28 Jan 2018

மீண்டும் ஆதியிலிருந்து...

மீண்டும் ஆதியிலிருந்து...
பூஞ்சானம் படர்ந்த கைகளில்
இரத்தப் பாசி பிடித்த
உன் துப்பாக்கி.
மதுவில் கலந்த குருதியில்
உன் மூளை முழுதும் ஊரும்
கம்பளிப் பூச்சிகள்.
இப்படியெல்லாம் நேரும் என்று
காலச் சக்கரத்திற்குத் தெரியும்.
ஆளில்லாமல் வேவு பார்க்கும் விமானத்தால்
அடித்து வீழ்த்தப்படுவாய் நீ.
பட்டனைத் தட்டி இயக்க ஆளில்லாமல்
அனாதையாய்க் கிடக்கும் அணுகுண்டுகள்.
கருவிகளின்றி பூமியில்
வாழத் தொடங்கியிருக்கும் புதிய ஆதி இனம்.

*****

27 Jan 2018

நிரந்த அழிவா? நிரந்தர ஆக்கமா? - உங்கள் விருப்பம்!

குறளதிகாரம் - 4.1 - விகடபாரதி
நிரந்த அழிவா? நிரந்தர ஆக்கமா? - உங்கள் விருப்பம்!
            வறுமையிலும் செம்மை என்பது சிறப்பு.
            செல்வம் ஈட்ட ஆயிரம் வழிகள் இருந்தும் நேர்மையோடு, மனச்சான்றுக்கு விரோதம் இல்லாமல் ஈட்டும் செல்வமே செல்வம்.
            அத்தகைய சிறப்பையும், அத்தகைய செல்வத்தையும் தரும் அறத்தைப் போன்ற ஆக்கம் தருவது இந்த உலகில் எதுவும் இல்லை.
            அப்படியானால் வேறு வழியில் பெறும் சிறப்பு, செல்வம் ஆகியவை அழிவைத் தரக் கூடியதா என்றால், சந்தேகம் இல்லாமல் ஆம்தான்.
            கல்வி பெற்றால் சிறப்பு,
            செல்வம் வந்தால் சிறப்பு,
            வீரத்தோடு இருந்தால் சிறப்பு,
            புகழ் தரும் காரியங்களைப் புரிந்தால் சிறப்பு,
            திறமையோடு செயலாற்றினால் சிறப்பு,
            சாதுர்யமாக இருந்தால் சிறப்பு
            இப்படி இவைகளில் எதைப் புரிந்தாலும் சிறப்பு வந்து சேர்வது இயல்பு. ஆனால் வறுமையில் செம்மையாக இருப்பதற்கு,
             மனப்பக்குவம் வேண்டும். வறுமையை விரோதமாகப் பார்க்காமல், வாழ்வில் இதுவும் ஒரு காலக் கட்டம் என்று ஏற்றுக்கொள்ளும் தெளிவும் துணிவும் வேண்டும்.
            உலகில் யாருக்கும் இது போன்ற வறுமை ஏற்படாமல் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் ஏற்படுகிறதே என்ற விபரீத கற்பனை தோன்றாமல் அதற்கானக் காரணங்களை பொறுமையாக அலசி ஆராய்ந்து போராடும் மனஉறுதி வேண்டும்.
            இந்தச் சமூகம் தனக்கு மட்டும் ஏதோ வறுமையைத் தந்து விட்டது என்பது போன்ற பழி வாங்கும் உணர்வுகளைக் கைக்கொள்ளாமல் ஒரு சார்பற்று சிந்திக்கும் நடுவுநிலைமையான மனம் வேண்டும்.
            இவைகள் எல்லாம்தான் சிறப்பு.
            முடிவில் தன்னுடைய வறுமையை மட்டும் நீக்கிக் கொள்வது அல்ல, மற்றவர்களின் வறுமையையும் போக்க முயலும் உதவும் மனப்பான்மைக்கு வருவதே சிறப்பு. வறுமையில் செம்மையாக இருக்க முடிந்தவர்களுக்கே அப்படிப்பட்ட மனம் வரும்.
            வறுமையை விரோதமாகப் பார்க்க முயன்று, வறுமையை விரட்டுவதற்காக நேறியற்ற முறையில் முயன்றவர்களுக்கு பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்க்காமல் இருக்கிறோமே என்ற ஏக்க மனமே மிஞ்சும்.
            எவ்வளவோ செல்வம் இருப்பவர்களுக்கு உதவும் மனம் இல்லாமல் போவதற்குக் காரணம் இதுவே. வறுமை குறித்த அதீத பயம் அவர்களின் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்.
            வறுமையைப் போன்ற மிகச் சிறந்த பள்ளிக்கூடம் ஏதுமில்லை என்கிறார் மகாத்மா காந்தியடிகள். வறுமையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுதான் உங்கள் இயல்பு. வறுமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் உங்கள் பார்வை.
