3 Aug 2020

பத்து லட்சத்துல ஒரு காரு!

செய்யு - 525

            லாலு மாமா வந்துட்டுப் போயி ரெண்டாயிரத்துப் பதினாலாவது வருஷத்தோட ஆடி மாசம் பொறந்துச்சு. ஆடி மாசத்துல ஒரு நாளு சரசு ஆத்தா பாக்குக்கோட்டையிலேந்து வடவாதி வந்து அங்கேருந்து ஒரு ஆட்டோவ எடுத்துக்கிட்டு திட்டைக்குத் திடீர்ன்னு வந்துச்சு. "வூட்டுக்கு மணப்பொண்ணா வர்றப் போற பேத்தியப் பாக்காம இருக்க முடியல. மொகம் கண்ணுக்குள்ளயே வந்து நிக்குதுடியம்மா!"ன்னு அது சொன்னதெ கேட்டதும் வூட்டுல இருந்த எல்லாத்துக்கும் சந்தோஷம். அன்னிக்கு பள்ளியோடம் இருந்ததால பள்ளியோடம் போயிருந்த விகடு மட்டும் அப்போ அந்தச் சந்தோஷத்தெ அனுபவிக்க முடியல. மித்த எல்லா சனமும் அனுபவிச்சுச்சு.
            "நீஞ்ஞ பேசிட்டு இருங்க. நாம்மப் போயி டீத்தண்ணியப் போட்டுட்டு வந்துடுறேம்!"ன்னு கெளம்புன ஆயியப் பிடிச்சு உக்கார வெச்சுச்சு சரசு ஆத்தா. "அஞ்ஞயிருந்து கெளம்பி இஞ்ஞ டீத்தண்ணிக் குடிக்கிறதுக்கா வந்திருக்கேம்? ஒஞ்ஞள எல்லாம் பாத்துப் பேசிட்டுப் போவத்தானே வந்திருக்கேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா. அதெ கேட்டதும் இன்னும் சந்தோஷம். இருந்தாலும் வெங்கு நைசா ஆயியப் பிடிச்சி அந்தாண்ட கெளப்பி, "நீயி போயி நல்ல வெதமா டீத்தண்ணியப் போட்டுட்டுக் கொண்டா! சின்னம்மா அப்பிடித்தாம் சொல்லிட்டு ஒண்ணும் சாப்புடாமலே கெளம்பிடும்!"ன்னு கெளப்பி வுட்டுச்சு. ஆயி மட்டும் டீத்தண்ணியப் போட அந்தாண்ட சமையல்கட்டப் பாக்க கெளம்புனா.
            அந்த சந்தோஷம் முடியறதுக்கு மின்னாடி சரசு ஆத்தா கேட்டுச்சு, "கார்ர வாங்குறதெப் பத்தி எதாச்சும் யோஜனெ பண்ணிருக்கியளா?"ன்னு. வெங்கு ஒண்ணும் புரியாம சுப்பு வாத்தியார்ரப் பாத்துச்சு.
            சுப்பு வாத்தியாரு அதுக்குப் பதிலெ சொல்ல ஆரம்பிச்சாரு. "மூர்த்தோல முடிஞ்சிப் பாத்துப்பேம்ன்னு வெச்சிருக்கேம். இஞ்ஞ நமக்கு விநாயகம் வாத்தியார்ன்னு ஒரு தோஸ்த்து. அவருக்குத்தாங் வாகனங்களப் பத்தின அறிவு அத்துப்படி.   எறந்துப் போயிட்டாரு. அவரு இருந்தார்ன்னா அவரெ வெச்சி இங்ஙனே வாங்கிப்புடலாம். அவரு இல்லாததால சென்னையில நம்மட யக்கா பையனுவோ இருக்கானுவோ. அவனுங்களுக்குக் கார்ல அலையுறதாங் வேல. கார்களப் பத்தின ஞானம் அவனுங்களுக்கு அத்துப்படி. அவனுங்களே வுட்டெ அப்பிடியே சென்னையிலயே கார்ர வாங்கிக் கொடுத்துப்புடலாம்ன்னு யோஜனெ. மாப்புளயும் சென்னையிலத்தாம் வேலையில இருக்காப்புல. அப்பிடியும் செஞ்சிப்புடலாம். பாக்குக்கோட்டையில வாங்கிக் கொடுக்கணும்னாலும் வாரச் சொன்னா ஒரு நாளு வந்து வாங்கிக் கொடுத்துப்புட்டு போயிடுவானுவோ யக்கா மவனுங்க. நமக்கு கார்ரு வாங்குறதுல அவ்ளோ வெவரம் பத்தாது. இருந்தாலும் இத்துச் சம்பந்தமா அவனுங்ககிட்டெ பேசிட்டும் கலந்துக்கிட்டுத்தாங் இருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நல்ல வேள! நாம்ம சரியான நேரத்துல வந்துட்டேம்! ல்லன்னா நீஞ்ஞ பாட்டுக்கு கார்ரு வாங்குறதுக்கு பணத்தெ கொடுத்து வெச்சிருந்தீங்கன்னா செருமமா போயிருக்கும் பாருங்க!"ன்னுச்சு சரசு ஆத்தா. சரசு ஆத்தா பேசுறது யாருக்கும் புரியாம இப்போ உக்காந்திருந்த சனங்க முழிக்க ஆரம்பிச்சதுங்க.
            "அதாம்டி வெங்கு! அவ்வேம் டாக்கடர்ரா இருக்காம்ல. கார்ரு அதுக்குத் தகுந்தாப்புல இருக்கணுங்றாம். நீஞ்ஞ பாட்டுக்கு சோப்பு டப்பா மாதிரிக்கிக் கார்ர வாங்கிக் கொடுத்துப்புட்டீயேள்ன்னா ‍அதெ எடுத்துக்கிட்டு நாளைக்கி மின்ன பின்ன ஒரு எடத்துக்குப் போயிட்டு வர்ற முடியாது பாருடி!"ன்னு சொல்லி கொஞ்சம் எடைவெளியை வுட்டுச்சு சரசு ஆத்தா.
            "யிப்போ என்னத்தெ சொல்ல வர்றேன்னு புரியலயே சின்னம்மா?"ன்னுச்சு வெங்கு.
            "அதாம்டி! காருக்கான காசியக் கொடுத்துப்புட்டா அவனுக்குப் பிடிச்சாப்புல வாங்கிப்புடுவாம் பாரு! பொண்ணும் மாப்புள்ளையும் போறப்ப பொருத்தமாவும் இருக்கணும்! டாக்கடர்ங்ற அந்தஸ்துக்கு ஏத்தாப்புலயும் இருக்கணும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            எதுக்கெடுத்தாலும் இப்படி பணமா கொடுத்துடுங்கன்னு கேக்குறாங்களேன்னு சுப்பு வாத்தியாருக்குத் தெகைப்பா போயிடுச்சு. அதுல வாங்கிக் கொடுக்கப் போற கார்ரப் பத்தி சோப்பு டப்பா கார்ருன்னு சொல்றதெ கேட்டு அவருக்கு ஆத்திரம்ன்னா ஆத்திரம். அதெ எப்பிடி வெளிக்காட்டறதுன்னு புரியாம தவிச்சாரு. அவரு மனசுக்குள்ள சென்னைப் பட்டணத்துல இருந்த சந்தானம் அத்தான வெச்சுக்கட்டு நாலு லட்சத்துலயோ அஞ்சு லட்சத்துலயோ ஒரு கார்ர வாங்கிக் கொடுத்துப்புடலாங்ற நெனைப்பு இருந்துச்சு. இப்போ சரசு ஆத்தா இப்பிடி வந்து கேக்குறதால என்னத்தெ பண்ணுறதுன்னு மறுபடியும் ஆழ்நிலை யோசனைக்குள்ள போயிட்டாரு.
            அப்பதாம் சரசு ஆத்தா சொன்னுச்சு, "ஒரு பத்து லட்சத்தெ மூர்த்தோல முடிஞ்சோன்னயோ, மூர்த்தோலைக்குப் பின்னாடியோ எப்போ தோதுபடுதோ அப்போ கொடுத்தா போதும்! ஒஞ்ஞளுக்கு எந்தச் சோலியும் யில்லாம அவனுக்குப் பிடிச்சாப்புல ஒரு கார்ர வாங்கிப் புடுவாம். கலியாணத்து அன்னிக்கு மண்டபத்துக்கு மின்னாடி கார்ர ஜோர்ரா கொண்டாந்து நிறுத்திப்புடலாம்!"ன்னு.
            காருக்குப் பத்து லட்சம்ன்னு சொன்ன ஒடனே சுப்பு வாத்தியாரு ஆடிப் போயிட்டாரு. பத்து லட்சத்துக்கு அப்பிடி என்னா காரு? பத்து லட்சத்துக்கு எல்லாம் நாட்டுல காரு இருக்கான்னு சுப்பு வாத்தியாருக்கு யோசனெ போனுச்சு. ஏன்னா அவரோட பொருளாதாரம் இருந்த நெலமெ அப்பிடி. இப்பயும் ஒரு பழைய டிவியெஸ்ஸ வெச்சு உருட்டிக்கிட்டு இருக்குற ஆளு அவரு. அவரு மொத்த கலியாணத்தையும் பத்து லட்சத்துக்குள்ள முடிச்சிப்புடலாம்ன்னு கணக்குப் போட்டுக்கிட்டு கெடந்தவரு. அவருகிட்டெ போயி கார்ர மட்டும் பத்து லச்சத்துக்கு வாங்கிக் கொடுன்னு சொன்னா எப்பிடி இருக்கும்? தெரியாத்தனமா இந்தக் கலியாணக் காரியத்துல எறங்கிட்டோமான்னு ஒரு நிமிஷம் அவருக்கு தம் மேலயே கோவமா வந்துச்சு. தப்பான முடிவுல எறங்கிட்டோம் போலருக்கேன்னு மனசுக்குள்ள நடுக்கம் வேற வந்துப் போச்சு.
            "ன்னடியம்மா! நாம்ம பாட்டுக்குச் சொல்லிட்டு இருக்கேம்! பதிலெ ஒண்ணுத்தையும் காணுமே! நாம்ம எதாச்சும் தப்பா சொல்றமா? அப்பிடி யிருந்தா சொல்லிப்புடுடியம்மா!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            வெங்குவுக்கே பத்து லட்சக் கார்ங்ற சேதியக் கேட்டு தல கிறுகிறுத்துப் போச்சு. சுப்பு வாத்தியாரு கட்டுன மாடி வூட்டையே நாலு லட்சத்துக்குள்ள படிப்படியா கட்டி முடிச்ச ஆளு. அதுக்கு ரண்டு லட்சத்துக்கு சொசைட்டியில லோன போட்டுக்கிட்டு அலமலந்து கெடந்த கதையெல்லாம் வெங்குவோட மனசுல ஞாபவத்துக்கு வந்துப் போச்சு. அது ஒரு பத்து வருஷத்துக்கு மின்னாடி நடந்த கதென்னாலும் இப்போ நடந்ததெ போல இருந்துச்சு வெங்குவுக்கு. பொண்ணு கலியாணத்துக்காக நக நெட்டுத்தாம் கூட கொறைச்ச இருக்கே தவுர காசி பணம் அந்த அளவுக்கு கெடையாது, கலியாணத்தெ நடத்தி வைக்குற அளவுக்குத்தாங் இருக்குங்றது அதோட நெனைப்புல வந்து வந்து மோதுனுச்சு.
            "கலியாண வேலைன்னு ஆரம்பிச்சிட்டா பெறவு பேசுறதுக்கு நேரமிருக்காது பாரு! அதுக்காகதாங் நேரம் இருக்குற இப்பவே வந்துப் பேசிக்கிடுறது!"ன்னுச்சு சரசு ஆத்தா யாரும் பேசாததப் பாத்து. இப்ப யாராச்சும் பேசித்தானே ஆவணும். வெங்கு பேசுனுச்சு, "காரு வாங்குறதுன்னா பத்து லட்சம் ஆவுமா சின்னம்மா?"ன்னு.
            "காரு இருக்குடிம்மா பல வெலையில. கொஞ்சம் கெளரவமான லெவல்ல வாங்கணும்ன்னா பத்து லட்சந்தாடிம்மா கொறைச்சலு. பாஞ்சு லட்சம், இருவது லட்சம்ன்னா நல்லா இருக்கும்ன்னு வெச்சுக்கோயேம். பயெ அந்த மாதிரிக்கித்தாங் வாங்கணும்ன்னு துடியா நின்னாம். நாம்மத்தாம் அவுகப் பாவம். அந்த அளவுக்குல்லாம் இழுத்து வுட்டுப்புட்டு செருமம் பண்ணக் கூடாதுன்னு பேசி வுட்டு, எந்தக் கார்ர வாங்குறதெ இருந்தாலும் பத்து லட்சத்துக்குள்ள வாங்கிப்புடுன்னேம். ஒஞ்ஞ குடும்ப நெலமெ நமக்குத் தெரியாதா? கூட மாட பழகிகிட்டு, ஒறவாடிகிட்டு பெறவு அதெ கூட பேசலன்னா எப்பிடி?"ன்னுச்சு சரசு ஆத்தா என்னவோ பெரிசா உபகாரத்த பண்ணி வுட்டுப்புட்டதா.
            இப்போ வெங்குவுக்கு தப்பா ஒரு எடத்துல போயி பொண்ணுக்கு மாப்புள்ளைய பிடிச்சிப்புட்டதா மொத மொதலா நெனைப்பு வந்துச்சு. அதெ வெளியில சொல்லிக்கவும் முடியல, வெளியில காட்டிக்கவும் முடியல. ஒரு காலத்துல ஒரு கலியாண தேவைன்னா வூட்டுல காசி இல்லாம அண்டாவையும் குண்டாவையும் அடவு வெச்சிக்கிட்டு, அதுவும் முடியாதப்போ அக்கம் பக்கத்துல நூறு எரநூத்துன்னு கடனெ ஒடனே வாங்கிட்டு பராரியா வந்த சரசு ஆத்தாவா இதுன்னு நெனைக்க வெங்குவுக்கு மனசுக்குள்ள ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. இருந்தாலும் சரசு ஆத்தாவப் பாத்து பேசுனுச்சு, "கொஞ்சம் வெல கம்மியா காரு எதாச்சும் வாங்க முடியாதா சின்னம்மா? ஏன்னா கலியாணச் சிலவுக்கான காசி வேற ஆறு லட்சத்தெ கொடுத்தாவணும். பெறவு நகெ நட்டு வாங்கியாவணும். பாத்திரம் பணடெமெல்லாம் வாங்கியாவணும். கலியாணச் சிலவெல்லாம் வேற இருக்கு?"ன்னுச்சு வெங்கு.

