29 Jan 2018

கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!

குறளதிகாரம் - 4.3 - விகடபாரதி
கெளண்ட் டவுனுக்காகக் காத்திருக்குமா அறம்?!
            சுவாசிப்பதற்கு கால நேரம் பார்க்குமா நுரையீரல்?
            துடிப்பதற்கு கால நேரம் பார்க்குமா இதயம்?
            சுத்தகரிப்பதற்கு கால நேரம் பார்க்குமா சிறுநீரகம்?
            கால நேரம் பார்க்காமல் அவைகள் தம் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதால்தான் உடலில் உயிர் நிலைத்திருக்கிறது.
            அப்படி கால நேரம் பார்க்காமல் அறம் செய்பவர்கள் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைகொண்டிருக்கிறது.
            இராகு காலம், எம கண்டம், குளிகை, கரி நாள், அஷ்டமி, நவமி என்று நல்ல நேரம் பார்த்து தள்ளி வைத்த காரியங்கள் எத்தனை? வீணான மணித்துளிகள் எவ்வளவு?
            இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரிவதற்குள் தானம் நிகழ்ந்து முடிய வேண்டும் என்பார்கள்.
            மறு புயல் வரும் வரை மீட்புப் பணிகள் செய்வது கால தாமதப்படுத்தப்பட்டால்...
            வறட்சியில் உயிர்கள் சாகும் வரை நிவாரணத் தொகை வழங்குவதற்குக் கால நேரம் பார்த்துக் கொண்டிருந்தால்...
            விபத்தில் அடிபட்டவருக்கு முதல் தகவல் அறிக்கை வரும் வரை அறுவைச் சிகிச்சையை தாமதபடுத்திக் கொண்டிருந்தால்...
            இப்போது புரிந்திருக்குமே! அறம் என்பது எப்படி ஆற்றப்பட வேண்டும் என்பது. அதற்காக முதலுதவி போல ஆற்றப்படுவதுதான் அறம் என்று சுருங்கிப் புரிந்து கொள்வதோ என்றால், முதலுதவியாக மட்டுமல்லாது முடிவான உதவியாகவும் ஆற்றப்படுவதுதான் அறம் என்று சரியாகப் புரிந்து கொண்டு ஆற்றப்படுவதே அறம்.
            கொடுக்கின்ற மனம் கால நேரம் பார்ப்பதில்லை.
            பொழிகின்ற மழை கால நேரம் பார்ப்பதில்லை.
            அறம் செய்வதற்கும் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை, இடம், பொருள், ஏவல் பார்க்க வேண்டியதில்லை.
            காசு, பணம் சேரட்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. தள்ளிப் போடுதல் என்பது அந்தக் காரியத்தைச் செய்யாமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்கேயன்றி வேறில்லை.
            அறம் செய்யும் எண்ணம் தோன்றிய அந்தக் கணத்திலிருந்தே அறம் செய்ய வேண்டியதுதான். எண்ணம் தோன்றி, அதைப் பேசி, அதைச் செயலுக்குக் கொண்டு வரும் செயல்திட்டம் போன்றதல்ல அறம்.
            எண்ணம், பேச்சு, செயல் என்பதால் பிளவுபட்டதன்று அறம். எண்ணம், பேச்சு, செயலால் ஒன்றுபட்டதே அறம்.
            எண்ணியதை செயல்படுத்த முடியாமல் போவதற்குப் பெயர் அறமன்று. எல்லாருக்கும்தான் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. செயல் வடிவம் பெறாத அந்த எண்ணம் அறமாகாது.
            பேசிக் கொண்டே செய்யாமல் விடுவதும் அறமாகாது. ஒவ்வொரு நாட்டிலும் நாடு நலம் பெற வேண்டும் என்று அரசியல்வாதிகள் பேசாத பேச்சா?
            சிறியதோ, பெரியதோ காரியத்தில் நிகழ்த்தப்படுவதே அறம்.
            பனைத்துணை நலம் கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பவன் மக்கட்பதடி ஆவான், தினைத்துணை நலம் கிடைக்கும் எனில் செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் என்று பாரதிதாசன் பாடியதற்குக் காரணம் அதுவே.
            அறத்திற்கு சிறியது, பெரியது என்ற அளவு கிடையாது. அது அறம் அவ்வளவே. அதற்கு வேறுபாடுகள், பாகுபாடுகள் கிடையாது.
            உங்களால் கடுகளவுதான் இயலும் என்றால் அதைச் செய்வதுதான் அறம். அதை விட இன்னும் சிறிய அளவே செய்ய இயலும் என்றாலும் அதைச் செய்வதே அறம்.
            மலையளவு செய்வதாக வாக்குறுதி தந்து விட்டு, மயிர் அளவு கூட செய்யாமல் இருப்பதற்குப் பெயர் அறமா என்ன?
            இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் சுவாசம் போல், இதயத் துடிப்பு போல் அறம் செய்யுங்கள்.
            வாழும் வரை சுவாசத்துக்கு, இதயத் துடிப்புக்கோ ஓய்வு கிடையாது. அது போன்றதுதான் அறம்.
            எப்போதும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லா காலங்களிலும், எவர் வேண்டுமானாலும் செய்யக் கூடியதே அறம்.
            அறத்துக்கு ஏது விடுமுறை? அறத்துக்கு ஏது காத்திருப்பு முறை?
            அறம் காற்று போல. வீசிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் பூமி போல. சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது.
            அறம் சுவாசமும், இதயத் துடிப்பும் போல. நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது.
            அந்திமக் காலத்தில் சாக நினைத்தாலும் சாக விடாத உடல் போலத்தான், செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் செய்யாமல் இருக்க விடாதுதான் அறம்.
            அறம் எதற்காகக் காத்திருப்பதும் இல்லை. கால நேரம் வரட்டும் என்று பொறுத்திருப்பதுமில்லை. வாய்ப்புகள் வரட்டும் என்று வாளாவிருப்பதும் இல்லை.
            அறம் என்பது தீயணைப்பு ஊர்தி போல.
            அறம் என்பது 108 அவசர ஊர்தி போல.
            24 * 7 சேவைதான்!
            ஓய்வுக்கும் வேலையில்லை. எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கும் வேலையில்லை. இயலும் வகையில் எல்லாம், வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதுதான் அறம்.
            ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் என்று இதை மிக அழகாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
            கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி ஏவுவதற்கு அறம் என்ன செயற்கைக் கோளா?உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று ஓடித் துடைக்கும் இயற்கைக் கோள் - அதுதான் அறம். மனிதாபிமானத்தின் நிறம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...