பார்வையின் கண்கள்
ஆரம்பத்தில் பார்த்ததெல்லாம்
கண்களால்தான்
இப்போது கண்களால் பார்ப்பதாக
பொய்ய சொல்ல முடியாது
கண்களுக்கு முன்னே
ஏதோ ஒன்று பார்க்கிறது
அடையாளம் காண்கிறது
முத்திரை குத்துகிறது
பிரச்சாரம் செய்கிறது
அடடா அற்புத பார்வை என கை
தட்டுகிறது
பார்வைக் கோளாறுக்கு
கண்ணாடிச் சட்டகமிட்ட பின்னும்
இந்தக் கண்களா அவ்வளவு உன்னிப்பாகப்
பார்க்கிறது
என்ற சந்தேகம்
இன்னும் இருந்து கொண்டிருக்கிறது
*****
எஞ்சிக் கிடக்கும் நூலின் இசை
இசைக்கருவியின் தந்திகள்
போல அதிர
நரம்புகள் கற்றுக் கொண்டன
தாளமிடும் லாவகங்கள்
தள்ளாடும் கால்களுக்கு வந்து
விடுகின்றன
எழுதுகையில் நடுங்கும் விரல்கள்
பலவீனத்தின் துளைகளில்
புல்லாங்குழல் வாசிக்கின்றன
மரியாதைக்குப் பாத்தியப்பட்டவர்களின்
முன்னிலையில் நூலறுந்த பட்டத்தின்
எஞ்சிய நூல் போலக் கிடக்கிறேன்
ஒவ்வொருவருக்குள்ளும் பிரவகித்து
வரும் இசையை
எவ்வளவு வாசித்தாலும் தீராது
நீங்களே சொல்லுங்கள்
இசை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்
மனிதர்கள் வழி பொங்கி வழியாது
எங்கே போய் விடும் இசை
*****
No comments:
Post a Comment