20 Jun 2023

ஆயிரம் கண்ணுக்குப் பதில் ஆங்காங்கு காமிராக்கள்

வியப்பின் பெயர்சொல்

தமிழில் பெயர் வைப்பதெல்லாம்

ஆகா என்ன அற்புதத் தமிழ்ப் பெயர் என

ஆங்கில நர்சரிப் பள்ளியில்

பெயரைப் பார்த்து வியப்பதற்காக

*****

ஆயிரம் கண்ணுக்குப் பதில் ஆங்காங்கு காமிராக்கள்

சமீப காலமாக அங்கு வந்து

குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது

பின் மறைவில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும்

அரசல் புரசலாகச் செய்தி கசிகிறது

உண்டியல் பூட்டு உடைவது

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது

கோயிலைச் சுற்றி சிசிடிவி காமிரா

பொருத்த வேண்டுமென்ற

பலர் முன் வைக்கும் ஆலோசனையை

ஆயிரம் கண்ணுடையாளிடம்

ஒரு முறை கேட்டுக் கொள்ள வேண்டும்

*****

19 Jun 2023

பார்வையின் கண்கள்

பார்வையின் கண்கள்

ஆரம்பத்தில் பார்த்ததெல்லாம்

கண்களால்தான்

இப்போது கண்களால் பார்ப்பதாக

பொய்ய சொல்ல முடியாது

கண்களுக்கு முன்னே

ஏதோ ஒன்று பார்க்கிறது

அடையாளம் காண்கிறது

முத்திரை குத்துகிறது

பிரச்சாரம் செய்கிறது

அடடா அற்புத பார்வை என கை தட்டுகிறது

பார்வைக் கோளாறுக்கு

கண்ணாடிச் சட்டகமிட்ட பின்னும்

இந்தக் கண்களா அவ்வளவு உன்னிப்பாகப் பார்க்கிறது

என்ற சந்தேகம்

இன்னும் இருந்து கொண்டிருக்கிறது

*****

எஞ்சிக் கிடக்கும் நூலின் இசை

இசைக்கருவியின் தந்திகள் போல அதிர

நரம்புகள் கற்றுக் கொண்டன

தாளமிடும் லாவகங்கள்

தள்ளாடும் கால்களுக்கு வந்து விடுகின்றன

எழுதுகையில் நடுங்கும் விரல்கள்

பலவீனத்தின் துளைகளில்

புல்லாங்குழல் வாசிக்கின்றன

மரியாதைக்குப் பாத்தியப்பட்டவர்களின்

முன்னிலையில் நூலறுந்த பட்டத்தின்

எஞ்சிய நூல் போலக் கிடக்கிறேன்

ஒவ்வொருவருக்குள்ளும் பிரவகித்து வரும் இசையை

எவ்வளவு வாசித்தாலும் தீராது

நீங்களே சொல்லுங்கள்

இசை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்

மனிதர்கள் வழி பொங்கி வழியாது

எங்கே போய் விடும் இசை

*****

18 Jun 2023

O+ve தக்காளிச் சட்னி

O+ve தக்காளிச் சட்னி

ஜெயிலர் ரஜினியின் போஸ்டர்களில் ஒன்று

ரத்தம் சொட்ட சொட்ட

வெட்டுக்கத்தியுடன் அமர்ந்திருக்கிறார்

கசாப்புக்கடைகாரரிடம் காணாத ரத்தம்

என்னத்தைச் சொல்வது

ரத்தம் தக்காளிச் சட்னியாகி விட்டது

*

மாத்திரை ஏன் வட்டமாக இருக்கிறது என்கிறாள் மகள்

சதுரமாகவோ

முக்கோணமாகவோ

உருவாக்காமல் இருப்பது என்ன ஓர் ஆச்சரியம்

அதுவும் விஞ்ஞான வளர்ச்சி

இவ்வளவு உச்சாணிக் கொம்பில் இருக்கும் இந்தக் காலத்தில்

*

அதான் ஓடிடியிலே பாத்தாச்சே என்றால்

என்னமோ

ஐசியுவில் சேர்க்கப்பட்ட

உறவினரை உடனடியாகப் பார்க்க விரும்புவதைப் போல

தியேட்டர்ல பாக்கணும் போல இருக்குதுங்கறா

மனைவி

*****

17 Jun 2023

அப்படியே இருந்து கொள்ளலாம்

சுழற்றுதல்

எது பிரபலமாகிறது எனப் பார்

காப்பி அடிக்க வேண்டும்

காசு பார்க்க வேண்டும்

கல்லா கட்ட வேண்டும்

நிற்குமா சுழற்சி

அடுத்து எது பிரபலமாகிறது என

உன்னிப்பாகக் கவனி

சுழற்சியைச் சுழற்றிக் கொண்டிரு

*****

அப்படியே இருந்து கொள்ளலாம்

உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறேன்

உங்களைச் சுற்றியல்ல

உங்கள் பேச்சைத்தான் கேட்க வந்திருக்கிறேன்

உங்கள் அந்தஸ்து குறைவுகளையல்ல

என்ன சொல்வேன்

உள்ளக் குமுறல்கள்

கூடுதல் குறைவு எவ்வளவோ இருக்கலாம்

இருந்து விட்டுப் போகட்டும்

இயல்பாக இருப்பதற்கும் எதிர்கொள்வதற்கும்

எந்தத் தடையும் இல்லை

அப்படியே இருந்து கொள்ளலாம்

மனதைக் கூட்டிக் குறைத்து சிரமம் வேண்டாம்

*****

16 Jun 2023

நிறைவின் ஓவியம்

நிறைவின் ஓவியம்

புகையின் மிச்சம் சாம்பல்

மிச்சத்தை வைத்து

புகையின் வடிவத்தை

தீயின் நாக்குகளை

வரைந்து பார்க்கும் பிரயாசை வரும் போது

தூரிகை எடுத்து எரித்துப் பார்த்து

வடிவத்தைத் தீர்மானிக்க எத்தனிக்கிறேன்

வண்ணங்களை ஒவ்வொன்றாகக் கொளுத்தி விட்டு

விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க முயல்கிறேன்

எரிந்து விட்ட தூரிகையும்

சாம்பலாகி விட்ட வண்ணங்களும்

என்னென்ன கனவுகள் கண்டிருக்குமோ

நிறைவின் ஓவியம்

நிறங்களை உள்ளிழுத்துக் கொண்ட கருப்பாக இருக்கிறது

*****

பிரிய ரகசியங்கள்

கண்களில் குத்தி

காதுகளில் செருகி

மூக்கினை அறுத்து

நாக்கினைத் துண்டாக்கி

உடலைச் சுக்கு நூறாக்கி

எப்படிச் செய்யினும்

உன் ஆத்திரம் அடங்கிடுமோ

என் பிரிய நண்பா

அன்பின் குரூரம்

இவ்வளவு கொடூரமாக இருக்கும் என்று

கனவு காணவில்லை என

இறுதி ஊர்வலத்தில்

நீதான் நிறைய அழுததாகக் கண்டவர்கள்

கண்டபடி சொன்னார்கள்

அது ஏனென்று நான் மட்டும் அறிவேன்

என் பிரிய எதிரியாகிவிட்ட அந்த ரகசியத்தை

இந்த உலகம் அறியாமல் போகட்டும்

*****

15 Jun 2023

தொலைக்காட்சியோ அலைபேசியோ பார்க்கக் கூடாதா என்ன?

தொலைக்காட்சியோ அலைபேசியோ பார்க்கக் கூடாதா என்ன?

பலரும் சொல்வது போல தொலைக்காட்சி பார்ப்பதோ, அடிக்கடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதோ தவறு என்று நான் சொல்ல வரவில்லை. அவற்றை நாம்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

நம் கையில் இருக்கும் ஒன்றை நாம் பயன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். நம் கையில் இருப்பதை நாம்தான் பயன்படுத்துகிறோம் என்பது உண்மைதான். நம் கையில் இருப்பது நம்மைப் பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியும், கையில் இருக்கும் அலைபேசிகளும் நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஓய்வான நேரத்தில் தொலைக்காட்சி பார்த்தால் அதுவும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் என்ற அளவோடு பார்த்தால் அல்லது தேவை கருதி பார்த்தால் தொலைக்காட்சியை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அலைபேசிக்கும் அது அப்படியே பொருந்தும். தேவை கருதியோ அல்லது ஓய்வான நேரத்தில் பொழுதுபோக்காகப் பார்த்தாலோ நாம்தான் அலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மிக முக்கியமான வேலையைச் செய்ய வேண்டிய நெருக்கடியில் அந்த வேலையை ஒத்தி வைத்து விட்டு பொழுதுபோக்காகத் தொலைக்காட்சியையோ அலைபேசியையோ நோண்டிக் கொண்டிருந்தால் தொலைக்காட்சியும் அலைபேசியும் நம்மைப் பயன்படுத்துவதாகத்தான் அர்த்தம்.

