3 Aug 2024

எப்படி இருக்கிறது 2024 பட்ஜெட்?

எப்படி இருக்கிறது 2024 பட்ஜெட்?

நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் அதாவது பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயரையும் சொல்ல வேண்டியதில்லை என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்காக ஆந்திராவும் பீகாரும் இப்படியா பட்ஜெட்டில் அதிகப்படியாக இடம் பெறுவது என்ற கேள்வி நாடு முழுவதும் ஒலித்து ஒலித்து எதிரொலிக்கவும் செய்கிறது. அதே நேரத்தில் ஏழாவது முறையாக இந்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்து விட்டு அவர் குறிப்பிட்ட வாசகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழகத்தை ஆளும் கட்சி, வரி வாங்கத் தெரியும் போது, நிதி கொடுக்கத் தெரியாதா என்ற கேள்வியை வெளிப்படையாக எழுப்பி ஆர்ப்பாட்டங்களைச் செய்திருக்கிறது. மேலும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உட்பட ஏழு மாநிலங்கள் புறக்கணித்திருக்கின்றன. இம்மாநிலங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் கட்சியோடு கூட்டணியில் இல்லாதவை என்பது கவனிக்கத்தக்கது. இப்படி இதை குறுகிப் பார்க்கத் தேவையில்லை என்று நினைத்தால் மேலும் ஒரு கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அது என்னவென்றால்…

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு 25 இடங்களைத் தற்போதைய மத்தியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு அளித்திருந்தால் தமிழ்நாட்டின் பெயரும் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என்று ஒரு தமிழக அரசியல் தலைவரே வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு, அதுவும் மத்திய ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்த தலைவரே கூறும் போது நிதி அமைச்சரின் வாக்குமூலத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

ஆதாயம் தருபவர்களுக்கே ஆதாயம் என்றால், இது கூட வாக்காளர்களைப் பணநாயகத்தை நோக்கித் திருப்பும் முயற்சிதானே? ஓட்டுக்கு நோட்டு என்பது நேரடி பணநாயகம் என்றால், இது போன்ற பட்ஜெட் புறக்கணிப்புகள் மறைமுக பணநாயகம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

இந்த 2024 பட்ஜெட் பற்றி பேச வேண்டிய மேலும் சில விசயங்களும் இருக்கின்றன.

மொத்த பட்ஜெட் 47.66 லட்சம் கோடியை எட்டுகிறது.

இதில் வேளாண்மைக்கான ஒதுக்கீடு 1.52 லட்சம் கோடி.

கல்விக்கான ஒதுக்கீடு 1.48 லட்சம் கோடி.

ராணுவத்துக்கு 4.55 லட்சம் கோடி.

இதிலிருந்து நீங்கள் பல உண்மைகளைப் பகுத்துணரலாம். அவற்றில் முக்கியமான சில பகுப்புகளை நீங்களே பாருங்களேன்.

வேளாண்மை, கல்வி ஆகிய இரண்டுக்குமான ஒதுக்கீட்டைச் சேர்த்தாலும் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதை விட இன்னொரு பங்கு அதிகம்.

கடனுக்கான வட்டி செலுத்துவதற்கு மட்டும் பட்ஜெட்டில் 19 சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்தில் ஒரு பங்கு. கணக்கிட்டுப் பார்த்தால் ராணுவத்துக்கு ஒதுக்குவதை விட அது இன்னொரு பங்குக்கும் கூடுதல்.

நம் நாட்டில் வேளாண்மை சார்ந்த தொழில்களில் இருப்போர் கணிசம். நாட்டின் பாதி மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பைத் தருவது அதுதானே. அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைந்தபட்சம் பத்து சதவீதமாகவாவது இருக்க வேண்டாமா? மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

வேளாண்மையின் நிலையே கல்வியின் நிலைக்கும் என்பதால் நாட்டின் முக்கியமான இரு கண்களான வேளாண்மையும் கல்வியும் பார்வை மங்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எழுத்தான் செய்கிறது.

வருமான வரியை எடுத்துக் கொண்டால் பழைய முறையிலான வருமான வரியை பழைமைக்குள் தள்ளி விட்டார்கள். வெகு விரைவில் அது வரலாற்றில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. புதிய வருமான வரி முறையை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் ஊதியதாரர்கள்.

அண்மைக்காலமாக அரசின் வரி விதிப்பைப் பார்த்து வரி தீவிரவாதம் அதாவது டாக்ஸ் டெரரிசம் என்கிறார்கள். பலருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது. மாச சம்பளக்காரராக நீங்கள் வருமான வரி செலுத்துபவர் என்றால் உங்களின் ஒரு மாத ஊதியம் வருமான வரியாகச் செல்கிறது.

இது அத்தோடு நின்றாலும் பரவாயில்லை. மாத சம்பளக்காரரான நீங்கள் பெட்ரோல் அல்லது டீசல் போட்டு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் செல்பவராக இருந்தால் பெட்ரோல் அல்லது டீசலுக்கு நீங்கள் செலவிடும் பாதித் தொகை வரியாகத்தான் போகிறது.

சரியென்று இது இத்தோடு நின்றாலும் கூட பரவாயில்லை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்சம் 8 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 28 சதவீதம் வரை சரக்கு மற்றும் சேவை அதாவது ஜி.எஸ்.டி. வரி.

