1 Feb 2017

தள்ளுவண்டிக்காரன்


தள்ளுவண்டிக்காரன்
ஆப்பிள்
ஆரஞ்சு
மாதுளம்
திராட்சை வைத்து
தள்ளிக் கொண்டு வருகிறான்
காலையிலிருந்து
சாப்பிடாத
தள்ளுவண்டிக்காரன்!
*****

பசி
பசி பொறுக்கவில்லை
அவன் தன்
வயிற்றை
வெட்டிக் கொண்டான்!
அவன் வயிற்றுத் துண்டத்தில்
நாம்
பங்கு கேட்பதில் நியாயமில்லை!
அவன் தன்
வயிற்றுத் துண்டத்தையே
பசியார
தின்று கொள்வான்!
*****

யூ ஆர் அப்பாய்ண்டெட்


அதிர்ச்சி
ஒரு லட்சம் லஞ்சம் கேட்டவர் அதை நூறு ரூபாய்த் தாளாகக் கேட்டார்.
*****
யூ ஆர் அப்பாய்ண்டெட்
ஓய்வு பெற்று வந்த நாகராஜனிடம், "நாளையிலேர்ந்து கே.சி.எம். லிமிட்டெட்டுக்கு வேலைக்குப் போயிடுங்கப்பா!" என்றான் சண்முகம்.
*****
காலம் வரும்
"கொஞ்சம் பொறுத்துக்குங்க! உள்ளாட்சித் தேர்தல் வரட்டும், மொத்தக் கடனையும் அடைச்சிடறேன்!" என்று ஆவேசமாக டீக்கடைக்காரரிடம் பேசி விட்டு வெளியே வந்தார் சிதம்பரம்.
*****

நாள்குறிப்பு சபதம்


நாள்குறிப்பு சபதம்
            ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு சபதத்தில் தவறாமல் இடம் பெறுவது, இந்த ஆண்டிலிருந்து நாட்குறிப்பு எழுதுவது என்பதுதான்.
            சபதத்தை உடைக்க சபதம் செய்த நாம், நாட்குறிப்பை வாங்கியிருப்போம். எழுதுவதில் பின்வாங்கியிருப்போம்.
            பிறகென்ன? அந்த நாட்குறிப்பு வீட்டுக்கார அம்மாக்களுக்கு கோலம் போடும் கோல நோட்டாக, அதற்காகவாவது பயன்பட்டதே என்று ஆத்ம திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
            வரலாற்றில் பேரரசராக இருந்த பாபருக்கு நாட்குறிப்பு எழுதும் அருமையான பழக்கம் இருந்திருக்கிறது. நாள்குறிப்பு எழுதும் அந்தப் பழக்கம்மான் பாபர் நாமா எனும் வரலாற்று ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறது.
            சபதத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால், அதைக் காரணமாக வைத்தாவது அந்தச் சபதத்தை நிறைவேற்ற முடியும் அனுபவஸ்தர்கள் சில கூறிய அறிவுரையைக் கேட்டு, இந்த ஆண்டிலிருந்து கட்டாயம் நாட்குறிப்பு எழுதப் போகிறேன் என்ற சபதத்தை என் நண்பனிடம் கூறினேன்.
            "நீயெல்லாம் அந்தக் காலத்துல ஹோம்ஒர்க்கே எழுதுனது இல்ல.  வாத்தியார் செம மாத்து மாத்துனப்பவே அதைப் பத்தி கவலைப்படாம அலட்சியமாக எழுதாம வருவே. நீயெல்லாம் நாட்குறிப்பு எழுதப் போறீயா?" என்று அவன் கேட்டதிலிருந்து , "சத்தியமாக இனிமேல் சபதம் செய்த சபதத்தை யாரிடம் சொல்ல மாட்டேன்!" என்ற சபதம் எடுத்துக் கொண்டேன்.
*****

எப்போது புரிந்து கொள்வாய்?


