4 Dec 2022

எல்லா மரமும் போதி மரம்

எல்லா மரமும் போதி மரம்

இந்த மரத்தைப் பாருங்கள்

இதைப் போன்ற துறவியில்லை

எல்லா இலைகளையும் துறந்து விட்டது

கொஞ்ச நாள் ஆனால்தான் தெரிகிறது

எல்லாம் வெளிவேஷம்

உதிர்த்த இலைகளை எல்லாம்

பொறுக்கி எடுத்துக் கொண்டு விட்டது

போலிச் சாமியார் மரத்தை வைத்து

நாம் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது

எதற்கும் கொஞ்ச நாள் தேவை

பொறுத்திருங்கள்

மரத்தடி சாமியார்

ஆசிரமம் ஆரம்பித்து அவரே சிக்கிக் கொள்வார்

வாழ்க மரங்கள்

வளர்க மரங்களின் பணிகள்

*****

3 Dec 2022

முகம் பார்த்தல்

முகம் பார்த்தல்

முகம் பார்க்க விரும்புறவங்க பாத்துக்குங்க

என்கிறான் வெட்டியான்

பார்த்தென்ன போகிறது போ

இப்போதும் அதே கடுகடு முகம்

எலும்பு கூடான பிறகு எடுத்து வை

பகபகவென்று சிரித்துக் கொண்டிருப்பார்

எல்லாரும் பார்க்கலாம்

பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின்

ஆய்வுக்கூடத்திலும் மாட்டி வைக்கலாம்

*****

அதிகாலையின் அற்புத அழைப்பு

அதிகாலையின் அற்புத அழைப்பு

ஹலோ ஹலோ ஹலோ

மூன்று ஹலோ சொன்னால்

நான் ஒரு ஹலோ சொல்வேன்

ஹலோவை விரயம் செய்யவும் கூடாது

எதிராளி சொல்லாமல் முந்திச் சொல்லவும் கூடாது

நீங்க யாரு பேசுறீங்க என்றால்

உங்க பிரண்ட் சின்னசாமி என்பேன்

சின்னசாமின்னு பிரெண்ட் இல்லை என்றால்

அப்படியா போனை வையுங்கள் என்பேன்

வெச்சிடாதீங்க நீங்க ரங்கநாதன் இல்லையா என்றால்

உங்களுக்காக வேண்டுமானல் ரங்கநாதனாக இருக்கிறேன் என்பேன்

விளையாடாதீங்க நீங்க ரங்கநாதன் இல்லையா என்றால்

ரங்கநாதனாக இருக்க எப்போதோ தயார் என்பேன்

காலையிலேயே யார்யா நீ சாவுகிராக்கி என்றால்

நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்

நான்தான் சின்னசாமியாக இருந்தாலும்

ரங்கநாதனாக இருக்கவும் தயார் என்கிறேனே

கடைசியில் வையடா போனை ராங் நம்பர் என்கிறார்

நானா போன் செய்தேன் அவருக்கு

நான் முதலில் வைப்பதற்கு

பரவாயில்லை சொல்லுங்கள்

நான் யாராக இருக்க வேண்டும் சொல்லுங்கள் உங்களுக்கு என்றதும்தான்

அவராக வைக்கிறார் போனை

*****

2 Dec 2022

அள்ளிக் கொள்ள ஆயிரம் வழித்துணைகள்

அள்ளிக் கொள்ள ஆயிரம் வழித்துணைகள்

எல்லாம் கொடுத்த பிறகு

என்னத்தை அள்ளிக் கொண்டு போகிறோம்

என்று எவ்வளவு தத்துவார்த்தமாகச் சொல்கிறார்

அப்படியா அள்ளிக் கொண்டதை

அள்ளி எடுத்து வை என்றால்

லக லகவென்று சிரிப்பென்றால் அப்படி ஒரு சிரிப்பு

கொடுப்பவன் மனதைத்  தளர விட்டு விடக் கூடாது பாருங்கள்

அதற்காக இப்படி ஒரு பேச்சு ஏற்பாடாம்

மற்றபடி என்ன இருக்கிறது

யார் எதை அள்ளிக் கொண்டு போகப் போகிறார்கள்

முடிந்த வரை ஏமாற்றிப் பறித்தாலும் பணக்காரர்தான்

கொள்ளையடித்தாலும் அது திறமைதான்

ஊரைச் சுரண்டினாலும் அது சாமர்த்தியம்தான்

அள்ள முடியாதவர்கள் ஆயிரம் சொல்வார்கள்

அள்ளும் கலை அவரவர் அறிந்து கொள்வது

அறிந்தவர்கள் கையில் பொன் அறியாதவர்கள் வாயில் மண்

அள்ளிக் கொண்டு போக முடியாது என்று தெரிந்தாலும்

அடித்துப் பிடுங்காமல் இருக்க முடியுமா

அவரவர் பிணமாகும் வரை

அங்கங்கு அள்ளிக் கொண்டிருக்க வேண்டியதுதான்

ஆற்று மணல் தாது மணல் குளத்து மண் சிவப்பு மண் என்று