            "ஒந் நெலமெ புரிஞ்சுதாம்டி தங்கம் நாம்ம பத்து லட்சத்துக்குச் செருமப்பட்டு பேசி முடிச்சேம். அவ்வேம் பிடிச்சா பிடின்னு இருவது லட்சத்துல நின்னாம். பெறவு அப்பிடி இப்பிடின்னு எறங்கி வந்து பன்னெண்டுல நின்னாம். நாம்மத்தாங் அடிச்சிப் பேசி எதெ வாங்குறதா இருந்தாலும் பத்து லட்சத்துக்குள்ள முடிச்சிக்கோன்னுட்டேம்! வாங்கிக் கொடுத்தா அதுல யாரு போவப் போறா சொல்லு? நாம்மல்லாம் அதுல ஏறுறாப்புல யில்ல. நமக்கு இந்த ஆட்டோதாங். ஒம் மவ்வேதாங் அவ்வே புருஷங்காரனோட போவப் போறா!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "வாஸ்தவந்தாம் சின்னம்மா! நம்ம வகையில யாரும் நமக்குத் தெரிஞ்சி காரு வாங்கிக் கொடுத்ததில்லே. நாம்மத்தாம் மொத மொதலா பண்ணப் போறேம்!"ன்னுச்சு வெங்கு.
            "அதுக்கு ஏம்டி மொகம் ஒமக்கு இப்பிடிப் போவுது? பெருமெதான ஒமக்கு அத்து! ஆன்னா ஒமக்குப் பிடிக்கலன்னா வுட்டுப்புடு. எம் மவனுக்குக் காரும் வாணாம், ஒண்ணும் வாணாம். ஒடைஞ்ச ஓட்ட டூவீலரு ஒண்ணு கெடக்கு. அதுல வந்துட்டு அதுலயே போயிட்டுக் கெடக்கட்டும். ஒம் மருமவ்வேம் அப்பிடி வர்றதுதாங் ஒமக்குப் பிடிக்கும்ன்னா விட்டுப்புடு. மேக்கொண்டு அதெப் பத்தி பேச வாணாம். வாங்கிக் கொடுத்தா கொஞ்சமாச்சும் ஒசத்தியா வாங்கிக் கொடுக்கணும். இல்லாட்டி விட்டுப்புடணும். நாமளும் வாங்கிக் கொடுத்தேம்ன்னு பேருக்கு ஒண்ணுத்தெ வாங்கிக் கொடுத்தா அதால யாருக்கு ன்னா பெருமெ சொல்லு!"ன்னுச்சு பாருங்க சரசு அத்தா, வெங்குவோட மனசு மாறிப் போயிடுச்சு.
            "நீயி ச்சும்மா இரு சின்னம்மா! அப்பிடில்லாம் பேசாதே! காருதானே! பத்து லட்சத்துக்குத்தானே! வாங்கிப்புடுவேம்! நாம்ம பணத்தெ கொடுக்க ஏற்பாட்ட பண்ணிப்புடுவேம். இந்தச் சென்மத்துல நாம்மத்தாங் அந்த மாதிரிக்கில்லாம் போவ கொடுத்து வைக்கல. பொண்ணு புள்ளையாவது போவட்டும் போ! யாருக்கு உசுர்ர வெச்சிக்கிட்டுச் சம்பாதிச்சிட்டுக் கெடக்கேம்? எல்லாம் புள்ளீயோ குட்டிகளுக்குத்தானே! அதுகளாச்சும் அனுபவிக்கட்டும்! சந்தோஷமா இருக்கட்டும்!"ன்னு அது பாட்டுக்கு அடிச்சி வுட்டுப்புடுச்சு.
            "நமக்குத் தெரியும்டி தங்கம்! நீயி எப்பிடிப் பேசுவேன்னு? கஷ்ட நஷ்டம் அறியாதவளா நாம்ம? எல்லாம் ஒண்ணுல மண்ணுல பொறந்து கஷ்டப்பட்டுக்கிட்டு கெடந்த நாம்மத்தானே. நம்ம காலந்தாம் அப்பிடிப் போயிடுச்சு. புள்ளீயோ குட்டியோ காலமும் அப்பிடியே போவப்படாது பாரு. அதுகளாச்சும் நல்ல வெதமா அனுபவிச்சி வாழட்டும். அதுக்காக நாம்ம கஷ்டப்பட்ட நாம்ம இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டா அதால ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடப் போறதில்ல போ!"ன்னுச்சு சுரசு ஆத்தா.
            "செரிதாங் சின்னம்மா!"ன்னுச்சு வெங்கு.
            "அதாம்டி! கெடக்குற வேலையப் போட்டுட்டு கலந்துக்கிட்டுச் சொல்லிப்புடணும்ன்னு பாக்குக்கோட்டையிலேந்து ஓடியார்றேம். மின்னாடியே இதெப் பத்திச் சொல்லாம நீஞ்ஞ பாட்டுக்கு கார்ர வாங்கிப்புட்டீயள்ன்னா பெறவு ஒஞ்ஞகிட்டெயும் வருத்தப்பட்டுக்கிட முடியாது பாரு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதுவும் செரிதாங்!"ன்னுச்சு வெங்கு.
            "செரிடியம்மா! நாம்ம வந்த வேல ஆயிடுச்சு. அஞ்ஞ போட்ட வேல போட்டபடிக்குக் கெடக்கும். நாம்ம கெளம்புறேம்டியம்மா!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ன்னா சின்னம்மா! வந்ததும் ஒடனே கெளம்புறேம்ங்றீயே?"ன்னுச்சு வெங்கு.
            "ஆட்டோக்கார்ரேம் வேற வெளியில காத்துக்கிட்டுக் கெடக்குறாம். அவ்வேம் வேற கூட போட்டு வெயிட்டிங் சார்ஜூம்பாம்! கெளம்புன்னா அஞ்ஞ யண்ணனப் பாத்துப்புட்டு, அப்பிடியே சுந்தரி வூட்டுக்கு ஒரு எட்ட வெச்சுப்புட்டு ஒடனடியா ஆர்குடிக்கு பஸ்ஸூக் கார்ரு கெடந்தா ஏறிப்புடுவேம் பாரு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ரவ்வே டீத்தண்ணிய ஊத்திக்கிட்டு சித்தெ உக்காந்தின்னா சமைச்சிப்புடுவேம். ரவ்வே சோத்த சாப்புட்டுக் கெளம்புனீயேன்னா சந்தோஷமா இருக்கும்லா!"ன்னுச்சு வெங்கு.
            "பொண்ணு பாத்த வூட்டுல இனுமே மூர்த்தோல எழுதுறதுக்கு மின்னாடி கைய நனைக்க மாட்டேம் பாத்துக்கோ! சம்பிரதாயம்ன்னு ஒண்ணுத்தெ வெச்சிருக்காங்களா யில்லியா? அதெ மீறப்படாது பாரு! நாம்ம கெளம்புறேம்டி தங்கம்! மூர்த்தோல அன்னிக்கு விருந்தே சாப்புடுறேம். சாப்பாடா முக்கியம்? பொண்ண நல்ல வெதமா பாத்துக்கடி!"ன்னு சொல்லிட்டு மேக்கொண்டு எதுவும் பேசாம கெளம்பிப் போயி ஆட்டோவுல ஏறுனுச்சு சரசு ஆத்தா. சனங்க ஒவ்வொண்ணும் சட்டுபுட்டுன்னு வெளியில கெளம்பி வந்து சரசு ஆத்தாவ வழியனுப்புறதுக்காக நின்னதுங்க.
            சரசு ஆத்தா வந்த ஆட்டோ முதுகக் காட்டிட்டு போவ, வூட்டுக்குள்ள வந்துச்சுங்க எல்லாம். "போட்ட டீத்தண்ணி ஆறிப் போயிடும் போல யத்தே! நீஞ்ஞளாச்சும் குடிங்க யத்தே!"ன்னா ஆயி.
            "இனுமே டீத்தண்ணியக் குடிச்சுதாங் ஆவப் போவுது போ!"ன்னுச்சு வெங்கு சலிப்பா.
            அதுவரைக்கும் ஒண்ணுத்தையும் பேசாம அமைதியா நின்னுகிட்டு இருந்த செய்யு, "யம்மா! யிப்பிடி ஒரு கலியாணம் நமக்குத் தேவையாம்மா?"ன்னா. "அப்பிடில்லாம் சொல்லாதடி!"ன்னு செய்யுவோட வாயைப் பொத்துனுச்சு அழுதுகிட்டெ வெங்கு.
            "கலியாணப் பொண்ணு இப்பிடில்லாம் பேசப்படாது!"ன்னா ஆயியும்.
            "இன்னும் மூர்த்தோலையே எழுதல யம்மா! அதுக்குள்ள இப்பிடின்னா எப்பிடிம்மா?"ன்னா செய்யு.
            "அதெல்லாம் கலியாணங் காட்சின்னா எல்லா குடும்பத்துலயும் இப்பிடித்தாம்படி இருக்கும். அதெல்லாம் பாத்தா முடியாதுடி. ஒனக்கென்னடி ராசாத்தி! யப்பங்காரரு வாத்தியர்ரா இருந்து ரிட்டையர்டு ஆயிருக்காரு. யண்ணங்கார்ரேம் வாத்தியாரா இருக்காம். ஒனக்கென்னடி கொறைச்சலு?"ன்னுச்சு வெங்கு.
            "அத்து மாதிரிக்கி நமக்கும் ஒரு வாத்தியார்ரா பாத்திருந்தீன்னா பெரச்சனெ யில்லம்மா! நீயி டாக்கடர்ரால்லா பாத்து வெச்சிட்டு அடம் பண்ணுறே?"ன்னா செய்யு.
            "பாதி கெணறு தாண்டியாச்சு. ச்சும்மா ஒளறிட்டுக் கெடக்காதடி. இது வரைக்கும் வழியக் காட்டுன ஆண்டவனுக்கு இதுக்கு மேல வழியக் காட்டவா தெரியாதுடி?"ன்னுச்சு வெங்கு.
            செய்யு வெங்குவக் கட்டிக்கிட்டா. "நமக்கு ந்நல்லாவே தெரியுதும்மா! நம்ம கலியாணத்துக்காக நீஞ்ஞ எல்லாம் தேவையில்லாம செருமப்படுதீயே! ஒஞ்ஞ சக்திய மீறிப் பண்ணி வைக்கணும்ன்னு நிக்குதீயே!"ன்னா. அவ கண்ணுலேந்து கண்ணுத்தண்ணி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.
*****