உங்களை அறியாமல் நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதையோ அலைபேசியை எடுத்து நோண்டுவதையோ செய்து கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் கட்டுபாட்டில் இல்லை. நீங்கள் அக்கருவிகளின் கட்டுபாட்டில் சென்று விட்டீர்கள். நீங்கள் உங்களை உங்கள் கட்டுபாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. கருவிகளின் கட்டுபாட்டில் உங்களை விடுவது ஆபத்தானது. அது ஒருவகை அடிமைத்தனம். சுகபோகத்திற்கு உங்களை விற்றுக் கொள்ளும் அடிமைத்தனம். இது கருவிகளுக்கும் பொருந்தும், வஸ்துகளுக்கும் பொருந்தும்.

பயன்பாடு பொதுவாக நம் கட்டுபாட்டில் தொடங்கி அதன் கட்டுபாட்டில் நாம் போய் சிக்கிக் கொள்வதாகத்தான் மாறுகின்றன. கொஞ்சம் விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருந்ததுதான் இதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

எதற்கும் ஓர் அளவு இருக்கிறது, அளவுக்கான கணக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அந்த அளவோடும் கணக்கோடும் நிறுத்திக் கொள்ளும் கட்டுபாட்டையும் பக்குவத்தையும் ஒரு பழக்கமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவேத்தான் சொல்கிறேன், தொலைக்காட்சியையும் அலைபேசியையும் நாம்தான் பயன்படுத்துகிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று. அவை நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா என்பதை அடிக்கடி கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறேன்.

இந்தக் கூற்றில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். அது ஒரு பெரிய பிரச்சனையில்லை. ஆனால் இந்தக் கூற்றை நீங்கள் பரிசீலனை செய்து பாருங்கள். அது அப்படியில்லை என்றால் அப்படியே விட்டு விடலாம்.

*****

14 Jun 2023

பழைய செய்தித்தாளின் விலை பத்து மடங்கு ஏறி விட்டது!

இப்படிக்குச் சில கணங்கள்

அண்மையில் இரண்டாயிரத்திற்கும் இரண்டாயிரத்து பத்திற்கும் இடைபட்ட சில திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. பெரும்பாலான திரைப்படங்கள் நெடுந்தொடர்களைப் போல இருந்தன. இந்தத் திரைப்படங்களைப் பார்த்துதான் நெடுந்தொடர்களை எடுக்க ஆரம்பித்தார்களோ என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

*****

பொதுவாகக் கேள்விகளுக்கு எதிர்கேள்வி கேட்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. அண்மையில் அப்படி எதிர்கேள்விகள் சிலவற்றைக் கேட்டு விட்டேன். ஏன் கேட்டேன், எப்படிக் கேட்டேன் என்று புரியவில்லை. ஆனால் கேட்டு விட்டேன். அந்தக் கேள்விகளும் எதிர்கேள்விகளும் இவை.

1) எங்கேய்யா நேரம் இருக்கு?

ஏன் கடிகாரத்தில் இல்லையா?

2) ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போத மாட்டேன்கிறது ஐயா! என்ன செய்வேன் சொல்லுங்கள்?

அவ்வளவு செலவாலியா நீங்கள்?

*****

பழைய செய்தித்தாளின் விலை பத்து மடங்கு ஏறி விட்டது!

இப்போது செயலியில் (ஆப்) செய்திகளைப் படிக்கிறேன். முன்புசெய்தித்தாளில் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் செய்தித்தாள்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. நகர்ப்புறங்களில் கிடைப்பதைப் போல கிராமப்புறங்களில் செய்தித்தாள்கள் கிடைப்பதில்லை.

கிராமங்களில் செய்தித்தாள் வாசிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டது. தொலைக்காட்சியில் நெடுந்தொடர்கள் பார்த்து அசந்து போகின்ற சமயங்களில் செய்தி அலைவரிசைகளைப் பார்த்துக் கொள்கின்றனர். அந்தச் செய்திகளே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேறு ஒரு பிரச்சனையும் இருக்கிறது. கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் வீடுகளுக்காக ஒருவர் எவ்வளவுதான் அலைந்து அலைந்து செய்தித்தாளைப் போட முடியும்?

