2 Oct 2017

தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு

தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு
            தமிழ் நாடு எனப் பெயர் சூட்டி இருக்கிறோம். தமிழில் பேசுகிறோம். தமிழ் மொழி அழிந்து விடாமல் காப்பற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம். நம் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கிறோம்.
            தமிழ் வழியில் பயின்றால் குழந்தை உயர்க் கல்வியில் தடுமாறுமோ? நீட் தேர்வில் பின்தங்கி விடுமோ? என்ற பயம் மனதை ஆட்டிப் படைக்கிறது என்கிறோம்.
            குழந்தை எப்படியாவது எதையாவது படித்து பெரிய ஆளாக ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அது தமிழ் வழியில் சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையையும் சுமந்து கொண்டிருக்கிறோம்.
            குழந்தையின் வளர்ச்சி என்ற பெயரில் முதலில் மொழியைப் புறக்கணிக்கிறோம். வளர்ந்த பின் தன் எதிர்கால வளர்ச்சி என்ற பெயரில் குழந்தை நம்மைப் புறக்கணிக்கிறது.
            இவைகளையெல்லாம் முதியோர் இல்லத்தில் அமர்ந்து கடைசிக் காலத்தில் அசை போடும் போது அம்மா என்று சொல்லி கதறி அழுவதில் ஒரு சுகம் கிடைக்கிறது. மம்மி என்று கதறி அழுவதில் அந்தச் சுகம் இருப்பதில்லை.
            நம்மைக் காப்பாற்ற முடியாத நம் குழந்தைகளிடம், நாம் நம் குழந்தைகளிடம் காப்பாற்ற முடியாத மொழியை நீ காப்பாற்று என்று நம் குழந்தைகளிடம் சொல்ல முடியாது. அப்போது அவர்களின் மொழி வேறாக இருக்கும். நம் மொழியைக் கேட்க வேண்டும் என்ற ஆதங்கம் அப்போது பொங்கி எழும். அவர்களுக்கு அந்த மொழி புரியாது. தெரியவும் தெரியாது.
            மனதின் மொழியும் தாய் மொழியும் ஒன்று என்ற உண்மை அப்போது புரிய வரும். அந்த மொழியைப் பேச வேண்டியவர்களை நாம் அழித்து விட்ட பின் அந்த மொழியை நாம் யாரிடம் பேச முடியும்?
            தனக்குத் தானே பேசிக் கொள்ளும் மொழி தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு.

*****

1 Oct 2017

பீப் பாடல்கள் கோரிய மன்னிப்புகள்

பீப் பாடல்கள் கோரிய மன்னிப்புகள்
            ஒரு பெண் மனமுவந்து மன்னிப்பு கேட்டாலும் ஆண் இறங்கி, இரங்கி வர மாட்டான். ஆணுக்கே உள்ள ஆணாதிக்கத் திமிர் அது.
            திரைவிழா ‍மேடையில் டி.ராஜேந்தரின் பெயரைக் கவனக்குறைவாக சொல்லாமல் விட்டதற்காக தன்ஷிகாவை வறுத்தெடுத்த நிகழ்வு அதைத்தான் காட்டுகிறது.
            அதற்காக தன்ஷிகா மனமுவந்து டி.ஆரிடம் மன்னிப்புக் கேட்கிறார். காலில் விழுகிறார். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறார். அவர் அழும் அளவுக்கு நையாண்டி செய்து கொண்டே போகிறார் டி.ஆர்.
            பெண்களைப் பற்றி திரைப்படம் எடுத்தவர், திரையில் எந்தப் பெண்ணையும் தொடாமல் நடித்தவர் ஒரு பொது அரங்கில் இப்படி நடந்து கொள்கிறார்.
            கவனக்குறைவாக தன் மகனான சிம்புவின் பீப் பாடல் வெளியானதற்கு அன்று தமிழ் மக்களிடம் மன்னிப்பை எதிர்பார்த்தவர், இன்று கவனக்குறைவாக தன்ஷிகா அவரது பெயரை மேடையில் குறிப்பிடாமல் விட்டதற்காக எந்த மன்னிப்பையும் வழங்க தயாராக தயாராக இல்லாமல் இருந்ததோடு அவருக்கு மன்னிப்புக் கேட்க அருகதையே இல்லை என்பதைப் போல நடந்து கொள்கிறார்.
            திரைவெளியில் பெண்களை இழிவு செய்வது போன்ற காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் அவரது மகனான சிம்புவின் திரைப்படங்களில் அநேகம் இடம் பெறும். அதை ஒரு ஸ்டைல் போன்று அவர் வளர்த்தெடுத்தும் வருகிறார். மகன் திரைவெளியில் செய்வதை அப்பா டி.ஆர். பொதுவெளியில் வளர்த்தெடுக்கிறார். இது அவர்களது குடும்பப் பாரம்பரியமாக இருக்கலாம் போலும்.
            தன்ஷிகாவின் மன்னிப்பைத் தொடர்ந்து மறுத்து வறுத்தெடுப்பதன் மூலம் டி.ஆர். சொல்ல விழையும் கருத்து திரையுலகம் நன்றி கெட்டது என்பதுதான். அதை கைதட்டி வேறு ரசிக்கிறார்கள் அந்த விழாவில் கலந்து கொண்ட திரையுலகைச் சார்ந்தவர்கள்.
            தனது மன்னிப்பு மறுப்பின் மூலம் தன்ஷிகாவுக்கு ஒரு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்து விட முடியும் என்று நம்பியிருக்கிறார் டி.ஆர். நாகரிகத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் சொல்லிக் கொடுப்பவர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மிகப் பெரிய பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தற்போது ஆளாகியிருக்கிறார்.
            தனது அதீத நம்பிக்கையின் மூலம் உருவாகும் அவரது அடுக்கு மொழி நடையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த ஒரு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கும் அவர் உள்ளாகியிருக்கிறார்.
            மன்னிப்பை வழங்குபவர்கள் மாமனிதர்கள். குறைந்த பட்சம் மன்னிப்பை மறுக்கும் கீழான மனிதராக மாறாமலாவது ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். திரைவெளியில் பாடம் சொல்லும் பலருக்குப் பொதுவெளியில் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. டி.ஆர். தன் அடுத்தடுத்த அடுக்குச் சொற்கள் மூலம் அதை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்.

