24 Apr 2018

அழகான ஆபரணம் வேண்டாமோ?


குறளதிகாரம் - 12.8 - விகடபாரதி
அழகான ஆபரணம் வேண்டாமோ?
            தராசுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
            நீதி தேவதையின் கையில் தராசு இருக்கிறது.
            தராசு பாரபட்சம் காட்டுவதில்லை. தன் மீது வைக்கப்பட்ட பொருளுக்கு சரியான எடையைக் காட்டுகிறது.
            தராசின் முடிவு மனிதர்க்கு மனிதர் மாறுபடுவதில்லை.
            தராசின் துல்லியம் நபரைப் பொருத்து வேறுபடுவதில்லை.
            சரியாக நிறுப்பதற்குப் பெயரே தராசு என்பதால், தராசே சமநிலை எனும் நடுவுநிலைமைக்குச் சரியானச் சான்றாகும்.
            சான்றாகுபவரே சான்றோர் என்பதால் சான்றோரும் தராசுக்குச் சமமானவரே.
            தன் மீது வைக்கப்படும் பொருள் எதுவென்று தராசு காண்பதில்லை.
            எப்பொருள் வைப்பினும் அப்பொருளுக்குச் சரியான எடையைக் காட்டுகிறது.
            தங்கத்துக்கு ஒரு வகை எடையையும், பித்தளைக்கு ஒரு வகை எடையையும் தராசு காட்டுவதில்லை.
            தன்னை நாடி வருவோர்க்குச் சான்றோர் அப்படி ஒரு தராசாக நின்று சமநிலை கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்.
            ஒரு பக்கம் சாய்வது தராசே அல்ல என்பது போல, ஒரு பக்கச் சார்பாக பேசுபவர், நடப்பவர் சான்றோரே அல்லர்.
            எடையிடும் ஏழைக்கு ஒரு வகை எடையையும், பணக்காரருக்கு ஒரு வகை எடையையும் தராசு காட்டாது.
            யார் எடையிட்டாலும் என்ன எடையோ அதையே காட்டும்.
            ஏழைக்கு ஒரு வகைமையாகவும், பணக்காரருக்கு ஒரு வகைமையாகவும் காட்டாத உயிருள்ள தராசே சான்றோர்.
            தராசு உயிரற்றது. ஆனாலும் கோணலற்றது.
            சான்றோர் உயிருள்ளவர். அவர் நடந்து கொள்ள வேண்டிய முறைமைக்கு உயிரற்றது ஆயினும் கோணலற்ற தராசே உதாரணம்.
            தானும் சமமாக நின்று, நிறுக்கும் போது சமமாக நிற்பதே தராசு.
            தானும் நடுவுநிலைமையோடு நின்று, ஒரு வழக்கு என்று வரும் போது நடுவுநிலைமையோடு நின்று சீர் தூக்குபவரே சான்றோர்.
            தராசுக்கு இரண்டு தட்டுகள் போல,
            வழக்கு என்று வந்து விட்டால் இரண்டு பக்கங்கள் இருக்கும்.
            அவ்விரண்டு பக்கங்களாகிய இரண்டு தரப்புக்கும் ஒரு தராசைப் போன்று சீர் தூக்கித் தீர்வு காண்பதே சான்றோர்க்கு அழகு.
            ஒரு பக்கம் அடிப்பது தராசுக்கு அழகன்று.
            ஒரு பக்கம் சாய்வதே சான்றோர்க்கு அழகன்று.
            இரு பக்க நியாயங்களையும் கேட்கும் போது, எந்தப் பக்கமும் சாய்ந்து விடாமல், சரியான நிலையில் அதாவது நடுவுநிலையில் நின்று நியாயம் சொல்வதே சான்றோர்க்கு அழகு.
            சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.
            கோடாமை சான்றோர்க்கு அணி. அதுவே அவர்தம் முதன்மையானப் பணி.
            அச்சான்றோர் நீதிபதி எனப்படலாம். நீதிமான் எனப்படலாம். நீதியரசர் எனப்படலாம். மக்கள் தலைவர் எனப்படலாம். மக்களுக்கான அதிகாரி எனப்படலாம். ஊர்ப் பெரியவர் எனப்படலாம். இன்னும் பற்பலப் பெயரில் வழங்கப்படலாம்.
            அவருக்கு அழகு கோடாமை. அதாவது நடுவுநிலைமை தவறுவதற்கு இடம் கொடாமை.
            மழித்தலும் நீட்டலும் வேண்டா என்பது போல சான்றோர்க்கு ஆபரணங்கள் எதுவும் வேண்டா. அவர்தம் நடுவுநிலைமையே அவருக்கான அழகான ஆபரணம், அவர்தம் அழகிய குணம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...