பழக்க
வழக்கத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்!
எச்சில துப்பாம இருக்குறது நம்ம சனங்களுக்கு ரொம்ப கஷ்டம்.
கொரோனா வந்து மாஸ்க்க போட வெச்சு அது கொறைஞ்சிருக்கும்ன்னு பாத்தா வாய்ப்பே இல்ல.
அதெ அளவு, அவ்வளவு இடங்கள். அதெப்படி? மாஸ்க்கைத் தூக்கிட்டு துப்புறது ஒண்ணும் பெரிய
காரியமில்லையே!
எச்சிலத் துப்பாதே கொரோனா பரவும்ங்றாங்க. நாம்ம துப்புற எச்சிலாலத்தான்
கொரோனாவே பரவலன்னு நெனைக்கிறேம்ங்றாம் நம்ம ஆளு. நம்ம எச்சில் அவ்ளோ பவர்புல் கிருமிநாசினியா
இருக்கணும்ங்றாம் கூடுதல் தகவலா. அவ்வேம் சொல்றத கேட்டாக்கா, துப்புற எடத்துல ஒரு
கொரோனா கிருமி இருந்தாலும் செத்துடும் போலருக்கு. அப்புறம் பல பேர்ர பாக்குறப்போ,
எச்சிலைத் துப்பித்தாம் சானிடைசர்ரப் போல தொடைச்சிக்கிறாம். ஏம் பாஸ் இப்பிடின்னா?
யாரும் கையக் கொடுன்னு முன்னாடி வந்து நிக்க மாட்டாம் பாருங்கங்றாம். பண்ணுறதையும்
பண்ணிப்புட்டு அதுல இப்பிடி ஒரு எச்சரிக்கெ வேற. சொல்ல முடியாது நம்ம எச்சில்ல கூட
கொரோனாவ அழிக்கிற வேதிப்பொருள் இருக்கும்ன்னு நம்புறாம். நம்ம சனங்களோட கொரோனா
குசும்புக்கு அந்தக் கிருமியே விழுந்து விழுந்து சிரிக்கும் போலருக்கு.
ஒரு தெருவத் தாண்டி அந்தாண்ட தெருவுக்குப் போறதுக்குள்ள தெருவோராம
ஏகப்பட்ட முகக்கவசங்களப் பாக்க முடியுது. அதுவும் அந்த நீல நெறத்து சர்ஜிக்கல் முகக்கவசம்
வெளுத்துப் போயி அம்புட்டுக் கெடக்குது குப்பையப் போல. அதெ எடுத்துதாம் நம்ம தெருவோரக்
கொழந்தைங்க மொகத்துல மாட்டிக்கிட்டு வெளையாடுதுங்க. திருடன் போலீஸ் வெளையாட்டப்
போல முகக்கவசம் போடாம வர்றவங்கள போலீஸ் பிடிக்கிறாப்புல அது ஒரு வெளையாட்டு.
நம்ம நாட்டுல எது எதுவோ தெருவோரம் கெடக்குற குப்பையாகி, பயன்படுத்துன
நாப்கின், டயாப்பர்ல ஆரம்பிச்சு இப்போ முகக்கவசமும் அங்கங்க கெடக்குற குப்பையா ஆயிட்டு
இருக்குது. குப்பைகளக் குப்பைத் தொட்டியச் சுத்திப் போடுறதே பழக்கமாகவும் போயிடுச்சு.
இப்போ இருக்குற நெலமையில பயன்படுத்தித் தேவையில்லன்னு தூக்கிப்
போடுற முகக்கவசங்கள இப்பிடித் தெருவோராம தூக்கிப் போடுற பழக்கத்தையும், தெருவப்
பாத்தாலே எச்சில துப்புற பழக்கத்தையும் விட்டா நல்லாத்தாம் இருக்கும். இதெப் பத்திச்
சொன்னாவே ரொம்பவும் கோபப்படுறாங்க நம்ம மக்கா. நாங்க என்ன வேணும்ன்னா பண்ணுறோம்ன்னு
எதிர்கேள்விக் கேக்குறதோட, அதெல்லாம் அப்பிடித்தாம் பழகிப் போயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டெ
போயிக்கிட்டெ இருக்காங்க. அத்தோட இதால எல்லாம் கொரோனா பரவாது, இப்பிடி அங்கங்க
நின்னு பேசுறதெ நிப்பாட்டிப்புட்டு மொதல்ல வூடடங்கி உக்காரு, அப்பிடி வூட்டுல இருந்தாத்தாம்
கொரோனா பரவாதுங்ற அறிவுரையையும் அள்ளி வீசிக்கிட்டெ போயிட்டு இருக்காங்க. அதுவும்
சரித்தாம் இப்பிடி தெருவுல எறங்கி எச்சில ஒட்டிக்கிட்டு, காத்துல பறந்து வர்ற மொகக்கவசம்
மேல படுறப்பத்தாம் கொரோனா பரவும், அதால வீடடங்கி உக்காரணும்ங்ற ஒரு கருத்த இதன் மூலமா
சொல்ல வர்றாங்க போல நம்ம மக்கா.
நம்ம மக்கா என்னைக்குத் தங்களோ பழக்க வழக்கத்தெ விட்டுக் கொடுத்திருக்காங்க
சொல்லுங்க! ரத்தத்துல இருக்குற சிவப்பு நெறமும், பழக்க வழக்கமும் ரத்தத்தோட ரத்தமா
கலந்ததுதாம் போங்க!
*****
No comments:
Post a Comment