            வறுமை காலத்தில் இந்த வறுமை தன்னை வருத்துவதைப் போலத்தானே வறுமையில் இருக்கும் ஒவ்வொருவரையும் வருத்தும் என்ற அறம் சார்ந்த மனநிலைக்கு வர முடிந்தால் அதுதான் சிறப்பு.
            மாறாக இப்படி என்னை வறுமையில் தவிக்க விட்ட ஒவ்வொருவரையும் மிகையான பணம் சம்பாதித்துக் காட்டி என்ன செய்கிறேன் பார் என்ற மனநிலைக்கு வந்தால் நீங்கள் அறம் சார்ந்த மனநிலையிலிருந்து விலகுகிறீர்கள் என்பது பொருள். நீங்கள் அதன் பின் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் உங்களுடைய அழிவை அறம் சார்ந்த மனநிலையிலிருந்து விலகிய அந்த உங்கள் மனநிலையே துவக்கி வைக்கும்.
            வறுமையில் செம்மையாக வாழும் எண்ணச் சிறப்பையும், செம்மையாக வாழ்வதற்கான அழிவில்லாத செல்வத்தையும் அறமே வழங்குகிறது.
            அறம் வழங்காத செல்வம் அழிவுள்ள செல்வமே. அதாவது கையூட்டு, லஞ்சம், ஏமாற்று, வஞ்சகம், கொள்ளை, திருட்டு, தந்திரம் மூலம் பெறும் இம்மியூண்டு செல்வமோ, அதீத செல்வமோ அழிவுள்ள செல்வமே. மாறாக அறத்தோடு நின்று ஈட்டிய‍ அளவான செல்வம் அழிவற்றது. அழிந்தாலும் உயிர்த்தெழுந்து மீண்டும் உங்களைத் தேடி வருவது.
            வறுமையை எதிர்கொண்டு செம்மையாக வாழ முடியாத சிறப்பு அழிவுள்ள சிறப்பே. வறுமை குற்றங்களின் விளைநிலம். குற்றங்களின் விளைநிலத்திலும் குற்றமற்று வாழும் அச்சிறப்புக்காக வறுமையிலும் செம்மை என்பது சிறப்பினும் சிறப்பு பெறுகிறது.
            வறுமை வந்து விடுமோ என்று பயந்தல்லவா இங்கு ஈட்டிய செல்வம் எல்லாம் மிகை பாதுகாப்போடு சம பகிர்மானம் செய்ய முடியாமல் எல்லா வளங்களும் நிறைந்த ஒரு நாட்டில் வறுமையை விதைத்துக் கொண்டு இருக்கிறது.
            வறுமைக்குப் பயந்து அறமற்று வாழாமல், வறுமையை விரட்ட அறமற்ற வழியில் செல்வத்தைச் சேர்க்காமல் வாழும் வாழ்க்கையைப் போன்ற ஆக்கமான வாழ்க்கை எதுவுமில்லை. உயிர் கொண்டு உடலெடுத்து மனிதப் பிறவிக்கு அதுவே ஆக்கம், ஊக்கம் எல்லாம்.
            அறமற்ற வழியில் வரும் சிறப்பையும், செல்வத்தையும் அண்ட விடாதீர்கள். மனிதர்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள்.
            அறமற்ற வழியில் வரும் சிறப்பையும் செல்வத்தையும் அண்ட விட்டீர்களானால் தற்காலிக சிறப்பையும், தற்காலிக செல்வத்தையும் பெற்ற மனிதர்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள். அந்தத் தற்காலிகச் சிறப்பாலும், தற்காலிக செல்வத்தாலுமே விரைவில் அழிக்கப்படும் மனிதர்களாகவும் நீங்கள் ஆக்கப்படுவீர்கள்.
            நாம் தேரப் போவது தற்காலிக ஆக்கமா? நிரந்தர ஆக்கமா?
            தற்காலிக ஆக்கம் என்பது நாம் மட்டும் விரைவில் உயர்ந்து நம் சந்ததிக்கான அழிவை நாமே தேடி வைத்து நாமும் வெகு கேவலமாக அழிவது.
            நிரந்த ஆக்கம் என்பது நாமும் மெல்ல உயர்ந்து வழி வழி வரும் நம் சந்ததிகளுக்கான நிரந்தர ஆக்கத்தை பூமியுள்ள காலம் வரையிலும், காலமுள்ள காலம் வரையிலும் சேர்த்து வைப்பது.
            நாம் தேரப் போவது தற்காலிக ஆக்கமா? நிரந்தர ஆக்கமா? என்பது அறத்தைக் கைக்கொள்ளும் நம் முடிவில் இருக்கிறது.
            சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு(?)

