30 Jan 2018

தப்பித்தல் முட்டாள்தனம்

தப்பித்தல் முட்டாள்தனம்
வாழப் பழகிக் கொண்ட
குருவிகளுக்கு டார்வின் மேல் கோபம்
அவைகளுக்கு றெக்கைகள் இல்லை
தத்தித் தத்தி நடைபயில
கால்கள் இல்லை
எங்கே தப்பி விடுமோ என்ற சந்தேகத்தில்
கத்தரிக்கப்பட்டு இருந்தன
முன்பொரு காலத்தில் நீங்கள்
இருந்த இடத்திற்கு காடென்று பெயர்
இப்போதொரு காலத்தில்
இருக்கும் இடத்திற்கு கூண்டு என்று பெயர்
உச்சரிக்கப்படும் வாக்கியங்களை
வெறுக்கின்றன குருவிகள்
முடமாக்கப்பட்ட வாழ்வில்
தப்பித்தல் முட்டாள்தனம் என்பதை
உணர்ந்திருக்கின்றன அவைகள்
கூண்டுக் கம்பிகளைப் பார்த்து
நக்கலாய்ச் சிரிக்கின்றன
குருவிகள் மகிழ்வதாகப்
பார்த்து ரசிக்கிறார்கள் மனிதர்கள்

*****

29 Jan 2018

கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!

குறளதிகாரம் - 4.3 - விகடபாரதி
கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!
            சுவாசிப்பதற்கு கால நேரம் பார்க்குமா நுரையீரல்?
            துடிப்பதற்கு கால நேரம் பார்க்குமா இதயம்?
            சுத்தகரிப்பதற்கு கால நேரம் பார்க்குமா சிறுநீரகம்?
            கால நேரம் பார்க்காமல் அவைகள் தம் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதால்தான் உடலில் உயிர் நிலைத்திருக்கிறது.
            அப்படி கால நேரம் பார்க்காமல் அறம் செய்பவர்கள் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைகொண்டிருக்கிறது.
            இராகு காலம், எம கண்டம், குளிகை, கரி நாள், அஷ்டமி, நவமி என்று நல்ல நேரம் பார்த்து தள்ளி வைத்த காரியங்கள் எத்தனை? வீணான மணித்துளிகள் எவ்வளவு?
            இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிவதற்குள் தானம் நிகழ்ந்து முடிய வேண்டும் என்பார்கள்.
            மறு புயல் வரும் வரை மீட்புப் பணிகள் செய்வது கால தாமதப்படுத்தப்பட்டால்...
            வறட்சியில் உயிர்கள் சாகும் வரை நிவாரணத் தொகை வழங்குவதற்குக் கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால்...
            விபத்தில் அடிபட்டவருக்கு முதல் தகவல் அறிக்கை வரும் வரை அறுவைச் சிகிச்சையை தாமதபடுத்திக் கொண்டிருந்தால்...
            இப்போது புரிந்திருக்குமே! அறம் என்பது எப்படி ஆற்றப்பட வேண்டும் என்பது. அதற்காக முதலுதவி போல ஆற்றப்படுவதுதான் அறம் என்று சுருங்கிப் புரிந்து கொள்வதோ என்றால், முதலுதவியாக மட்டுமல்லாது முடிவான உதவியாகவும் ஆற்றப்படுவதுதான் அறம் என்று சரியாகப் புரிந்து கொண்டு ஆற்றப்படுவதே அறம்.
            கொடுக்கின்ற மனம் கால நேரம் பார்ப்பதில்லை.
            பொழிகின்ற மழை கால நேரம் பார்ப்பதில்லை.
            அறம் செய்வதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை, இடம், பொருள், ஏவல் பார்க்க வேண்டியதில்லை.
            காசு, பணம் சேரட்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. தள்ளிப் போடுதல் என்பது அந்தக் காரியத்தைச் செய்யாமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்கேயன்றி வேறில்லை.
            அறம் செய்யும் எண்ணம் தோன்றிய அந்தக் கணத்திலிருந்தே அறம் செய்ய வேண்டியதுதான். எண்ணம் தோன்றி, அதைப் பேசி, அதைச் செயலுக்குக் கொண்டு வரும் செயல்திட்டம் போன்றதல்ல அறம்.
            எண்ணம், பேச்சு, செயல் என்பதால் பிளவுபட்டதன்று அறம். எண்ணம், பேச்சு, செயலால் ஒன்றுபட்டதே அறம்.
            எண்ணியதை செயல்படுத்த முடியாமல் போவதற்குப் பெயர் அறமன்று. எல்லாருக்கும்தான் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. செயல் வடிவம் பெறாத அந்த எண்ணம் அறமாகாது.
            பேசிக் கொண்டே செய்யாமல் விடுவதும் அறமாகாது. ஒவ்வொரு நாட்டிலும் நாடு நலம் பெற வேண்டும் என்று அரசியல்வாதிகள் பேசாத பேச்சா?
            சிறியதோ, பெரியதோ காரியத்தில் நிகழ்த்தப்படுவதே அறம்.
            பனைத்துணை நலம் கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பவன் மக்கட்பதடி ஆவான், தினைத்துணை நலம் கிடைக்கும் எனில் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் என்று பாரதிதாசன் பாடியதற்குக் காரணம் அதுவே.
            அறத்திற்கு சிறியது, பெரியது என்ற அளவு கிடையாது. அது அறம் அவ்வளவே. அதற்கு வேறுபாடுகள், பாகுபாடுகள் கிடையாது.
            உங்களால் கடுகளவுதான் இயலும் என்றால் அதைச் செய்வதுதான் அறம். அதை விட இன்னும் சிறிய அளவே செய்ய இயலும் என்றாலும் அதைச் செய்வதே அறம்.
            மலையளவு செய்வதாக வாக்குறுதி தந்து விட்டு, மயிர் அளவு கூட செய்யாமல் இருப்பதற்குப் பெயர் அறமா என்ன?
            இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் அறம் செய்யுங்கள்.
            வாழும் வரை சுவாசத்துக்கு, இதயத் துடிப்புக்கோ ஓய்வு கிடையாது. அது போன்றதுதான் அறம்.
            எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும், எவர் வேண்டுமானாலும் செய்யக் கூடியதே அறம்.
            அறத்துக்கு ஏது விடுமுறை? அறத்துக்கு ஏது காத்திருப்பு முறை?
            அறம் காற்று போல. வீசிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் பூமி போல. சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் சுவாசமும், இதயத் துடிப்பும் போல. நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது.
            அந்திமக் காலத்தில் சாக நினைத்தாலும் சாக விடாத உடல் போலத்தான், செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் செய்யாமல் இருக்க விடாதுதான் அறம்.
            அறம் எதற்காகக் காத்திருப்பதும் இல்லை. கால நேரம் வரட்டும் என்று பொறுத்திருப்பதுமில்லை. வாய்ப்புகள் வரட்டும் என்று வாளாவிருப்பதும் இல்லை.
            அறம் என்பது தீயணைப்பு ஊர்தி போல.
            அறம் என்பது 108 அவசர ஊர்தி போல.
            24 * 7 சேவைதான்!
            ஓய்வுக்கும் வேலையில்லை. எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கும் வேலையில்லை. இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதுதான் அறம்.
            ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் என்று இதை மிக அழகாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
            கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி ஏவுவதற்கு அறம் என்ன செயற்கைக் கோளா?உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று ஓடித் துடைக்கும் இயற்கைக் கோள் - அதுதான் அறம். மனிதாபிமானத்தின் நிறம்.

