30 Apr 2017

செம ஹாட் மச்சி!


செம ஹாட் மச்சி!
            கோடை வெப்பம் அதிகரித்து விட்டது என அங்கலாய்ப்பவர்கள் ப்ரிட்ஜிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக் கொள்கிறார்கள்.
            "அப்பப்பா! என்ன வெயில்?" என்று வாகனங்களில் விரைவோர்கள் சாலையோரக் கடைகளைப் பார்த்தால் கோல்டா கூல் டிரிங்ஸ் கேட்கிறார்கள். கூல் டிரிங்ஸ் கூலிங் கொஞ்சம் குறைந்தாலும் வேறு கடையைப் பார்த்துப் புறப்படுகிறார்கள்.
            "இப்படி வெயில் அடிச்சா என்ன பண்றதாம்!" என்று எதுவும் பண்ண முடியாதது போல அலுத்துக் கொள்பவர்கள், ஏ.சி.யைப் போட்டு விட்டுக் கொண்டு ரூம் கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.
            இதில் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் மின்விசிறியை 24 மணி நேரமும் சுழல விடுகிறார்கள்.
            "வெயில் பத்து மாவட்டங்களில் சதம் அடித்து விட்டதாம்!" என ரிமோட்டும் கையுமாக செய்திச் சேனல்களைக் கட்டிப் பிடித்து அழுபவர்கள் கரண்ட் கட் ஆனால் மின்சார வாரியத்தைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள்.
            வாட்ஸ் அப், பேஸ்புக் என்று செய்திகளைப் பரப்பி காற்றலை மண்டலத்தைச்  சூடாக்குபவர்கள் தனி வகையில் பீதியைக் கிளப்பி அடிப்பார்கள். நாசாவே சொல்லி விட்டது என்று புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்து நாராசமாக்கி நாசம் செய்வார்கள்.
            இப்படி பிரிட்ஜ்,
                        ஏ.சி.,
                        மின் விசிறி,
                        டி.வி.,
                        கைபேசி என்று
            இவைகளே ஏறிக் கொண்டிருக்கும் கோடை வெப்பத்தை இன்னும் எகிற அடிக்கும்.
            இருக்கிறவர்கள் இவைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லாதவர்கள்?
            கூல் டிரிங்ஸிற்குப் பதில் நுங்கு,
            மின் விசிறிக்குப் பதில் கை விசிறி,
            டி.வி.க்குப் பதில் எப்.எம். ரேடியோ,
            ஏ.சி.க்குப் பதில் வேப்ப மரமோ, புங்கை மரமோ, கட்டி தொங்க விடப்பட்ட ஈரச் சாக்கோ
            இவைகளோடு கோடை குறித்த எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் தலையிலும், சட்டையிலும் ஊற்றிக் கொண்டு அனுபவிக்கிறார்கள் இல்லாதப் பட்டவர்கள். இவர்களால் பூமி எந்த விதத்திலும் சூடாகவில்லை. அதனால் பூமியும் இவர்களை எந்த விதத்திலும் சூடாக்கவில்லை போலும்.
*****

என் தலைக் கடனே!


என் தலைக் கடனே!
பெரும் எண்ணிக்கையில்
கோழி வளர்த்த அப்பத்தா
பிள்ளைமார்கள் கைவிட்டதைப் பொருட்படுத்தாமல்
பெரும்பண்ணையூர் கே.வி.கே. பிராய்லர் பண்ணையுல்
குஞ்சுக் கோழிகளுக்கு இரை ஈந்து கொண்டு இருப்பாளே.
*****

நினைவொதுங்கல்
இவர்களுக்குப் பத்மினியைப் பிடிக்காது
செளகார்  ஜானகியை ரசிக்க மாட்டார்கள்
ரங்காராவின் நடிப்புத் தெரியுமா?
பாகப் பிரிவினைப் போல் படமுண்டா?
ஒரு படம்னா அதில்
ஒரு கருத்து இருக்க வேண்டாமா?
தாத்தா இப்படித்தான்
அந்தக் கால நினைவுகளோடு
வாழ்கிறார்
இந்தக் கால
‍மெகா தொடர்களில் ஒதுங்கியபடி.
*****

யாங்காகியர் எனின்...


