குஜூலிபா நுட்பங்கள்
குஜூலிபா நுட்பங்கள் என்பன புதிய நூற்றாண்டு
மனிதருக்கான நுட்பங்கள். இவைகள் உங்களுக்குத் தேவையாக இருக்காலாம். தேவையில்லாமலும்
இருக்கலாம். அதை நீங்கள்தான் முடிவு செய்ய முடியும்.
இனி நுட்பங்களைப் பாருங்கள்!
மனஇறுக்கம் என்றால் எதையாவது கோமாளித்தனமாகச்
செய்யுங்கள். மனம் எடையற்றதாகி விடும். இதற்காகவெல்லாம் சாமியார்களிடம் போய் பணத்தை
விரயமாக்கிக் கொண்டிருக்காதீர்கள்.
புதிய புதிய முட்டாள்தனங்களைப் படைப்பது
மனஇறுக்கத்துக்கு மருந்து. உங்கள் புதிய புதிய புத்திசாலித்தனங்கள்தான் உங்களின் மனஉளைச்சலை
உருவாக்கிய கிருமி.
பேசுவது மனஉளைச்சலை வடிய வைப்பது போலத்
தோன்றும். பேசாமல் இருந்தால் மனஉளைச்சல் தானாக வடிந்து விடும். வந்த மனஉளைச்சல் எல்லாம்
பேசியதால் வந்துதான் என்பதை வெகு சீக்கிரத்திலே உணர்வீர்கள்.
புதிது புதிதாக வித்தியாசமாக வாழ வேண்டும்
என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். வாழுங்கள். அது புதிது புதிதாகவும் வித்தியாசமாகவும்
அமையும். மனதில் தோன்றுபவைகளைக் குழந்தைகள் போல் பாவியுங்கள். அது போதும்.
சிலதை நாம் தீர்மானிக்க முடியாது. நம்மாலும்
கொஞ்சம் தீர்மானிக்க முடியும். நாம் மட்டுமே முழுமையாக தீர்மானிக்க முடியாது. நாம்தான்
தீர்மானிக்கிறோம் என்றால் அதைப் போல் பாரமில்லை. பாரம் சுமப்பவர்களே போய் வாருங்கள்.
தொடங்கினால் எல்லாம் பிறக்கும். பிறக்கட்டும்
தொடங்கலாம் என்றால் அப்படியே உட்கார்ந்திருக்கலாம். அடைந்தவர்கள் எல்லாம் அதை அப்போதே
தாமதம் இல்லாமல் தொடங்கியவர்கள்தான்.
மனதில் இருக்கும் ஆணவமும், அகங்காரமும்
இருக்கிறதே, அது அளவிட முடியாது. அதைப் பொறுத்துக் கொள்ளும் ஜீவன்கள் அவர்களோடு
இருக்கிறார்களே, அதுதான் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியமாக இருக்கும்.
நெருப்பு எரித்து விட்டுதான் அடங்கும்.
அகங்காரமும் சற்றேக்குறைய அப்படித்தான்.
எல்லாம் பழக்கம்தான். பழக்கதின் அடிமை
மனம். அதிலிருந்து சிறந்தவைகள் உருவாகலாம், கேடு கெட்டதும் உருவாகலாம். மற்றபடி சிறந்தவைகள்
உருவாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்து விட வேண்டாம்.
*****
No comments:
Post a Comment