*****

ராஜாவின் அந்தப்புரம்

ராஜாவின் அந்தப்புரம்
திரைப்படக் காமம்
கிளுகிளுப்பூட்டுகிறது
திரையரங்கை ஒட்டியிருக்கும்
பெட்டிக் கடையில் ஆணுறை வாங்கிக் கொள்கிறான்
புட்டி மதுவை ஊற்றிக் கொண்டு
கனவின்பத்தைக் காண்பவன்
சில நிமிடங்களின் தளர்ந்து விடுகிறான்
வீட்டில் அவனது பிரஜைகள்
அவனை எதிர்பார்த்துத் தளர்ந்து கிடக்கிறார்கள்
சட்டைப் பையிலிருந்து
எடுத்துப் போடும் இருபது ரூபாயைப்
பகிர்ந்து கொள்கிறார்கள் பிள்ளைகள்
அவனோ பெருவிருந்து உண்டவனைப் போல
உறங்கிப் போகிறான்
பட்டினி விரதம் இருக்கத் தொடங்குகிறாள்
அவன் தர்மபத்தினி.

*****

இரவில் குடி இருப்பவர்

இரவில் குடி இருப்பவர்
காலை முதல் மாலை வரை
அலைந்து திரிந்து
ஐஸ் விற்கும் தாத்தா
இரவானால்
டாஸ்மாக் முன் உருகிக் கிடப்பார்.
விடிந்ததும் விடியாததுமாக
சைக்கிள் கேரியரில்
தூக்கி வைக்கும் ஐஸ் பெட்டியில்
இரவுக் குடிக்கான
எந்த அறிகுறியும் இருக்காது.
பகல் குளிர வைக்கும்
இரவு உருக வைக்கும்.

*****

26 Jan 2018

அன்பைச் செய்தால் நீயும் அந்தணனே!