*****

மிகை மதிப்புக் கோட்பாடு

மிகை மதிப்புக் கோட்பாடு
மிகையான மதிப்பை
யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்
புனைகதைப் புனைவார்கள்
அதை நம்பும்படி
மறைமுகமாகக் கட்டாயப்படுத்துவார்கள்
தோழியின் தோழியே
தோழனின் தோழனே
துரோகி என்பது எல்லார்க்கும் தெரியும்
நடவடிக்கை எடுக்க முடியாது
தலையில் அடித்துக் கொள்ளுங்கள்
மிகை மதிப்பு உங்களை வென்று விட்டது

*****

ஒற்றைக் கோரப் பல்லின் சிரிப்பு

ஒற்றைக் கோரப் பல்லின் சிரிப்பு
ஒரு முட்டையைப் பொத்தலிட்டு
ஆளுக்குப் பாதி
குடித்துக் கொண்டோம்
வெள்ளைக் கரு யாருக்குச் சென்றது
மஞ்சள் கரு யாருக்குச் சென்றது
என்ற சந்தேகம் இருவர்க்கும்
பொத்தலிட்ட முட்டை
சிரிக்கும் கோரப் பல்லைப் போல
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது

*****

28 Jan 2018

உழைத்துச் சம்பாதித்தாலும் ஒட்டாது!