 அத்தோடுதான் நிற்குமா வரிகள்? குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி என்று நீங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை என்பதை ஒரு நாள் நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தலை சுற்றக் கூடும் என்பதால் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது. வாழ்க்கையே இது பொய்யடா! வரி செலுத்துவது மெய்யடா! என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது.

ஒரு நாட்டின் குடிமகன் ஒருவேளை வரி இல்லாமல் இருந்திருந்தால் தமது பொருளாதாரம் சரியாக இருந்திருக்குமோ என்று நினைக்கக் கூடாது இல்லையா?

எப்படி வரி வசூலிக்க வேண்டும் என்பதற்கு சங்கப்பாடல் ஒன்றிருக்கிறது. பிசிராந்தையார் எழுதியது. இதன் பொருளை நீங்களே அறிந்து கொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும். அதனால் பாடல் மட்டுமே இங்கு. பொருளை அறிய வேண்டியது உங்கள் பங்கு.

“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.”                                   (புறநானூறு, 184)

இது எல்லாவற்றிற்கும் மேலாக நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகரும் ஒரு பொருளாதார நிபுணர்தான். அவர் எழுதிய ‘தி குருக்டு டிம்பர் ஆப் நியூ இந்தியா – எஸ்ஸேஸ் ஆன் எ ரிபப்ளிக் இன் கிரைசிஸ்’ என்ற புத்தகத்தைப் படித்தாலும் அவரும் இதைத்தான் சொல்கிறார். பொதுமக்களின் எண்ணம்தான் அப்படி இருக்கிறது என்றால் பொருளாதார நிபுணரின் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது என்றால் இந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது?

*****

2 Aug 2024

ஆலகால விஷம் தோய்ந்து விட்ட உணவுக் கலாச்சாரம்!

எப்படி இருக்கிறது நமது உணவுக் கலாச்சாரம்?

நம் உணவுக் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்ற வினாவை எழுப்பிக் கொள்வதற்கு முன்பாக நமது உணவுக் கலாச்சாரம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

பசித்தால் புசிப்பதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

உணவே மருந்தாக இருந்ததுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வரு முன் காப்பதை அதாவது நோய்கள் வரு முன் காப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்ததுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வந்தாரை உபசரித்து விருந்தோம்புவதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

முந்தை நாள் சமைத்தது அமிர்தமாக இருந்தாலும் அதை உண்ணாமல் அன்றன்று சமைத்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

உணவை வீட்டில் சமைத்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

வெளியிடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு சென்றதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

இயற்கையாக விளைந்ததை இயற்கையோடு இயற்கையாகக் கலந்து உண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

நோயென்று வந்தால் பட்டினி கிடந்து அதைப் போக்கிக் கொண்டதுதான் நமது உணவுக் கலாச்சாரம்.

இப்போது எப்படி இருக்கிறது நமது உணவுக் கலாச்சாரம் என்பதை நீங்களே சொல்லி விடுவீர்கள்.

அவசர அவசரமாக அலைபேசியையும் தொலைக்காட்சியையும் பார்த்தபடி உண்ணுவதுதான நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

பசித்தாலும் சரி, பசிக்காவிட்டாலும் சரி, உணவை உள்ளே தள்ளுவதுதான் நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

மருந்தே உணவாக இருப்பதுதான் நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

வந்த பின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதும், அதற்கேற்ப நாவைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்டதையும் தின்று மேலும் மேலும் நோய்களை அதிகரித்துக் கொள்வதே நமது உணவுக் கலாச்சாரமாக இருக்கிறது.

வந்தாரை உபசரிக்கும் பழக்கமெல்லாம் மாறி, காசு கொடுத்து தண்ணீரை வாங்குவதால் தண்ணீர் பருகுகிறீர்களா என்பதைக் கேட்பதைக் கூட தவிர்க்கும் கலாச்சாரமாக இருக்கிறது நமது பட்டும் படாத, தொட்டும் தொடாத நாகரிக கலாச்சாரம்.

வெளியிடங்களுக்குச் சென்றால் துரித உணவை வாங்கித் தின்பது நவீன உணவுக் கலாச்சாரமாக உருவாகி இருக்கிறது.

ரசாயனத்தில் விளைந்ததை ரசாயனத்தோடு கலந்து உண்ணுவது காலத்திற்கேற்ற தவிர்க்க முடியாத உணவுக் கலாச்சாரமாக மாறி இருக்கிறது.

நீராகாரத்தையும், நீர்மோரையும், பழச்சாறுகளையும் பருகிய உணவுக் கலாச்சாரம் கார்பனேட் பானங்களைப் பருகும் வேதியியல் கலாச்சாரமாக மாறி இருக்கிறது.

ஒரு நாள் சமைத்ததை பல நாட்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தின்னும் உணவுக் கலாச்சாரம் குக்கிராமங்கள் வரை பரவலாகி இருக்கிறது.

நமது உண்ணும் உணவும்தான் எவ்வளவு மாறி விட்டது.

நாம் பருகும் பால் மாட்டிலிருந்துதான் வருகிறதா?

எண்ணெய் தாவரங்களிலிருந்துதான் எடுக்கப்படுகிறதா?

இயற்கை எரு போட்ட விளைபொருட்களைத்தான் உண்கிறோமா?

பருகும் நீர்தான் இயற்கையாக இருக்கிறதா? புட்டியில் அடைபட்ட நீரில் எத்தனை எத்தனை ரசாயனங்களோ? எவ்வளவு பூச்சிக்கொல்லிகளோ? யார் அறிவார்கள்?

