1 Aug 2020

கெழட்டுப் பய மாப்புள்ள!

செய்யு - 523

            பொண்ணு மாப்புள பாக்குறதுல இருக்குற அதெ வழக்கமான டிரேட்மார்க்குதாம் பாக்குக்கோட்டையிலயும் நடந்துச்சு. கேசரியில இனிப்பு, பஜ்ஜியில காரம், காப்பியில பானம்ன்னு முடிஞ்சது. ஓரளவுக்கு எதிர்பாத்தாப்புல சீக்கிரமே வந்துட்டதால வேனை எடுத்துக்கிட்டு கெளம்புறதுக்கு நேரமிருந்துச்சு. பத்தே காலுக்கு எறங்கி பதினோரு மணிக்குள்ளார எல்லாமும் முடிஞ்சிடுச்சு. பதினொண்ணரைக்கு மேல வேன எடுத்துக்கிட்டுக் கெளம்பிடுவோம்ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதுவரைக்கும் வூட்டுக்குள்ளாரயும், வெளியிலயும் போட்டிருந்த நாற்காலியில பதிவிசா உக்காந்திருந்த சனங்க, சிங்கப்பூரு காலனிக்கு எதுத்தாப்புல கெடந்த எடத்துல அங்கங்க வெரவிப் போயி கதெ பேச ஆரம்பிச்சதுங்க. சனங்க ஒவ்வொண்ணும் அததுக்கு மாப்புள்ளயப் பாத்ததும் தோணுன கருத்துகளெ பேசிக்க ஆரம்பிச்சதுங்க.
            ஒரு சில சனங்க மாப்புள்ள செவப்பா நல்லா இருக்குறதா சொன்னுச்சுங்க. ஒரு சில சனங்க மாப்புள்ளைக்குத் தொப்பை இருக்கறதா சொன்னுச்சுங்க. ஒரு சில சனங்க மாப்புள்ளெ மொகத்துல கெழடு தட்டுனாப்புல தோணுறதா சொன்னுச்சுங்க. வூடு எடமெல்லாம் பெரிசா இருக்குறதாவும், சொந்த எடமான்னு சில சனங்க கேட்டுகிட்டு நின்னுச்சுங்க. காப்பியில கசப்பு அதிகம்ன்னு சில சனங்க பேசுனுச்சுங்க. பஜ்ஜியச் சாப்புட்டதிலேந்து வவுறு ஒரு மாதிரியா இருக்குறதா சில சனங்க கக்கூச தேடிட்டு நின்னுச்சுங்க. டாக்கடர்ர மாப்புள்ளயாப் பாத்துப் பிடிக்கிறதுன்னா பெரிய விசயந்தாம்ன்னு சில சனங்க அசந்துப் போயிப் பேசுனுச்சுங்க. அதுல ஒரு சில சனங்க தங்களுக்கு இருக்குற நோய்ப்பாடுகளச் சொல்லி பாலாமணிகிட்டெ வைத்தியம் பாக்கலாமாங்ற மாதிரிக்கும் ஆராய்ச்சியப் பண்ணிட்டு இருந்துச்சுங்க. பரவாயில்ல மாப்புள்ள பக்கத்துலயும், சொந்தத்துலயும் அமைஞ்சிட்டுன்னு சில சனங்க சந்தோஷப்பட்டுக்கிட்டுங்க. பெறவு அதே சனங்களே மாப்புள்ள சென்னையிலல்லா வேலையில இருக்காருன்னு அதையும் சொல்லிக்கிட்டு, நம்மப் பொண்ணு சென்னையில போயி குடித்தனம் நடத்தப் போவுதுன்னு அதெ பெரிசா பேசிக்கிட்டுங்க. இப்படி பல வெதமா சனங்க பேசிட்டுக் கெடந்துச்சுங்க.
            வெங்கு வகையறா சனங்க எல்லாத்துக்கும் பாலாமணி தெரிஞ்ச ஆளுதாம். விருத்தியூரு, வேலங்குடி சனங்கத்தாம் பாலாமணியப் பாத்ததில்ல. பாலாமணியப் பாத்துப்புட்டு, விருத்தியூரு பத்மா பெரிம்மா சுப்பு வாத்தியார்ர தனியா அழைச்சிட்டுப் போயி கேட்டுச்சு, "பயெ ன்னா பாக்க கெழட்டுப் பயலாட்டாம் இருக்காம். இவனெ போயி மாப்புளன்னு பாக்க கூட்டியாந்திருக்கீயே?"ன்னு. இப்பிடிப் பொட்டுன்னு அடிச்சி, பொசுக்குன்னு கேட்டாக்கா என்னத்தெ பதிலெச் சொல்றதுன்னு சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டாரு.
