25 Jul 2024

ஈனப் பிறவியிலிருந்து தப்பிக்கும் முறைகள்

ஈனப் பிறவியிலிருந்து தப்பிக்கும் முறைகள்

எஸ்.கே. தன் மனைவிக்கும் மகனுக்கும் எழுத நினைத்த கடிதத்தின் ஒரு பகுதி :

மதிப்பிற்குரிய மனைவி அவர்களுக்கும் அதே அளவு மதிப்பிற்குரிய மகன் அவர்களுக்கும் மதிப்பிழந்து போய் விட்ட எஸ்.கே. எழுதுவது.

நான் இங்கே நலமில்லை. அங்கே நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புவதால் உங்கள் நலம் அறிய விருப்பமில்லை.

நிற்க! இந்தக் கடிதம் உங்களுக்கு ஒரு விசித்திரமான கடிதமாக இருக்கலாம். சமூக ஊடகக் காலத்தில் கடிதமே ஒரு விசித்திரம்தான். என்னைக் கேட்டால் கடிதம் எழுதுவது இயல்பானது என்று சொல்வேன். அது ஏன் எனக்கு அப்படி என்றால் கடிதம் எழுதிப் பழக்கப்பட்ட ஒரு தலைமுறையைச் சார்ந்ததால் இருக்கலாம்.

கடிதத்தைப் போல இதயத்தைத் திறந்து கொட்ட வேறு ஏதேனும் இருக்கிறதா? யார் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன கடிதத்தில் சொல்லலாம். படித்தாலென்ன, படிக்காமல் போனால் என்ன கடிதத்தில் எழுதி வைக்கலாம். மனப் பாரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை கடிதத்தின் கரங்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.

போகிறப் போக்கைப் பார்த்தால் கடிதத்தைப் பற்றிக் கடிதம் எழுதுவது போலாகி விடும் போலிருக்கிறது. நான் சொல்ல வேண்டிய சங்கதிக்கு வருகிறேன்.

நான் ஒரு இழிபிறப்பாளன். நான் ஒரு கேவலமான பிறவி. இதிலிருந்து எனக்கு கதிமோட்சம் கிடைக்குமா?

நீங்கள் சொல்வது போல ஜே.கே. ஐயா ஒரு தெய்வப்பிறவி. அவருடன் ஒப்பிட்டால் நான் ஒரு ஈனப் பிறவி. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

போன பிறவியில் நான் நிறைய பாவங்களைச் செய்து விட்டேன். அந்தப் பாவங்களை இப்போது அனுபவிக்கிறேன். நான் ஈனப்பிறவி ஆகியதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் கடவுள் என்னை இப்படித் தண்டித்திருக்கக் கூடாது. தண்டனையின் வெம்மையை, அதன் கதிர்வீச்சை என்னால் தாங்க முடியவில்லை.

ஜே.கே.வை அன்பான கணவராக அவருடைய மனைவி பார்க்கிறாள். அவரைப் பொறுப்பான தந்தையாக அவரது மகள்கள் பார்க்கிறார்கள். என் நிலைமையைப் பாருங்கள். என் மனைவியாகிய நீ என்னை மதிப்பதில்லை. எப்படிச் செய்தாலும் அதில் நீ குறையைக் கண்டுபிடிக்கிறாய்.

என் மனைவியின் வாக்குகளை வேத வாக்குகளாக எடுத்துக் கொண்டு விட்ட என் மகனே நீயும் என்னை மதிப்பதில்லை. என்னைக் கேவலமாகப் பார்க்கிறாய். இப்படி ஒரு தந்தை உனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய பிறந்த நாள் ஒவ்வொராண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு இருக்கும். உன்னுடைய காதணி விழா கூட வெகு விமரிசையாக ஊரே, உலகமே அமர்க்களப்படும் அளவுக்கு நடந்திருக்கும். என்னால் அப்படி நிகழ்த்திக் காட்ட முடியவில்லை.