கிடைப்பதை அள்ளிக் கொண்டிருக்க வேண்டியதுதான்

அள்ள எதுவும் கிடைக்காத போது

தளர்ந்து விடக் கூடாது

நான்கு பேரைச் சேர்த்துக் கொண்டு

தலைவராகிக் கொள்ள வேண்டும்

*****

பேச்சுத் துணைவர் பிறந்து விட்டார்


பேச்சுத் துணைவர் பிறந்து விட்டார்

அலைபேசி இல்லாவிட்டால் யாரிடம் பேசுவது

அலைபேசி இருப்பதால் யாரிடமாவது

பேசிக் கொண்டே இருக்க முடிகிறது

அலைபேசி பேச்சில் அவ்வளவு சௌகரியங்கள்

முகத்தை எப்படி வைத்துக் கொண்டும் பேசலாம்

கழிவறையில் இருந்து கொண்டும் பேசலாம்

வரவேற்று உபசரிக்கும் கொடுமை கிடையாது

பேச்சு வாக்கில் சாப்பிட்டீங்களா டீ குடிச்சீங்களா

கேட்டுக் கொள்ளலாம்

கொண்டு போய் கொடுக்க வேண்டியதில்லை பாருங்கள்

மாமா வீட்டில் ஏசி வைத்தது

சித்தி வீட்டில் பிரிட்ஜ் வெடித்தது

கொழுந்தன் பெண் ஓடிப் போனது

அக்கம் பக்கத்தில் சீட்டு கட்டி ஏமாந்தது

எதிர் ப்ளாட்டில் கல்யாணம் ஆகாமல் முழுகாமல் இருப்பது

டிவோர்ஸ் ஆன பிரெண்டுக்குக் குழந்தை பிறந்திருப்பது

மூன்று மாதமான கல்யாணப் பெண்ணுக்கு

லேப்ராஸ்கோப்பியோ எண்டோஸ்கோப்பியோ எடுத்தது

அஞ்சிக்குப்பம் அத்தைக்கு ஆஞ்சியோ செய்தது

தொண்டிமுத்து தாத்தா கோயிலில் பிச்சை எடுப்பது

இப்படி இப்படித் தகவல்கள் தகவல்கள்

அலைபேசி சூடாகி வெந்துத் தணியும் வரை

போதும் என்று சொன்னாலும்

போதாக்குறையென வந்து கொண்டிருக்கும்

எல்லார்க்கும் பேசியாகி விட்டது என்றாலும்

லோன் வேண்டுமா என்று யாராவது பேசுவார்கள்

அவர்களிடம் வற்றல் குழம்பு வைப்பது தொடங்கி

வடகம் போடுவது பார்க்காமல் விட்ட சீரியல் வரை

பேசிக் கொள்ளலாம் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள்

அலைபேசி இல்லாவிட்டால் யார் அழைப்பார்கள் சொல்லுங்கள்

அலைபேசி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

நாமிருக்கும் இடத்திலிருந்து நாமும்

அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களும் பேசிக் கொள்ளலாம்

யாரும் பேசா விட்டாலும்

அலைபேசியைக் காதில் வைத்து

நாமாகப் பேசிக் கொள்ளலாம்

யாரோடு பேசிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள்

நினைத்துக் கொள்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும் நமக்கென்ன

*****

1 Dec 2022

அந்தக் காலத்து நல்லவர்களும் இந்தக் காலத்துக் கெட்டவர்களும்

அந்தக் காலத்து நல்லவர்களும் இந்தக் காலத்துக் கெட்டவர்களும்

அந்தக் காலத்துத் திரைப்பட இயக்குநர்கள் நல்லவர்களாகத்தான் படுகிறது எனக்கு. ஒரு படத்தை எடுத்தால் அத்தோடு விட்டு விட்டார்கள். பார்ட் டூ, பார்ட் த்ரி என்றெல்லாம் எடுத்துப் படுத்தவில்லை, பயமுறுத்தவில்லை.

எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரே படத்தில் அதைச் செய்து முடித்துக் கொண்டார்கள். இந்தக் காலத்துத் திரைப்பட இயக்குநர்கள் அதை அந்தக் காலத்துத் திரைப்பட இயக்குநர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

*****

நீங்கள் எப்படி இருக்கலாம் என்றால்…

ஏதோ ஒன்று நம்மை பிடித்துக் கொண்டு அதன் வசம் நம்மை வசமாகச் சிக்க வைத்துக் கொள்கிறது. நாம் அதன் பிடியில் இருப்பது மறந்து அதை ரசிப்பதாகச் சொல்கிறோம். அப்படி இலங்கை வானொலியோடு கட்டுண்டு கிடந்தவர்கள் ஒரு காலத்தில் நிறைய இருந்தார்கள்.

