மதுக் கொள்கைகளும் அறத்தின் தேடலும்
மனித
நாகரிகத்தின் வரலாற்றில், தனிமனித சுதந்திரத்திற்கும் சமூக நல்வாழ்விற்கும் இடையிலான
சமன்பாட்டைத் தீர்மானிப்பதில் அரசுகளின் கொள்கைகள் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டின் மதுக் கொள்கை என்பது வெறும் வருவாய் ஈட்டும் ஒரு துறை
சார்ந்த முடிவு மட்டுமல்ல; அது நம் சமூகத்தின் கலாச்சார, பொருளாதார மற்றும் தார்மீகத்
தத்தளிப்புகளின் நேரடி வெளிப்பாடு.
சுதந்திரத்திற்கு
முன்பே ராஜாஜியின் கரங்களால் சேலத்தில் விதைக்கப்பட்ட மதுவிலக்கு விதை, கால ஓட்டத்தில்
பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்து, இன்று அரசு மதுபானக் கடைகள் எனும் டாஸ்மாக் வழி
பெருமளவு வருவாய் ஈட்டும் இடமாக மாறியுள்ளது. இந்தக் கடந்த காலப் பாதையைத் திரும்பிப்
பார்க்கும்போது, நமது ஆட்சியாளர்களின் முடிவுகள் எத்தகைய தாக்கங்களைச் ஏற்படுத்தியுள்ளன
என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டின்
மது வரலாறு என்பது ஒரு தொடர்ச்சியான குழப்பமான சுழற்சியாகவே இருந்து வந்துள்ளது.
1937இல்
இராஜாஜியின் காலத்தில் சேலத்தில் எளிய முறையில் தொடங்கப்பட்ட மதுவிலக்கு, 1948 இல்
தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, காந்தியடிகளின் லட்சியத்திற்கு வடிவம் கொடுத்தது.
காமராஜர் மற்றும் பேரறிஞர் அண்ணா காலகட்டங்களில் மதுவிலக்கு உறுதியுடன் தொடரப்பட்டது.
பொருளாதாரச்
சூழல் மற்றும் நிர்வாகக் காரணங்களால் 1971இல் மதுவிலக்கு நீக்கப்பட்டு, பின்னர்
1974 இல் மீண்டும் சாராயம் மற்றும் அயல்நாட்டு மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
1983இல்
கள் மற்றும் சாராய விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு, டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது;
பின்னர் 1987இல் கள், சாராயத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
1991இல்
கள், சாராய விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2003இல் டாஸ்மாக் நிறுவனத்திற்கு
இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனைத் தனியுரிமை வழங்கப்பட்டது.
இந்த
வரலாற்றைப் பார்க்கும்போது, மதுவிலக்கு என்பது ஒரு நிலையான கொள்கையாக இல்லாமல், ஒவ்வொரு
ஆட்சியின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருப்பது
தெளிவாகிறது.
2003
– 2004ஆம் நிதியாண்டில் சுமார் 3,639 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருவாய், பத்தாண்டுகளில்
பன்மடங்கு அதிகரித்து, தற்போதைய ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாயைக் தாண்டிச் செல்வது
அரசின் பொருளாதாரத்தில் மது விற்பனை எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆனால்,
இந்த நிதி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனித உயிர்களின் விலையும் கொடுக்கப்பட்டுள்ளது
என்பதே கசப்பான உண்மை. மதுவிலக்கு முழுமையாக அமலில் இல்லாதது தமிழக மக்களை உடல், மனம்
மற்றும் கலாச்சார அளவில் பெரிதும் பாதித்து வருகிறது.
அந்தப்
பாதிப்பின் நேரடி வெளிப்பாடாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர் என
காலந்தோறும் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் நமது நிர்வாகக் கட்டமைப்பின் மீதான பெரிய
கேள்விக்குறிகளாகும்.
ஆரம்ப
காலங்களில் காவல்துறை கண்காணிப்புக் குறைபாடே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும்,
பிந்தைய காலகட்டங்களில் இதன் பின்னணியில் உள்ள சமூக மற்றும் அரசியல் வலைப்பின்னல்கள்
வெளிச்சத்திற்கு வந்தன.
அரசு
வழங்கும் நிவாரணத் தொகையோ அல்லது கருணைத் தொகையோ பறிபோன உயிர்களைத் திருப்பிக் கொடுத்துவிட
முடியாது. போதையின் கோரப்பிடியில் சிக்கிச் சிதையும் ஏழை எளிய குடும்பங்களின் கண்ணீரை
ஈடுசெய்ய எந்தப் பொருளாதார லாபத்தாலும் முடியாது.
இத்தகைய
சூழலில், தமிழகம் தனது மதுக் கொள்கையை வெறும் வருவாய் ஈட்டும் கருவியாக மட்டும் பார்க்காமல்,
ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக அணுக வேண்டியது காலத்தின்
கட்டாயம்.
மதுக்
கொள்கை என்பது சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இயங்கும் நிர்வாக முடிவு மட்டுமல்ல; அது
மனிதநேயம் சார்ந்த அறம் சார்ந்த ஒரு சிக்கலாகும். மதுவை முழுமையாகத் தடை செய்வதா, அரசுக்
கட்டுப்பாட்டில் வைப்பதா, அல்லது படிப்படியாகக் குறைத்து முற்றிலுமாக ஒழிப்பதா என்ற
தீர்மானம், வெறும் அரசியல் லாபங்களைத் தாண்டி, எதிர்காலத் தலைமுறையின் நலனை மையமாகக்
கொண்டதாகும்.
பொருளாதார
வருவாயை விட மனித உயிர்களும், குடும்பங்களின் நிம்மதியும் உயர்ந்தவை என்ற ஆழமான புரிதலுடன்
நமது கொள்கைகள் வகுக்கப்படும் போதே, இந்தத் தத்தளிப்பான பாதை ஒரு தெளிவான விடியலை நோக்கிப்
பயணிக்கத் தொடங்கும் என்பதே நிதர்சனம்.
“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.” (குறள், 925)
*****

No comments:
Post a Comment