சுருங்கச் சொன்னால், ஆரோக்கியமற்ற உணவைத்தான் உண்கிறோம். ஆரோக்கியமற்ற வாழ்வைத்தான் வாழ்கிறோம்.

ஆனால் புத்தர் சொல்கிறார்,

“ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அது பலவீனமும் துயரமும் கொண்டது. அது மரணத்தின் கண்ணாடி.”

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் புத்தர் சொன்னது? அது இன்றும் மிகச் சரியாகப் பொருந்துகிறதுதான் வேதனை.

ஆரோக்கியத்தை நோக்கி நாம் நகர வேண்டும். வேறு என்ன வழியிருக்கிறது சொல்லுங்கள். அந்த ஆரோக்கியத்தை நாம் உண்ணும் உணவிலிருந்து, பருகும் நீரிலிருந்து தொடங்க வேண்டும். அது முடியுமா? நாம் வெகுதூரம் ஆரோக்கியமற்ற திசையில் பயணித்து விட்டோம். இருப்பினும் முன் வைத்த காலை பின் வைத்து திரும்புவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? ஆரோக்கியமானதே நமது உணவுக் கலாச்சாரமாக இருக்க வேண்டும்.

*****

1 Aug 2024

நகரத்தில் இரண்டு அனுபவங்கள்!

நகரத்தில் இரண்டு அனுபவங்கள்!

நகரத்தில் இரண்டு அனுபவங்கள் என்பதை நரகத்தில் இரண்டு அனுபவங்கள் என்று எழுதினால் பரபரப்பைத் தரும். ஆனால் நகரம் வேறு. நரகம் வேறு. நரகத்தில் நீங்கள் சமாளித்துக் கொள்ளலாம். நகரத்தில் முடியாது. அதனால் நகரத்தில் இரண்டு அனுபவங்கள் என்ற தலைப்புதான் பொருத்தமாக இருக்கும்.

அனுபவம் 1 :

மவுலிவாக்கத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் அங்கிருந்தார். குடுமிப்பிடி சென்னையை விட்டு விட்டு ஏன் இப்படி மவுலிவாக்கத்தில் ஒதுங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் பல வித காரணங்களைச் சொன்னார். அக்காரணங்களில் எனக்கு முக்கியமாகப் பட்ட நான்கை மட்டும் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

1. மவுலிவாக்கம் தஞ்சை மக்கள் அதிகம் வாழும் பகுதி. அடடா தஞ்சை மக்களோடு வாழ்வது ஒரு பெருமிதம் போல.

2. நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அப்படியானால் சென்னையில் கிடைப்பதெல்லாம் நல்ல தண்ணீர் இல்லை போல.

3. மவுலிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிறது. இது நகரம் மாதிரியும் இருக்காது, கிராமம் மாதிரியும் இருக்காது. இரண்டுக்கும் இடைபட்ட நிலையில் இருக்கும். நம் மக்கள் இரண்டும் கெட்டான் பகுதியில்தான் வசிக்க விரும்புகிறார்கள் போல.

4. என்னவோ இங்குதான் எனக்கு வீடு கிடைத்தது. அப்படியே தங்கி விட்டேன். தங்க தங்க இந்தப் பகுதி பிடித்துப் போய் விட்டது. இனி சென்னைக்கு எந்தப் பகுதிக்குப் போனாலும் பிடிக்காது. முதல் பிடித்தம் முற்றும் பிடித்தம் போல.

அனுபவம் : 2

குந்தாணி மகள் சாமுண்டேஸ்வரி திருமணத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த என்னை எழுந்து பின் வரிசைக்குப் போக சொல்லி விட்டார்கள். இதற்காகவா திருவாரூர் மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி தொடர்வண்டியில் முன்பதிவு செய்து இரண்டு நாட்களுக்கு முன்பாகச் சென்றேன்?

யாரோ முக்கிய விருந்தினர் வருகிறாராம். ஆங்கிலத்தில் வி.ஐ.பி. என்பார்களே. அவர் வருகிறாராம். இவரை வி.வி.ஐ.பி. என்றும் சொல்லலாமாம். அவர் இப்போதுதான் வருகிறார். நான் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டேன், இரண்டு நாட்களுக்கு முன்பே திருமணத்திற்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டதால்.

இப்போது வருபவருக்கு மரியாதை. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த எனக்கு எழுந்து பின்னால் போய்யா என்ற கடுகடு வார்த்தை. நானும் வி.ஐ.பி.ஐப்  போல அந்த நேரத்துக்கு வந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இப்படியா கல்யாணத்திற்கு அந்த நேரத்திற்கு வருவது என்ற உபசரிப்பாவது கிடைத்திருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வந்ததால் இப்போது இரண்டு வரிசைக்குப் பின்னால் போய் ஏன்டா இந்தத் திருமணத்திற்கு வந்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாக்கு, வெற்றிலை, பத்திரிகை வைத்துச் சொல்வதையெல்லாம் இனி நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அழைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். சொல்வதைக் கேட்டுப் போனால் அவஸ்தைகளையும் அவமரியாதைகளையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதிலும் இந்த நகரத்து ஆசாமிகளுக்குக் கிராமத்து ஆசாமிகள் பற்றி என்ன கவலை?

