குறளதிகாரம் - 4.1 - விகடபாரதி
நிரந்த அழிவா?
நிரந்தர ஆக்கமா? - உங்கள் விருப்பம்!
வறுமையிலும்
செம்மை என்பது சிறப்பு.
செல்வம் ஈட்ட
ஆயிரம் வழிகள் இருந்தும் நேர்மையோடு, மனச்சான்றுக்கு விரோதம் இல்லாமல் ஈட்டும் செல்வமே
செல்வம்.
அத்தகைய சிறப்பையும்,
அத்தகைய செல்வத்தையும் தரும் அறத்தைப் போன்ற ஆக்கம் தருவது இந்த உலகில் எதுவும் இல்லை.
அப்படியானால்
வேறு வழியில் பெறும் சிறப்பு, செல்வம் ஆகியவை அழிவைத் தரக் கூடியதா என்றால், சந்தேகம்
இல்லாமல் ஆம்தான்.
கல்வி பெற்றால்
சிறப்பு,
செல்வம் வந்தால்
சிறப்பு,
வீரத்தோடு
இருந்தால் சிறப்பு,
புகழ் தரும்
காரியங்களைப் புரிந்தால் சிறப்பு,
திறமையோடு
செயலாற்றினால் சிறப்பு,
சாதுர்யமாக
இருந்தால் சிறப்பு
இப்படி இவைகளில்
எதைப் புரிந்தாலும் சிறப்பு வந்து சேர்வது இயல்பு. ஆனால் வறுமையில் செம்மையாக இருப்பதற்கு,
மனப்பக்குவம் வேண்டும். வறுமையை விரோதமாகப் பார்க்காமல்,
வாழ்வில் இதுவும் ஒரு காலக் கட்டம் என்று ஏற்றுக்கொள்ளும் தெளிவும் துணிவும் வேண்டும்.
உலகில் யாருக்கும்
இது போன்ற வறுமை ஏற்படாமல் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் ஏற்படுகிறதே என்ற விபரீத
கற்பனை தோன்றாமல் அதற்கானக் காரணங்களை பொறுமையாக அலசி ஆராய்ந்து போராடும் மனஉறுதி
வேண்டும்.
இந்தச் சமூகம்
தனக்கு மட்டும் ஏதோ வறுமையைத் தந்து விட்டது என்பது போன்ற பழி வாங்கும் உணர்வுகளைக்
கைக்கொள்ளாமல் ஒரு சார்பற்று சிந்திக்கும் நடுவுநிலைமையான மனம் வேண்டும்.
இவைகள் எல்லாம்தான்
சிறப்பு.
முடிவில்
தன்னுடைய வறுமையை மட்டும் நீக்கிக் கொள்வது அல்ல, மற்றவர்களின் வறுமையையும் போக்க
முயலும் உதவும் மனப்பான்மைக்கு வருவதே சிறப்பு. வறுமையில் செம்மையாக இருக்க முடிந்தவர்களுக்கே
அப்படிப்பட்ட மனம் வரும்.
வறுமையை விரோதமாகப்
பார்க்க முயன்று, வறுமையை விரட்டுவதற்காக நேறியற்ற முறையில் முயன்றவர்களுக்கு பத்து
தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்க்காமல்
இருக்கிறோமே என்ற ஏக்க மனமே மிஞ்சும்.
எவ்வளவோ
செல்வம் இருப்பவர்களுக்கு உதவும் மனம் இல்லாமல் போவதற்குக் காரணம் இதுவே. வறுமை குறித்த
அதீத பயம் அவர்களின் மனதை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்.
வறுமையைப்
போன்ற மிகச் சிறந்த பள்ளிக்கூடம் ஏதுமில்லை என்கிறார் மகாத்மா காந்தியடிகள். வறுமையில்
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுதான் உங்கள் இயல்பு. வறுமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ
அதுதான் உங்கள் பார்வை.
வறுமை காலத்தில்
இந்த வறுமை தன்னை வருத்துவதைப் போலத்தானே வறுமையில் இருக்கும் ஒவ்வொருவரையும் வருத்தும்
என்ற அறம் சார்ந்த மனநிலைக்கு வர முடிந்தால் அதுதான் சிறப்பு.
