குறளதிகாரம் - 4.2 - விகடபாரதி
உழைத்துச் சம்பாதித்தாலும்
ஒட்டாது!
உழைத்துச்
சம்பாதித்ததே ஒட்டுவதில்லை, உழைக்காமல் வந்தது ஒட்டுமா?
உழைக்காமல்
வந்தது ஒட்டாது என்பது சரி!
உழைத்து வந்தது
எப்படி ஒட்டாமல் போகும்?
உழைத்து வரும்
செல்வமானது... அறவழியில் உழைத்து வந்தது என்றால் ஒட்டும்.
அறவழியை மறந்து
பிறவழியில் வந்தது என்றால் ஒட்டாது.
இந்த உலகில்,
ஊழல் செய்பவனும்
உழைப்பதாகத்தான் கூறுகிறான்,
கையூட்டுப்
பெறுபவனும் மாட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக வாங்க திட்டமிட்டு உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
அநியாய வட்டிக்கு
கடன் கொடுப்பவனும் வட்டியை வசூலிக்க அலைந்து திரிந்து உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
களவு செய்பவனும்
கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு கடுமையாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
கொலை செய்பவனும்
ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
சாராயம் காய்ச்சுபவனும்
வேகாக வெக்கையில் நின்று உழைப்பதாகத்தான் சொல்கிறான்,
போதைப் பொருள்
கடத்துபவனும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டுக் கஷ்டப்பட்டு உழைப்பதாகத்தான்
சொல்கிறான்,
குண்டு வைப்பவனும்
இரவு பகல் பாராது உழைப்பதாகத்தான் சொல்கிறான்.
பணம் சம்பாதிக்கும்
வழிமுறைகள் அனைத்துக்கும் பெயர் உழைப்பு என்று ஆகி விட்டப் பிறகு,
உழைப்பின்
விளைவாக ஈட்டும் பணம் அறவழியிலிருந்து வருகிறதா? அறமற்ற வழியிலிருந்து வருகிறதா? என்ற
கேள்விக்குப் பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.
உழைப்புதான்
என்றாலும் அறவழியில் வரும் பணமே ஆக்கமாக நிலைக்கிறது. அறமற்ற வழியிலிருந்து வரும் பணம்
நீக்கமாக கழிகிறது.
முதலிலிருந்து
சொல்வதாகச் சொன்னால் உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் அறவழியில் ஈட்டும் பணம் ஒட்டுகிறது.
உழைத்துச் சம்பாதித்ததே என்றாலும் பிறவழியில் ஈட்டும் பணம் ஒட்டாமல் ஒழிகிறது.
ஆக எதை மறந்தாலும்
அறத்தை மறக்கக் கூடாது. ஏனென்றால் அறவழியில் ஈட்டுவதே ஆக்கமாக ஒட்டுகிறது. அறமற்ற பிறவழியில்
ஈட்டுவது நீக்கமாக மறைகிறது.
அறத்தின்
ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.
இனி யாராவது
உழைத்தப் பணம் ஒட்டவில்லை என்று சொன்னால், அவர்களிடம் கேளுங்கள் உழைப்பை மட்டும் நினைந்து
அறத்தை மறந்து ஈட்டிய பணமா அது என்று?
உழைத்துச்
சம்பாதித்தது என்றாலும் அஃது வந்த வழி அறவழி இல்லை என்றால் அஃது செல்லாது செல்லாதுதான்,
ஒட்டாது ஒட்டாதுதான்.
உழைப்பும்
வேண்டும். உழைத்துச் செல்வம் சேர்க்கவும் வேண்டும். அவ்வழியில் வரும் செல்வம் அறவழியினின்று
வருவதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைக்கும். அஃதில்லாதவற்றை உலகம் பழிக்கும். அறமே
அதைக் கடைசியில் ஒட்ட விடாமல் அழிக்கும்.
அறத்தை மறந்து
ஆக்கத்தைத் தேடவும் வேண்டாம். அப்படி ஆக்கத்தைத் தேடித் தூக்கத்தை இழந்து வாடவும் வேண்டாம்.
கடைசியில் உள்ளதும் போச்சே என்று மனம் நோகவும் வேண்டாம். அறத்தை மறந்தவர் என்று உலகம்
உங்களைச் சாடவும் வேண்டாம்.
*****
No comments:
Post a Comment