1 Feb 2017

தி மொமெண்ட்


நோ ஸ்மோக்கிங்
என்கேஜ்டு முடிந்ததும், "இனிமே ஸ்மோக் பண்ண மாட்டேன்!" என்று பிராமிஸ் பண்ண பிரவீணிடம், "டூ வீலர்ல போறப்ப ஹெல்மேட் போடாம போகாதீங்க!" என்றாள் அபிதா.
*****
இது புது சீர்!
"வாங்கிக் கொடுக்குறதுன்னு முடிவாச்சு! அப்படியே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேன்!" என்றார் மகளின் திருமணச் சீராக டூவீலர் வாங்கிக் கொண்டு வந்த நாராயணன்.
*****
தி மொமெண்ட்
இன்று அறிமுகமான புது மாடல் செல்லைப் பார்த்ததும், "ஒரு நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ!" என்ற கவலைப்பட்டான், நேற்று செல் வாங்கிய செல்லபாண்டியன்.
*****

31 Jan 2017

கட்டை வேகட்டும்


கட்டை வேகட்டும்
இருந்த காசுக்கு
சிதை எரிக்க
பாதி விறகுகள்தான்
வாங்க முடிந்தது.
ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து
வெட்டியானிடம்
கேட்டுக் கொண்டேன்
"எரியும் வரை எரித்து விட்டு
நன்றாக எரியும் சிதையில்
தூக்கிப் போட்டு விடு
கட்டை வேகட்டும்!"
*****

ஆடைகள்
ஆடைகளையும்
நகைகளையும்
கேட்டால் சொல்லும்
அடுத்தவர்களுக்காக
நாம் செய்யும்
செலவுகளை!
கட்டிலிலும்
குளியலறையிலும்
ஆடைகளற்ற
நிர்வாண உடல் தரும்
இன்பம்
விலைகொடுத்து
வாங்க முடியாதது
என்பது தெரிந்தும்
பற்பல பணங்களைத்
தயார் செய்து கொண்டு
புறப்படுகிறோம்
புதுப்புது
ஆடைகளை வாங்க!
*****

ஏண்டா எதுவுமே போடல?


வீட்டுமனை
வயலை விற்று விட்டு, வயலில் போடப்பட்டிருந்த ப்ளாட்டை வாங்கினான்.
*****
ரெண்டு மாங்கா!
வந்ததுதான் வந்து விட்டோம் என்று தேவியைப் பார்க்க வந்த ராணி மருத்துவமனையில் கம்ப்ளீட் மெடிக்கல் செக்கப்பையும் முடித்துக் கொண்டாள்.
*****
ஏண்டா எதுவுமே போடல?
"ஏண்டா வாட்ஸ் அப்ல எதுவுமே போடலே?" என்ற வாட்ஸ் அப் கேள்விகளுக்கு, "பேங்க் கெளண்டர்ல நிற்கிறேன்" என்று பதில் போட்டான் சந்திரன்.
*****

மெரினா போராட்டம் - புதியப் பார்வைகள்


மெரினா போராட்டம் - புதியப் பார்வைகள்
            மெரினாவில் நடைபெற்ற போராட்டம் பல வகையில் சிறப்பான கூறுகளைக் கொண்டுள்ளது.
            ஆண்கள்,
            பெண்கள்,
            குழந்தைகள் என்று முத்தரப்பும் கலந்து கொண்ட முத்தான போராட்டம் இது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கூட கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. குழந்தைகள் எண்ணிக்கையோ மிக மிக சொற்பம். அதனாலேயே மெரினா போராட்டம் தனித்த கவனம் பெறுகிறது.
            தலைமை எனும் ஏகாதிபத்திய ஆளுமையை வெடிவைத்த தகர்த்திருக்கிறது இப்போராட்டம்.
            பொதுவாக போராட்டம் என்றால் அரசியல் என்பார்கள். இது அரசியல் இல்லாத முதல் போராட்டம். பண்பாடு இல்லாத அரசியலைச் சாடிய, பண்பாட்டோடு கூடிய போராட்டப் பண்பாட்டை இப்போராட்டம் மூலம் இளைய தலைமுறையினர் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
            பகல், இரவு என இடைவிடாது நீண்டப் போராட்டத்தில் கண்ணியத்தைக் காண முடிந்தது. ஆண்-பெண் என்ற அந்நியத்தைக் கூட காண முடியவில்லை.
            பிரெஞ்சுப் புரட்சி சுட்டிய சுதந்திரத்தை நோக்கிய, சமத்துவமான, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தியப் போராட்டம்.
            உணர்வு ரீதியான உண்மையான போராட்டம் உலகையே உலுக்கி எடுக்கும் என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி நிரூபித்தார்கள்.
*****

இடைஞ்சலா இருக்குமுல்ல


பிரிவின் பாரம்
என்னை மறந்து விடு
என்று
சென்று விட்டாய்!
பிரிவின் பாரமென விழும்
நிழல்களை
என்ன செய்வது
என்று தெரியாமல்
ஒற்றை நிழலோடு
நடந்து கொண்டிருக்கிறது
என் இதயம்!
*****

இடைஞ்சலா இருக்குமுல்ல
"ஏம்பா வானம்
தலைக்கு மேல்
இருக்கு?"
என்றாள் அம்முகுட்டி.
"தெரியலியே!" என்று
பல் இளித்தேன்.
"தலையில் தட்டினா
இடைஞ்சலா
இருக்குமுல்ல!"
சொல்லிவிட்டு ஓடினாள்
அம்முக்குட்டி!
*****

இரு நிலைகள்


சோதனை
            ஏரியா திருடனை அழைத்து தன் வீட்டு லாக்கரைச் சோதித்துப் பார்த்தார் ஏட்டய்யா!
*****
திருட்டு
"செல்லுல படம் பிடிச்சிடுறாங்களே!" என்று யோசித்த ஈஸ்வர், செல்லையும் சேர்த்து திருடுவதென முடிவெடுத்துக் கொண்டான்.
*****
இரு நிலைகள்
குடிபோதையில் இருந்தவன் நல்ல நிலையில் இருந்தான். அவன் ஓட்டிச் சென்ற கார்தான் விபத்துக்குள்ளாகிச் சிதிலமாகிக் கிடந்தது.
*****

பதில் எழுதா கடிதம்


பதில் எழுதா கடிதம்
அநேகமாய்
கடிதங்கள் இப்போது
வருவதில்லை என்பதால்
பதில் எழுதாமல் விட்டு விட்டேன்
காதலிப்பதாய்
வந்த
ஒரு கடிதத்துக்கு!
*****

நினைவுகள்
குஞ்சு பொரித்த
கோழியை நினைவூட்டுகிறது
உன்மத்தமான காதல்!
குட்டிப் போட்ட
பூனையை நினைவூட்டுகிறது
எப்போதாவது
நீ தரும் முத்தம்!
கன்று ஈன்ற மாட்டை
நினைவூட்டுகிறது
பிரியமான
உன் தொடுதல்கள்!
மனிதனைக் கண்டு
சுற்றிச் சுற்றி வரும்
டால்பினைப் போல்
சுற்றி வருகிறது
இந்த முரடனைக் கண்ட
உன் பேரன்பு கொண்ட
பெரும் நேசம்!
*****