27 Sept 2017

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!

ஜன்னலைத் திறக்காதே! கொசு வந்து விடும்!
            நகர்ப்புறத்தில் இருக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது கோழிப் பெட்டிகளின் நினைவு வருகிறது.
            2400 க்குப் போடப்பட்ட ப்ளாட்டுகள் எனும் வீட்டு மனைகள் 1800 க்குக் குறைந்து, அப்புறம் 1000 க்குச் சுருங்கி, பின் அதுவும் 600 க்கும் 400 க்கும் காய்ந்துப் இன்னும் நன்றாகக் காய்ந்து போன வற்றல் போல மேலும் சுருங்கிக் கொண்டு இருக்கிறது.
            நகர்ப்புறத்தின் ஒரு வீட்டிற்குச் சென்ற போது ஜன்னலைத் திறக்க வேண்டும் போலிருந்தது. வெகு சாதாரணமாக "கொஞ்சம் ஜன்னலைத்திறந்து விடுங்களேன். காற்று வரட்டும்!" என்று சொல்லி விட்டேன்.
            "அதுக்கு எதுக்கு ஜன்னலைத் திறக்கணும். பேனைப் போட்டால் காற்று வரப் போகிறது. ஜன்னலைத் திறந்தால் கொசுதான் வரும்!" என்று பதற்றமாகி விட்டார்கள் வீட்டுக்காரர்கள்.
            "டவுன்ல களவு, கொள்ளை எல்லாம் அதிகமாயிடுச்சு! அதனாலயும் பெரும்பாலும் ஜன்னலைத் திறக்கிறதில்ல. அதுவும் இல்லாமல் நீங்க ஜன்னலைத் திறந்தா பக்கத்து வீட்டு சுவர் தெரியும். இல்லேன்னா காம்பெளண்ட்தான் தெரியும்!" என்று கூடுதல் விளக்கத்தையும் தந்தார்கள்.
            அவர்கள் ஜன்னல் இல்லாமல் கூட வீடு கட்டியிருக்கலாம். வருங்காலத்தில் அதைத்தான் முயன்று பார்க்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

*****

பசி கொண்ட நகரங்கள்

பசி கொண்ட நகரங்கள்
நகரங்கள்
கிராமங்களை விற்றுத் தின்றன
ஒவ்வொரு வயலாக
விற்கப்படும் போது
நகரம் ப்ளாட்டுகளாக விரிந்தது.
ஒரு கட்டத்தில்
அந்த நகரம் கிராமம் வரை
விரிந்த போது
நகரமான கிராமம்
இன்னொரு சுற்றுவட்ட கிராமத்தை
விழுங்கத் தொடங்கியது
நகரமாவதற்கான
அகோரப் பசியோடு.