மாறாக இப்படி
என்னை வறுமையில் தவிக்க விட்ட ஒவ்வொருவரையும் மிகையான பணம் சம்பாதித்துக் காட்டி என்ன
செய்கிறேன் பார் என்ற மனநிலைக்கு வந்தால் நீங்கள் அறம் சார்ந்த மனநிலையிலிருந்து விலகுகிறீர்கள்
என்பது பொருள். நீங்கள் அதன் பின் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் உங்களுடைய அழிவை அறம்
சார்ந்த மனநிலையிலிருந்து விலகிய அந்த உங்கள் மனநிலையே துவக்கி வைக்கும்.
வறுமையில்
செம்மையாக வாழும் எண்ணச் சிறப்பையும், செம்மையாக வாழ்வதற்கான அழிவில்லாத செல்வத்தையும்
அறமே வழங்குகிறது.
அறம் வழங்காத
செல்வம் அழிவுள்ள செல்வமே. அதாவது கையூட்டு, லஞ்சம், ஏமாற்று, வஞ்சகம், கொள்ளை, திருட்டு,
தந்திரம் மூலம் பெறும் இம்மியூண்டு செல்வமோ, அதீத செல்வமோ அழிவுள்ள செல்வமே. மாறாக
அறத்தோடு நின்று ஈட்டிய அளவான செல்வம் அழிவற்றது. அழிந்தாலும் உயிர்த்தெழுந்து மீண்டும்
உங்களைத் தேடி வருவது.
வறுமையை எதிர்கொண்டு
செம்மையாக வாழ முடியாத சிறப்பு அழிவுள்ள சிறப்பே. வறுமை குற்றங்களின் விளைநிலம். குற்றங்களின்
விளைநிலத்திலும் குற்றமற்று வாழும் அச்சிறப்புக்காக வறுமையிலும் செம்மை என்பது சிறப்பினும்
சிறப்பு பெறுகிறது.
வறுமை வந்து
விடுமோ என்று பயந்தல்லவா இங்கு ஈட்டிய செல்வம் எல்லாம் மிகை பாதுகாப்போடு சம பகிர்மானம்
செய்ய முடியாமல் எல்லா வளங்களும் நிறைந்த ஒரு நாட்டில் வறுமையை விதைத்துக் கொண்டு
இருக்கிறது.
வறுமைக்குப்
பயந்து அறமற்று வாழாமல், வறுமையை விரட்ட அறமற்ற வழியில் செல்வத்தைச் சேர்க்காமல் வாழும்
வாழ்க்கையைப் போன்ற ஆக்கமான வாழ்க்கை எதுவுமில்லை. உயிர் கொண்டு உடலெடுத்து மனிதப்
பிறவிக்கு அதுவே ஆக்கம், ஊக்கம் எல்லாம்.
அறமற்ற வழியில்
வரும் சிறப்பையும், செல்வத்தையும் அண்ட விடாதீர்கள். மனிதர்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள்.
அறமற்ற வழியில்
வரும் சிறப்பையும் செல்வத்தையும் அண்ட விட்டீர்களானால் தற்காலிக சிறப்பையும், தற்காலிக
செல்வத்தையும் பெற்ற மனிதர்களாக நீங்கள் ஆக்கப்படுவீர்கள். அந்தத் தற்காலிகச் சிறப்பாலும்,
தற்காலிக செல்வத்தாலுமே விரைவில் அழிக்கப்படும் மனிதர்களாகவும் நீங்கள் ஆக்கப்படுவீர்கள்.
நாம் தேரப்
போவது தற்காலிக ஆக்கமா? நிரந்தர ஆக்கமா?
தற்காலிக
ஆக்கம் என்பது நாம் மட்டும் விரைவில் உயர்ந்து நம் சந்ததிக்கான அழிவை நாமே தேடி வைத்து
நாமும் வெகு கேவலமாக அழிவது.
நிரந்த ஆக்கம்
என்பது நாமும் மெல்ல உயர்ந்து வழி வழி வரும் நம் சந்ததிகளுக்கான நிரந்தர ஆக்கத்தை பூமியுள்ள
காலம் வரையிலும், காலமுள்ள காலம் வரையிலும் சேர்த்து வைப்பது.
நாம் தேரப்
போவது தற்காலிக ஆக்கமா? நிரந்தர ஆக்கமா? என்பது அறத்தைக் கைக்கொள்ளும் நம் முடிவில்
இருக்கிறது.
சிறப்பு ஈனும்
செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு(?)
*****
No comments:
Post a Comment