குறளதிகாரம் - 3.10 - விகடபாரதி
அன்பைச் செய்தால்
நீயும் அந்தணனே!
மனித உயிர்கள்
உசத்தி என்பதோ, பிற உயர்கள் தாழ்த்தி என்பதோ அறப்பார்வை அன்று.
மனித உயிர்
போலவே எல்லா உயிர்களும் சமம் என்பதே அறம்.
அப்படியானால்
மனித உயிர்கள் கூட ஒன்றுக்கொன்று தாழ்வானது அல்ல.
சாதியால்,
மதத்தால்,
இனத்தால்,
நாட்டால்,
மொழியால்
மனித உயிர்கள் உயர்வு தாழ்வு கிடையாது. அதுதான் செம்மையான அறம்.
இனத்தால்
வேறுபாடு காட்டிய ஹிட்லர் கடைபிடித்தது அறமே அன்று.
சாதியால்
வேறுபாடு காட்டிய வர்ணாசிரமம் அறத்தின் அருகில் கூட வர இயலாது.
நாடுகளால்
வேறுபாடு காட்டி நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க மறுக்கும் வல்லரசுகள் செய்வதும் அறம்
ஆகாது.
மதத்தால்
வேறுபாடு காட்டி சிறுபான்மையினர்களைத் துண்டாட நினைத்து அதிகார அமைப்புகள் மதத்துவத்தைக்
கையில் எடுத்தால் அதுவும் அறமாகாது.
ஒரு மொழியை
நீச பாஷை என்றும், ஒரு மொழியை மோட்ச பாஷை என்றும் நீச பாஷையினரின் வாழ்த்துக்கு எல்லாம்
எழுந்து நிற்க முடியாது என்று மழுப்புவதெல்லாம் அறமே கிடையாது.
அறம் என்பது
எல்லா மனித உயிர்களுக்கும் சமமானது. மனித உயிர்கள் மட்டுமன்றி மனித உயிர்கள் போலவே
மற்ற எல்லா உயிர்களுக்கும் சமமானது.
அப்படி எல்லா
உயிர்கள் பாலும் சமமான செம்மையான தன்மையை உள்ளத்தில் கொண்டு, அதையே செயலில் ஒழுகுபவர்களே
அந்தணர் என்போர் ஆவார்.
அவர் அமெரிக்காவிலும்
வாழலாம், கருப்பினம் - வெள்ளையினம் என்றெல்லாம் வேறுபாடு இல்லை என்பதை நிறுவிக் காட்டிய
லிங்கனைப் போல.
அவர் தென்னமெரிக்காவிலும்
வாழலாம் கருப்பின மக்களின் சமத்துவத்துக்காகப் போராடி அதைச் சாதித்த நெல்சன மண்டேலா
போல.
அவர் உலகையே
உறவென நினைத்த பெண்மணியாகவும் இருக்கலாம் அன்னை தெரசா போல.
அந்தணர் என்பதற்கு
ஆண் - பேதம் கிடையாது. அமெரிக்கா, இந்தியா என்ற வேறுபாடு கிடையாது.
எவ்வுயிர்க்கும்,
எந்நாட்டவர்க்கும்,
எம்மக்களுக்கும்
செம்மையான
தன்மையை பூண்டு ஒழுகுகின்ற அறவோர் யாராக இருப்பினும் அவரே அந்தணர்.
அந்தணர் என்போர்
அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் என்கிறார் வள்ளுவர்.
அந்தணர் என்பது மதப் பெயர் அன்று, சமத்துவம் செய்யும்
மனிதத்தின் பெயர்.
அந்தணர் என்பது
சாதிப் பெயர் அன்று, யாவரும் சமமென எண்ணும் சுதந்திரத்தின் பெயர்.
அந்தணர் என்பது
இனப் பெயர் அன்று, யாரும் யாருக்கும் அடிமையில்லை என்று அன்பு செய்யும் சகோதரத்துவத்தின்
பெயர்.
மனித குலத்தின்
மீது மாறாத அன்பு கொண்டு, மனித குல மீட்சிக்காக, சமத்துவத்தின் எழுச்சிக்காகப் போராடியப்
புரட்சியாளர்களும் அந்தணர்களே.
நீதி உயர்ந்த
மதி கல்வி - அன்பு நிறைய உடையோர் மேலோர் என்பாரே பாரதி. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்
பாவம் என்பாரே பாரதி. அந்தப் பாவத்தைச் செய்யாதவர் யாரோ அவரே அந்தணர். அன்பு நிறைய
உடைய மேலோர் யாரோ அவரே அந்தணர்.
அன்பைச் செய்தால்
யாரும் அந்தணரே. மாறாக வம்பைச் செய்து அந்தணர் என்ற வார்த்தையைப் போர்த்திக் கொள்வதால்
யாரும் அந்தணராகி விட முடியாது.
அந்தணர் என்பது
வெறும் வார்த்தை அன்று. அனைத்து உயிர்களிடமும் அன்பு பூண்டு வாழும் வாழ்க்கை.
*****
No comments:
Post a Comment