2 Oct 2017

தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு

தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு
            தமிழ் நாடு எனப் பெயர் சூட்டி இருக்கிறோம். தமிழில் பேசுகிறோம். தமிழ் மொழி அழிந்து விடாமல் காப்பற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம். நம் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கிறோம்.
            தமிழ் வழியில் பயின்றால் குழந்தை உயர்க் கல்வியில் தடுமாறுமோ? நீட் தேர்வில் பின்தங்கி விடுமோ? என்ற பயம் மனதை ஆட்டிப் படைக்கிறது என்கிறோம்.
            குழந்தை எப்படியாவது எதையாவது படித்து பெரிய ஆளாக ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அது தமிழ் வழியில் சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையையும் சுமந்து கொண்டிருக்கிறோம்.
            குழந்தையின் வளர்ச்சி என்ற பெயரில் முதலில் மொழியைப் புறக்கணிக்கிறோம். வளர்ந்த பின் தன் எதிர்கால வளர்ச்சி என்ற பெயரில் குழந்தை நம்மைப் புறக்கணிக்கிறது.
            இவைகளையெல்லாம் முதியோர் இல்லத்தில் அமர்ந்து கடைசிக் காலத்தில் அசை போடும் போது அம்மா என்று சொல்லி கதறி அழுவதில் ஒரு சுகம் கிடைக்கிறது. மம்மி என்று கதறி அழுவதில் அந்தச் சுகம் இருப்பதில்லை.
            நம்மைக் காப்பாற்ற முடியாத நம் குழந்தைகளிடம், நாம் நம் குழந்தைகளிடம் காப்பாற்ற முடியாத மொழியை நீ காப்பாற்று என்று நம் குழந்தைகளிடம் சொல்ல முடியாது. அப்போது அவர்களின் மொழி வேறாக இருக்கும். நம் மொழியைக் கேட்க வேண்டும் என்ற ஆதங்கம் அப்போது பொங்கி எழும். அவர்களுக்கு அந்த மொழி புரியாது. தெரியவும் தெரியாது.
            மனதின் மொழியும் தாய் மொழியும் ஒன்று என்ற உண்மை அப்போது புரிய வரும். அந்த மொழியைப் பேச வேண்டியவர்களை நாம் அழித்து விட்ட பின் அந்த மொழியை நாம் யாரிடம் பேச முடியும்?
            தனக்குத் தானே பேசிக் கொள்ளும் மொழி தனிமை துயரத்தின் மாபெரும் சாபக்கேடு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...