குறளதிகாரம் - 4.2 - விகடபாரதி
உழைத்துச் சம்பாதித்தாலும் ஒட்டாது!
            உழைத்துச் சம்பாதித்ததே ஒட்டுவதில்லை, உழைக்காமல் வந்தது ஒட்டுமா?
            உழைக்காமல் வந்தது ஒட்டாது என்பது சரி!
            உழைத்து வந்தது எப்படி ஒட்டாமல் போகும்?
            உழைத்து வரும் செல்வமானது... அறவழியில் உழைத்து வந்தது என்றால் ஒட்டும்.
            அறவழியை மறந்து பிறவழியில் வந்தது என்றால் ஒட்டாது.
            இந்த உலகில்,
            ஊழல் செய்பவனும் உழைப்பதாகத்தான் கூறுகிறான்,
            கையூட்டுப் பெறுபவனும் மாட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக வாங்க திட்டமிட்டு உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவனும் வட்டியை வசூலிக்க அலைந்து திரிந்து உழைப்பதாகத்தான் சொல்கிறான்,        
            களவு செய்பவனும் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு கடுமையாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            கொலை செய்பவனும் ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            சாராயம் காய்ச்சுபவனும் வேகாக வெக்கையில் நின்று உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            போதைப் பொருள் கடத்துபவனும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டுக் கஷ்டப்பட்டு உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
            குண்டு வைப்பவனும் இரவு பகல் பாராது உழைப்பதாகத்தான் சொல்கிறான்.
            பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் அனைத்துக்கும் பெயர் உழைப்பு என்று ஆகி விட்டப் பிறகு,
            உழைப்பின் விளைவாக ஈட்டும் பணம் அறவழியிலிருந்து வருகிறதா? அறமற்ற வழியிலிருந்து வருகிறதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.
            உழைப்புதான் என்றாலும் அறவழியில் வரும் பணமே ஆக்கமாக நிலைக்கிறது. அறமற்ற வழியிலிருந்து வரும் பணம் நீக்கமாக கழிகிறது.
            முதலிலிருந்து சொல்வதாகச் சொன்னால் உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் அறவழியில் ஈட்டும் பணம் ஒட்டுகிறது. உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் பிறவழியில் ஈட்டும் பணம் ஒட்டாமல் ஒழிகிறது.
            ஆக எதை மறந்தாலும் அறத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால் அறவழியில் ஈட்டுவதே ஆக்கமாக ஒட்டுகிறது. அறமற்ற பிறவழியில் ஈட்டுவது நீக்கமாக மறைகிறது.
            அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
            இனி யாராவது உழைத்தப் பணம் ஒட்டவில்லை என்று சொன்னால், அவர்களிடம் கேளுங்கள் உழைப்பை மட்டும் நினைந்து அறத்தை மறந்து ஈட்டிய பணமா அது என்று?
            உழைத்துச் சம்பாதித்தது என்றாலும் அஃது வந்த வழி அறவழி இல்லை என்றால் அஃது செல்லாது செல்லாதுதான், ஒட்டாது ஒட்டாதுதான்.
            உழைப்பும் வேண்டும். உழைத்துச் செல்வம் சேர்க்கவும் வேண்டும். அவ்வழியில் வரும் செல்வம் அறவழியினின்று வருவதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைக்கும். அஃதில்லாதவற்றை உலகம் பழிக்கும். அறமே அதைக் கடைசியில் ஒட்ட விடாமல் அழிக்கும்.
            அறத்தை மறந்து ஆக்கத்தைத் தேடவும் வேண்டாம். அப்படி ஆக்கத்தைத் தேடித் தூக்கத்தை இழந்து வாடவும் வேண்டாம். கடைசியில் உள்ளதும் போச்சே என்று மனம் நோகவும் வேண்டாம். அறத்தை மறந்தவர் என்று உலகம் உங்களைச் சாடவும் வேண்டாம்.

*****

கடவுளின் பாகுபாடு & மறைப்பு

கடவுளின் பாகுபாடு
ஏழைபாழைகளைக்
கால்கடுக்க
நீண்ட நேரம்
நிற்க வைக்கும் கடவுள்
காசிருப்பவர்களுக்கு
சிறப்பு தரிசனத்தில்
காட்சியளிப்பார்.
*****
மறைப்பு
தொப்பை மறைப்பில்
புரிய வைக்கப்படுகிறது
இன்னொருத்தர் மீதான
ஒவ்வொருத்தருக்குமான காதல்.

*****

மீண்டும் ஆதியிலிருந்து...

மீண்டும் ஆதியிலிருந்து...
பூஞ்சானம் படர்ந்த கைகளில்
இரத்தப் பாசி பிடித்த
உன் துப்பாக்கி.
மதுவில் கலந்த குருதியில்
உன் மூளை முழுதும் ஊரும்
கம்பளிப் பூச்சிகள்.
இப்படியெல்லாம் நேரும் என்று
காலச் சக்கரத்திற்குத் தெரியும்.
ஆளில்லாமல் வேவு பார்க்கும் விமானத்தால்
அடித்து வீழ்த்தப்படுவாய் நீ.
பட்டனைத் தட்டி இயக்க ஆளில்லாமல்
அனாதையாய்க் கிடக்கும் அணுகுண்டுகள்.
கருவிகளின்றி பூமியில்
வாழத் தொடங்கியிருக்கும் புதிய ஆதி இனம்.

*****