29 Jul 2024

தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் ஓர் எளிய அறிமுகம்

‘மரப்பசு’ தி. ஜானகிராமனின் எட்டாவது நாவல். 1970களில் கணையாழி இதழில் தொடராக வெளிவந்து 1975 இல் நூலாக வெளியான நாவல். பெண்ணின் இருப்பை பெண்ணின் பார்வையிலேயே பேசும் நாவல்.

ஆண் என்ற மைய இழையில் பெண்ணை முதன்மையாக்கும் தி.ஜா.வின் நாவல்களில் பெண் எனும் மைய இழையில் பெண்ணின் இருத்தலையும் அதற்கான ஆண்களின் எதிர்வினைகளையும் முதன்மையாக்கும் நாவல் இது.

தி.ஜா.வின் எழுத்துகளில் பெண்கள் மீதான பரிவும் பேரன்பும் நிரம்பித் ததும்பும். அந்தப் பரிவுக்கும் பேரன்புக்கும் ஓர் ஆண் மைய பார்வை இருக்கும். இந்த நாவல் ஒரு பெண் மையப் பார்வையோடு சகல உயிர்களுக்குமான பேரன்பாக அது விரிகிறது.

மனித மனதையும் உணர்வுகளையும் அலட்சியப்படுத்தும் யாரையும் அம்மணிக்குப் பிடிப்பதில்லை. அதை லட்சியப்படுத்தும் போது நேரிடும் சிடுக்குகள் அம்மணியைச் சிரமப்படுத்துவதில்லை, சிரிக்கவே வைக்கிறது.

அம்மணி எவ்வளவு பரிவானவள், நறுவிசானவள் என்பதற்கு அவள் கண்டு சாஸ்திரிகளின் உள்ளங்கால் அழுக்கைச் சுத்தம் செய்யும் காட்சி ஓர் உதாரணம். மனித மனதைத் துச்சமாக நினைக்கும் இடத்து அவள் எவ்வளவு உக்கிரமானவள் என்பதற்கு கண்டு சாஸ்திரி அவரது மகள் விதவையாகும் போது நடந்து கொள்ளும் நிகழ்வுகளால் அவர் மீதான அனைத்து நல்ல அபிமானங்களையும் அம்மணி விட்டு விடுவது உதாரணம்.

பள்ளிப் பருவத்தில் சக மாணவனைக் ‘காட்டான்’ எனப்படும் கோபாலய்யர் தண்டிக்கும் இடத்தில் அவனுக்காக அம்மணி பரிந்து உதவுகிறாள். அந்த உதவி அவளுக்கு அநாகரிக வாசகங்களாகக் காம்பௌண்ட் சுவர்களில் அவச்சித்திரத்தை உருவாக்கும் போது அதற்காக அவள் கலங்குவதில்லை. திடமான மனதோடு எதிர்கொள்கிறாள்.

பெரியம்மாவின் வீட்டில் சுவீகாரப் பெண்ணைப் போல வளர்கிறாள் அம்மணி. பெரியம்மாவும் அப்படியே சொல்லி விடுகிறாள். சொந்த மகளை விடவும் அம்மணியை ஒரு படி மேலே கருதி வளர்க்கிறாள். அவளைச் சகல சுதந்திரத்தோடும் அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே ஏற்றுக் கொண்டும் வளர்க்கிறார்கள் பெரியம்மாவும் பெரியப்பாவும்.

அம்மாணிக்கு ஆண்களைத் தழுவிக் கொள்வதிலோ, அரவணைத்துக் கொள்வதிலோ எந்த விதமான குடும்ப மற்றும் சமூகக் கட்டுபாடுகளும் இல்லை. பெரியம்மாவின் மகள் திருமணத்திற்காகக் கோபாலியைக் கச்சேரி வைக்க அழைக்கும் போது அவர் தொடுவதோ, தழுவுவதோ அவளுக்கு எந்த விதமான ஆட்சேபத்தையும் உருவாக்குவதில்லை.

கோபாலி வருகிறார், கச்சேரி வைக்கிறார். கோபாலி சென்னைப் பட்டணத்துக்கு அழைக்கும் போது படிக்கும் சாக்கில் அவரோடு அம்மணி வந்தும் விடுகிறார். நாவலில் கோபாலியைப் பற்றி அம்மணி சொல்லும் இடத்திலும் அவர், இவர் என்ற இடத்திலும் எந்த மரியாதையும் இல்லை. அவன், இவன் என்ற உயர்திணைக்கான தகுதி கூட இல்லை. அது, இது என்று அஃறிணைக்குரிய தன்மையிலேயே அவரைக் குறிப்பிடுகிறாள். பெண்ணின் அன்புக்காகவும் தழுவலுக்காகவும் பேச்சுக்காகவும் ஏங்கும் கன்றுக்குட்டி போல கோபாலி அம்மணிக்குத் தோன்றியிருக்க வேண்டும். அம்மணி தன்னை தாய்ப்பசு போல நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

தன்னை நம்பி தன்னோடு வந்து விட்ட அம்மணிக்குக் கோபாலி முதலில் சங்கீதம் கற்றுக் கொடுத்துப் பார்க்கிறார். பிறகு ஆட்டம்தான் ஒத்து வரும் என்று அதற்கு ஏற்பாடு செய்கிறார்.