குறளதிகாரம் - 3.10 - விகடபாரதி
அன்பைச் செய்தால் நீயும் அந்தணனே!
            மனித உயிர்கள் உசத்தி என்பதோ, பிற உயர்கள் தாழ்த்தி என்பதோ அறப்பார்வை அன்று.
            மனித உயிர் போலவே எல்லா உயிர்களும் சமம் என்பதே அறம்.
            அப்படியானால் மனித உயிர்கள் கூட ஒன்றுக்கொன்று தாழ்வானது அல்ல.
            சாதியால்,
            மதத்தால்,
            இனத்தால்,
            நாட்டால்,
            மொழியால் மனித உயிர்கள் உயர்வு தாழ்வு கிடையாது. அதுதான் செம்மையான அறம்.
            இனத்தால் வேறுபாடு காட்டிய ஹிட்லர் கடைபிடித்தது அறமே அன்று.
            சாதியால் வேறுபாடு காட்டிய வர்ணாசிரமம் அறத்தின் அருகில் கூட வர இயலாது.
            நாடுகளால் வேறுபாடு காட்டி நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க மறுக்கும் வல்லரசுகள் செய்வதும் அறம் ஆகாது.
            மதத்தால் வேறுபாடு காட்டி சிறுபான்மையினர்களைத் துண்டாட நினைத்து அதிகார அமைப்புகள் மதத்துவத்தைக் கையில் எடுத்தால் அதுவும் அறமாகாது.
            ஒரு மொழியை நீச பாஷை என்றும், ஒரு மொழியை மோட்ச பாஷை என்றும் நீச பாஷையினரின் வாழ்த்துக்கு எல்லாம் எழுந்து நிற்க முடியாது என்று மழுப்புவதெல்லாம் அறமே கிடையாது.
            அறம் என்பது எல்லா மனித உயிர்களுக்கும் சமமானது. மனித உயிர்கள் மட்டுமன்றி மனித உயிர்கள் போலவே மற்ற எல்லா உயிர்களுக்கும் சமமானது.
            அப்படி எல்லா உயிர்கள் பாலும் சமமான செம்மையான தன்மையை உள்ளத்தில் கொண்டு, அதையே செயலில் ஒழுகுபவர்களே அந்தணர் என்போர் ஆவார்.
            அவர் அமெரிக்காவிலும் வாழலாம், கருப்பினம் - வெள்ளையினம் என்றெல்லாம் வேறுபாடு இல்லை என்பதை நிறுவிக் காட்டிய லிங்கனைப் போல.
            அவர் தென்னமெரிக்காவிலும் வாழலாம் கருப்பின மக்களின் சமத்துவத்துக்காகப் போராடி அதைச் சாதித்த நெல்சன மண்டேலா போல.
            அவர் உலகையே உறவென நினைத்த பெண்மணியாகவும் இருக்கலாம் அன்னை தெரசா போல.
            அந்தணர் என்பதற்கு ஆண் - பேதம் கிடையாது. அமெரிக்கா, இந்தியா என்ற வேறுபாடு கிடையாது.
            எவ்வுயிர்க்கும்,
            எந்நாட்டவர்க்கும்,
            எம்மக்களுக்கும்
            செம்மையான தன்மையை பூண்டு ஒழுகுகின்ற அறவோர் யாராக இருப்பினும் அவரே அந்தணர்.
            அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் என்கிறார் வள்ளுவர்.
             அந்தணர் என்பது மதப் பெயர் அன்று, சமத்துவம் செய்யும் மனிதத்தின் பெயர்.
            அந்தணர் என்பது சாதிப் பெயர் அன்று, யாவரும் சமமென எண்ணும் சுதந்திரத்தின் பெயர்.
            அந்தணர் என்பது இனப் பெயர் அன்று, யாரும் யாருக்கும் அடிமையில்லை என்று அன்பு செய்யும் சகோதரத்துவத்தின் பெயர்.
            மனித குலத்தின் மீது மாறாத அன்பு கொண்டு, மனித குல மீட்சிக்காக, சமத்துவத்தின் எழுச்சிக்காகப் போராடியப் புரட்சியாளர்களும் அந்தணர்களே.
            நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையோர் மேலோர் என்பாரே பாரதி. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பாரே பாரதி. அந்தப் பாவத்தைச் செய்யாதவர் யாரோ அவரே அந்தணர். அன்பு நிறைய உடைய மேலோர் யாரோ அவரே அந்தணர்.
            அன்பைச் செய்தால் யாரும் அந்தணரே. மாறாக வம்பைச் செய்து அந்தணர் என்ற வார்த்தையைப் போர்த்திக் கொள்வதால் யாரும் அந்தணராகி விட முடியாது.
            அந்தணர் என்பது வெறும் வார்த்தை அன்று. அனைத்து உயிர்களிடமும் அன்பு பூண்டு வாழும் வாழ்க்கை.

*****

விதிகளை உடைப்பவர்கள் குழந்தைகள்!