நம் கிராமத்துத் திருமணங்கள் வேறு, நகரத்துத் திருமணங்கள் வேறு. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால், “பட்டிக்காடா பட்டணமா? ரெண்டும் கெட்டான் லட்சணமா?” என்று பாடிக் கொண்டே பேருந்து பிடித்துக் கிராமத்துக்கு வந்து சேர வேண்டியதுதான். எப்படி வசதி என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

*****

29 Jul 2024

தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

‘மரப்பசு’ தி. ஜானகிராமனின் எட்டாவது நாவல். 1970களில் கணையாழி இதழில் தொடராக வெளிவந்து 1975 இல் நூலாக வெளியான நாவல். பெண்ணின் இருப்பை பெண்ணின் பார்வையிலேயே பேசும் நாவல்.

ஆண் என்ற மைய இழையில் பெண்ணை முதன்மையாக்கும் தி.ஜா.வின் நாவல்களில் பெண் எனும் மைய இழையில் பெண்ணின் இருத்தலையும் அதற்கான ஆண்களின் எதிர்வினைகளையும் முதன்மையாக்கும் நாவல் இது.

தி.ஜா.வின் எழுத்துகளில் பெண்கள் மீதான பரிவும் பேரன்பும் நிரம்பித் ததும்பும். அந்தப் பரிவுக்கும் பேரன்புக்கும் ஓர் ஆண் மைய பார்வை இருக்கும். இந்த நாவல் ஒரு பெண் மையப் பார்வையோடு சகல உயிர்களுக்குமான பேரன்பாக அது விரிகிறது.

மனித மனதையும் உணர்வுகளையும் அலட்சியப்படுத்தும் யாரையும் அம்மணிக்குப் பிடிப்பதில்லை. அதை லட்சியப்படுத்தும் போது நேரிடும் சிடுக்குகள் அம்மணியைச் சிரமப்படுத்துவதில்லை, சிரிக்கவே வைக்கிறது.

அம்மணி எவ்வளவு பரிவானவள், நறுவிசானவள் என்பதற்கு அவள் கண்டு சாஸ்திரிகளின் உள்ளங்கால் அழுக்கைச் சுத்தம் செய்யும் காட்சி ஓர் உதாரணம். மனித மனதைத் துச்சமாக நினைக்கும் இடத்து அவள் எவ்வளவு உக்கிரமானவள் என்பதற்கு கண்டு சாஸ்திரி அவரது மகள் விதவையாகும் போது நடந்து கொள்ளும் நிகழ்வுகளால் அவர் மீதான அனைத்து நல்ல அபிமானங்களையும் அம்மணி விட்டு விடுவது உதாரணம்.

பள்ளிப் பருவத்தில் சக மாணவனைக் ‘காட்டான்’ எனப்படும் கோபாலய்யர் தண்டிக்கும் இடத்தில் அவனுக்காக அம்மணி பரிந்து உதவுகிறாள். அந்த உதவி அவளுக்கு அநாகரிக வாசகங்களாகக் காம்பௌண்ட் சுவர்களில் அவச்சித்திரத்தை உருவாக்கும் போது அதற்காக அவள் கலங்குவதில்லை. திடமான மனதோடு எதிர்கொள்கிறாள்.

பெரியம்மாவின் வீட்டில் சுவீகாரப் பெண்ணைப் போல வளர்கிறாள் அம்மணி. பெரியம்மாவும் அப்படியே சொல்லி விடுகிறாள். சொந்த மகளை விடவும் அம்மணியை ஒரு படி மேலே கருதி வளர்க்கிறாள். அவளைச் சகல சுதந்திரத்தோடும் அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே ஏற்றுக் கொண்டும் வளர்க்கிறார்கள் பெரியம்மாவும் பெரியப்பாவும்.

அம்மாணிக்கு ஆண்களைத் தழுவிக் கொள்வதிலோ, அரவணைத்துக் கொள்வதிலோ எந்த விதமான குடும்ப மற்றும் சமூகக் கட்டுபாடுகளும் இல்லை. பெரியம்மாவின் மகள் திருமணத்திற்காகக் கோபாலியைக் கச்சேரி வைக்க அழைக்கும் போது அவர் தொடுவதோ, தழுவுவதோ அவளுக்கு எந்த விதமான ஆட்சேபத்தையும் உருவாக்குவதில்லை.

கோபாலி வருகிறார், கச்சேரி வைக்கிறார். கோபாலி சென்னைப் பட்டணத்துக்கு அழைக்கும் போது படிக்கும் சாக்கில் அவரோடு அம்மணி வந்தும் விடுகிறார். நாவலில் கோபாலியைப் பற்றி அம்மணி சொல்லும் இடத்திலும் அவர், இவர் என்ற இடத்திலும் எந்த மரியாதையும் இல்லை. அவன், இவன் என்ற உயர்திணைக்கான தகுதி கூட இல்லை. அது, இது என்று அஃறிணைக்குரிய தன்மையிலேயே அவரைக் குறிப்பிடுகிறாள். பெண்ணின் அன்புக்காகவும் தழுவலுக்காகவும் பேச்சுக்காகவும் ஏங்கும் கன்றுக்குட்டி போல கோபாலி அம்மணிக்குத் தோன்றியிருக்க வேண்டும். அம்மணி தன்னை தாய்ப்பசு போல நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தன்னை நம்பி தன்னோடு வந்து விட்ட அம்மணிக்குக் கோபாலி முதலில் சங்கீதம் கற்றுக் கொடுத்துப் பார்க்கிறார். பிறகு ஆட்டம்தான் ஒத்து வரும் என்று அதற்கு ஏற்பாடு செய்கிறார்.