*****

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0
            கணவனும் மனைவியும் பணிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. தங்களது வருமானத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் வருமானத்துக்கும் இடம் விற்கும் விலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.
            வங்கிக் கடன் வாங்கியாது ஒரு இடம் வாங்க வேண்டும் என்று முயல்கிறார்கள். கணவனின் வருமானத்தைப் பார்த்து அதிகபட்சமாக ஆறு லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது வங்கி. மனைவியின் வருமானத்திற்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது. கூட்டிப் பார்த்தால் பதினோரு லட்சம் அதிகபட்ச சடன் வாங்க இயலும்.
            பதினோரு லட்சக் கடனுக்கு அவர்கள் ஏழு ஆண்டுகள் தவணை கட்ட வேண்டும். ப்ளாட்டுகள் எனும் வீட்டுமனைகள் விற்கும் இடங்களில் அவர்கள் அலைந்து பார்க்கிறார்கள்.
            ஆயிரத்து எண்ணூறு சதுர அடியில் ஒரு இடம் வாங்குவதற்கு எட்டு முதல் பத்து லட்சம் வரை ஆகும் என்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இப்போது வாங்கிய தனிநபர்க் கடனுக்கு இடத்தை வாங்குவது. அடுத்து அந்தக் கடன் அடைந்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்த பின் மீண்டும் ஒரு கடன் பெற்று வீட்டைக் கட்டுவது என்று.
            இப்படியாக அவர்களின் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போல் வீட்டுக்கு இடம் வாங்கி வீடு கட்டுவதிலே கழிகிறது. அதற்கிடையில் குழந்தைகளைப் படிக்க வைத்தல், உறவுகளின் நல்லது கெட்டதுக்கான செலவுகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கானச் செலவுகள், இத்யாதிகள் என்று எவ்வளவோ இருக்கிறது.
            நல்ல பணியில் இருக்கும் இருவரும் பணியாற்றும் ஒரு குடும்பத்தினருக்கு இப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் ஒருவர் மட்டும் பணியாற்றி வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு வீடு கட்டும் திட்டம் இன்னும் எவ்வளவு சிரமமாக இருக்கும்?
            இது என்ன வகைப் பொருளாதாரம் என்றுதான் புரியவில்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் வீடு இல்லாமல் அல்லது வீட்டுக்காகக் காலம் முழுவதும் கனவுகளோடு கடனோடு வாழ்வதைத்தான் இந்தப் பொருளாதாரம் விரும்புகிறதா?
            அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டைக் கட்டுவதற்கு இவ்வளவு போராட வேண்டும் என்றால் பிற தேவைகள் குறித்து நினைத்தே பார்க்கக் கூடாது என்பதைத்தான் இந்தப் பொருளாதாரம் நிலைநாட்ட முனைகிறதா?

*****

26 Sept 2017

வீட்டுக்கனவில் காசு பண்ணும் மாபியாக்கள்

வீட்டுக்கனவில் காசு பண்ணும் மாபியாக்கள்
            முன்பெல்லாம் மாபியாக்கள் யார் என்பதைப் பிரித்து அடையாளம் காண முடிந்தது. இப்பொதெல்லாம் அந்த அடையாளங்கள் தொலைந்து விட்டன. அன்றாடம் பழகிக் கொண்டிருக்கும் நம் நண்பர் கூட நமக்கு மாபியாகவா இருக்கலாம்.
            நிதிச் சேவைகள் என்ற போர்வையில் இன்று யார் வேண்டுமானாலும் ஓர் ஏஜென்டாகி நமக்கு எதிரான மாபியாவாக உருவெடுக்கலாம்.
            நம்முடைய வீட்டுக் கனவுதான் நிதிச் சேவை மாபியாக்களின் இலக்கு. உங்களுக்கு ‍அதிகபட்சமாக வழங்கப்படும் தனிநபர்க் கடனை விட நீங்கள் வாங்க இருக்கும் வீட்டு மனை எனும் பிளாட்டின் விலை இருக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
            ஒரு மனிதரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் அளவை விட இந்த நாட்டில் ப்ளாட்டகளின் விலை எப்படி உயர்கிறது? அப்போதுதான் அவனை இன்னும் அதிக கடனாளியாக்கி உறிஞ்சிப் பிழியலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இப்படி ஒரு சூழ்நிலை இங்கு நீடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
            பிறகு வீடு கட்டக் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க மாதாந்திரத் தவணைத் திட்டம் என்று காலில் விழாத குறையாக வாங்க வைத்து பின் கழுத்தை இறுக்காகத் குறையாக ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து தூக்குவார்கள். குறுக்கே நின்றால் ஆளையும் தூக்குவார்கள்.
            கழுத்து மட்டும் கடன் வாங்கித்தான் ஒரு சராசரி மனிதன் இடம் வாங்கி, பின் தலைக்கு மேல் கடன் வாங்கித்தான் வீடு கட்ட முடியும் என்பது ஒரு நல்ல நாட்டிற்கு உரிய இலக்கணமாகாது.
            வீடு என்பது வாழ்வதற்கு! கடனால் வீழ்வதற்கு அல்லவே!
            நாமெல்லாம் வீடு கட்ட கடன் வாங்கி நிதிச்சேவை மாபியாக்களின் அடிமைகளாக சேவகம் செய்ய பணிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதாக மாறிக் கொண்டிருக்கும் நம் சமகால நடுத்தர வர்க்க வாழ்வு தூண்டில் புழுவுக்கு ஆசைப்படும் மீனை விட மோசமானது என்பதையன்றி வேறெப்படி இதைச் சொல்வது?