*****

இருளைத் தேடும் ஆசைகள்

இருளைத் தேடும் ஆசைகள்
இரவுக்கு இருளைப் பாலூட்டும்
இனிய பொழுதில்
முத்தம் நிலாவென ஜொலித்தது.
சின்ன சின்ன உரசல்கள், தழுவல்கள்
விடிவெள்ளி தோன்றி விட்டதன்
அறிகுறி காட்டின.
முயங்கிக் கிடந்ததன் முடிவில்
பகலென விரிந்த வெளிச்சத்தில்
மீண்டும் மண்டிக் கொண்டன
இருளைத் தேடும் ஆசைகள்
நட்சத்திரங்களைப் போல
பல்லாயிரம் பல கோடி என.

*****

நன்றி சொல்ல வேண்டும்

நன்றி சொல்ல வேண்டும்
தர்க்க ரீதியாகப் பேசுவதில்
ஒரு செளகரியம் இருக்கிறது
மறுபடி மறுபடி
பேச மாட்டார்கள்.
மறுபடி மறுபடி பேசுவதில்
ஒரு செளகரியம் இருக்கிறது
தர்க்கம் பார்க்க மாட்டார்கள்.
நீங்கள் எனக்கு இதற்காக
நன்றி சொல்ல வேண்டும்
நாற்பதாண்டு அரசியல் அனுபவத்தை
முதன் முறையாக
கமிஷன் எதுவும் வாங்காமல்
உங்களுக்குத் தருவதற்காக.

*****

30 Sept 2017

அணித் தலைவன்

அணித் தலைவன்
            கட்சியின் இளைஞரணிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட கதிரேசன், "கட்சியோட ஸ்லீப்பர் செல் அணித் தலைவர் பொறுப்பு காலியாத்தானே இருக்கு! அதைக் கொடுங்க!" என்று கேட்டார்.
*****
போலி
            "போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!" என்று பிரச்சாரம் செய்து கொண்டு சென்ற வாகனம் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக் கொண்டது.
*****
இன்னும் ரெண்டு நாள்
            "இன்னும் வேலை நிறுத்தம் ரெண்டு நாளைக்கு நீடிச்சிருந்தா வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சிருப்பேன்!" வேலை நிறுத்தம் வாபஸ் என்ற செய்திக் கேட்ட விமலா சலித்துக் கொண்டாள்.
*****
களமாடல்
            "போராடாமல் இருப்பவர்களை விட போராடித் தோற்பவர்கள் வெற்றியாளர்களே! போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சோம்பேறிகளால்தான் முடியும்!" தங்கள் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் பேசிய பேச்சை டி.வி.யில் கேட்டு வீட்டிலிருந்து கை தட்டினார் போராட்டக் களத்திற்குச் செல்லாத நாகு.

*****

வீரனின் புராணம்

வீரனின் புராணம்
தானாக வரட்டும்
வலியப் போய்
எதற்கு முயற்சி செய்கிறாய்?
தலைகள் வெட்டுப்பட்டு
அருகே உருண்டு ஓடி வரும்
வாளை மட்டும்
தயாராக வைத்துக் கொள்
உருண்டோடி வந்த தலையைக்
கையில் எடுத்துக் கொண்டு
வாளை கையில் ஏந்திக் கொள்
வெற்றி வீரனுக்கு
வாழ்த்துகள் சொல்லட்டும் உலகம்

*****

பழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்

பழக்கம் என்பதாகக் கருதிக் கொள்கிறோம்
நீ யோசிப்பதுதான்
நீ முடிவு எடுப்பதுதான்
எங்கள் கருத்துகள்
உன் சந்தர்ப்பவாதத்துக்குதான் என்பது
எங்களுக்கு நன்றாகத் தெரியும்
நாங்கள் உன் கூடத்தான் இருப்போம்
எங்களுக்குப் பழகி விட்டது
உனக்குப் பழக்கமாகி விட்டது

*****