2 Aug 2020

பழக்க வழக்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்!

பழக்க வழக்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்!

            எச்சில துப்பாம இருக்குறது நம்ம சனங்களுக்கு ரொம்ப கஷ்டம். கொரோனா வந்து மாஸ்க்க போட வெச்சு அது கொறைஞ்சிருக்கும்ன்னு பாத்தா வாய்ப்பே இல்ல. அதெ அளவு, அவ்வளவு இடங்கள். அதெப்படி? மாஸ்க்கைத் தூக்கிட்டு துப்புறது ஒண்ணும் பெரிய காரியமில்லையே!
            எச்சிலத் துப்பாதே கொரோனா பரவும்ங்றாங்க. நாம்ம துப்புற எச்சிலாலத்தான் கொரோனாவே பரவலன்னு நெனைக்கிறேம்ங்றாம் நம்ம ஆளு. நம்ம எச்சில் அவ்ளோ பவர்புல் கிருமிநாசினியா இருக்கணும்ங்றாம் கூடுதல் தகவலா. அவ்வேம் சொல்றத கேட்டாக்கா, துப்புற எடத்துல ஒரு கொரோனா கிருமி இருந்தாலும் செத்துடும் போலருக்கு. அப்புறம் பல பேர்ர பாக்குறப்போ, எச்சிலைத் துப்பித்தாம் சானிடைசர்ரப் போல தொடைச்சிக்கிறாம். ஏம் பாஸ் இப்பிடின்னா? யாரும் கையக் கொடுன்னு முன்னாடி வந்து நிக்க மாட்டாம் பாருங்கங்றாம். பண்ணுறதையும் பண்ணிப்புட்டு அதுல இப்பிடி ஒரு எச்சரிக்கெ வேற. சொல்ல முடியாது நம்ம எச்சில்ல கூட கொரோனாவ அழிக்கிற வேதிப்பொருள் இருக்கும்ன்னு நம்புறாம். நம்ம சனங்களோட கொரோனா குசும்புக்கு அந்தக் கிருமியே விழுந்து விழுந்து சிரிக்கும் போலருக்கு.
            ஒரு தெருவத் தாண்டி அந்தாண்ட தெருவுக்குப் போறதுக்குள்ள தெருவோராம ஏகப்பட்ட முகக்கவசங்களப் பாக்க முடியுது. அதுவும் அந்த நீல நெறத்து சர்ஜிக்கல் முகக்கவசம் வெளுத்துப் போயி அம்புட்டுக் கெடக்குது குப்பையப் போல. அதெ எடுத்துதாம் நம்ம தெருவோரக் கொழந்தைங்க மொகத்துல மாட்டிக்கிட்டு வெளையாடுதுங்க. திருடன் போலீஸ் வெளையாட்டப் போல ‍முகக்கவசம் போடாம வர்றவங்கள போலீஸ் பிடிக்கிறாப்புல அது ஒரு வெளையாட்டு.
            நம்ம நாட்டுல எது எதுவோ தெருவோரம் கெடக்குற குப்பையாகி, பயன்படுத்துன நாப்கின், டயாப்பர்ல ஆரம்பிச்சு இப்போ முகக்கவசமும் அங்கங்க கெடக்குற குப்பையா ஆயிட்டு இருக்குது. குப்பைகளக் குப்பைத் தொட்டியச் சுத்திப் போடுறதே பழக்கமாகவும் போயிடுச்சு.
            இப்போ இருக்குற நெலமையில பயன்படுத்தித் தேவையில்லன்னு தூக்கிப் போடுற முகக்கவசங்கள இப்பிடித் தெருவோராம தூக்கிப் போடுற பழக்கத்தையும், தெருவப் பாத்தாலே எச்சில துப்புற பழக்கத்தையும் விட்டா நல்லாத்தாம் இருக்கும். இதெப் பத்திச் சொன்னாவே ரொம்பவும் கோபப்படுறாங்க நம்ம மக்கா. நாங்க என்ன வேணும்ன்னா பண்ணுறோம்ன்னு எதிர்கேள்விக் கேக்குறதோட, அதெல்லாம் அப்பிடித்தாம் பழகிப் போயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டெ போயிக்கிட்டெ இருக்காங்க. அத்தோட இதால எல்லாம் கொரோனா பரவாது, இப்பிடி அங்கங்க நின்னு பேசுறதெ நிப்பாட்டிப்புட்டு மொதல்ல வூடடங்கி உக்காரு, அப்பிடி வூட்டுல இருந்தாத்தாம் கொரோனா பரவாதுங்ற அறிவுரையையும் அள்ளி வீசிக்கிட்டெ போயிட்டு இருக்காங்க. அதுவும் சரித்தாம் இப்பிடி தெருவுல எறங்கி எச்சில ஒட்டிக்கிட்டு, காத்துல பறந்து வர்ற மொகக்கவசம் மேல படுறப்பத்தாம் கொரோனா பரவும், அதால வீடடங்கி உக்காரணும்ங்ற ஒரு கருத்த இதன் மூலமா சொல்ல வர்றாங்க போல நம்ம மக்கா.
            நம்ம மக்கா என்னைக்குத் தங்களோ பழக்க வழக்கத்தெ விட்டுக் கொடுத்திருக்காங்க சொல்லுங்க! ரத்தத்துல இருக்குற சிவப்பு நெறமும், பழக்க வழக்கமும் ரத்தத்தோட ரத்தமா கலந்ததுதாம் போங்க!
*****