*****

நாயகன்

நாயகன்
மூன்று அடிகள் வாங்கி
சட்டை கிழிந்து அல்லது
உடம்பில் ரத்தம் வழிந்து
எதிர்த்தவர்களைத் தூக்கிப்
பந்தாடுவான் நாயகன்.
திரைப்படத்துக்குப் பதில்
செய்திச்சேனல் ஓடிக் கொண்டிருந்த
அன்றொரு நாளில்
அப்படியொரு காட்சி ஓடிக் கொண்டிருக்க
யாரிவர் என்ற கேள்விக்கு
சபை நாயகர் என்ற பதில் கிடைக்க
ஓடிக் கொண்டிருந்தன
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள்.

*****

முயற்சி - சில கருப்பொருள்கள்

முயற்சி - சில கருப்பொருள்கள்
            விருப்பமானதைச் செய்யும் போது சலிப்புத் தட்டாது. சோர்வு தோன்றாது. இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் எழாது.
            விரும்பாத ஒன்றைச் செய்யும் போது நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கும். விரும்பா ஒன்றை நீண்ட காலம் செய்ய முடியாது. அப்படி நீண்ட காலம் செய்ய முயன்றால் அதுவே மனச்சோர்வுக்குக் காரணமாகி, மனப்பிறழ்வுக்கும் வித்திட்டு விடும்.
            விரும்பாத ஒன்றை விரும்ப வைக்கிறேன் பார் என்ற பெயரில் அதீத முயற்சியில் ஈடுபட்டு தன்னைத் தானே வெறுக்கும் நிலைக்குச் சென்று விடக் கூடாது. விரும்பா ஒன்றை விருப்பம் இல்லை என்று விட்டு விடுவது கூட நல்லதே.
            எல்லா முயற்சிகளும் நமக்காகத்தான். அந்த முயற்சிகளுக்காக நாம் அல்ல. அதற்காக நம்மைப் பலியிடுவது என்ற நிலைக்குச் சென்று விடுவது அல்ல.
            எந்த முயற்சியாக இருந்தாலும் மனம் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த முயற்சி மனதுக்குப் பிடித்தம் இல்லை என்றுதான் பொருள். அது போன்ற முயற்சிகளைத் தொடராமல் இருப்பது நல்லது.

*****

செஞ்சிடுங்க...

செஞ்சிடுங்க...
அறுபத்தாறு கோடி ஊழல்
ஆயிரம் கோடி ஊழல்
வருமானத்து அதிகமான சொத்து
அதிகார துஷ்பிரயோகம்
இதெல்லாம் குற்றம் என்று
யாரும் பார்ப்பதில்லை
அதுவுமன்றி,
இவைகளைக் குற்றமென்று நிரூபிக்க
நான்கு நீதிமன்றங்கள் கடந்தாக வேண்டும்
இப்படி அவர்கள் செய்வதையெல்லாம்
வேண்டா வெறுப்பாகவேனும்
விரும்பச் செய்திடவே
படைக்கப்பட்டுள்ளோம் மக்களென.
மதுவாங்கட்டையில் அமர்ந்து
தன் வாரிசுகளுக்கெல்லாம்
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய
முத்துக்கண்ணு சொல்லும் போது
வேடிக்கையாக இருக்கும்,
"தேர்தல் நேரத்துல
ஆயிரம், ஐநூறுன்னு கொடுக்கணும்னா
அவன்தான் எங்கப் போவான்?
அடிக்கணும்! இன்னும் அடிக்கணும்!
அப்பத்தான்
ரெண்டாயிரம், ஐயாயிரம்னு
கைநிறைய கொடுப்பானுங்க"

*****