நான் உங்களுக்கு ஊரார் மெச்சும் எந்த பாராட்டையும் புகழையும் வாங்கித் தரவே இல்லை. நான் என் இயலாமைகளையும் ஆற்றாமைகளையும் உங்களுக்குத் தந்திருக்கிறேன். அதில் உங்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. என்ன செய்வது? அப்படி ஆகி விட்டது. இதற்காகக் காலத்தையோ தலையெழுத்தையோ குறை சொல்ல முடியாது. நிச்சயம் என்னைத்தான் குறை சொல்ல முடியும். அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன.

அன்பான மனைவியே! என் மகனே! மீண்டும் நான் சொல்கிறேன். நீங்கள் மகிழும் எதையும் நான் தரவே இல்லை. நிச்சயம் பாராட்டும் எதையும் நான் செய்திருக்கப் போவதும் இல்லை. நீங்கள் குறை கூறுவதற்கு ஏற்பவே எதையாவது செய்திருப்பேன். நான் உங்களிடம் பேச விரும்பாமைக்கு இதுவே காரணம்.

என் மகனே! உன் தகப்பன் உன்னிடம் பேசவில்லை என்று நினைக்காதே. நான் பேசினால் நீ குறை சொல்வதற்கு என்னிடம் நிறைய இருக்கிறது. உன்னை ஏன் நான் குறை சொல்ல வைக்க வேண்டும். நமக்கு இடையே இருக்கும் வார்த்தைகள் வற்றிப் போகட்டும்.

ஓர் அலைபேசியை வாங்கும் போது அதைவிட சிறந்த இன்னோர் அலைபேசியை வாங்கும் வாய்ப்புகள் இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் பார்! உன் தகப்பனை விட இன்னொரு சிறந்த தகப்பனைப் பார்க்கும் போது அதை வாங்கும் வாய்ப்பு உனக்கு இல்லாமல் செய்து விட்டது இந்த உலகம்.

நீ விரும்பினாலோ, உன் தாய் இன்னொருவரை விரும்பி, ஏன் ஜே.கே.யை விரும்பி திருமணம் செய்து கொண்டு உனக்கு இன்னொரு தகப்பன் கிடைப்பார் என்றால் அதாவது நீ விரும்பும் இன்னொரு தகப்பன் கிடைப்பார் என்றால் அதற்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை.

ஜே.கே.யின் குடும்பத்திலும் இது புதிதில்லை. அவருடைய தகப்பனார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர்தான். ஜே.கே.யும் அப்படியே உன் தாயைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்போது உனக்கு இன்னொரு தாயும் கிடைப்பார். ஜே.கே.யின் முதல் மனைவி உனக்கு இன்னொரு தாய்தானே.

உனக்கு என் வாழ்த்துகள்.

அத்துடன் என் மனைவிக்கு விடுதலை கொடுத்த மகிழ்ச்சி.

என்னை உடைத்துக் கொட்ட வாய்ப்பளித்த இந்தக் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு இந்தக் கடிதம் கிடைத்துப் படிக்க வாய்ப்பிருந்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த காலத்திற்கும் நன்றி தெரிவித்து இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நம்மைச் சந்திக்க முடியாத திசையில் அழைத்துச் சென்று விட்ட பிரிவுக்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் நிம்மதியை அந்தப் பிரிவுதான் தந்திருக்கிறது. இந்த உலகில் விருப்பம் போல மன அமைதி கெடாமல் வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமைக்கு நாம் மதிப்பளித்தால் இந்தப் பிரிவைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவரவர் திசையில் விருப்பம் போல பறக்க சிறகுகள் தந்திருக்கும் பிரிவுக்கு நாம் கைம்மாறு உடையவர்கள்.

மற்றவை நேரில் நாம் சந்தித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வோம். அதுதான் அனைவருக்கும் நல்லது.

மற்றபடி, மிக்க வெறுப்புடன்

எஸ்.கே.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...