நீயே பாத்து பண்ணி வுடு!

செய்யு - 524

            மாப்புள்ளயப் போயி பாத்துட்டு வந்த ஒரு வாரத்துல அடுத்த ஞாயித்துக் கெழம லாலு மாமா தஞ்சாவூர்லேந்து ஒரு நாளு திட்டைக்கு வந்துச்சு. தஞ்சாவூர்லேந்து ஆர்குடி வந்து ஆர்குடியிலேந்து மூலங்கோட்டைக்கு வந்து எறங்கி விகடுவோட நம்பருக்குப் போன அடிச்சிது லாலு மாமா, மூலங்கோட்டையிலேந்து வந்து அழைச்சிட்டுப் போவச் சொல்லி. ஆர்குடியிலேந்து அடிக்கடி பஸ்ஸூக அடிக்கடி வடவாதிக்கு இல்லாததால, ஏம் தேவையில்லாம ஆர்குடியில காத்துகிட்டு கெடக்கணும்ன்னு டக்குன்னு யோசிச்சு, திருவாரூரு பஸ்ஸப் பிடிச்சி மூலங்கோட்டையில எறங்கிப் போன அடிச்சிருந்துச்சு லாலு மாமா. விகடு சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ஸ எடுத்துக்கிட்டு மூலங்கோட்டைக்குப் போனாம். அது வடவாதியிலேந்து அஞ்சு கிலோ மீட்டரு தூரத்துல இருக்கு.
            லாலு மாமா கணக்கா ரண்டு பலாப்பழத்தெ ஒரு பெரிய யேவாரி பையிலப் போட்டு வாங்கியாந்திருச்சு. பழத்துலேந்து நல்ல மணம் வந்துட்டு இருந்துச்சு. விகடுவப் பாத்ததும் பலாப்பழ பைய மின்னாடி மாட்டிக்கிடச் சொல்லி, பின்னாடி உக்காந்துக்கிட்டு விகடுவெ வண்டிய எடுக்க சொன்னுச்சு. மொதல்ல நேரா கெளம்பி சித்துவீரனோட வூட்டுக்கு வுட சொன்னுச்சு. அங்க விட்டா அங்கன ஒரு பலாப்பழத்தெ எறக்கி வைக்கச் சொல்லி, சுந்தரி கையால ஒரு லோட்டா நெறையா மோர்ர வாங்கிக் குடிச்சிட்டு, விகடுவுக்கு ஒரு தம்பளர்ல வாங்கிக் கொடுத்துச்சு. ஒரு பெரிய ஏப்பத்‍தெ விட்டுக்கிட்டெ, "பயலுவோ எஞ்ஞ? அவ்வேம் சித்துவீரன் எஞ்ஞ?"ன்னு ஒரு வார்த்‍தெ கேட்டுச்சு லாலு மாமா. "ஞாயித்துக் கெழமென்ன எத்து வூடு தங்குது?"ன்னுச்சு சுந்தரி. "மூர்த்தோல சம்பந்தமா பேச வேண்டிருக்கு. பொண்ணு வூடு வரைக்கும் திட்டைக்குப் போயிட்டு வர்றேம்!"ன்னுச்சு லாலு மாமா. "செரிங் மாமா! மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்துப்புடுங்க! சமையலு ஆயிடும்!"ன்னுச்சு சுந்தரி. "பாக்கலாம்!"ன்னுட்டு லாலு மாமா விகடுவெ கெளப்பிக்கிட்டு அடுத்து முருகு மாமா வூட்டப் பாக்க வுட சொன்னுச்சு.
            முருகு மாமா வூட்டுல எறங்குனதும் இன்னொரு பலாப்பழத்தெ எறக்கி வைக்க சொன்னுச்சு. காலியான பையத் தூக்கி முருகு மாமாகிட்டெ கொடுத்து இதெ, "பத்திரமா வெச்சுக்கோ! போறப்பெ வாங்கிக்கிறேம்!"ன்னுச்சு. அநேகமா இந்த ரண்டாவது பலாப்பழம் நம்ம வூட்டுக்குத்தாம்ன்னு நெனைச்சிட்டு இருந்த விகடுவுக்குக் கொஞ்சம் ஏமாத்தமா இருந்துச்சு. போவப் போறது மூணு வூடுங்றப்போ மூணால்லா வாங்கியாந்திருக்கணும், யில்லன்னா வாங்கியாறாமலல்ல இருக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. மூணாவது வர்றப் போற நம்ம வூட்டுக்கு அந்த அளவுக்குப் பெரிசா இல்லாட்டியும் சின்னதாச்சும் ஒரு பழத்தெ தூக்கிப் போட்டுக் கொண்டாந்திருக்கலாம்ன்னு நெனைச்சிக்கிட்டாம். "பொண்ணு வூடு வரைக்கும் போயி மூர்த்தோல சம்பந்தமா ஒரு வார்த்தெ பேசி விட்டுப்புட்டு வந்துடுறேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அஞ்ஞ பாக்குக்கோட்டையில வெவரம் கலந்துட்டீயேல்ல!"ன்னுச்சு முருகு மாமா.
            "அதல்லாம் கலந்தாச்சு. பேசி வுட வேண்டியதுதாங்!"ன்னுச்சு லாலு மாமா. முருகு மாமா லாலு மாமாவப் பாத்து ஒரு சிரிப்பச் சிரிச்சாரு.
            "செரி கெளம்பிப் பேசிட்டு வந்துப் பேசுறேம்!"ன்னு லாலு மாமா விகடுவெ வண்டியக் கெளப்பச் சொல்லி நேர்ரா வந்து எறங்குன எடம் சுப்பு வாத்தியாரு வூடு. லாலு மாமாவப் பாத்ததும் வெங்குவுக்குச் சந்தோஷம் தாங்கல. வாசப்படியே தாண்டி உள்ளார வாரதுக்குள்ளாரயே, "வாஞ்ஞ மாமா! வாஞ்ஞ மாமா!"ன்னு வந்து வரவேத்துக்கிட்டு நின்னுச்சு. வூட்டுல இருந்த சுப்பு வாத்தியாரு, ஆயி, செய்யு எல்லாரும் வந்து, "வாஞ்ஞ! வாஞ்ஞ!"ன்னு வந்துட்டாங்க. நடுக்கூடத்துல உக்கார வெச்சு, லாலு மாமாவுக்குப் பிடிச்ச நீராகாரம் கலந்த மோர்ர செம்புல கொடுத்துச்சு. அதெ கொடுக்குறப்பே பக்கத்துல ஒரு சின்ன தட்டுல மோரு மெளகா வறுத்ததையும் வெச்சிருந்துச்சு. லாலு மாமா செம்ப வாங்குனது அது பாட்டுக்குக் கவித்துச்சு வாயிக்குள்ள. கொஞ்சம் குடிச்சி முடிச்சதும் குடிகாரப் பயலுவோ இடையிடையில ஊறுக்காய நக்கிறாப்புல வறுத்த மோரு மெளகாய ஒரு கடி கடிச்சிக்கிட்டு. முழு சொம்பையும் காலி பண்ணிட்டுதாங் கீழே வெச்சிது. விகடுவுக்கு அவனையும் அறியாம அவ்வேம் படிச்சக் காலத்துல பள்ளியோடத்துல லாலு மாமா கள்ளுக் குடிச்சது நெனைப்புல வந்துப் போனுச்சு.
            "நீயி கொஞ்சம் நீரு மோரு குடிடா! வெயில்ல வந்தது. கோடைக்கு எதமா இருக்கும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "நமக்கு வடவாதியில குடிச்சதே வயித்துக்குள்ள நிக்குது!"ன்னாம் விகடு.
            "வர்றப்பவே அங்கங்கயும் போயிட்டு வந்தாச்சா?"ன்னுச்சு வெங்கு.
            "இஞ்ஞ வந்துட்டு அஞ்ஞ தலையக் காட்டாம போனாக்க வருத்தமா போவும். அதாங் மொதல்லயே அஞ்ஞ தலையக் காட்டிப்புட்டா வருத்தமில்லாம போயிடும்ல!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதுவுஞ் செரிதாங். மனவருத்தம் இல்லாம போயிடணும்!"ன்னுச்சு வெங்கு.
            "பொண்ணு மாப்புள்ளயப் பாத்து நாளாயிட்டே இருக்கு. ஏம் தள்ளிப் போட்டுக்கிட்டு?"ன்னுச்சு வெங்கு.
            "அதாங் மாமா நாமளும் நெனைச்சிட்டு இருந்தேம். ஒருத்தருக்கொருத்தரு கலந்துகிட்டு பேசி முடிச்சிட்டா கலியாணத்துக்கு ஆவுற சோலியப் பாக்கலாம்லா!"ன்னுச்சு வெங்கு. மேக்கொண்டு லாலு மாமா என்னத்தெ சொல்லப் போறார்ன்னு எதிர்பாத்துக்கிட்டு உக்காந்திருந்தாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் சம்பந்தமா பேசலாம்ன்னுத்தாம் நாமளே நேர்லயே வந்தேம். பொண்ணு வூட்டுலயோ மாப்புள வூட்டுலயோ யாராச்சும் ஒருத்தரு மூர்த்தோலைய எழுதணும், இன்னொருத்தரு கலியாணத்தெ நடத்தி வுட்டுப்புடணும். ஆன்னா பாரு அஞ்ஞ பாக்குக்கோட்டையில நடத்துறதுக்கு இப்போ பண்டமில்லே. அவுங்க நடத்தணும்ன்னு நெனைச்சா கொஞ்ச நாள எடுத்துப்பாங்க! இதுல இனுமே தாமசம் பண்ண ன்னா இருக்கு? பாத்து நீயே முடிச்சி வுட்டுப்புடேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            இது சுப்பு வாத்தியாரு எதிர்பாத்ததுதாம். அதெ இவ்வளவு சாமர்த்தியமா லாலு மாமா வந்து அதெ பேசுவார்ங்றதெ மட்டும் எதிர்பாக்கல. இதுக்கு நாம்ம பதிலச் சொல்றதா? வெங்கு பதிலெச் சொல்றதான்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சிட்டு இருக்குறப்பவே வெங்கு பதில சொல்ல ஆரம்பிச்சிடுச்சு.
            "ஒண்ணுக்குள்ள ஒண்ணா சம்பந்தம் ஆவப் போறேம். அதுல யாரு எதெ செஞ்சா ன்னா? ஒரு வார்த்தெ போன்லயே சொல்லி வுட்டிருந்தீன்னா மாமா நாம்ம இஞ்ஞ ஏற்பாட்ட பண்ணிருப்பேம்லா. வர்ற ஆவணி மாசத்துலயே ந்நல்ல நாளா பாத்து முடிச்சிப்புடலாம்! மூர்த்தோலைய எழுதிப்புட்டா சட்டுபுட்டுன்னு கலியாணத்தெ வெச்சி முடிச்சிப்புடலாங்!"ன்னுச்சு வெங்கு. வெங்கு வார்த்தைய வுட்டுப்புட்டு, இனுமே இதுல பேசுறதுக்கு ஒண்ணுமில்லன்னு அமைதியாயிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒஞ்ஞளுக்கு ன்னா ஏதுன்னு ஒண்ணுமே சொல்லலியே?"ன்னுச்சு லாலு மாமா சுப்பு வாத்தியார்ரப் பாத்து. "வூட்டுல சம்மதம்ன்னா நமக்குச் சம்மதம்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ, இருந்தாலும் அவரோட மனசுக்குள்ள நம்மகிட்டெ ஒரு வார்த்‍தெ கேக்காம, எங்க கேட்டா காரியம் ஆவுமோ அங்க கேட்டுப்புட்டு பெறவு கேட்டா என்னத்தெ சொல்றதுன்னு நெனைச்சிக்கிட்டாரு. பொதுவா மூர்த்தோலைங்றது பொண்ணு வூட்டுல எழுதுறது சம்பிரதாயம்ன்னாலும், கலியாணத்துக்கான சிலவெ பொண்ணு வூடு சார்பா கொடுக்குறதால, இதெ ஒண்ணாச்சியும் மாப்புள்ள வூட்டுல பண்ணி வுடுவாங்கன்னு மனசுல ஓரமா சின்னதா ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இருந்துச்சு. அது ஒரு சின்னதான எதிர்பார்ப்புதாம். ஏன்னா இப்பிடிதாங் நடக்கும்ன்னு அவரோட ஆழ்மனசு சொல்லிட்டே இருந்துச்சு. இப்போ அதுபடியே ஆயிடுச்சு. எந்தக் காலத்துல மனசோட சின்ன சின்ன எதிர்பார்ப்புக நடந்திருக்கு? இதுல சுப்பு வாத்தியாருக்கு மட்டும் நடக்க?