            "மெதுவா பேசுங்க யண்ணி! யாரு காதுலாச்சும் விழுந்துடப் போவுது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பக்கத்துல யாரு இருக்கா கேக்குறதுக்கு? அப்பிடிக் கேட்டாத்தாங் கேட்டுட்டுப் போவட்டுமே! யில்லாததையும் பொல்லாததையுமா பேசுறேம்? ஒம் மவ்வேனுக்கும், மவ்வேளுக்குமே வயசு ரொம்ப வித்தியாசம். இவனெப் பாத்தா கலியாணமாயி புள்ளையப் பெத்துப்புட்ட ஒம் மவ்வேன தாண்டி நாலஞ்சு வயசுக்கு மேல மூப்பா இருப்பாம் போலருக்கே? ஏம் இந்த வேலயப் பாத்து வெச்சுருக்கே?"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            "கவர்மெண்டு டாக்கடர்ரா இருக்காங்றதுதாங் காரணம். வெங்குவோட வகையறாவுல வர்றதால அதுக்கு வூட்டுல ரொம்ப இஷ்டம். வுட்டுப்புடக் கூடாதுன்னு நெனைக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இந்தாரும்பீ! நீயா போட்டு இழுத்துக்கிடற மாதிரிக்கித் தெரியுது. இவனுக்குல்லாம் ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டாம். நாமளே அஞ்ஞ விருத்தியூர்ல கொழுந்தேம் மவ்வே ஒண்ணு கெடக்கான்னு சொல்லி நாலைஞ்சு பேத்துக்கிட்ட மாப்புளப் பாக்க சொல்லிருந்தேம். அப்பிடியே கொடுக்குறதுன்னு முடிவானாலும் நகெ நட்டுன்னு ரொம்பல்லாம் போடாதே. கெழட்டுப் பயலுக்கு நகெ நட்ட வேற போட்டுக் கட்டிக் கொடுப்பாங்களாக்கும்? ஏதோ சொந்தம்ன்னு பொண்ண கொடுக்குறதே பெரிசு!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            பாவம் சுப்பு வாத்தியாரு நடந்த கதையில எதெச் சொல்றதுன்னு புரியாம தவிச்சுப் போயிட்டாரு. நடந்ததுல ஒரு விசயத்தச் சொன்னாலும் போதும், இந்த எடத்துலயே மேக்கொண்டு எதுவும் நடக்க முடியாத அளவுக்கு விருத்தியூரு பெரிம்மா, எங்க வூட்டுப் பொண்ணையெல்லாம் கொடுக்க முடியாது, வேற எடத்துல பொண்ண பாத்துக்கிடுங்கடான்னு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு அடிச்சி விட்டுப்புடும். அப்படியாயிட்டா வெங்குவச் சமாளிக்கிறது சுப்பு வாத்தியாருக்கு பிரம்ம பிரயத்தனமா போயிடும். இதுக்குத்தாங் ஒங்கப் பக்கத்து சனங்க இதுக்கெல்லாம் வார வேணாம்ன்னு சொன்னேம்ன்னு வெங்கு ஆரம்பிச்சிடும். அதுக்காக வேற மாதிரியான வெளக்கத்த கையில எடுத்தாரு சுப்பு வாத்தியாரு.
