27 Sept 2017

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0

இருவரின் அதிகபட்ச தனிநபர்க் கடன் = 0
            கணவனும் மனைவியும் பணிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. தங்களது வருமானத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் வருமானத்துக்கும் இடம் விற்கும் விலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.
            வங்கிக் கடன் வாங்கியாது ஒரு இடம் வாங்க வேண்டும் என்று முயல்கிறார்கள். கணவனின் வருமானத்தைப் பார்த்து அதிகபட்சமாக ஆறு லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது வங்கி. மனைவியின் வருமானத்திற்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் தனிநபர்க் கடன் வழங்க இயலும் என்கிறது. கூட்டிப் பார்த்தால் பதினோரு லட்சம் அதிகபட்ச சடன் வாங்க இயலும்.
            பதினோரு லட்சக் கடனுக்கு அவர்கள் ஏழு ஆண்டுகள் தவணை கட்ட வேண்டும். ப்ளாட்டுகள் எனும் வீட்டுமனைகள் விற்கும் இடங்களில் அவர்கள் அலைந்து பார்க்கிறார்கள்.
            ஆயிரத்து எண்ணூறு சதுர அடியில் ஒரு இடம் வாங்குவதற்கு எட்டு முதல் பத்து லட்சம் வரை ஆகும் என்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இப்போது வாங்கிய தனிநபர்க் கடனுக்கு இடத்தை வாங்குவது. அடுத்து அந்தக் கடன் அடைந்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்த பின் மீண்டும் ஒரு கடன் பெற்று வீட்டைக் கட்டுவது என்று.
            இப்படியாக அவர்களின் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போல் வீட்டுக்கு இடம் வாங்கி வீடு கட்டுவதிலே கழிகிறது. அதற்கிடையில் குழந்தைகளைப் படிக்க வைத்தல், உறவுகளின் நல்லது கெட்டதுக்கான செலவுகள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கானச் செலவுகள், இத்யாதிகள் என்று எவ்வளவோ இருக்கிறது.
            நல்ல பணியில் இருக்கும் இருவரும் பணியாற்றும் ஒரு குடும்பத்தினருக்கு இப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் ஒருவர் மட்டும் பணியாற்றி வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு வீடு கட்டும் திட்டம் இன்னும் எவ்வளவு சிரமமாக இருக்கும்?
            இது என்ன வகைப் பொருளாதாரம் என்றுதான் புரியவில்லை. இந்த நாட்டில் உள்ள மக்கள் வீடு இல்லாமல் அல்லது வீட்டுக்காகக் காலம் முழுவதும் கனவுகளோடு கடனோடு வாழ்வதைத்தான் இந்தப் பொருளாதாரம் விரும்புகிறதா?
            அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டைக் கட்டுவதற்கு இவ்வளவு போராட வேண்டும் என்றால் பிற தேவைகள் குறித்து நினைத்தே பார்க்கக் கூடாது என்பதைத்தான் இந்தப் பொருளாதாரம் நிலைநாட்ட முனைகிறதா?

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...