            மூர்த்தோலைன்னு சொன்னாலும் அத்து ஒரு பாதிக் கலியாணத்துக்குச் சமானம். கலியாணத்துக்கு இருக்குற எதையும் கொறைக்க முடியாது. மூர்த்தோலைய எழுதுற வாத்தியார்ர வைக்காம இருக்க முடியாது, மேள தாளத்தைக் கொறைக்க முடியாது. ஒறவுக்கார சொந்தக்கார சனங்களுக்குச் சொல்றதெ கொறைக்க முடியாது. சொந்தம், பந்தம், தெருவுல இருக்குறவங்க, தெரிஞ்சவங்க அறிஞ்சவங்கன்னு இருநூத்துப் பேத்துக்குக் கொறையா பண்ண முடியாது. அவரு அப்பிடி ‍நெனைச்சிட்டு இருக்குறப்பவே லாலு மாமா அடுத்தக் கட்டத்துப் பேச்சுக்கு அடி போட ஆரம்பிச்சது.
            "மூர்த்தோலைய ஆர்குடியில மண்டபத்துல வெச்சிக்கிட்டாலும் செரி! கூத்தாநல்லூர்ல மண்டபத்துல வெச்சிக்கிட்டாலும் செரி! வேற எங்கனாச்சும் மண்டபத்துல வெச்சிக்கிட்டாலும் செரி!"ன்னுச்சு லாலு மாமா.
            "மண்டபத்துல வாணம்ன்னு நெனைக்குறேம் மாமா! ஏன்னா பொண்ணுக்கு சடங்கெ மூர்த்தோலைக்கு மின்னாடிதாங் சுத்தணும். நமக்கு வூட்டெ கட்டி குடி போறப்போ சேத்துச் செய்யணும்ன்னு ஒரு நெனைப்பு. அப்போ இருந்த சங்கடத்துல பண்ண முடியாமப் போயிடுச்சு. இந்த வூட்டுல வெச்சிதாங் மாமா சடங்கெ சுத்தணும். இந்தக் கூடத்துல வெச்சிதாங் மாமா மூர்த்தோலைய எழுதணும் மாமா! அத்து நம்மட மனசுல உள்ள ஒரு நெனைப்பு! வூட்டுக்கு மின்னாடி பந்தல பெரிசா போட்டுக்கிடலாம். மாடியிலயும் பந்தல போட்டுக்கிட்டா சாப்பாட்டு பந்திக்குத் தோதா போயிடும் மாமா!"ன்னுச்சு வெங்கு.
            அந்த ஒரு விசயத்துல மட்டுந்தாம் சுப்பு வாத்தியாருக்கு வெங்குப் பேசுனது கொஞ்சம் ஒத்து வராப்புல பட்டுச்சு. அது பாட்டுக்கு லாலு மாமா பேச்சுக்கு ஏத்தாப்புல ஆமாஞ் சாமிதாம் போடும்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடிப் போட்டிருந்தா ஆவணி மாசத்துல மண்டபத்தெ பாத்து தேதி வைக்குறதெ செருமமா போயிருக்கும். ஏன்னா ஆவணி மாசத்து மண்டபத்துக்கு ஆனி மாசத்துல கடைசியில போயி நிச்சயம் பண்ண முடியாது. லாலு மாமா இப்போ வந்திருந்தது ஆனி மாசத்துக் கடைசி. இன்னும் ரண்டு நாள்ல ஆடி மாசம் பொறந்துடும். அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு மின்னாடியே இப்பவெல்லாம் கல்யாணத்துக்கு மண்டபங்க நிச்சயம் ஆயிடுது. அந்த வகையில அது ஒரு பேரலைச்சல் கொறைஞ்சதா நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. மித்தபடி ஒரு கலியாணத்துக்குச் சமைக்குற அளவுக்கு மத்தியானச் சாப்பாட்ட உட்பட பிற அத்தனெ சிலவுகளையும் அவரு வூட்டுல பண்ணித்தாம் ஆவணும்.
            "செரி ஆயி! அதெ ஒந் தோதுக்கு வெச்சிக்கோ. ஒனக்குன்னு மனசுக்குள்ள ஒரு நெனைப்பு இருக்குங்றப்போ அதெ மாத்திக்க வாணாம். எஞ்ஞ வெச்சி எழுதுனாலும் மூர்த்தோல மூர்த்தோலதாங். வூட்டுலதாங் வைக்கணும்ன்னா வெச்சுக்கோ, அட்டியில்ல!"ன்னுச்சு லாலு மாமா. அத்தோட அந்தப் பேச்சு ஒரு முடிவுக்கு வந்துச்சு.
            "மீனு வாங்கி கொழம்பு வெச்சிட்டு இருக்கேம் மாமா! அப்பிடியே வறுத்தும் புடுவேம்! இருந்து சாப்புட்டுத்தாம் போவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "மூர்த்தோலையில சாப்புட்டுப்புடலாம்ன்னு பாத்தேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "யில்ல இருந்து நீயிச் சாப்புட்டுத்தாங் மாமா போவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "ன்னா மீனு?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஒமக்குப் பிடிச்ச சேப்பு மீனும், பாற மீனும்!"ன்னுச்சு வெங்கு.
            "செரி! நீயி ஆவுற வேலையப் பாரு!"ன்னுச்சு லாலு மாமா.
            "எலே யம்பீ! மாமாவ அழைச்சிட்டுப் போயி எதுத்தாப்புல இருக்குற கொல்லையச் சுத்திக்காட்டு! அதுக்குள்ள நாம்ம இஞ்ஞ ஆயிய வெச்சிக்கிட்டுச் சமையல முடிச்சிப்புடுவேம்!"ன்னுச்சு வெங்கு.
            விகடு லாலு மாமாவ எதுத்தாப்புல இருந்த கொல்லைக்கு அழைச்சிட்டுப் போனாம். அந்த வெயிலுக்கு கொல்லையில இருந்த நெழலும், காத்தும் சொகமா இருந்துச்சு. லாலு மாமா கொல்லைய ஒரு சுத்து சுத்துனுச்சு. கொல்லையில விகடு வெச்சிருந்த ஓமவள்ளி, வல்லாரை, இருவாச்சி, நிலவேம்பு, சித்தரத்தைச் செடி, துளசிச் செடி, மாதுளங் கண்ணு எல்லாத்தையும் ஒரு பார்வெ பாத்துச்சு. "ந்நல்ல ந்நல்ல மூலிகையால்லடா வெச்சிருக்கே! புள்ளீயோளயும் வைக்கச் சொல்லுதீயா?"ன்னுச்சு லாலு மாமா.
            "புள்ளீயோளுக்காகத்தாம் வெச்சிருக்கேம்! அதுகள வைக்க சொல்லிட்டு நாம்ம வைக்காம இருக்க முடியாதுல்லா?"ன்னாம் விகடு.
            "இருவாச்சியில தொவையலு அரைச்சிச் சாப்புடணும்டா! ஒடம்புல ஒரு வாயுக் கோளாறு கூட இருக்காது! இதெத்தாம் ஊரெல்லாம் தேடுறேம். இஞ்ஞ இருக்கு! போறப்ப எலையப் பறிச்சிக் கொஞ்சம் கொடு. நாமளே தொவையல் அரைச்சிச் சாப்புட்டுக்கிறேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            கொல்லையில நெழல் பக்கமா கெடந்த ஒரு பெருங்கல்லுல உக்காந்துச்சு லாலு மாமா. "சம்பாதிக்குற பணத்தையெல்லாம் ன்னடா பண்ணி வெச்சிருக்கே?"ன்னுச்சு விகடுவப் பாத்து.
            "நம்மகிட்டெ ஒண்ணுங் கெடையாது. வூட்டுல கொடுத்துப்புடறது!"ன்னாம் விகடு.
            "ஏம்டா பொம்பளெ புள்ளீய பெத்து வெச்சிக்கிட்டு நக நெட்டு இன்னும் சேத்து வைக்கமலா இருக்கே? இந்நேரத்துக்கு ஒரு எடத்தெ வாங்கிப் போட்டுருக்கணும்டா! வருங்காலத்துல படிப்புச் சிலவு, கலியாணச் சிலவுல்லாம் ரொம்ப ஆவும்டா!"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்ம அரசாங்கத்துப் பள்ளியோடத்துலத்தாங் படிக்க வைக்கப் போறேம். சாதாரண மாப்புள்ளைக்குதாங் பாத்துக் கட்டிக் கொடுப்பேம்!"ன்னாம் விகடு.
            லாலு மாமா அவனெப் பாத்துச் சிரிச்சுச்சு. "வெவரம் தெரியாத பயலால்லா இருப்பாம் போலருக்கு. ஒலகமெ தெரியலடா? பொண்ண டாக்கடருக்குப் படிக்க வைக்கணும்டா பாத்துக்கோ!"ன்னுச்சு லாலு மாமா.
            "சாதாரணமா படிச்சி சாதாரண வேலைக்குப் போனாப் போதும்!"ன்னாம் விகடு.
            "ன்னடா எதெ கேட்டாலும் வித்தியாசமா பேசுறே?"ன்னுச்சு லாலு மாமா.
            "மனுஷன் ஒரு வேலைக்குப் போறதுக்குன்னே வாழ்நாளு முழுசும் வாழக் கூடாதுல்ல. வாழ்றதுக்காக அதுக்குச் சம்பாத்தியத்துக்காக ஒரு சாதாரண வேலைக்குப் போனா போதும். ஏன்னா சம்பாத்தியத்தெ வுட வாழ்றதும் முக்கியமில்லா. அதுக்கும் மனுஷனுக்கு நேரம் இருக்கணும். இருக்குற வாழ்நாளு முழுசையும் சம்பாத்தியத்துக்காகவே சிலவு பண்ணிட முடியாதுல்லா!"ன்னாம் விகடு.
            "நமக்கெல்லாம் ஒம்மட வயசுல அப்பிடி ஒரு நெனைப்பு யில்ல. சம்பாத்தியம் பண்ணணும்ன்னே அலைஞ்சி திரிஞ்சிக் காலம் போயிடுச்சு! யிப்போ வயசாயிப் போச்சு. வேற வழியில்லாம உக்காந்தாச்சு. உக்காந்தாலும் அலைச்சல் கொறையல!"ன்னுச்சு லாலு மாமா. ரொம்ப நேரத்துக்கு இப்பிடியே பேசிட்டு இருந்தாங்க லாலு மாமாவும் விகடுவும், "சாப்புட வாஞ்ஞ!"ன்னு வெங்கு வந்து கூப்புடுற வரைக்கும். சாப்பாடு முடிஞ்சி லாலு மாமாவ கொண்டு போயி விடுறப்போ விகடு மறக்காம இருவாச்சி எலைகளப் பறிச்சி ஒரு மஞ்சப் பையி நெறையப் போட்டுக் கொடுத்தாம்.
*****