கிரிக்கெட் கமென்ட்ரிக்காக பிலிப்ஸ் ரேடியோவை காதோடு காதாக ஹெட்போனாக்கிக் கொண்டு அலைந்தவர்கள் இருந்தார்கள்.

இப்போது மட்டும் அதற்கென்ன கேடு வந்து விட்டது? மெகா சீரியலுக்காக டிவியைக் கட்டிக் கொண்டு அழுபவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் அப்படியில்லை என்றால் யூடியூப்பைக் கட்டிக் கொண்டு அழுபவர்களாக நீங்கள் இருக்கலாம். அல்லது ஓடிடியில் குத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பவர்களாக இருக்கலாம்.

இதில் எதுவும் இல்லையென்றால் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாவில் தேய்த்துத் தேய்த்து ஓட்டியதை வாட்ஸாப்பில் பார்த்து பார்வேர்ட் செய்பவர்களாக இருக்கலாம்.

*****

கடன் கொண்டார் நெஞ்சம் போலா கலங்குவான் கவிஞன்?!

கடன் கொண்டார் நெஞ்சம் போலா கலங்குவான் கவிஞன்?!

தன்னுடைய முதல் கவிதைப் புத்தகம் வெளிவந்த போது சுந்தரவதனுக்கு சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்து விட்டதாக ஓர் உணர்வு தோன்றி மறைந்தது. தனக்கான அடையாளத்தை இந்த உலகில் கூட அல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் உருவாக்கி விட்டதாக ஓர் எண்ணம் எழுந்து அடங்கியது.

தொடர்ந்து வந்த நாட்கள் அவனை எரிச்சலூட்ட போதுமானதாய் இருந்தன. நண்பர்கள் இனமாய் வாங்கிப் போன இருநூறு சொச்சம் புத்தகங்களைத் தவிர பத்து புத்தகங்களைக் கூட அவனால் விற்க முடியவில்லை.

புத்தத்தை வாங்கிப் பார்த்தவர்கள் எந்த வரியையும் முழுமையாக முடிப்பதற்கு முன்பாக ஏன் அடுத்த வரிக்குப் போயிருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். இது கவிதைப் புத்தகம் என்றான் சுந்தரவதன்.

வெண்பாவா, ஆசிரியப்பவா என்றார்கள்.

புதுக்கவிதை என்றான்.

யாப்பிலக்கணத்தில் வருகிறதா என்றார்கள்.

மரபை மீறிய கவிதைகள் என்றான்.

எதுக்கு மரபை மீறினீர்கள் என்றார்கள்.

அவனிடம் திட்டமான பதில் ஏதுமில்லை. இப்போதெல்லாம் இப்படித்தான எழுதுகிறார்கள் என்ற பதிலைச் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்போது புரட்சி வரும் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

பத்து நாட்களுக்குப் பின் கவிதை புத்தகம் விற்பதற்கு ஒரு முற்று புள்ளி வைத்தான். அந்த நாளில் மனதில் ஏதோ ஒரு பாரம் குறைந்தது போலிருந்து.

நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக மளிகைக் கடையில் ரோக்கா போடும் வேலைக்குப் போனால் புத்தகம் வெளியிடுவதற்காக வாங்கிய பதினைந்தாயிரம் கடனை அடைத்து விடலாம் என்று தோன்றியது.

கவிஞனாய் இருந்தவன் ரோக்கா போடும் எழுத்தனாய் உருமாறி வேலைக்குப் போனான். நான்கு மாத வேலையில் கடனை அடைத்தவன் ‘கடன் கொண்டார் நெஞ்சம் போல கலங்குவானா சுந்தரவதன்’ என்ற கடைசி ஒரு வரியை மட்டும் எழுதிக் கொண்டு அன்றிலிருந்து கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டு ரோக்கா போடும் எழுத்தனாய் மாறிக் கொண்டான்.

எப்போதாவது அடுப்பு பற்ற வைக்க முடியாமல் அவனது அம்மா, “சட்டுன்னு பத்துதா பாரு இந்த வெறகு அடுப்பு?” என்று சொன்னால் போதும் தன் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுக்கிறான்.

கவிதை எழுதியிருக்கும் தாள் அல்லவா! குப்பென்று பற்றிக் கொண்டு எரிகிறது. வெந்த தணிந்த சோற்றைத் தின்று முடித்து விட்டு வேலைக்குக் கிளம்பி விடுகிறான் சுந்தரவதன்.

*****