மாற வேண்டிய கடன் அட்டை கலாச்சாரம்
இன்றைய
இளைய சமுதாயத்தின் கைகளில் திறன்பேசிகளுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது
கடன் அட்டைகள் எனும் கிரெடிட் கார்டுகள்தான். அண்மைக் காலத்து நிதி ஆய்வு அறிக்கைகள்
தரும் தரவுகளின்படி புதிதாகக் கடன் அட்டை பெறுவோரில் 50 சதவீதம் பேர் 30 வயது அல்லது
அதற்கும் குறைவானவர்கள் ஆவர். நுகர்வு கலாச்சாரம் இளைய தலைமுறையை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது
என்பதை இத்தரவு பறைசாற்றுகிறது.
கடந்த
பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கடன் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.1 கோடியில்
இருந்து 10.7 கோடியாக விண்ணைத் தொட்டுள்ளது.
நிலுவையில்
உள்ள கடன் தொகையோ ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.3.1 லட்சம் கோடியாக, அதாவது சுமார்
8.3 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அண்மை நிலவரப்படி
புதிதாகக் கடன் அட்டை பெறுவோரில் 46 சதவீதம் பேர் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச்
சேர்ந்தவர்கள். அதாவது, சிறு ஊர்களின் மூலைமுடுக்குகளிலும் நெகிழி பணத்தின் புழக்கம்
சத்தமின்றி வேரூன்றியுள்ளது.
ஆனால்,
இங்குதான் ஓர் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. முந்தைய தலைமுறையினர் கடன் அட்டையை வாங்கும்
போது எந்தவித முந்தைய கடனும் இன்றித் தொடங்கினர். 2018 ஆம் ஆண்டு வரை முதல் கடன் அட்டை
வாங்கிய புத்தாயிரமாண்டு எனும் மில்லினியல் இளைஞர்களில் 56 சதவீதம் பேருக்கு அதற்கு
முன்பு எந்தக் கடன் வரலாறும் இல்லை.
ஆனால்,
இன்றைய இசட் தலைமுறை எனும் ஜென் சி தலைமுறையினரின் கதை வேறுவிதமாக இருக்கிறது.
2024 இல் முதல் கடன் அட்டை பெற்ற 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 31 சதவீதம் பேர்
ஏற்கனவே குறைந்தது இரண்டு கடன் கணக்குகளை வைத்துள்ளனர்!
இன்றைய
இளைய தலைமுறைக்கு கடன் அட்டை என்பது வெறும் முதல் கடன் வாய்ப்பு மட்டுமல்ல; மாறாக,
அவர்கள் ஏற்கனவே சுமந்து கொண்டிருக்கும் பல கடன் சுமையோடு வந்து சேரும் மற்றொரு கடன்
வசதியாக உருவெடுத்துள்ளது.
கடன்
அட்டை வாங்கிய முதல் 3 மாதங்களுக்குள்ளேயே 28 சதவீதம் பேர் ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமான
கடன் நிலுவையை வைத்திருப்பதும், 12 மாதங்களுக்குள் 69 சதவீதம் பேர் வேறொரு கடன் வாங்குவதும்
இப்போதைய நிதர்சனம்.
கடன்
அட்டை என்பது ஒரு வசதிக்கான திறவுகோலே தவிர, அது வருமானத்தின் நீட்சி அல்ல. உடனடித்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த மாய வலை, நாளைய நிம்மதியைக் குலைத்துவிடக் கூடாது.
கடன்களின்றி வாழ்வதே உண்மையான சுதந்திரம்; அந்தச் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து,
நமது இளைய சமுதாயம் நிதிக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதே காலத்தின் கட்டாயம்.
கடனில்லா
வாழ்வே கண்ணியமான வாழ்வு என்று நம் முன்னோர்கள் சொன்னதிலும், கடன்படா வறியவர்களே செல்வந்தர்கள்
என்று ஔவையார் சொன்னதிலும் பொருள் இல்லாமல் இல்லை!
*****

No comments:
Post a Comment