வாஞ்சை
மாடுகளுக்காக
மாடு போல் உழைத்த
அம்மாவின் கைகள்
வாஞ்சையோடு
தடவிப் பார்க்கிறது
பாக்கெட் பால் உறையை.
*****

யாங்காகியர் எனின்...
எம்.ஜி.ஆர். படம் பிடிக்கும் பெரியப்பா
ரேஷன் அரிசி கடத்துவதில் கில்லாடி என்பார்.
சிவாஜி படம் பிடிக்கும் சித்தப்பா
பாரின் போவதாகச் சொல்லி
அத்தையின் மொத்த சொத்தையும்
ஆட்டையைப் போட்ட சூராதி சூரர்.
அப்பாவுக்குப் பிடித்ததெல்லாம்
ஜெமினி கணேசன் எனினும்
வேறு ஒருத்தியைக் கடைக்கண் கொண்டு கூட
நோக்காமல் வாழ்ந்து முடித்தார்.
நாங்களோ
ரஜினி, கமல் என்று அடித்துக் கொள்ளாமல்
கடைசி வரை ஜெயமாலினியின் ரசிகர்களாக
ஒற்றுமையோடு இருந்தவர்களானோம்.
எமக்குப் பிறந்த பிள்ளைமார்களோ
புதுயுகத்தின் பிரதிநிதிகளாய்
வடிவேலு, சந்தானத்தின்
பித்தர்களாய் ஜமாய்த்துக் கொண்டிருப்பர் என்பதை
தியாகராஜ பாகவதரும் அறிந்திலரே.
*****

கிரக தோஷம்


கிரக தோஷம்
            "கிரகம் சரியில்லை" என்று மருமகளைக் கோயில் கோயிலாக ஏறி இறங்க வைத்து வீட்டில் ஹாயாகப் படுத்துக் கொண்டிருந்த சரஸ்வதி ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.
*****
புதிய மாமனார்
            "கொடுக்கறதை வாங்கிட்டு மரியாதையா விவாகரத்துப் பத்தரத்துல கையெழுத்துப் போடல, உன் உயிரை எடுக்கிறதைத் தவிர வேற வழியில்ல!" மகனுக்கு ஆதரவாக மருமகளை மிரட்டினார் மாமனார் மாணிக்கம்.
*****
மேலும் அஞ்சு வருஷ கொடுமை
            "அஞ்சு வருஷம் இழுத்தடிப்பேன்டி. உன்னால என்ன பண்ண முடியும்?" கொடுமை தாளாமல் பிரிந்து வந்த மனைவியைக் கோர்ட் வளாகத்திலும் கண்ணீர் விட வைத்தான் பாலைய்யா.
*****

காலத்தைக் கடத்தல்


காலத்தைக் கடத்தல்
நினைவுகள்
கடந்த காலத்தோடும்
கனவுகள்
எதிர் காலத்தோடும்
இருப்பு
நிகழ் காலத்தோடும்
தொடர்புடையது என்ற போது
நினைவோ, கனவோ, இருப்போ
கடந்தால்
காலத்தைக் கடப்பது போலாகுமா?
என்று கேட்டவனிடம்,
அதைக் கடந்த பின்
இந்தக் கேள்வி என்பது
எந்தக் காலத்திலிருந்து
வருகிறதென்றேன்.
காலத்தைக் கடப்பது சுலபமில்லை
என்றான் அவன்.
*****

29 Apr 2017

சித்தப்பா விவசாயம் பார்த்த காதை


நிலைமாற்றம்
வெந்நீரைப் போல
முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த
குழந்தை
பனிக்கட்டிப் போல
அன்பாகி கசிந்து உருகுகிறது
ஒரு சாக்லேட்டைப் பெற்றுக் கொண்ட பின்.
*****

சித்தப்பா விவசாயம் பார்த்த காதை
"நம்ம வயல் வழியாதாம்
ஹைவேஸ் போகப் போகுதாம்ல!" என்பார்
இருந்த நிலங்களையெல்லாம் குடித்தழித்து,
மிச்ச மீதியிருந்த நிலங்களையும்
கட்டிய கோவணத்தோடு
குளித்துக் கொண்டிருந்த போது
ஓ.என்.ஜி.சி.யில் கேட்டார்கள் என்று
அவிழ்த்துக் கொடுத்த சித்தப்பா.
*****

ஆ(ண்)ணவ மிரட்டல்


சமாளிபிகேஷன்
            நிஜமாகவே திக்கித் திக்கிப் பேசும் நண்பன் வசந்த் மாலதியிடம் மணிரத்னத்தின் பட சான்ஸ்க்காக பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பதாக சமாளித்துக் கொண்டான்.
*****
ஆ(ண்)ணவ மிரட்டல்
            "என்னை எதிர்த்து கோர்ட் படியேறுனே வெட்டி பொலி போட்டுருவேன்!" மனைவியை எச்சரித்தார் கிரிமினல் லாயர் கிருபாகரன்.
*****
வேத மருத்துவர்
            "சுப்ரீம் கோர்ட்லேயே கீதையில கை வெச்சு இல்லன்னு சத்தியம் பண்ணுவேன்!" வன்கொடுமை வழக்குத் தொடுத்த மனைவியை மீண்டும் வார்த்தையால் பெண்கொடுமை செய்து கொண்டிருந்தார் ஆயுர்வேத மருத்துவர் பல்வேல்முருகன்.
*****