அம்மணியின் தனித்திருக்கும் வாழ்வு பல ஆண்களை அவளை நோக்கி ஈர்க்கிறது. யாரையும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அம்மணி பேசுகிறாள், தழுவிக் கொள்கிறாள்.

பெரியம்மாவிடம் விசயத்தைப் போட்டு உடைக்கும் இடத்திலும் தனது அந்தரங்கத்திற்கான நேர்மையுடன் நடந்து கொள்கிறாள். விசயம் தெரிந்து பெரியப்பா வந்து கோபாலியை அடிக்கும் இடத்தில் அதையும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் தன்னுடைய முடிவில் அவள் உறுதியாக இருந்து விடுகிறாள்.

தனக்கு ஆதாரமாக இருந்த அனைத்துக் குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொண்டு குடும்பமற்ற ஒரு குடும்ப வாழ்வில் கோபாலியோடு இணைந்திருக்கிறாள். அம்மணிக்கு அனுசரணையாகக் கோபாலி கொண்டு வந்து வைக்கும் பட்டாபியையும் அவள் தழுவிக் கொள்கிறாள்.

தன்னைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத் தளைகளிலும் அவள் தன்னைப் பிணைத்தக் கொள்வதாக இல்லை. அவளுடைய இந்த விசித்திர வாழ்க்கைக் குடும்ப வாழ்க்கையைப் பெரிதுபடுத்தாத வெளிநாட்டவர்களுக்குக் கூட ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றியும் கணவன் மனைவியாக இணைந்து வாழும் வாழ்க்கைக்கு எதிரான ஒரு கருத்து அம்மணிக்கு உண்டானாலும் வேலைக்காரர்களான பச்சையப்பன் – மரகதத்தின் குடும்ப வாழ்வை அவள் ஏற்றுக் கொள்ளவே செய்கிறாள்.

முடிவில் கோபாலியோடு வாழ்ந்த வாழ்க்கை கசக்கும் போது பட்டாபியை வரச் சொல்லி கடிதம் எழுதுகிறாள். தன்னுடைய முடி நரையைக் காணும் போது எதிர்காலத்தில் தன்னுடைய இருத்தல் குறித்த ஒரு கேள்வி அவளுக்கு எழுகிறது. அந்தக் கேள்வியை மீண்டும் இந்த உலகை அதே அன்பினால் தழுவிக் கொள்வதாலேயே எதிர்கொள்ள விரும்புகிறாள் என்பதாக நாவலை முடிக்கிறார் தி.ஜா.

ஓர் உயிருள்ள பசுவாக இருந்து கன்றுகளை ஈன்று ஆண் வர்க்கம் உறிஞ்சிக் குடிக்கும் அளவுக்குப் பாலைக் கொடுத்துக் கொண்டிருப்பதை விட ஒரு காட்சிப் பொருளான மரப்பசுவாக இருந்து ஆண்களைத் தழுவிக் கொள்வதை விரும்புகிறாள். உயிருள்ள பசுவுக்கு இறப்பு உண்டு, இறந்த பின்பு அடக்கம் உண்டு. மரப்பசுவுக்கு அப்படி ஏதுமில்லை. அது எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அலமாரியில் காட்சிப் பொருளாக இருந்து கொண்டே இருக்கலாம். பார்ப்பவர்கள் அதைப் பசுவாகப் பார்ப்பார்கள், அது பால் சொரிவதாக நினைத்துக் கொள்வார்கள். அது இறந்து போய் விடும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அம்மணியின் அன்பு அப்படிப்பட்டது என்றாலும் ஓர் உயிருள்ள பசு தனது கன்றிடம் செலுத்தும் பிரியத்திற்கு அது எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

மரப்பசு நாவலில் வரும் அம்மணி போன்று இப்படி வாழ்வதற்குக் குடும்ப அமைப்புகளும் சமூக அமைப்புகளும் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழலாம். ஒரு பெண் அப்படி ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டால் குடும்ப அமைப்போ, சமூக அமைப்போ என்ன செய்து விட முடியும் என்ற வகையில் அந்த இடத்திலும் பெண்ணின் பக்கமே நின்று பெண்ணிய பார்வையோடு நாவலைக் கொண்டு பேசுகிறார் தி.ஜா.

தி.ஜா. இந்த நாவலை எழுதிய காலத்தில் இந்த நாவல் காத்திரமான நவீனமான ஒரு பெருவெடிப்பான நாவலாகவே இருந்திருக்கக் கூடும். இப்போதும் அது அப்படியே இருப்பதுதான் தி.ஜா.வின் எழுத்துக்கு இருக்கும் வல்லமையும் வசீகரமும் எனலாம்.

*****

27 Jul 2024

இப்படியெல்லாம் யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

இப்படியெல்லாம் யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

வரத்தையே வாங்கினாலும் சாபமாகி விடுகிறது.

கிரெடிட் கார்டு மட்டும் எப்படி அப்படி மாறாமல் இருக்கும்?

****

கடப்பாரையை முழுங்கியவர் எப்படி இருப்பார்?

கடப்பாரையைப் போலவா?

மலைப்பாம்மைப் போலவா?

இப்படி யோசிப்பதை விட சோற்றை ஒழுங்காக மென்று முழுங்க கற்றுக் கொள்ள வேண்டும். வாந்தி எடுத்தால் மென்று முழுங்காத முழு பருக்கைகளாக வந்து விழுகின்றன.

****

முழுநேர அரசியல்வாதி இல்லை என்றால்,

பகுதிநேர அரசியல்வாதி இல்லை என்றால்,

யார்தான் நீ?