எப்போது புரிந்து கொள்வாய்?
இரண்டில் ஒன்றை
சொல் என்கின்றாய்.
இரண்டில் ஒன்றையும்
எதையும்
சொல்லாமல் இருப்பதும்
என் உரிமை
என்பதை
எப்போது நீ
புரிந்து கொள்வாய்?
*****

சுடுதல்
பறவைகளைப் பார்த்தால்
சுடத் தோன்றுகிறது
துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவருக்கு!
துப்பாக்கி வைத்திருப்பவரைப்
பார்த்தால்
சுடத் தோன்றுகிறது
துப்பாக்கி இல்லாத எனக்கு!
கெளதாரியை
எரியும் தணலில்
சுட்டுக் கொண்டிருக்கிறான்
எங்களைப் போல்
சுடுதலை
வெறும் எண்ணமாய் மட்டும்
வைத்திராத
இளந்தாரிப் பயல் ஒருவன்!
*****

வாட்ஸ் அப் வறுவல்


அப்பாடா!
மகன் கேட்ட புது மாடல் செல்லை வாங்கிக் கொடுத்த அப்பாவின் கையில் இருந்தது கீ பேட் செல்.
*****
எங்கும் வரல! எதிலும் வரல!
"ஆத்துல தண்ணி வரல!" என்று கவலையோடு அமர்ந்திருந்தார் விவசாயி வெள்ளைச்சாமி. "அப்பா! ஏ.டி.எம்.ல பணமும் வரல!" என்று வெறுங்கையோடு திரும்பி வந்தான் பணம் எடுக்கச் சென்ற மயில்சாமி.
*****
வாட்ஸ் அப் வறுவல்
"வாட்ஸ் அப் வந்ததிலேர்ந்து இப்போல்லாம் என்கிட்ட சண்டை போடுறதைக் குறைச்சுகிட்டா பக்கத்து வீட்டுக்காரி!" சந்தோசப்பட்டுக் கொண்டாள் சரோஜா.
*****

பின்தொடர்தல்


இயல்புகள்
பெய்து வழிந்தோடுவது
மழையின் இயல்பு!
அது வீணாகவா
பயனுடனா
என்பது
மனித இயல்பு!
*****

பின்தொடர்தல்
மரித்துக் கிடக்கும் பட்டாம்பூச்சி
வண்ணங்களைத்
தூக்கிக் கொண்டு
பின்தொடர்ந்து வருகிறது
செல்லும் வழியெங்கும்!
இறுதி மரியாதை
செய்ய இயலாத இயலாமையில்
பின்தொடர அனுமதிக்கிறேன்!
வண்ணங்களை வாங்கி விட்டால்
வைப்பதற்கு இடமேது,
வரைவதற்கான ஓவியம்தான்
மனதிலேது என்பதால்
பின்தொடர விட்டு
திரும்பிப் பார்க்காமல்
சென்று கொண்டிருக்கிறேன்
நான்!
*****

தி மொமெண்ட்


நோ ஸ்மோக்கிங்
என்கேஜ்டு முடிந்ததும், "இனிமே ஸ்மோக் பண்ண மாட்டேன்!" என்று பிராமிஸ் பண்ண பிரவீணிடம், "டூ வீலர்ல போறப்ப ஹெல்மேட் போடாம போகாதீங்க!" என்றாள் அபிதா.
*****
இது புது சீர்!
"வாங்கிக் கொடுக்குறதுன்னு முடிவாச்சு! அப்படியே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேன்!" என்றார் மகளின் திருமணச் சீராக டூவீலர் வாங்கிக் கொண்டு வந்த நாராயணன்.
*****
தி மொமெண்ட்
இன்று அறிமுகமான புது மாடல் செல்லைப் பார்த்ததும், "ஒரு நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ!" என்ற கவலைப்பட்டான், நேற்று செல் வாங்கிய செல்லபாண்டியன்.
*****