28 Apr 2017

எதுவும் பல காலம்


காலம் கடத்தல்
            சிறைச்சாலைக்குள் ஒரு நொடியைக் கடப்பது ஒரு யுகத்தைக் கடப்பது போலிருந்தது கடத்தல் மன்னன் மணிவாசகத்துக்கு.
*****
எதுவும் பல காலம்
            எந்த வேலையையும் நொடியில் செய்து முடிக்கும் பூதத்திடமிருந்து தப்பிக்க அதன் மேல் நீதிமன்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
*****
பின்வினை
            பள்ளிப் பருவத்தில் ஹோம் ஒர்க் செய்யாமல் ஏமாற்றிய ரகு, ஆபிஸிலிருந்து  வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் கம்ப்ளிட் ஆகாத பைல்களை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டான்.
*****

குத்தல்


உயர்வு
கல்லெறிந்தால்
அலை அலையாய்ப் பூ பூக்கலாம்
என்று காத்திருந்த குளம்
அடுத்தடுத்து விழுந்த
கற்களால்
உயர்ந்து கொண்டே போனது
அபார்ட்மெண்டாய்.
*****

குத்தல்
ரவிக்கைக் கிழிசலை
அண்ணனின்
பழையை சட்டையைப் போட்டு
மறைத்துப் போகும் தங்கைக்கு
எதிர்வீட்டுச் சின்னானின் சீண்டலும்
பெரிய வீட்டுப் பாண்டியின் பார்வையும்
குத்தும் உறுத்தலின்றி
சுமக்க வைக்கிறது
கருவை முற்கள் நிறைந்த
விறகுக் கட்டை.
*****

27 Apr 2017

பாவம் அவர்களை விட்டு விடுங்கள் மக்களே!


பாவம் அவர்களை விட்டு விடுங்கள் மக்களே!
            இந்த மக்களுக்கு ரொம்பதான் பேராசை. அரசியல்வாதிகள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள்.
            இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் ஒவ்வொன்றையும் காப்பாற்ற எவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
            கொள்ளை அடித்தப் பணத்தை ரெய்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
            ஆட்சி பறிபோகாமல் குதிரை பேரங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            எந்த நேரம் தன்னை இன்னொரு அரசியல்வாதி முந்தி விடுவானோ என்ற பதற்றத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            மேலிடங்களைத் திருப்தி செய்து கொண்டு பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            ஆட்டையைப் போட்டு எஸ்கேப்பாகி விடும் பினாமிகளிடமிருந்து சேர்த்த சொத்தைக் கவனமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            தங்கள் சொந்த பந்தங்கள், சாதி சனங்களுக்குப் பதவிகள், வேலைகள் வாங்கிக் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
            எவரேனும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதிலிருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
            பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? இவ்வளவையும் காப்பாற்றிக் கொண்டு அவர்கள் மக்களையும் எப்படிக் காப்பாற்றுவார்கள்? அரசியல்வாதிகள் பாவம் மக்களே! அவர்களை விட்டு விடுங்கள்! உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
*****

மன்னார்சாமியின் கடமைகள்


எல்லை
எல்லைகளைக் கடப்பதும், துறப்பதும்
எளிதென்ப
பறவைகட்கும்,
சிறகுள்ள மனிதர்கட்கும்.
*****

மன்னார்சாமியின் கடமைகள்
சூரியனை எழுப்பி விட்டு
டிராக்டரை எடுத்துக் கொண்டு
அதிகாலையில் உழச் சென்றால்
பதினொரு மணிக்குச் சாப்பிட வந்திடுவார்
பழையச் சோற்றோடு கருவாட்டுக் குழம்பை
வாசம் கொள்ள
சப்புக் கொட்டிச் சாப்பிடும் மன்னார்சாமி.
நாலிரண்டு வருடமாய்ப் பொய்த்துப் போன
குறுவைச் சாகுபடியால்
டிராக்டர் ஓட்டும் அனுபவத்தைக் கைக்கொண்டு
பக்கத்து டவுனுக்கு
தண்ணீர் லாரியில் சப்ளை முடித்து விட்டு
பதினொரு மணிக்கு
வரும் வழியில் இருக்கும்
டாஸ்மாக்கில் வயிறு முட்டக் குடித்து விட்டு
கருவாட்டுக் குழம்பு சரியில்லையென்று
அடிக்கிறான் கருவாட்டைப் போல
மெலிந்து சுருங்கிக் கிடக்கும்
தன் மனையாளை ஈவு இரக்கமின்றி.
*****

அந்தராத்மாக்கள்


அந்தராத்மாக்கள்
மாடு மேய்த்துக் கொண்டு
இருந்தவனை
மாடு மேய்க்கிறான் பார் என்று
இழிவுபடுத்தி
நகர வேலைக்கு
துரத்தி விட்டப் பின்
சில ஆண்டுகள் கழித்து
மாடுகள் அடிமாடுகளாய்ப்
போகிறது பார் என்று
ஊருக்குள் புரட்சிப் பண்ண
துடித்துக் கொண்டிருந்தனர்
அந்த
மேலான அந்தராத்மாக்கள்.
*****

வழக்கு
ஒரு ஏக்கர் நிலத்திற்காகவோ
அவர்களின் பிடிவாதத்திற்காகவோ
எதற்காகவோ
நடந்து கொண்டிருக்கிறது
வழக்கு.
*****

குற்றம் கடிதல்


ஏலம்
            உலகின் கடைசி சொட்டு நீர் பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
*****
குற்றம் கடிதல்
            "தூக்கத்துல புள்ளைங்கல எழுப்பாதே!" என அம்மாவைக் கடிந்து கொள்வார் நைட் வாட்ச்மேனான அப்பா.
*****
பழைமை
            பரஸ்பரம் விவாகரத்துப் பெற்ற கணேசும், திவ்யாவும் நல்ல நண்பர்களாக இருப்பது என முடிவு செய்து கொண்டனர்.
*****

ஒரு பாவமும் அறியாதவர்கள்


ஒரு பாவமும் அறியாதவர்கள்
குஞ்சு முகம் பார்க்க முடியாத
கோழியின் பாவங்களை
முட்டைகளாக
விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

இனிமேல் இலைதழைகளைத்
தின்ன முடியாத
அறுத்த ஆட்டின் சதையை
வேக வைத்து
ருசித்துக் கொண்டிருக்கிறோம்.

வெட்டிப் போட்டு
குழம்பில் நீந்த விட்டு
மீன்களை
மென்று தின்று கொண்டிருக்கிறோம்.

ஒரு பாவமும் அறியாத
எனக்கு ஏன்
இத்தனை கொடுமைகள் பிதாவே
என்று
பிரார்த்தனையின் ஊடே
புகார் பத்திரத்தையும்
வாசித்து விட்டு
நல்லவர்களுக்கு வரும் சோதனை இது என்று
பெருமூச்சு விட்டுக் கொண்டு
வெளியேறிக் கொண்டிருக்கிறோம்,
சீக்கிரம் வீடடைந்தால்
வீடடையா காடையின் கறியைப்
பதம் பார்த்து தின்னலாம் என்ற ஆசையோடு.
*****