பொழுதுபோக்கு அரசியல்வாதி என்றால்,

ஓ நீ சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறாயா?!

சினிமாவிலிருந்து சி.எம். என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல நாட்டிலும் டோல்கேட் இல்லாத ஒரு முக்கியமான பாதையாக இருக்கிறது.

****

பாராட்ட வார்த்தையில்லை

திட்டுவதற்கு நிறைய இருக்கிறது!

வேலைவெட்டி இல்லை

வெட்டிவேலை நிறைய இருக்கிறது!

என்ன செய்வது?

நமக்கு வார்த்தையும் வாழ்க்கையும் அவ்வளவுதான்.

****

யாரைப் பார்த்தும் பயப்படாதீர்கள்.

அவர்கள் பேயா? பிசாசா? பூதமா? மனிதர்கள்.

மனிதர்களைப் பார்த்துதான் பயம் என்றால் பேயாகப் பிசாசாகப் பூதமாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் பயப்பட என்ன இருக்கிறது?

பயம் செத்து விடும் பயப்படாதீர்கள்.

*****

ஓர் அளவு வரை நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று பார்க்கிறார்கள்.

பிறகு என்ன சாதிக்கிறீர்கள் என்று பார்க்கிறார்கள்.

சாதித்ததைப் பார்த்த பின் கொண்டாடத் துவங்கி விடுகிறார்கள்.

மாறிக் கொண்டே இருப்பார்கள் மனிதர்கள்.

*****

என்னதான் தீவிரமான வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதை நகைச்சுவையாகச் சொன்னால்தான் ரசிக்கிறார்கள். அரசாங்கமும் தடை செய்யாமல் ஆதரிக்கும்.

நீங்கள் எதை வைத்து எப்படி வேண்டுமானாலும் நகைச்சுவை செய்து கொள்ளுங்கள். அதைத் தீவிரமாக்காதீர்கள் என்பதுதான் இதன் பொருள் மற்றும் போக்கு.

*****

பத்தாயிரத்துக்கு ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றால் நீங்கள் பொறியியல் (பி.இ) படிக்கச் செல்லுங்கள். அதற்கு மேல் சம்பளத்தில் ஒரு வேலை வேண்டுமானால் பொறியியல் படிக்காமல் வேலைக்குப் போய் விடுங்கள்.

இது அறிவுரையா?

எச்சரிக்கையா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

*****

அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றோர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து அதிகம் வேலைவாய்ப்ப உருவாகாத கால கட்டத்தில் வந்தவர்கள். இப்போது அவர்கள் வந்திருந்தால் அவர்கள் இஸ்ரோவில் இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அமெரிக்காவில் இருந்திருக்கலாம்.

இன்று அப்படியான பல கலாம்கள், மயில்சாமிகள், முத்துவேல்களை நாம் அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் அங்கு நாசாவிலோ, அல்லது கூகுள் சுந்தர் பிச்சையாகவோ, மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளாவாகவோ இருப்பார்கள்.

அடுத்த தமிழ் வம்சம் விஞ்ஞானிகளாக இஸ்ரோவில் இல்லை என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டோம் என்பதைக் கவலைப்படுவதற்கு முன் மறந்து விடாமல் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலோட்டமாக இப்படித் தோன்றினாலும் கண்ணுக்குத் தெரியாமல் நிறைய தமிழர்கள் ஏராளமாகச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் ஏன் இப்படி என்றால் இப்போது இஸ்ரோ கண்ணுக்குத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரியாமல் இஸ்ரோ போன்ற நிறைய சாதிக்கக் கூடிய துறைகள் இருக்கின்றன என்பதும் அவற்றில் பல தமிழர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை அல்லது ஊடகங்கள் நம் கண்களுக்குக் காட்டுவதில்லை.

*****

நீங்கள் என்னதான் கற்றுக் கொண்டே இருந்தாலும் இன்னும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றுக் கொள்ளுதல் என்பது நிரப்ப முடியாத பாத்திரம். அது ஏன் என்றால் நீங்கள் கற்க கற்க பாத்திரம் பெரிதாகிக் கொண்டிருக்கும். அதில் நிரம்பியிருக்கும் துளியாகிக் கொண்டே இருக்கும். இப்படித்தான் கற்றது கையளவாகிறது. கல்லாதது கடலளவாகிறது.

*****

ரிஸ்க், ரஸ்க் என்ற இந்த வார்த்தைகளை வைத்து என்னவாக விளையாடுகிறார்கள்.

ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் வாங்கிச் சாப்பிடுவது மாதிரி என்பவர்கள் குச்சி ரொட்டி வாங்கிச் சாப்பிடுங்கள். மற்றவர்கள் ரஸ்க் வாங்கியே சாப்பிடுங்கள்.

*****

உங்களைக் கீழே இழுத்தால் கீழே போய் விடாதீர்கள்.

இழுப்பவரை மேலே கொண்டு வாருங்கள்.

அது முடியாமல் போனாலும் கைவிட்டு விடாதீர்கள்.

கீழே இழுக்க நினைத்தவருக்கு எப்போதும் டாட்டா காட்டிக் கொண்டிருங்கள்.

*****

வெற்றிக்கான வழி என்ன தெரியுமா? இப்படி உங்களிடம் யாராவது கேட்டால், அட போடா / போடி தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்று சொல்லுங்கள்.

தோல்வி என்ற ஒன்று இல்லை என்றால் வெற்றி எங்கே இருக்கிறது?

