30 Apr 2017

செம ஹாட் மச்சி!


செம ஹாட் மச்சி!
            கோடை வெப்பம் அதிகரித்து விட்டது என அங்கலாய்ப்பவர்கள் ப்ரிட்ஜிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக் கொள்கிறார்கள்.
            "அப்பப்பா! என்ன வெயில்?" என்று வாகனங்களில் விரைவோர்கள் சாலையோரக் கடைகளைப் பார்த்தால் கோல்டா கூல் டிரிங்ஸ் கேட்கிறார்கள். கூல் டிரிங்ஸ் கூலிங் கொஞ்சம் குறைந்தாலும் வேறு கடையைப் பார்த்துப் புறப்படுகிறார்கள்.
            "இப்படி வெயில் அடிச்சா என்ன பண்றதாம்!" என்று எதுவும் பண்ண முடியாதது போல அலுத்துக் கொள்பவர்கள், ஏ.சி.யைப் போட்டு விட்டுக் கொண்டு ரூம் கதவை அடைத்துக் கொள்கிறார்கள்.
            இதில் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் மின்விசிறியை 24 மணி நேரமும் சுழல விடுகிறார்கள்.
            "வெயில் பத்து மாவட்டங்களில் சதம் அடித்து விட்டதாம்!" என ரிமோட்டும் கையுமாக செய்திச் சேனல்களைக் கட்டிப் பிடித்து அழுபவர்கள் கரண்ட் கட் ஆனால் மின்சார வாரியத்தைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள்.
            வாட்ஸ் அப், பேஸ்புக் என்று செய்திகளைப் பரப்பி காற்றலை மண்டலத்தைச்  சூடாக்குபவர்கள் தனி வகையில் பீதியைக் கிளப்பி அடிப்பார்கள். நாசாவே சொல்லி விட்டது என்று புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்து நாராசமாக்கி நாசம் செய்வார்கள்.
            இப்படி பிரிட்ஜ்,
                        ஏ.சி.,
                        மின் விசிறி,
                        டி.வி.,
                        கைபேசி என்று
            இவைகளே ஏறிக் கொண்டிருக்கும் கோடை வெப்பத்தை இன்னும் எகிற அடிக்கும்.
            இருக்கிறவர்கள் இவைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லாதவர்கள்?
            கூல் டிரிங்ஸிற்குப் பதில் நுங்கு,
            மின் விசிறிக்குப் பதில் கை விசிறி,
            டி.வி.க்குப் பதில் எப்.எம். ரேடியோ,
            ஏ.சி.க்குப் பதில் வேப்ப மரமோ, புங்கை மரமோ, கட்டி தொங்க விடப்பட்ட ஈரச் சாக்கோ
            இவைகளோடு கோடை குறித்த எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் தலையிலும், சட்டையிலும் ஊற்றிக் கொண்டு அனுபவிக்கிறார்கள் இல்லாதப் பட்டவர்கள். இவர்களால் பூமி எந்த விதத்திலும் சூடாகவில்லை. அதனால் பூமியும் இவர்களை எந்த விதத்திலும் சூடாக்கவில்லை போலும்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...