            "கஷ்டப்பட்ட குடும்பத்துலேந்து வந்திருக்காம். குடும்ப செருமங்க தெரிஞ்ச பக்குவமான பையனா இருப்பாம்ன்னு பாத்துக் கொடுக்குறதுதாங். பொண்ண நல்ல வெதமா வெச்சிப்பாங்ற நம்பிக்கெதாம். கொஞ்சம் வயசு கூட இருந்தாலும் பொண்ணு மாப்புள ரண்டு பேத்தும் நல்ல வெதமா குடித்தனத்த நடத்துனா செரிதாங்! நம்ம மவ்வேனுக்கும் பிற்காலத்துல ஒரு தொணையா இருப்பாம்ன்னு ஒரு நம்பிக்கெதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "முடிவெ பண்ணிட்டே! பெறவு நாம்ம பேசுறதுக்கு ஒண்ணுமில்லே! ஏஞ் சொல்றேன்னா இந்த மாதிரிக்கிப் பயலுவோ வெளியில பொண்ணப் பாத்துட்டு செரியா அமையாம சோந்தத்துல நம்மகிட்டெ பொண்ண கட்டிக்கிட்டு, நம்மகிட்டெ காசி பணத்தெ அள்ளிட்டுப் போறதுல நிப்பானுங்க. சந்தையில எளசான கத்திரிக்கும், வெண்டிக்கும்தாம் கிராக்கி இருக்கும். முத்துன கத்திரிக்காயையும், வெண்டிக்காயையும் எவ்வேம் வாங்குவாம்? எவனாச்சும் இளிச்சவாயந்தாம் வாங்குவாம்! நகெ நட்டுன்னு பேசுறப்போ நாம்ம நின்னு பேசி வுடுறேம். நீயி அவ்சரப்பட்டு வாய வுட்டுப்புடாதே!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.
            சுப்பு வாத்தியாரு உண்மையிலயே அதிசயச்சுப் போயிட்டாரு. பணங்காசி விசயத்துல தலைய தடவுறதுல பெரிய ஆளு அண்ணியாருங்றதெ நெனைச்சி மலைச்சிப் போனாரு சுப்பு வாத்தியாரு. எவ்வளவு சரியா இந்த ஒலகத்தெ பத்தி மனசுக்குள்ள திட்டம் பண்ணி வெச்சிருக்காங்க தன்னோட அண்ணின்னு நெனைச்சப்போ தெகைப்பு மேல தெகைப்புதாங் சுப்பு வாத்தியாருக்கு. சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்குன்னு பொதுவா இருந்த பரம்பரைச் சொத்தான விருத்தியூர்ல வூடு இருக்குற எடத்தையே அவுங்க பேர்ல சாமர்த்தியமா மாத்துன ஆளாச்சே. அத்தோட ஆவணத்துல குடும்பச் சொத்தா இருந்த நில புலத்தெ சுப்பு வாத்தியாருக்குக் கொடுக்கணும்ன்னு வேலங்குடியில கூட்டுச் சேந்துகிட்டு நெலத்த வாங்கி எந்தப் பக்கமும் ஒண்ணுமில்லாம அடிச்ச ஆளாச்சே. அதெயெல்லாம் அப்ப சுப்பு வாத்தியாரு பெரிசா எடுத்துக்கிடாம, ஒறவுதாங் முக்கியம்ன்னு நெனைச்சதால இன்னும் விருத்தியூரு ஒறவு நெலைச்சி நிக்குது. அப்போ அப்பிடி நெனைச்சது போல இப்பயும் பொண்ணு விசயத்துல பணங் காசியப் பெரிசா நெனைக்காம இருந்தாத்தாம் பொண்ணுக்கு வெங்கு நெனைக்குறாப்புல ஒரு நல்ல எடத்துல கதையெ முடிச்சி வுட முடியும்ன்னு தனக்குள்ள ஒரு சாமாதானத்த தேடிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            மவனோட கலியாணத்தைச் சுப்பு வாத்தியாரு விருத்தியூரு செயராமு பெரிப்பா, பத்மா பெரிம்மாவ முன்னே வெச்சு செஞ்சதெப் போல, இப்போ பொண்ணோட கலியாணத்ததையும் அவுங்கள முன்னெ வெச்சுத்தாம் நல்ல வெதமா முடிக்கணும்ங்ற நெனைப்பும் வந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு.
            "ன்னவோப்பா! ஒனக்குப் பிடிச்சிருக்குங்றதால நாமளும் ஒத்துக்கிடறேம். சொந்த பந்தம்ன்னு வேற சொல்லுதீயா? பெறவு நாமளே பொண்ண கொடுக்கலன்னா பெறத்தியாரு எவ்வேம் கொடுப்பாம்ன்னு நெனைக்க வேண்டிக் கெடக்கு. செரித்தாங் தொலைஞ்சிட்டுப் போறாம் போ!"ன்னுச்சு கடெசீயா பத்மா பெரிம்மா.