ஒரு மாபெரும் வெற்றி என்பது ஒரு மாபெரும் தோல்வியால்தான் உருவாகிறது.

*****

26 Jul 2024

எதைச் செய்தாலும் காசு பார்ப்பது எப்படி?

எதைச் செய்தாலும் காசு பார்ப்பது எப்படி?

எப்படி எதை செய்தாலும் காசு வர மாட்டேன்கிதே ஐயா என்று என்னிடம் தினந்தோறும் சொல்பவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக நூறைக் கடந்து விட்டது. செஞ்சுரி அடித்து விட்டாயிற்று என்று சந்தோசப்பட முடியவில்லை. இதே கேள்வி கனவு வரை வந்து என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.

இந்த மனிதர்களுக்கு எல்லாம் காசு சம்பாதிக்க ஒரு வழியைச் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் சில நாட்களாகவே பாடாய்ப் படுத்துகிறது.

அதற்காக மீனைக் கொடுக்க முடியுமா? மீன் பிடிப்பதைக் கற்றுக் கொடுக்கத்தானே வேண்டும்.

அதை விட்டு விட்டு இந்த ஜென்மத்தில் ஆணாய்ப் பிறந்த நீங்கள் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாய்ப் பிறந்து மாதந்தோறும் ஆயிரம் உரிமைத்தொகைப் பெறுவீர்கள் என்று ஆசிர்வதிக்கத்தான் முடியுமா?

அல்லது ஒரு விவசாயியாகப் பிறந்து ஆண்டுக்கு பனிரெண்டாயிரம் தண்டம் அழுது வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் பெறுவீர்கள் என்று வரம் தரத்தான் முடியுமா?

உங்கள் தொகுதியில் திடீரென்று இடைத்தேர்தல் வந்து பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று அருள் வாக்குதான் சொல்ல முடியுமா?

இதில் உள்ள ஒரு முக்கியமான ஒன்று, காசுக்காக எதைச்  செய்தாலும் உங்களுக்குக் காசே வராது. எதைச் செய்வதாக இருந்தாலும் அது உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா என்று பாருங்கள். அந்தப் பிடித்தமானதை விரும்பிச் செய்யுங்கள். பிடித்தமானதை விரும்பித்தானே செய்வீர்கள். அது நான்கு பேருக்கு நல்லதாக அமைந்தால், அது அவர்களுக்குப் பிடித்திருந்தால் காசு உங்களைத் தேடி வரும்.

ஆகவே, நீங்கள் செய்வதை விரும்பிச் செய்கிறீர்களா என்று மட்டும் பாருங்கள். விரும்பிச் செய்யத் தொடங்கி விட்டால் நீங்கள் காசைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்பட மாட்டீர்கள். ஏனென்றால் அப்போது காசு உங்களைத் தேடி வரும். நீங்கள் காசைத் தேடிப் போக வேண்டியதில்லை.

அதற்காக இடைத்தேர்தல் வர வேண்டும் என்று விரும்பி பிரார்த்தனை செய்யப் போய் விடாதீர்கள். அது போன்ற பிரார்த்தனைகள் எல்லா நேரங்களிலும் பலிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

****

25 Jul 2024

ஈனப் பிறவியிலிருந்து தப்பிக்கும் முறைகள்

ஈனப் பிறவியிலிருந்து தப்பிக்கும் முறைகள்

எஸ்.கே. தன் மனைவிக்கும் மகனுக்கும் எழுத நினைத்த கடிதத்தின் ஒரு பகுதி :

மதிப்பிற்குரிய மனைவி அவர்களுக்கும் அதே அளவு மதிப்பிற்குரிய மகன் அவர்களுக்கும் மதிப்பிழந்து போய் விட்ட எஸ்.கே. எழுதுவது.

நான் இங்கே நலமில்லை. அங்கே நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புவதால் உங்கள் நலம் அறிய விருப்பமில்லை.

நிற்க! இந்தக் கடிதம் உங்களுக்கு ஒரு விசித்திரமான கடிதமாக இருக்கலாம். சமூக ஊடகக் காலத்தில் கடிதமே ஒரு விசித்திரம்தான். என்னைக் கேட்டால் கடிதம் எழுதுவது இயல்பானது என்று சொல்வேன். அது ஏன் எனக்கு அப்படி என்றால் கடிதம் எழுதிப் பழக்கப்பட்ட ஒரு தலைமுறையைச் சார்ந்ததால் இருக்கலாம்.

கடிதத்தைப் போல இதயத்தைத் திறந்து கொட்ட வேறு ஏதேனும் இருக்கிறதா? யார் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன கடிதத்தில் சொல்லலாம். படித்தாலென்ன, படிக்காமல் போனால் என்ன கடிதத்தில் எழுதி வைக்கலாம். மனப் பாரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை கடிதத்தின் கரங்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.

போகிறப் போக்கைப் பார்த்தால் கடிதத்தைப் பற்றிக் கடிதம் எழுதுவது போலாகி விடும் போலிருக்கிறது. நான் சொல்ல வேண்டிய சங்கதிக்கு வருகிறேன்.

நான் ஒரு இழிபிறப்பாளன். நான் ஒரு கேவலமான பிறவி. இதிலிருந்து எனக்கு கதிமோட்சம் கிடைக்குமா?