1 Aug 2020

கொ.பி. (கொரோனாவுக்குப் பின்…)

கொ.பி. (கொரோனாவுக்குப் பின்…)

ஒரு நேரத்துல சென்னைக்கு அருகில்ங்ற ரியல் எஸ்டேட்டு வார்த்தைக்குக் கிடைத்த மரியாதையே வேற லெவல். இப்போன்னா சென்னைக்கு அருகில்ன்னா கோரோனாவாங்ற அளவுக்கு ஆயிடுச்சு!
*****
            இந்தச் சமூகத்தில் சாதிகளுக்கான இடைவெளிதான் இருக்கிறது. கொரோனா காலத்தில் கடைபிடிப்பதற்கான இடைவெளி கொஞ்சமும் இல்லை.
*****
மரண பயத்தைக் காட்டிச் சொன்னால்தான் மனுஷன் கொஞ்சமாவது கேட்கிறான். அதுதான் கொரோனா எபெக்ட்!
*****
ஒரு சமூகம் தன்னுடைய மரபிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது என்பது சிரமம் பிடித்த ஒன்று. அந்த மரபுப்படி கோடைக்காலம் வந்தால் கோடைக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள். கொரோனா காலம் வந்தால் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள். எதாவது ஒரு வகுப்பை நடத்தி காசைப் பிடுங்கிக் கொண்டிருப்பது என்பது நம் சமூகத்தின் மரபில் ஊறி விட்ட ஒன்று.
*****
குழந்தைகளோடு நீங்கள் இருந்தால் ஒரு டோலக்பூர்வாசியாகவோ, மிர்சிநகர்வாசியாகவோ ஆகி விடலாம். கொரோனாவை விட பெரிய பிரச்சனைகள் எல்லாம் டோலக்பூருக்கும், மிர்சிநகருக்கும் வருகின்றன. ஒருவேளை கொரோனா வந்தால் அதை டோலக்பூரும், மிர்சிநகரும் எப்படி எதிர்கொள்ளுமோ? சோட்டாபீமும், லிட்டில் சிங்கமும் கொரோனாவை அடித்தே கொன்றாலும் கொன்று விடுவார்கள்!
*****
முகக்கவசமும், கிருமிநாசினியும் தேவைப்படாத ஓர் உலகம் வேண்டும்.
*****

கெழட்டுப் பய மாப்புள்ள!