அம்மணியின் தனித்திருக்கும் வாழ்வு பல ஆண்களை அவளை நோக்கி ஈர்க்கிறது. யாரையும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அம்மணி பேசுகிறாள், தழுவிக் கொள்கிறாள்.

பெரியம்மாவிடம் விசயத்தைப் போட்டு உடைக்கும் இடத்திலும் தனது அந்தரங்கத்திற்கான நேர்மையுடன் நடந்து கொள்கிறாள். விசயம் தெரிந்து பெரியப்பா வந்து கோபாலியை அடிக்கும் இடத்தில் அதையும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் தன்னுடைய முடிவில் அவள் உறுதியாக இருந்து விடுகிறாள்.

தனக்கு ஆதாரமாக இருந்த அனைத்துக் குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொண்டு குடும்பமற்ற ஒரு குடும்ப வாழ்வில் கோபாலியோடு இணைந்திருக்கிறாள். அம்மணிக்கு அனுசரணையாகக் கோபாலி கொண்டு வந்து வைக்கும் பட்டாபியையும் அவள் தழுவிக் கொள்கிறாள்.

தன்னைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத் தளைகளிலும் அவள் தன்னைப் பிணைத்தக் கொள்வதாக இல்லை. அவளுடைய இந்த விசித்திர வாழ்க்கைக் குடும்ப வாழ்க்கையைப் பெரிதுபடுத்தாத வெளிநாட்டவர்களுக்குக் கூட ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்றியும் கணவன் மனைவியாக இணைந்து வாழும் வாழ்க்கைக்கு எதிரான ஒரு கருத்து அம்மணிக்கு உண்டானாலும் வேலைக்காரர்களான பச்சையப்பன் – மரகதத்தின் குடும்ப வாழ்வை அவள் ஏற்றுக் கொள்ளவே செய்கிறாள்.

முடிவில் கோபாலியோடு வாழ்ந்த வாழ்க்கை கசக்கும் போது பட்டாபியை வரச் சொல்லி கடிதம் எழுதுகிறாள். தன்னுடைய முடி நரையைக் காணும் போது எதிர்காலத்தில் தன்னுடைய இருத்தல் குறித்த ஒரு கேள்வி அவளுக்கு எழுகிறது. அந்தக் கேள்வியை மீண்டும் இந்த உலகை அதே அன்பினால் தழுவிக் கொள்வதாலேயே எதிர்கொள்ள விரும்புகிறாள் என்பதாக நாவலை முடிக்கிறார் தி.ஜா.

ஓர் உயிருள்ள பசுவாக இருந்து கன்றுகளை ஈன்று ஆண் வர்க்கம் உறிஞ்சிக் குடிக்கும் அளவுக்குப் பாலைக் கொடுத்துக் கொண்டிருப்பதை விட ஒரு காட்சிப் பொருளான மரப்பசுவாக இருந்து ஆண்களைத் தழுவிக் கொள்வதை விரும்புகிறாள். உயிருள்ள பசுவுக்கு இறப்பு உண்டு, இறந்த பின்பு அடக்கம் உண்டு. மரப்பசுவுக்கு அப்படி ஏதுமில்லை. அது எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அலமாரியில் காட்சிப் பொருளாக இருந்து கொண்டே இருக்கலாம். பார்ப்பவர்கள் அதைப் பசுவாகப் பார்ப்பார்கள், அது பால் சொரிவதாக நினைத்துக் கொள்வார்கள். அது இறந்து போய் விடும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். அம்மணியின் அன்பு அப்படிப்பட்டது என்றாலும் ஓர் உயிருள்ள பசு தனது கன்றிடம் செலுத்தும் பிரியத்திற்கு அது எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

மரப்பசு நாவலில் வரும் அம்மணி போன்று இப்படி வாழ்வதற்குக் குடும்ப அமைப்புகளும் சமூக அமைப்புகளும் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழலாம். ஒரு பெண் அப்படி ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டால் குடும்ப அமைப்போ, சமூக அமைப்போ என்ன செய்து விட முடியும் என்ற வகையில் அந்த இடத்திலும் பெண்ணின் பக்கமே நின்று பெண்ணிய பார்வையோடு நாவலைக் கொண்டு பேசுகிறார் தி.ஜா.

தி.ஜா. இந்த நாவலை எழுதிய காலத்தில் இந்த நாவல் காத்திரமான நவீனமான ஒரு பெருவெடிப்பான நாவலாகவே இருந்திருக்கக் கூடும். இப்போதும் அது அப்படியே இருப்பதுதான் தி.ஜா.வின் எழுத்துக்கு இருக்கும் வல்லமையும் வசீகரமும் எனலாம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...