எல்லாரும் ஏதோ அவசரத்தில் இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறார்கள். நின்று நிதானமாகத்தான் அலைபேசியில் பொழுதைக் கழிக்கிறார்கள். உட்கார்ந்து நிதானமாகத்தான் தொலைக்காட்சியில் பொழுதைப் போக்குகிறார்கள். படிக்க வேண்டும் என்று சொன்னால் ஓர் அவசரம் வந்து விடுகிறது. அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். படிப்பை ஒரு சுமை போல நினைக்கிறார்கள் என்பதைத்தான் எங்கே நேரம் இருக்கிறது என்ற கேள்வியாய்க் கேட்கிறார்கள். அந்தச் சுமை பள்ளிக்கூட காலத்தோடு போகட்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ.

செய்தித்தாளில் செய்திகளைப் படிப்பது போல ஆகாது. படித்துச் செய்திகளை உள்வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறது. அந்தச் சுகத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் இப்போதும்செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் செயலியில் செய்திகளைப் படிப்பதும் அதனால்தான்.

செய்தித்தாள் படித்த போதும் பக்கம் பக்கமாக விலாவாரியாக வாசிப்பது கிடையாது. தலைப்புகளைப் பார்த்து விட்டுப் படிக்க வேண்டும் நினைக்கின்ற செய்திகளைப் படிப்பதோடு சரி. அது அரை மணி நேரத்தை இழுத்துக் கொள்ளும். ஒருவாறாக அன்றைய செய்திகள் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகி விடும். இருந்தாலும் அனைத்துச் செய்திகளையும் ஒரு வரி கூட விடாமல் படிக்கவில்லையே என்று குற்றவுணர்வு இருக்கும்.

செயலியில் வாசிப்பதும் அதே முறையில்தான் இருக்கிறது. தலைப்புகளைப் பார்த்துக் கொண்டே வந்து பிடித்தமான செய்திகளை வாசித்துக் கொள்கிறேன். செயலியில் அனைத்துச் செய்திகளையும் படிக்கவில்லையே என்ற குற்றவுணர்வெல்லாம் இல்லை. பரவாயில்லை நான் ஒருவனாவது செய்திகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறேனாக்கும் என்ற உணர்வே எஞ்சுகிறது.

செய்தித்தாள்களைப் படித்து முடித்து மடித்து வைத்து தேவைப்படும் நேரங்களில் திரும்ப எடுத்து வாசித்துக் கொள்வதுண்டு. செயலியில் ஒரு முறை வாசிப்பதோடு சரி. மறுமுறை வாசிப்பெல்லாம் அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

செய்தித்தாள்கள் மலை போல குவிந்ததும் பழைய செய்தித்தாள்களை எடைக்கு எடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பதும் அவர்களிடம் ஒரு கிலோ எடைக்கு இன்ன விலை என்று பேரம் பேசிப் போடுவதும் சுவாரசியமாக இருக்கும். இதற்கிடையில் அக்கம் பக்கத்து வீடுகளில் பலகாரம் சுடுவதற்கும், அலமாரியில் போடுவதற்கும் பழைய செய்தித்தாள்களைக் கேட்டு வருவார்கள்.

செயலியில் செய்திகளை வாசிக்கத் துவங்கிய பிறகு பழைய செய்தித்தாள்களை எடைக்கு கிலோ ஐம்பது ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நான் பழைய செய்தித்தாள்களை எடைக்கு போட்ட போதெல்லாம் நான்கு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் அவ்வளவு பேரம் பேச வேண்டும். கடைசியில் உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்பது போல எடைக்கு எடுப்பவர் நாலரை ரூபாயில் வந்து நிற்பார். இப்போது அதே பழைய செய்தித்தாளின் எடை கிலோ ஐம்பது ரூபாயாக உயர்ந்து விட்டது. கிட்டதட்ட பத்து மடங்கு. வேறு எந்த பொருளும் இந்த அளவுக்குப் பத்து மடங்கு விலை உயர்ந்திருக்கிறதா என்ன?

பழைய செய்தித்தாள்களை எடைக்குப் போட்டு விட்டு சில நேரங்களில் அருமையான செய்திகள் அடங்கிய பெட்டகத்தை எல்லாம் இப்படி எடைக்குப் போட்டு விட்டேனே என்ற குற்றவுணர்வும் ஏற்படுவதுண்டு. செயலியில் அந்தச் சங்கடம் இல்லை. அதுவே அழித்து ஒழித்துக் கொள்கிறது. புதிய செய்திகளை ஆக்கிக் கொள்கிறது.

*****