செய்யு - 523

            பொண்ணு மாப்புள பாக்குறதுல இருக்குற அதெ வழக்கமான டிரேட்மார்க்குதாம் பாக்குக்கோட்டையிலயும் நடந்துச்சு. கேசரியில இனிப்பு, பஜ்ஜியில காரம், காப்பியில பானம்ன்னு முடிஞ்சது. ஓரளவுக்கு எதிர்பாத்தாப்புல சீக்கிரமே வந்துட்டதால வேனை எடுத்துக்கிட்டு கெளம்புறதுக்கு நேரமிருந்துச்சு. பத்தே காலுக்கு எறங்கி பதினோரு மணிக்குள்ளார எல்லாமும் முடிஞ்சிடுச்சு. பதினொண்ணரைக்கு மேல வேன எடுத்துக்கிட்டுக் கெளம்பிடுவோம்ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதுவரைக்கும் வூட்டுக்குள்ளாரயும், வெளியிலயும் போட்டிருந்த நாற்காலியில பதிவிசா உக்காந்திருந்த சனங்க, சிங்கப்பூரு காலனிக்கு எதுத்தாப்புல கெடந்த எடத்துல அங்கங்க வெரவிப் போயி கதெ பேச ஆரம்பிச்சதுங்க. சனங்க ஒவ்வொண்ணும் அததுக்கு மாப்புள்ளயப் பாத்ததும் தோணுன கருத்துகளெ பேசிக்க ஆரம்பிச்சதுங்க.
            ஒரு சில சனங்க மாப்புள்ள செவப்பா நல்லா இருக்குறதா சொன்னுச்சுங்க. ஒரு சில சனங்க மாப்புள்ளைக்குத் தொப்பை இருக்கறதா சொன்னுச்சுங்க. ஒரு சில சனங்க மாப்புள்ளெ மொகத்துல கெழடு தட்டுனாப்புல தோணுறதா சொன்னுச்சுங்க. வூடு எடமெல்லாம் பெரிசா இருக்குறதாவும், சொந்த எடமான்னு சில சனங்க கேட்டுகிட்டு நின்னுச்சுங்க. காப்பியில கசப்பு அதிகம்ன்னு சில சனங்க பேசுனுச்சுங்க. பஜ்ஜியச் சாப்புட்டதிலேந்து வவுறு ஒரு மாதிரியா இருக்குறதா சில சனங்க கக்கூச தேடிட்டு நின்னுச்சுங்க. டாக்கடர்ர மாப்புள்ளயாப் பாத்துப் பிடிக்கிறதுன்னா பெரிய விசயந்தாம்ன்னு சில சனங்க அசந்துப் போயிப் பேசுனுச்சுங்க. அதுல ஒரு சில சனங்க தங்களுக்கு இருக்குற நோய்ப்பாடுகளச் சொல்லி பாலாமணிகிட்டெ வைத்தியம் பாக்கலாமாங்ற மாதிரிக்கும் ஆராய்ச்சியப் பண்ணிட்டு இருந்துச்சுங்க. பரவாயில்ல மாப்புள்ள பக்கத்துலயும், சொந்தத்துலயும் அமைஞ்சிட்டுன்னு சில சனங்க சந்தோஷப்பட்டுக்கிட்டுங்க. பெறவு அதே சனங்களே மாப்புள்ள சென்னையிலல்லா வேலையில இருக்காருன்னு அதையும் சொல்லிக்கிட்டு, நம்மப் பொண்ணு சென்னையில போயி குடித்தனம் நடத்தப் போவுதுன்னு அதெ பெரிசா பேசிக்கிட்டுங்க. இப்படி பல வெதமா சனங்க பேசிட்டுக் கெடந்துச்சுங்க.
            வெங்கு வகையறா சனங்க எல்லாத்துக்கும் பாலாமணி தெரிஞ்ச ஆளுதாம். விருத்தியூரு, வேலங்குடி சனங்கத்தாம் பாலாமணியப் பாத்ததில்ல. பாலாமணியப் பாத்துப்புட்டு, விருத்தியூரு பத்மா பெரிம்மா சுப்பு வாத்தியார்ர தனியா அழைச்சிட்டுப் போயி கேட்டுச்சு, "பயெ ன்னா பாக்க கெழட்டுப் பயலாட்டாம் இருக்காம். இவனெ போயி மாப்புளன்னு பாக்க கூட்டியாந்திருக்கீயே?"ன்னு. இப்பிடிப் பொட்டுன்னு அடிச்சி, பொசுக்குன்னு கேட்டாக்கா என்னத்தெ பதிலெச் சொல்றதுன்னு சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டாரு.
            "மெதுவா பேசுங்க யண்ணி! யாரு காதுலாச்சும் விழுந்துடப் போவுது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பக்கத்துல யாரு இருக்கா கேக்குறதுக்கு? அப்பிடிக் கேட்டாத்தாங் கேட்டுட்டுப் போவட்டுமே! யில்லாததையும் பொல்லாததையுமா பேசுறேம்? ஒம் மவ்வேனுக்கும், மவ்வேளுக்குமே வயசு ரொம்ப வித்தியாசம். இவனெப் பாத்தா கலியாணமாயி புள்ளையப் பெத்துப்புட்ட ஒம் மவ்வேன தாண்டி நாலஞ்சு வயசுக்கு மேல மூப்பா இருப்பாம் போலருக்கே? ஏம் இந்த வேலயப் பாத்து வெச்சுருக்கே?"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            "கவர்மெண்டு டாக்கடர்ரா இருக்காங்றதுதாங் காரணம். வெங்குவோட வகையறாவுல வர்றதால அதுக்கு வூட்டுல ரொம்ப இஷ்டம். வுட்டுப்புடக் கூடாதுன்னு நெனைக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாரும்பீ! நீயா போட்டு இழுத்துக்கிடற மாதிரிக்கித் தெரியுது. இவனுக்குல்லாம் ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டாம். நாமளே அஞ்ஞ விருத்தியூர்ல கொழுந்தேம் மவ்வே ஒண்ணு கெடக்கான்னு சொல்லி நாலைஞ்சு பேத்துக்கிட்ட மாப்புளப் பாக்க சொல்லிருந்தேம். அப்பிடியே கொடுக்குறதுன்னு முடிவானாலும் நகெ நட்டுன்னு ரொம்பல்லாம் போடாதே. கெழட்டுப் பயலுக்கு நகெ நட்ட வேற போட்டுக் கட்டிக் கொடுப்பாங்களாக்கும்? ஏதோ சொந்தம்ன்னு பொண்ண கொடுக்குறதே பெரிசு!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            பாவம் சுப்பு வாத்தியாரு நடந்த கதையில எதெச் சொல்றதுன்னு புரியாம தவிச்சுப் போயிட்டாரு. நடந்ததுல ஒரு விசயத்தச் சொன்னாலும் போதும், இந்த எடத்துலயே மேக்கொண்டு எதுவும் நடக்க முடியாத அளவுக்கு விருத்தியூரு பெரிம்மா, எங்க வூட்டுப் பொண்ணையெல்லாம் கொடுக்க முடியாது, வேற எடத்துல பொண்ண பாத்துக்கிடுங்கடான்னு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு அடிச்சி விட்டுப்புடும். அப்படியாயிட்டா வெங்குவச் சமாளிக்கிறது சுப்பு வாத்தியாருக்கு பிரம்ம பிரயத்தனமா போயிடும். இதுக்குத்தாங் ஒங்கப் பக்கத்து சனங்க இதுக்கெல்லாம் வார வேணாம்ன்னு சொன்னேம்ன்னு வெங்கு ஆரம்பிச்சிடும். அதுக்காக வேற மாதிரியான வெளக்கத்த கையில எடுத்தாரு சுப்பு வாத்தியாரு.
            "கஷ்டப்பட்ட குடும்பத்துலேந்து வந்திருக்காம். குடும்ப செருமங்க தெரிஞ்ச பக்குவமான பையனா இருப்பாம்ன்னு பாத்துக் கொடுக்குறதுதாங். பொண்ண நல்ல வெதமா வெச்சிப்பாங்ற நம்பிக்கெதாம். கொஞ்சம் வயசு கூட இருந்தாலும் பொண்ணு மாப்புள ரண்டு பேத்தும் நல்ல வெதமா குடித்தனத்த நடத்துனா செரிதாங்! நம்ம மவ்வேனுக்கும் பிற்காலத்துல ஒரு தொணையா இருப்பாம்ன்னு ஒரு நம்பிக்கெதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "முடிவெ பண்ணிட்டே! பெறவு நாம்ம பேசுறதுக்கு ஒண்ணுமில்லே! ஏஞ் சொல்றேன்னா இந்த மாதிரிக்கிப் பயலுவோ வெளியில பொண்ணப் பாத்துட்டு செரியா அமையாம சோந்தத்துல நம்மகிட்டெ பொண்ண கட்டிக்கிட்டு, நம்மகிட்டெ காசி பணத்தெ அள்ளிட்டுப் போறதுல நிப்பானுங்க. சந்தையில எளசான கத்திரிக்கும், வெண்டிக்கும்தாம் கிராக்கி இருக்கும். முத்துன கத்திரிக்காயையும், வெண்டிக்காயையும் எவ்வேம் வாங்குவாம்? எவனாச்சும் இளிச்சவாயந்தாம் வாங்குவாம்! நகெ நட்டுன்னு பேசுறப்போ நாம்ம நின்னு பேசி வுடுறேம். நீயி அவ்சரப்பட்டு வாய வுட்டுப்புடாதே!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            சுப்பு வாத்தியாரு உண்மையிலயே அதிசயச்சுப் போயிட்டாரு. பணங்காசி விசயத்துல தலைய தடவுறதுல பெரிய ஆளு அண்ணியாருங்றதெ நெனைச்சி மலைச்சிப் போனாரு சுப்பு வாத்தியாரு. எவ்வளவு சரியா இந்த ஒலகத்தெ பத்தி மனசுக்குள்ள திட்டம் பண்ணி வெச்சிருக்காங்க தன்னோட அண்ணின்னு நெனைச்சப்போ தெகைப்பு மேல தெகைப்புதாங் சுப்பு வாத்தியாருக்கு. சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்குன்னு பொதுவா இருந்த பரம்பரைச் சொத்தான விருத்தியூர்ல வூடு இருக்குற எடத்தையே அவுங்க பேர்ல சாமர்த்தியமா மாத்துன ஆளாச்சே. அத்தோட ஆவணத்துல குடும்பச் சொத்தா இருந்த நில புலத்தெ சுப்பு வாத்தியாருக்குக் கொடுக்கணும்ன்னு வேலங்குடியில கூட்டுச் சேந்துகிட்டு நெலத்த வாங்கி எந்தப் பக்கமும் ஒண்ணுமில்லாம அடிச்ச ஆளாச்சே. அதெயெல்லாம் அப்ப சுப்பு வாத்தியாரு பெரிசா எடுத்துக்கிடாம, ஒறவுதாங் முக்கியம்ன்னு நெனைச்சதால இன்னும் விருத்தியூரு ஒறவு நெலைச்சி நிக்குது. அப்போ அப்பிடி நெனைச்சது போல இப்பயும் பொண்ணு விசயத்துல பணங் காசியப் பெரிசா நெனைக்காம இருந்தாத்தாம் பொண்ணுக்கு வெங்கு நெனைக்குறாப்புல ஒரு நல்ல எடத்துல கதையெ முடிச்சி வுட முடியும்ன்னு தனக்குள்ள ஒரு சாமாதானத்த தேடிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            மவனோட கலியாணத்தைச் சுப்பு வாத்தியாரு விருத்தியூரு செயராமு பெரிப்பா, பத்மா பெரிம்மாவ முன்னே வெச்சு செஞ்சதெப் போல, இப்போ பொண்ணோட கலியாணத்ததையும் அவுங்கள முன்னெ வெச்சுத்தாம் நல்ல வெதமா முடிக்கணும்ங்ற நெனைப்பும் வந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.
