எதைச் செய்தாலும் காசு பார்ப்பது எப்படி?
எப்படி
எதை செய்தாலும் காசு வர மாட்டேன்கிதே ஐயா என்று என்னிடம் தினந்தோறும் சொல்பவர்களின்
எண்ணிக்கை சமீப நாட்களாக நூறைக் கடந்து விட்டது. செஞ்சுரி அடித்து விட்டாயிற்று என்று
சந்தோசப்பட முடியவில்லை. இதே கேள்வி கனவு வரை வந்து என்னைப் பாடாய்ப் படுத்துகிறது.
இந்த
மனிதர்களுக்கு எல்லாம் காசு சம்பாதிக்க ஒரு வழியைச் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம்
சில நாட்களாகவே பாடாய்ப் படுத்துகிறது.
அதற்காக
மீனைக் கொடுக்க முடியுமா? மீன் பிடிப்பதைக் கற்றுக் கொடுக்கத்தானே வேண்டும்.
அதை
விட்டு விட்டு இந்த ஜென்மத்தில் ஆணாய்ப் பிறந்த நீங்கள் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாய்ப்
பிறந்து மாதந்தோறும் ஆயிரம் உரிமைத்தொகைப் பெறுவீர்கள் என்று ஆசிர்வதிக்கத்தான் முடியுமா?
அல்லது
ஒரு விவசாயியாகப் பிறந்து ஆண்டுக்கு பனிரெண்டாயிரம் தண்டம் அழுது வருடத்துக்கு ஆறாயிரம்
ரூபாய் பெறுவீர்கள் என்று வரம் தரத்தான் முடியுமா?
உங்கள்
தொகுதியில் திடீரென்று இடைத்தேர்தல் வந்து பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று அருள்
வாக்குதான் சொல்ல முடியுமா?
இதில்
உள்ள ஒரு முக்கியமான ஒன்று, காசுக்காக எதைச்
செய்தாலும் உங்களுக்குக் காசே வராது. எதைச் செய்வதாக இருந்தாலும் அது உங்களுக்குப்
பிடித்தமானதாக இருக்கிறதா என்று பாருங்கள். அந்தப் பிடித்தமானதை விரும்பிச் செய்யுங்கள்.
பிடித்தமானதை விரும்பித்தானே செய்வீர்கள். அது நான்கு பேருக்கு நல்லதாக அமைந்தால்,
அது அவர்களுக்குப் பிடித்திருந்தால் காசு உங்களைத் தேடி வரும்.
ஆகவே,
நீங்கள் செய்வதை விரும்பிச் செய்கிறீர்களா என்று மட்டும் பாருங்கள். விரும்பிச் செய்யத்
தொடங்கி விட்டால் நீங்கள் காசைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்பட மாட்டீர்கள். ஏனென்றால்
அப்போது காசு உங்களைத் தேடி வரும். நீங்கள் காசைத் தேடிப் போக வேண்டியதில்லை.
அதற்காக
இடைத்தேர்தல் வர வேண்டும் என்று விரும்பி பிரார்த்தனை செய்யப் போய் விடாதீர்கள். அது
போன்ற பிரார்த்தனைகள் எல்லா நேரங்களிலும் பலிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது.
****
No comments:
Post a Comment