1 Dec 2022

கடன் கொண்டார் நெஞ்சம் போலா கலங்குவான் கவிஞன்?!

கடன் கொண்டார் நெஞ்சம் போலா கலங்குவான் கவிஞன்?!

தன்னுடைய முதல் கவிதைப் புத்தகம் வெளிவந்த போது சுந்தரவதனுக்கு சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்து விட்டதாக ஓர் உணர்வு தோன்றி மறைந்தது. தனக்கான அடையாளத்தை இந்த உலகில் கூட அல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் உருவாக்கி விட்டதாக ஓர் எண்ணம் எழுந்து அடங்கியது.

தொடர்ந்து வந்த நாட்கள் அவனை எரிச்சலூட்ட போதுமானதாய் இருந்தன. நண்பர்கள் இனமாய் வாங்கிப் போன இருநூறு சொச்சம் புத்தகங்களைத் தவிர பத்து புத்தகங்களைக் கூட அவனால் விற்க முடியவில்லை.

புத்தத்தை வாங்கிப் பார்த்தவர்கள் எந்த வரியையும் முழுமையாக முடிப்பதற்கு முன்பாக ஏன் அடுத்த வரிக்குப் போயிருக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். இது கவிதைப் புத்தகம் என்றான் சுந்தரவதன்.

வெண்பாவா, ஆசிரியப்பவா என்றார்கள்.

புதுக்கவிதை என்றான்.

யாப்பிலக்கணத்தில் வருகிறதா என்றார்கள்.

மரபை மீறிய கவிதைகள் என்றான்.

எதுக்கு மரபை மீறினீர்கள் என்றார்கள்.

அவனிடம் திட்டமான பதில் ஏதுமில்லை. இப்போதெல்லாம் இப்படித்தான எழுதுகிறார்கள் என்ற பதிலைச் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்போது புரட்சி வரும் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

பத்து நாட்களுக்குப் பின் கவிதை புத்தகம் விற்பதற்கு ஒரு முற்று புள்ளி வைத்தான். அந்த நாளில் மனதில் ஏதோ ஒரு பாரம் குறைந்தது போலிருந்து.

நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக மளிகைக் கடையில் ரோக்கா போடும் வேலைக்குப் போனால் புத்தகம் வெளியிடுவதற்காக வாங்கிய பதினைந்தாயிரம் கடனை அடைத்து விடலாம் என்று தோன்றியது.

கவிஞனாய் இருந்தவன் ரோக்கா போடும் எழுத்தனாய் உருமாறி வேலைக்குப் போனான். நான்கு மாத வேலையில் கடனை அடைத்தவன் ‘கடன் கொண்டார் நெஞ்சம் போல கலங்குவானா சுந்தரவதன்’ என்ற கடைசி ஒரு வரியை மட்டும் எழுதிக் கொண்டு அன்றிலிருந்து கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டு ரோக்கா போடும் எழுத்தனாய் மாறிக் கொண்டான்.

எப்போதாவது அடுப்பு பற்ற வைக்க முடியாமல் அவனது அம்மா, “சட்டுன்னு பத்துதா பாரு இந்த வெறகு அடுப்பு?” என்று சொன்னால் போதும் தன் கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுக்கிறான்.

கவிதை எழுதியிருக்கும் தாள் அல்லவா! குப்பென்று பற்றிக் கொண்டு எரிகிறது. வெந்த தணிந்த சோற்றைத் தின்று முடித்து விட்டு வேலைக்குக் கிளம்பி விடுகிறான் சுந்தரவதன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...