            "ன்னவோப்பா! ஒனக்குப் பிடிச்சிருக்குங்றதால நாமளும் ஒத்துக்கிடறேம். சொந்த பந்தம்ன்னு வேற சொல்லுதீயா? பெறவு நாமளே பொண்ண கொடுக்கலன்னா பெறத்தியாரு எவ்வேம் கொடுப்பாம்ன்னு நெனைக்க வேண்டிக் கெடக்கு. செரித்தாங் தொலைஞ்சிட்டுப் போறாம் போ!"ன்னுச்சு கடெசீயா பத்மா பெரிம்மா.
            பத்மா பெரிம்மாவும், சுப்பு வாத்தியாரும் தனியா போயிப் பேசிட்டு இருக்குறதெப் பாத்த வெங்குவுக்கு மனசுக்குள்ள பயம் வர்ற ஆரம்பிச்சிது. எங்கே பொண்ணோட கலியாணத்தப் பத்தி எதாச்சிம் சொல்லிக் கலைச்சி வுட்டுப்புடுவாங்களோன்னு. சுப்பு வாத்தியாரு பத்மா பெரிம்மாகிட்டேந்து பேசிட்டு வந்த ஒடனே வெங்கு ஓடியாந்துச்சு, "ஒஞ்ஞ யண்ணி என்னத்தெ கொளுத்திப் போடுறாங்க?"ன்னுச்சு.
            "மாப்புள்ளைக்கு வயசுதாங் கூட இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மொல்லமா.
            "அதல்லாம் ஒண்ணும் நெனைக்க வேண்டியதில்லா. பொண்ணையும் மாப்புள்ளையையும் சேத்து வெச்சா சோடி செரியத்தாம் இருக்கும். வேற ன்னா கொறையச் சொன்னாங்க?"ன்னுச்சு வெங்கு.
            "வேற ஒண்ணும் சொல்லல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "சொல்லிருப்பாங்க! சொல்லுங்க!"ன்னுச்சு வெங்கு.
            "வேணும்ன்னா கேட்டுட்டு வந்துச் சொல்லட்டுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. வெங்கு ஒரு மொறைப்பு மொறைச்சிட்டு, "இந்தக் குசும்புக்கு ஒண்ணும் கொறைச்சலு யில்ல. அவுங்க எதோ சொல்லிருக்காங்க. அதெ மறைக்கப் பாக்குதீயே?"ன்னுச்சு வெங்கு.
            "ஒண்ணுஞ் சொல்லலங்றேம்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நகெ நெட்டுல்லாம் கூடப் போடக் கூடாதுன்னு சொன்னாங்களா இல்லியா?"ன்னுச்சு வெங்கு.
            சுப்பு வாத்தியாரு பெண்டுகளோட மனநெலை ஊகிக்கிறதெ நெனைச்சு ஆச்சரியப்படுறதா, எரிச்சல்படுறதாங்ற நெலையில இருந்தாரு. ஒண்ணுத்தையும் பேசாம மொகத்தை உம்முன்னு வெச்சிக்கிட்டாரு. அப்பத்தாங் செயராமு பெரிப்பா கிட்டத்துல வந்து, "ஏம்டாம்பீ! வூடுல்லாம் மாப்புளைக்கிச் சொந்த வூடுதானடா?"ன்னுச்சு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "வாடகெ வூடுதாண்ணே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னடாம்பீ! ஒரு டாக்கடர்ருங்றே! சொந்த வூடு ல்லன்னா எப்புடிடா? நம்ம காலத்துல ஒண்ணு உத்தியோகம் இருக்கணும், ல்லன்னா சொந்தமா நெலபுலம், சொந்த வூடு இருக்கணுமேடா, அப்பதாங் பொண்ண கொடுக்குறது. நீயி உத்தியோகத்தெ நெனைச்சி முடிவு பண்ணிட்டே போலருக்கு!"ன்னுச்சு பெரிப்பா.
            "எடமெல்லாம் ப்ளாட்டா வாங்கிப் போட்டு இருக்கு. வூட்டெ கட்டணும்!"ன்னு வெங்கு மாப்புள வூட்ட வுட்டுக் கொடுக்காம ஒரு பொய்ய அவித்து வுட்டுச்சு. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கு எரிச்சல் தாங்க முடியல. ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம நின்னாரு.
            "எடம் இருக்கா? பெறவென்னா நல்ல எடந்தாம் அப்பிடின்னா கட்டிக் கொடு!"ன்னுச்சு செயராமு பெரிப்பா. அதுக்கு மாப்புளப் பாக்குறதுல அப்பிடி ஒரு கணக்கு.
            இப்படியா ஆளாளுக்கு சுப்பு வாத்தியாரோட பல வெதமா பேசிட்டு இருந்தப்போ மணி பதினொண்ணே முக்கால தாண்டிடுச்சு. பன்னெண்டு மணிக்குள்ள கெளம்பியாவணுமேன்னு சனங்கள வேக வேகமா கெளப்பி வேனுல ஏறச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. அஞ்சு நிமிஷந்தாம் சனங்க ஒவ்வொண்ணும் ஏறி உக்காந்து, ராசாமணி தாத்தாகிட்டெயும், லாலு மாமாகிட்டெயும் உத்தரவ வாங்கிக்கிட்டு, வண்டியக் கெளப்பிட்டு பாக்குக்கோட்டை சிங்கப்பூரு காலனியிலேந்து நகர ஆரம்பிச்சாங்க மாப்புள்ளையப் பாக்க வந்த சனங்க ஒவ்வொண்ணும். வேன் ஆர்குடி வந்தப்போ ஒரு மணி ஆயிடுச்சு. ஆர்குடி வசந்தபவன் ஓட்டல்ல நிறுத்தி எல்லாத்துக்கும் மத்தியானச் சாப்பாட்ட முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. ஆர்குடியிலேந்து திட்டைக்கு வேன்ல வர்ற வரைக்கும் பல வெதமான பேச்சுக. வூடு வந்து சேந்தப்போ மணி மூணு ஆயிருந்துச்சு.
            போறப்ப பஸ்ஸூல ஒரசிட்டுக் கம்பி ஒடைஞ்ச மொத வேனுகார்ர டிரைவர்கிட்டெ சுப்பு வாத்தியாரு பேசுன காசியோட ஆயிரத்து ஐநூத்து ரூவாயக் கூடுதால எடுத்து வெச்சாரு. மொதல்ல அதெ அந்த டிரைவரு வாங்க மறுத்தாம். சுப்பு வாத்தியாரு, "நம்ம வூட்டுத் தேவைக்கு வந்துப்புட்டு மனக்கொறையோட போவக் கூடாது! வண்டியில ஒரு கம்பிப் பேந்து செலவாயிடுச்சேன்னு நெனைச்சுட்டு நீஞ்ஞ கெளம்பக் கூடாது! மனசு நெறைவா நல்ல வெதமா கெளம்பணும்!"ன்னு மல்லுகட்டுனதெ பாத்துட்டு ஐநூத்து ரூவாய சுப்பு வாத்தியார்ட்டெ கொடுத்துட்டு, ஆயிரத்து ரூவாய மட்டும் எடுத்துக்கிட்டாரு வேன் டிரைவரு. 
            வேன வுட்டு எறங்கி வூட்டுக்கு வந்தும் சனங்க ஒரு சின்னதா ஒரு தூக்கத்தப் போட்டுட்டு மாப்புள்ளையப் பாத்துட்டு வந்ததெ பத்திப் பலவெதமா பேசிட்டு ராத்திரி தங்கி மறுநாளுதாங் கெளம்பிப் போனுச்சுங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வெதமான கருத்துகளச் சொன்னுச்சுங்க. அதுல பொதுவா டாக்கடர்ங்றதுக்காக ரொம்ப மல்லுகட்டிக்கிட்டுச் சிலவெ பண்ணிட வாணாங்ற கருத்துதாம் எல்லார்கிட்டெயும் இருந்துச்சு. அவுங்கள்ல யாருக்குமே சுப்பு வாத்தியாரு வசமா மாட்டியிருக்குற விசயம் தெரியாது. கலியாணச் சிலவு, நகெ நட்டுக்கான பேச்சு வார்த்தெ ஓரளவுக்கு முடிஞ்சி உத்திரவாதம் ஆன பெற்பாடுதாங் பொண்ணு மாப்புள பாக்குற சங்கதியே நடந்துச்சுங்றது அவுங்கள்ல பல பேத்துல யாருக்குத் தெரியும்?
            கெளம்பிப் போறப்போ பத்மா பெரிம்மா ஒரு வார்த்தையச் சொன்னுச்சு, "பொண்ண கலியாணம் பண்ணிக் கொடுக்குறே. தொடந்தாப்புல தாலி பெருக்கிப் போடுறது, வளைகாப்பு, புள்ளைப்பேறுன்னு செலவுதாங். ஒரே அடியா கலியாணத்துல காசிய வுட்டுப்புடாம சூதானமா இருந்துக்கோணும் பாத்துக்கோ!"ன்னுச்சு. சுப்பு வாத்தியாரு தலைய மட்டும் ஆட்டிக்கிட்டாரு. வேற பேசுறதுக்கு அவர்கிட்டெ வார்த்தைக யில்ல.
*****