நீங்கள் சொல்வது போல ஜே.கே. ஐயா ஒரு தெய்வப்பிறவி. அவருடன் ஒப்பிட்டால் நான் ஒரு ஈனப் பிறவி. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

போன பிறவியில் நான் நிறைய பாவங்களைச் செய்து விட்டேன். அந்தப் பாவங்களை இப்போது அனுபவிக்கிறேன். நான் ஈனப்பிறவி ஆகியதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கடவுள் என்னை இப்படித் தண்டித்திருக்கக் கூடாது. தண்டனையின் வெம்மையை, அதன் கதிர்வீச்சை என்னால் தாங்க முடியவில்லை.

ஜே.கே.வை அன்பான கணவராக அவருடைய மனைவி பார்க்கிறாள். அவரைப் பொறுப்பான தந்தையாக அவரது மகள்கள் பார்க்கிறார்கள். என் நிலைமையைப் பாருங்கள். என் மனைவியாகிய நீ என்னை மதிப்பதில்லை. எப்படிச் செய்தாலும் அதில் நீ குறையைக் கண்டுபிடிக்கிறாய்.

என் மனைவியின் வாக்குகளை வேத வாக்குகளாக எடுத்துக் கொண்டு விட்ட என் மகனே நீயும் என்னை மதிப்பதில்லை. என்னைக் கேவலமாகப் பார்க்கிறாய். இப்படி ஒரு தந்தை உனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய பிறந்த நாள் ஒவ்வொராண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு இருக்கும். உன்னுடைய காதணி விழா கூட வெகு விமரிசையாக ஊரே, உலகமே அமர்க்களப்படும் அளவுக்கு நடந்திருக்கும். என்னால் அப்படி நிகழ்த்திக் காட்ட முடியவில்லை.

நான் உங்களுக்கு ஊரார் மெச்சும் எந்த பாராட்டையும் புகழையும் வாங்கித் தரவே இல்லை. நான் என் இயலாமைகளையும் ஆற்றாமைகளையும் உங்களுக்குத் தந்திருக்கிறேன். அதில் உங்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. என்ன செய்வது? அப்படி ஆகி விட்டது. இதற்காகக் காலத்தையோ தலையெழுத்தையோ குறை சொல்ல முடியாது. நிச்சயம் என்னைத்தான் குறை சொல்ல முடியும். அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன.

அன்பான மனைவியே! என் மகனே! மீண்டும் நான் சொல்கிறேன். நீங்கள் மகிழும் எதையும் நான் தரவே இல்லை. நிச்சயம் பாராட்டும் எதையும் நான் செய்திருக்கப் போவதும் இல்லை. நீங்கள் குறை கூறுவதற்கு ஏற்பவே எதையாவது செய்திருப்பேன். நான் உங்களிடம் பேச விரும்பாமைக்கு இதுவே காரணம்.

என் மகனே! உன் தகப்பன் உன்னிடம் பேசவில்லை என்று நினைக்காதே. நான் பேசினால் நீ குறை சொல்வதற்கு என்னிடம் நிறைய இருக்கிறது. உன்னை ஏன் நான் குறை சொல்ல வைக்க வேண்டும். நமக்கு இடையே இருக்கும் வார்த்தைகள் வற்றிப் போகட்டும்.

ஓர் அலைபேசியை வாங்கும் போது அதைவிட சிறந்த இன்னோர் அலைபேசியை வாங்கும் வாய்ப்புகள் இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் பார்! உன் தகப்பனை விட இன்னொரு சிறந்த தகப்பனைப் பார்க்கும் போது அதை வாங்கும் வாய்ப்பு உனக்கு இல்லாமல் செய்து விட்டது இந்த உலகம்.

நீ விரும்பினாலோ, உன் தாய் இன்னொருவரை விரும்பி, ஏன் ஜே.கே.யை விரும்பி திருமணம் செய்து கொண்டு உனக்கு இன்னொரு தகப்பன் கிடைப்பார் என்றால் அதாவது நீ விரும்பும் இன்னொரு தகப்பன் கிடைப்பார் என்றால் அதற்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை.

ஜே.கே.யின் குடும்பத்திலும் இது புதிதில்லை. அவருடைய தகப்பனார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர்தான். ஜே.கே.யும் அப்படியே உன் தாயைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்போது உனக்கு இன்னொரு தாயும் கிடைப்பார். ஜே.கே.யின் முதல் மனைவி உனக்கு இன்னொரு தாய்தானே.

உனக்கு என் வாழ்த்துகள்.

அத்துடன் என் மனைவிக்கு விடுதலை கொடுத்த மகிழ்ச்சி.

என்னை உடைத்துக் கொட்ட வாய்ப்பளித்த இந்தக் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு இந்தக் கடிதம் கிடைத்துப் படிக்க வாய்ப்பிருந்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த காலத்திற்கும் நன்றி தெரிவித்து இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நம்மைச் சந்திக்க முடியாத திசையில் அழைத்துச் சென்று விட்ட பிரிவுக்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நிம்மதியை அந்தப் பிரிவுதான் தந்திருக்கிறது. இந்த உலகில் விருப்பம் போல மன அமைதி கெடாமல் வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்கு நாம் மதிப்பளித்தால் இந்தப் பிரிவைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவரவர் திசையில் விருப்பம் போல பறக்க சிறகுகள் தந்திருக்கும் பிரிவுக்கு நாம் கைம்மாறு உடையவர்கள்.

மற்றவை நேரில் நாம் சந்தித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வோம். அதுதான் அனைவருக்கும் நல்லது.

மற்றபடி, மிக்க வெறுப்புடன்

எஸ்.கே.

*****