விதிகளை உடைப்பவர்கள் குழந்தைகள்!
            அன்று எஸ்.கே.வுக்கு ஏன் அவ்வளவு பெரிய மனச்சோர்வு ஏற்பட்டதென கணிக்க முடியவில்லை. ‍அவன் மிக மிக மெதுவாக செயலாற்றினான். குழந்தைகளை வேறு அடித்து விட்டான். குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது அவனது பிரதான கொள்கைகளில் ஒன்று. எல்லாவற்றைம் அன்று மீறி விட்டான்.
            அவர்கள் என்னதான் தவறு செய்தாலும் அவர்களை அடிக்கும் மனநிலை ஏற்படுவதற்குக் காரணம், விதிகள்தான் மற்றும் எஸ்.கே. தன் மனதில் வைத்துக் கொள்ளும் கட்டுக் கோப்புகள்தான். அவன் அப்படி நடக்கக் கூடாது என நினைக்கிறான். ஆனால் குழந்தைகளுக்கு அந்த விதிகளை உடைக்கவே பிடிக்கும்.
            விதிகள் நமக்குப் பிடிக்கும் என்றால், விதிகளை உடைப்பதுதான் பிள்ளைகளுக்குப் பிடித்தமானது. இந்த இரண்டும் எந்தப் புள்ளியிலும் சந்திக்காது. அதனால்தான் ஆசிரியர் - மாணவர் உறவோ, பெற்றோர் - பிள்ளைகளின் உறவோ எதிரும் புதிருமாக இருக்கின்றன.
            அவர்களிடம் போய் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. அப்புறம் அந்த எதிர்பார்ப்பில் உண்டாகும் ஏமாற்றம் கோபம் கொள்ளத்தான் செய்யும். கோபத்தின் காரணமாக உண்டாகும் திட்டும் மனநிலையும், அடிக்கும் மனநிலையும் அதிகரித்துக் கொண்டே போகுமே தவிர குறையாது.
            மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எஸ்.கே. போன்றவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ, அதுதான் நல்லது என்றோ எதையும் நிறைவேற்ற முயல்வதோ நல்லதல்ல. எதை நிறைவேற்றுவதாக இருந்தாலும் பொறுமையாக நிறைவேற்றுவதுதான் நல்லது. நன்கு ஆராய்ந்த பிறகே நிறைவேற்ற வேண்டும். எஸ்.கே. போல எதிலும் அவசரம் காட்டி, உடனடி விளைவுகளை எதிர்பார்க்கக் கூடாது.
            எதையும் அதிகம் நிறைவேற்றவில்லை என்பதற்காக வருந்த வேண்டாம். அதிகம் நிறைவேற்றாமல் இருப்பதும் நல்லதுதான். சரியானப் புரிதல் நிகழாத அதிகப்படியான நிறைவேற்றல்களால் எந்தப் பயனும் இல்லை. சரியானப் புரிதலோடு கூடிய குறைவான நிறைவேற்றல்களே நல்லப் பயனைத் தர வல்லது.
            எஸ்.கே. எதிர்பார்க்கிறான். அது நடக்க மாட்டேன்கிறது என்ற உடனே கோபம் உண்டாகி விடுகிறது. எதற்கு இந்த எதிர்பார்ப்பு? தேவையற்ற எதிர்பார்ப்பு? கோபம் கொண்டு வன்முறையை நிறைவேற்றத் துடிக்கும் எதிர்பார்ப்பு எதற்கு? அதை நிறைவேற்றி என்னவாகப் போகிறது? அப்படி ஓர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதை விட நிறைவேற்றாமல் இருப்பது மேலானது.
            எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் மூலம் அதை நிறைவேற்றிக் காட்டுகிறேன் பார் என்பதற்காக கண்டிப்பின் மூலம், விதிகளின் மூலம் ஒரு வன்முறையான உலகை உருவாக்க நினைக்காதீர்கள்.

*****

வழக்கம் & உளைச்சல்

வழக்கம்
ரெளடி கந்தன் மிராட்டுகிறான் என
கதவடைக்கின்றனர் வணிகர்கள்
புகார் கொடுக்கின்றனர்
ரெளடி கந்தன் கைது செய்யப்படுகிறான்
சிரித்துக் கொண்டே ஜீப்பில் செல்கிறான்
வழக்கம் போல்
மாலை மாமூல் வாங்க வருகின்றனர் அவர்கள்
*****
உளைச்சல்
லோனுக்காக
பத்து முறை அலைந்து பார்த்த
அப்புக்குட்டி
அஞ்சு காசு வட்டிக்குக் கொடுக்கும்
மாடி வீட்டுக்காரரே
தெய்வம் என்கிறான்.

*****