            பத்மா பெரிம்மாவும், சுப்பு வாத்தியாரும் தனியா போயிப் பேசிட்டு இருக்குறதெப் பாத்த வெங்குவுக்கு மனசுக்குள்ள பயம் வர்ற ஆரம்பிச்சிது. எங்கே பொண்ணோட கலியாணத்தப் பத்தி எதாச்சிம் சொல்லிக் கலைச்சி வுட்டுப்புடுவாங்களோன்னு. சுப்பு வாத்தியாரு பத்மா பெரிம்மாகிட்டேந்து பேசிட்டு வந்த ஒடனே வெங்கு ஓடியாந்துச்சு, "ஒஞ்ஞ யண்ணி என்னத்தெ கொளுத்திப் போடுறாங்க?"ன்னுச்சு.
            "மாப்புள்ளைக்கு வயசுதாங் கூட இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மொல்லமா.
            "அதல்லாம் ஒண்ணும் நெனைக்க வேண்டியதில்லா. பொண்ணையும் மாப்புள்ளையையும் சேத்து வெச்சா சோடி செரியத்தாம் இருக்கும். வேற ன்னா கொறையச் சொன்னாங்க?"ன்னுச்சு வெங்கு.
            "வேற ஒண்ணும் சொல்லல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "சொல்லிருப்பாங்க! சொல்லுங்க!"ன்னுச்சு வெங்கு.
            "வேணும்ன்னா கேட்டுட்டு வந்துச் சொல்லட்டுமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. வெங்கு ஒரு மொறைப்பு மொறைச்சிட்டு, "இந்தக் குசும்புக்கு ஒண்ணும் கொறைச்சலு யில்ல. அவுங்க எதோ சொல்லிருக்காங்க. அதெ மறைக்கப் பாக்குதீயே?"ன்னுச்சு வெங்கு.
            "ஒண்ணுஞ் சொல்லலங்றேம்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நகெ நெட்டுல்லாம் கூடப் போடக் கூடாதுன்னு சொன்னாங்களா இல்லியா?"ன்னுச்சு வெங்கு.
            சுப்பு வாத்தியாரு பெண்டுகளோட மனநெலை ஊகிக்கிறதெ நெனைச்சு ஆச்சரியப்படுறதா, எரிச்சல்படுறதாங்ற நெலையில இருந்தாரு. ஒண்ணுத்தையும் பேசாம மொகத்தை உம்முன்னு வெச்சிக்கிட்டாரு. அப்பத்தாங் செயராமு பெரிப்பா கிட்டத்துல வந்து, "ஏம்டாம்பீ! வூடுல்லாம் மாப்புளைக்கிச் சொந்த வூடுதானடா?"ன்னுச்சு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
            "வாடகெ வூடுதாண்ணே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னடாம்பீ! ஒரு டாக்கடர்ருங்றே! சொந்த வூடு ல்லன்னா எப்புடிடா? நம்ம காலத்துல ஒண்ணு உத்தியோகம் இருக்கணும், ல்லன்னா சொந்தமா நெலபுலம், சொந்த வூடு இருக்கணுமேடா, அப்பதாங் பொண்ண கொடுக்குறது. நீயி உத்தியோகத்தெ நெனைச்சி முடிவு பண்ணிட்டே போலருக்கு!"ன்னுச்சு பெரிப்பா.
            "எடமெல்லாம் ப்ளாட்டா வாங்கிப் போட்டு இருக்கு. வூட்டெ கட்டணும்!"ன்னு வெங்கு மாப்புள வூட்ட வுட்டுக் கொடுக்காம ஒரு பொய்ய அவித்து வுட்டுச்சு. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கு எரிச்சல் தாங்க முடியல. ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம நின்னாரு.
            "எடம் இருக்கா? பெறவென்னா நல்ல எடந்தாம் அப்பிடின்னா கட்டிக் கொடு!"ன்னுச்சு செயராமு பெரிப்பா. அதுக்கு மாப்புளப் பாக்குறதுல அப்பிடி ஒரு கணக்கு.
