1 Oct 2017

பீப் பாடல்கள் கோரிய மன்னிப்புகள்

பீப் பாடல்கள் கோரிய மன்னிப்புகள்
            ஒரு பெண் மனமுவந்து மன்னிப்பு கேட்டாலும் ஆண் இறங்கி, இரங்கி வர மாட்டான். ஆணுக்கே உள்ள ஆணாதிக்கத் திமிர் அது.
            திரைவிழா ‍மேடையில் டி.ராஜேந்தரின் பெயரைக் கவனக்குறைவாக சொல்லாமல் விட்டதற்காக தன்ஷிகாவை வறுத்தெடுத்த நிகழ்வு அதைத்தான் காட்டுகிறது.
            அதற்காக தன்ஷிகா மனமுவந்து டி.ஆரிடம் மன்னிப்புக் கேட்கிறார். காலில் விழுகிறார். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறார். அவர் அழும் அளவுக்கு நையாண்டி செய்து கொண்டே போகிறார் டி.ஆர்.
            பெண்களைப் பற்றி திரைப்படம் எடுத்தவர், திரையில் எந்தப் பெண்ணையும் தொடாமல் நடித்தவர் ஒரு பொது அரங்கில் இப்படி நடந்து கொள்கிறார்.
            கவனக்குறைவாக தன் மகனான சிம்புவின் பீப் பாடல் வெளியானதற்கு அன்று தமிழ் மக்களிடம் மன்னிப்பை எதிர்பார்த்தவர், இன்று கவனக்குறைவாக தன்ஷிகா அவரது பெயரை மேடையில் குறிப்பிடாமல் விட்டதற்காக எந்த மன்னிப்பையும் வழங்க தயாராக தயாராக இல்லாமல் இருந்ததோடு அவருக்கு மன்னிப்புக் கேட்க அருகதையே இல்லை என்பதைப் போல நடந்து கொள்கிறார்.
            திரைவெளியில் பெண்களை இழிவு செய்வது போன்ற காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் அவரது மகனான சிம்புவின் திரைப்படங்களில் அநேகம் இடம் பெறும். அதை ஒரு ஸ்டைல் போன்று அவர் வளர்த்தெடுத்தும் வருகிறார். மகன் திரைவெளியில் செய்வதை அப்பா டி.ஆர். பொதுவெளியில் வளர்த்தெடுக்கிறார். இது அவர்களது குடும்பப் பாரம்பரியமாக இருக்கலாம் போலும்.
            தன்ஷிகாவின் மன்னிப்பைத் தொடர்ந்து மறுத்து வறுத்தெடுப்பதன் மூலம் டி.ஆர். சொல்ல விழையும் கருத்து திரையுலகம் நன்றி கெட்டது என்பதுதான். அதை கைதட்டி வேறு ரசிக்கிறார்கள் அந்த விழாவில் கலந்து கொண்ட திரையுலகைச் சார்ந்தவர்கள்.
            தனது மன்னிப்பு மறுப்பின் மூலம் தன்ஷிகாவுக்கு ஒரு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்து விட முடியும் என்று நம்பியிருக்கிறார் டி.ஆர். நாகரிகத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் சொல்லிக் கொடுப்பவர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற மிகப் பெரிய பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தற்போது ஆளாகியிருக்கிறார்.
            தனது அதீத நம்பிக்கையின் மூலம் உருவாகும் அவரது அடுக்கு மொழி நடையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த ஒரு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கும் அவர் உள்ளாகியிருக்கிறார்.
            மன்னிப்பை வழங்குபவர்கள் மாமனிதர்கள். குறைந்த பட்சம் மன்னிப்பை மறுக்கும் கீழான மனிதராக மாறாமலாவது ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். திரைவெளியில் பாடம் சொல்லும் பலருக்குப் பொதுவெளியில் கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. டி.ஆர். தன் அடுத்தடுத்த அடுக்குச் சொற்கள் மூலம் அதை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...