ளும் இருந்து ஆட்டிப் படைக்கிறது.
            எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
            நிச்சயம் ஒரு நாள் மரணம் நேரப் போகிறது என்பது தெரிந்தும் அது எப்போது என்று தெரிந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கலாம் என்பதை விரும்பாத மனித மனம் இல்லாமல் இருக்க முடியுமா?
            மரணத்தைப் போல மனிதரைப் பயமுறுத்தும் ஒன்று கேடு. எப்போது கேடு வரும்? என்ற அச்சம் இல்லாத மனித மனம் இல்லாமல் இருக்க முடியாது. கெட்டுப் போவது குறித்த பயம் இயல்பாக மனித மனத்தில் ஒன்றிக் கிடக்கிறது.
            எப்போது வேண்டுமானாலும் கெடுதல் நேரலாம், ஒரு பூகம்பம் போல, ஒரு விபத்தைப் போல, ஒரு சுனாமியைப் போல.
            அது எப்போது நேரும் என்று சற்று உத்தேசமாகத் தெரிந்தால் அதைத் தடுத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகளைச் செய்து கொள்ளலாம் அல்லவா!
            ஆனால் பாருங்கள்! உத்தேசமான என்றில்லை, மிக துல்லியமாகக் கண்டறியும் அளவுகோலே இருக்கிறது!
            இந்த உலகில் வெகு துல்லியமாக முன்கூட்டியே பூகம்பம் ஏற்படுவதை, சுனாமி ஏற்படுவதை அறியக் கூடிய அளவுகோல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், வருங்காலத்தில் அது சாத்தியம் ஆகலாம் என்றாலும், அதை விடக் கடினமான ஒன்றான ஒரு மனிதர் எப்போது கெட்டுப் போகப் போகிறார் என்பதை முன்கூட்டியே கண்டறிவதற்கான துல்லியமான அளவுகோல் இருப்பது வியப்பானதுதான் அல்லவா!
            கெடுவதற்கு முன் கெட்டுப் போகப் போகிறோம் என்பது தெரிந்தால் எப்படியாவது அதைத் தடுத்துக் கொண்டு விடலாம் என்பதில் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர் என்றால்,
            அப்படி ஓர் அளவுகோல் இருந்தால் அதை விட இந்த மானிட சமூகம் உய்ய வேறென்ன வேண்டும் என்பீர்கள்!
            அப்படி ஓர் அளவுகோல் இல்லாமல் இல்லை. ஆனால் அதை இதுநாள் வரை இந்த உலகம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
            இதுவரை கண்டு கொள்ளாவிட்டால் என்ன? இனியாவது கண்டு கொள்ளட்டும் என்கிறீர்களா?
            இதுதான் அந்த அளவுகோல்!
            எப்போது ஒரு மனிதர் கெடப் போகிறார் என்றால்...
            எப்போது ஒரு மனிதர் நடுவுநிலைமை தவறி நடக்கப் போகிறாரோ, அப்போதிலிருந்தே கெடப் போகிறார்.
            மனிதர் எதனாலும் அழிக்க முடியாத மிருகம்தான். மனிதர் எதனாலும் அழிக்க முடியாத ஜந்துதான். மனிதர் எதனால் அழிக்க முடியாத பிண்டம்தான். ஆனால் நடுவுநிலைமையின்மை எனும் ஒன்று அழிக்க முடியாத மனிதரை அழித்து விடும்.
            நடுவுநிலைமை தவறும் மனிதச் சமூகம் அழிக்கப்பட்டு விடுகிறது.
            மனிதர்களை இந்த உலகில் எந்த சக்தி அழிப்பதினும் நடுவுநிலைமை தவறும் அவர்களது பண்பே அவர்களை மிக அதிகமாக அழிக்கிறது.
            அவரவர் அழிவு அவரவர் நடுவுநிலைமைத் தவறும் தன்மையிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது.
            மனிதர்களுக்கு, இந்த மனிதச் சமூகத்துக்கு எப்போது கேடு வரும் என்றால்... நடுவுநிலைமை தவறும் போது.
            அதுதான் அறிகுறி.
            எப்போதெல்லாம் நடுவுநிலைமை தவறுகிறீர்களோ, அப்போதே நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் நீங்கள் கெட்டுப் போகப் போகிறீர்கள் என்பதை.
            எப்போதெல்லாம் நடுவுநிலைமைத் தவறி நடக்கத் தொடங்குகிறீர்களோ, அப்போதே நீங்கள் இறுதி செய்து கொள்ளலாம் அழிவுக்கானப் பாதையில் நீங்கள் நடக்கத் தொடங்கி விட்டீர்கள் என்பதை.
            எப்போதெல்லாம் நடுவுநிலைமைத் தவறிப் போகத் துணிகிறீர்களோ, அப்போதே நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் உங்கள் வீழ்ச்சியை நீங்கள் வரவேற்கத் தொடங்கி விட்டீர்க்ள என்பதை.
            ஆம்! அதுதான் அறிகுறி! அழிவுக்கான அறிகுறி, வீழ்ச்சிக்கான அறிகுறி, கெட்டுப் போகப் போவதை முன்கூட்டியே காட்டுவதற்கான அறிகுறி.
            வரு முன் தெரிந்த பின் இனி தடுத்தாட் கொண்டு விடலாம்தான் அல்லவா!
            வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்று சொல்பவர் அல்லவா வள்ளுவர்!
            தெரிந்த பின் தெரியாதது போல நடந்து கொண்டால் அழிவு நமக்குத்தான்.
            புரிந்த பின் புரியாதது போல நடந்து கொண்டால் வீழ்ச்சி நமக்குத்தான்.
            அறிந்த பின் அறியாதது போல நடந்து கொண்டால் கெடுதல் நமக்குத்தான்.
            கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செயின்.
            கெடுவதற்கு முன் ஒருவர் நடுவுநிலைமை தவறியிருப்பார். நடுவுநிலைமை தவறும் ஒருவர் கெடுவார்.
            கெடுவார் கேடு நினைப்பார்.
            கெடுவார் நடுவுநிலைமைத் தவறுவதையே நினைப்பார்.
*****