            இப்படியா ஆளாளுக்கு சுப்பு வாத்தியாரோட பல வெதமா பேசிட்டு இருந்தப்போ மணி பதினொண்ணே முக்கால தாண்டிடுச்சு. பன்னெண்டு மணிக்குள்ள கெளம்பியாவணுமேன்னு சனங்கள வேக வேகமா கெளப்பி வேனுல ஏறச் சொன்னாரு சுப்பு வாத்தியாரு. அஞ்சு நிமிஷந்தாம் சனங்க ஒவ்வொண்ணும் ஏறி உக்காந்து, ராசாமணி தாத்தாகிட்டெயும், லாலு மாமாகிட்டெயும் உத்தரவ வாங்கிக்கிட்டு, வண்டியக் கெளப்பிட்டு பாக்குக்கோட்டை சிங்கப்பூரு காலனியிலேந்து நகர ஆரம்பிச்சாங்க மாப்புள்ளையப் பாக்க வந்த சனங்க ஒவ்வொண்ணும். வேன் ஆர்குடி வந்தப்போ ஒரு மணி ஆயிடுச்சு. ஆர்குடி வசந்தபவன் ஓட்டல்ல நிறுத்தி எல்லாத்துக்கும் மத்தியானச் சாப்பாட்ட முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. ஆர்குடியிலேந்து திட்டைக்கு வேன்ல வர்ற வரைக்கும் பல வெதமான பேச்சுக. வூடு வந்து சேந்தப்போ மணி மூணு ஆயிருந்துச்சு.
            போறப்ப பஸ்ஸூல ஒரசிட்டுக் கம்பி ஒடைஞ்ச மொத வேனுகார்ர டிரைவர்கிட்டெ சுப்பு வாத்தியாரு பேசுன காசியோட ஆயிரத்து ஐநூத்து ரூவாயக் கூடுதால எடுத்து வெச்சாரு. மொதல்ல அதெ அந்த டிரைவரு வாங்க மறுத்தாம். சுப்பு வாத்தியாரு, "நம்ம வூட்டுத் தேவைக்கு வந்துப்புட்டு மனக்கொறையோட போவக் கூடாது! வண்டியில ஒரு கம்பிப் பேந்து செலவாயிடுச்சேன்னு நெனைச்சுட்டு நீஞ்ஞ கெளம்பக் கூடாது! மனசு நெறைவா நல்ல வெதமா கெளம்பணும்!"ன்னு மல்லுகட்டுனதெ பாத்துட்டு ஐநூத்து ரூவாய சுப்பு வாத்தியார்ட்டெ கொடுத்துட்டு, ஆயிரத்து ரூவாய மட்டும் எடுத்துக்கிட்டாரு வேன் டிரைவரு. 
            வேன வுட்டு எறங்கி வூட்டுக்கு வந்தும் சனங்க ஒரு சின்னதா ஒரு தூக்கத்தப் போட்டுட்டு மாப்புள்ளையப் பாத்துட்டு வந்ததெ பத்திப் பலவெதமா பேசிட்டு ராத்திரி தங்கி மறுநாளுதாங் கெளம்பிப் போனுச்சுங்க. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வெதமான கருத்துகளச் சொன்னுச்சுங்க. அதுல பொதுவா டாக்கடர்ங்றதுக்காக ரொம்ப மல்லுகட்டிக்கிட்டுச் சிலவெ பண்ணிட வாணாங்ற கருத்துதாம் எல்லார்கிட்டெயும் இருந்துச்சு. அவுங்கள்ல யாருக்குமே சுப்பு வாத்தியாரு வசமா மாட்டியிருக்குற விசயம் தெரியாது. கலியாணச் சிலவு, நகெ நட்டுக்கான பேச்சு வார்த்தெ ஓரளவுக்கு முடிஞ்சி உத்திரவாதம் ஆன பெற்பாடுதாங் பொண்ணு மாப்புள பாக்குற சங்கதியே நடந்துச்சுங்றது அவுங்கள்ல பல பேத்துல யாருக்குத் தெரியும்?
            கெளம்பிப் போறப்போ பத்மா பெரிம்மா ஒரு வார்த்தையச் சொன்னுச்சு, "பொண்ண கலியாணம் பண்ணிக் கொடுக்குறே. தொடந்தாப்புல தாலி பெருக்கிப் போடுறது, வளைகாப்பு, புள்ளைப்பேறுன்னு செலவுதாங். ஒரே அடியா கலியாணத்துல காசிய வுட்டுப்புடாம சூதானமா இருந்துக்கோணும் பாத்துக்கோ!"ன்னுச்சு. சுப்பு வாத்தியாரு தலைய மட்டும் ஆட்டிக்கிட்டாரு. வேற பேசுறதுக்கு அவர்கிட்டெ வார்த்தைக யில்ல.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...